என் காதல் தீ 11

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

எலெக்ஷன் என்ற பெயரில் ஊருக்கு போய் ஒரு வாரம் அம்ம கையால நல்லா சாப்பிட்டுட்டு வந்த கையோட ஒரு அப்டேட்டும் குடுத்துட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா...

HelloGuruPremaKosame.jpg

“நான் அழுதா காய்ச்சல் வரும்னு தெரியும்ல, ஏன் அடிக்கறீங்க?” என்று கண்களை கசக்கிக்கொண்டு கேட்ட குழந்தைக்கு தன்னிடம் இருந்த குச்சியினால் ஒரு அடி வைத்துவிட்டு, “அழுதா காய்ச்சல் வரும்னு தெரியும்ல, எதுக்கு அழுகற?” என்றார் அந்த தாய்.

அதனை கேட்டு, ‘நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ என்ற ரீதியில் முழித்துக்கொண்டிருந்தவளை அந்த தாயும் எதிரில் நின்று முறைத்துக்கொண்டிருந்தார்.

சரியாக அதே நேரத்தில் “அத்தை!” என்ற ஒரு குரல் வெளியில் இருந்து ஒலிக்க, அது யாருடையது என்று அறிந்துகொண்ட குழந்தையோ, “நிலா மாமா!” என்று ஓடிச்சென்று வந்தவனின் கால்களைக் கட்டிக்கொண்டு “அம்மா அடிக்குறா” என்று முறையிட்டாள்.

“ஓ… அம்மா அடிக்குறாங்களா எங்க பாப்பாவ? நீ என்ன செய்த அவங்க அடிக்குற மாதிரி?” என்று கேட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள் நம் நாயகி. அவளின் முழியை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்தவன், “வா… நாம என்னன்னு கேட்போம்” என்று அவள் கைபிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

தனக்கு ஒரு ஆள் துணைக்கு கிடைத்த திருப்தியில் அன்னையை மிதப்பாக பார்த்த நிரல்யாவைக் கண்டு அந்த தாய்க்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. பின்பு, தெரியாதா அவருக்கு, தான் நடந்ததை சொன்னால் கதிர் அவளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவான் என்று? (அப்போல இருந்து எல்லாருக்கும் பாடம் தான் எடுத்துட்டு இருக்கே?)

“ஏன் அத்தை இவளை அடிச்சீங்களாம்?” என்று கேட்டவனிடம், “நீயே கேளு கதிரு! பக்கத்து வீட்டுல கொஞ்ச நாள் முன்ன கோழி குஞ்சு பொறிச்சிருந்துது. இன்னிக்கு காலைல அவங்க வீட்டு வாசல்ல சுத்திட்டு இருந்த ஒரு கோழி குஞ்ச இவ தூக்கிட்டு வந்துட்டா. அத அவங்க கிட்ட கொடுடின்னு சொன்னா, அது இவளுதுன்னு சொல்ற. இவளோட என்னால முடியல கதிரு. நீயே சொல்லி புரியவை கதிரு, அத தர சொல்லி”

கதிரிடம் முறையிட்டவர் இதற்குப்பின், ‘நீயாச்சு அவளாச்சு’ என்ற ரீதியில் நிரல்யாவை மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார். அவர் சென்றதும் நிரல்யாவின் புறம் திரும்பியவன்,

“நிலா… மாமா உனக்கு வேற கோழி குஞ்சு வாங்கி தரேன்மா. நீ இத அவங்கட்ட குடுத்தறியா?”

“எனக்கு இதுதா புடிச்சிருக்கு. நான் இத தரமாட்டேன்”

“உனக்கு அதே மாதிரியே வேற வாங்கி தரேன்மா. இது மத்தவங்களோடது. அவங்க குடுக்காம நாமலே எடுத்துக்க கூடாது”

“ஆனா, எனக்கு பிடிச்சிருக்கே!” என்று அப்பாவியாக அவள் கேட்ட விதத்தில் அவன் உருகிப்போனான்.

“நமக்கு பிடிச்சது எல்லாம் நமக்கு சொந்தமாகாது கண்ணு. அது நம்முடையதா இருக்கனும். நமக்கு உரிமையுள்ளது மேல நாம ஆசைபடறது தப்பில்லை. ஆனா, உரிமை இல்லாதத உரிமையாக்கிக்க அதோட உரிமையாளர் சம்மதம் வேனும்” என்றவனை கண்டு ‘ஙே’ என விழித்தாள் அந்த சின்னன்சிறு சிட்டு.

அவளுக்கு புரியவில்லை என்பது கண்டு தன் பின்னந்தலையை தட்டி, “இது நம்மோடது இல்ல கண்ணு. அவரு ஆசையா வளர்த்ததுல. அவருக்கு கஷ்டமா இருக்கும்ல. நாம குடுத்தறலாம்” என்று விதவிதமாக அவளை சமாதானப்படுத்தி அதற்கு உரியவரிடம் அந்த கோழியை ஒப்படைத்துவிட்டான்.

இருந்தும் அதனை நினைத்து நினைத்து அழுதே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. பின்பு, அதேபோல் ஒரு கோழிகுஞ்சை வாங்கி கொடுத்தபின்பே அவள் அழுகை நின்றது. அதன்பின் பெரும்பாலும் அவளை யாரும் அழவைத்ததில்லை.

இன்று, அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்துவைத்து அழுது தீர்த்து கையில் ட்ரிப்ஸுடன் படுத்திருப்பவளைக் கண்டு துக்கமடைந்தான் கதிர்.

*********

இரண்டு நாட்களானது நிரல்யாவிற்கு உடல்நிலை சரியாக. அதுவரை மருத்துவமனையே கதியென்று இருந்தான் கதிர். ஒரு பக்கம் மாணிக்கம், மறுபக்கம் நிரல்யா என்று ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தான். நிரல்யாவை பார்த்துக்கொள்ள பாட்டி கூடவே தங்கிக்கொள்கிறேன் என்று வந்ததால் அவனால் கவலையின்றி மாணிக்கத்தை பார்த்துக்கொள்ள முடிந்தது. அவரை விரைவிலேயே வார்டுக்கு மாற்றிவிடவும், நிரல்யா கண் விழிக்கவும் சரியாக இருந்தது.

கண் விழித்தவுடன் அப்பாவை கேட்டவளிடம் அவர் நன்றாக இருப்பதாக சொல்லப்படவும், எதுவும் பேசாமல் மீண்டும் மௌனமாகிவிட்டாள். அதன்பின், தனக்கு சரியானதும் யார் பேச்சும் கேட்காமல் தன் தந்தையை பார்த்துக்கொண்டவள் அவரிடமும் எதுவும் பேசவில்லை. பேச்சுவார்த்தைகள் எல்லாம் அளவோடே இருந்தன.

சில நாட்களில் மாணிக்கத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பவும், அவரை அழைத்து வந்து அறையில் படுக்க வைத்தார்கள். அவர் அருகிலேயே தரையில் மண்டியிட்டவள் அவரின் கைகளை பிடித்துக்கொண்டாள். அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவள் ஏந்தியிருந்த அவர் கரத்தில் விழுந்தது. அதில் விழித்தவர், “என்னம்மா? ஏன் இப்போ அழுற? அப்பாக்கு ஒன்னும் இல்லடா!” எங்க, அதுவே அவள் கண்ணீரை மேலும் உடைப்பெடுக்க வைத்தது.

“ஐ’ம் சாரிப்பா. உங்க கூடவே இருந்து உங்கள பத்தி தெரிஞ்சுக்காம விட்டுட்டேனே! ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? உங்களுக்கு ஒன்னுன்னா அத எங்கிட்ட சொல்லனும்னு கூட உங்களுக்கு தோனல இல்ல? உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன செய்வேன்? நீங்க இல்லாம எப்படி இருப்பேன்? உங்கள சொல்லி என்ன, நான் தான் உங்கள கவனிக்காம விட்டுட்டேன். என்ன சொல்லனும். நான் ரொம்ப செல்ஃபிஷ்-ல பா?” என்று கண்களில் நீர் திரள் கேட்டவளை மறுத்து அவள் கண்ணீரை துடைத்தவர்,

“இல்லம்மா. நீ செல்ஃபிஷா இருந்தா இப்போ இந்த அளவுக்கு வருத்தப்படமாட்ட. நான் உன்னிடம் முன்னவே சொல்லிருந்தா உனக்கு தெரிந்திருக்கும். உன்னை கவலைபடுத்தக்கூடாதுன்னு நானும் மறைச்சுட்டேனே”

“சாரிப்பா! உங்களை நான் புரிஞ்சுக்கவே இல்ல. என்னை கட்டாயப்படுத்தறீங்கன்னு மட்டும் நினைச்சுட்டேனே தவிர, அதற்கு பின்னாடி இப்படி ஒரு ரீசன் இருக்கும்னு தெரியலயே! சே! உங்களையும் காயப்படுத்தி, என்னையும் காயப்படுத்தி, அவரையும் குழம்ப வைத்து”

“ஒன்னும் இல்லம்மா… நீ ஏதோ குழப்பத்துல இருந்த. அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம். உன்னை கண்சல்ட் செய்யாம முடிவெடுத்ததும் தப்புதான”

“அய்யயோ! அப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா! நான் நல்லா இருக்கனும்னு தான செய்தீங்க, அது எப்படி தப்பாக முடியும்? நாந்தான் லூசுத்தனமா செய்துட்டேன்”

“அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கே?” என்று கேட்டவரை புரியாமல் பார்த்தவள், அவர் கண்களில் தெரிந்த கேள்வியில்,

“எனக்கு கதிர் மேல லவ் எல்லாம் வரலப்பா” என்றாள்.

அதில் முகம் வாட்டமடைந்த தந்தையை காண சகிக்காதவள், “அதற்காக எப்பவும் லவ் வராதுன்னு இல்ல. அவர எனக்கு பிடிக்கும், அது இதுவரைக்கும் ஒரு குச்சிமிட்டாய் பிடிக்கும்னு கொழந்தை சொல்ற போலதானே தவிர, வேறு வகையில் இல்ல. ஆனால், அவரை முழுவதும் ஏத்துக்க ட்ரை செய்யறேன்” என்றவளை வருத்தத்துடன் பார்த்தார் அவள் தந்தை.

காதல் வாழ்க்கை எவ்வளவு அருமையானது என்று வாழ்ந்து பார்த்தவராயிற்றே அவர். அத்தகைய ஒன்று தன் மகளுக்கு விரைவில் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டது அவர் உள்ளம். (சாரி மிஸ்டர்! உங்க மக அடுத்த சீன்-லயே அதுக்கு ஆப்பு வைக்க போறா!)

**********

அறையினுள் வந்து படுக்கையை கீழே விரித்து படுக்கச் சென்ற கதிரை “ஒரு நிமிஷம்! உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சொல்லி நிறுத்தியிருந்தாள் நிரல்யா.

அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தவன், தன் கைகளை கட்டிக்கொண்டு “சொல்லு” என்றான்.

“ரொம்ப தாங்க்ஸ், என்னையும் அப்பாவையும் நல்லா பாத்துக்கிட்டதுக்கு” என்று நிறுத்தினாள்.

“அவ்வளவுதான” என்று எழப்போனவனிடம், “இல்லை இல்லை… இன்னும் இருக்கு” என்றவள், நடந்தது முழுவதும் அவனிடம் ஒன்று விடாமல் ஒப்பித்தாள். (அட அரிச்சந்திரனுக்கு பொறந்த வஞ்சிக்கொடியே! எங்கையும் எதையும் முழுசா ஒப்பிக்கக்கூடாது, அதுவும் புருஷன்கிட்ட?! இதுதெரியாம உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிட்டியேம்மா!)

அவள் கூறியது அனைத்தையும் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தவன் மனதோ, தான் இத்தனை நாட்களாய் அவள் உடல்நலம் கருதி விலக்கி வைத்திருந்த வலி மீண்டும் தன்னை கூறுபோட, அதனை கையாலாகமல் பார்த்துக்கொண்டிருந்தது.

அனைத்தையும் சொல்லி முடித்தவள், அவனுடன் தான் வாழ விரும்புவதாக மட்டும் கூறவில்லை. உன்னுடனேயே இருக்க நினைக்கிறேன் என்று கூற அவளுக்கு நா எழவில்லை; காதலை இரவலாக பெற அவனுக்கு விருப்பமில்லை.

கண்களை மூடி வெகு நேரம் யோசித்த கதிர், “சீக்கிரமே உனக்கு டிவர்ஸ் தருகிறேன்” என்று கூறிவிட்டு சென்று படுத்துக்கொண்டான்.

அவன் சென்றும் வெகு நேரம், நாம என்ன சொல்ல வந்தோம், இவன் என்ன சொல்லிட்டு போறான் என்று அவனை கடிந்தவாறு அமர்ந்திருந்தாள் நிரல்யா. (நீ எங்க சொன்ன? சொல்ல வேண்டியது எல்லாம் விட்றவேண்டியது. எது தேவை இல்லையோ, அதை வண்டி வண்டியா பேச வேண்டியது!)



தீ இடம் மாறி தகிக்கும் இனி!!!


நிறைய பேர் இங்க நிரல்யா மாதிரிதான். எது தேவையோ, அது நம்ம கைகிட்டயே இருக்கும், ஆனா அதோட அருமை புரியாம விலக்கி வைச்சுடுவோம். பின்பு, தேவை என்று தேடும்போது அது நம்மிடம் வராது. நிரல்யாவிற்கு கதிரின் மேல் காதல் வருமா? அவளால் கதிருக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக முடியுமா? கதிர் அவளின் தவறுகளை மன்னித்து அவளை ஏற்றுக்கொள்வானா? இனி வரும் அப்டேட்களில்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top