ஒரு நிமிடம் நிதானியுங்கள்..!!

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது.

பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம்.

இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும்.

ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன் படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத் தனம். யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் respond செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள் react செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள்.

நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெல்ல மெல்ல அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும்.

ஒன்றில் நல்ல முறையில் வெற்றி கண்டு அதுவே இயல்பாக நமக்குப் பழகி விட்ட பின்பு அடுத்த ஒரு சவாலை நாம் சந்திக்க முயலலாம். இப்படி நாம் பக்குவத்துடன், அறிவு பூர்வமாகவும் இயங்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்து ஏராளமான நன்மைகளை அடைய முடியும். நீங்களும் முயன்று பாருங்களேன்.

வாழ்க வளமுடன்

படித்ததில் பிடித்தது ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top