என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 2

#1
என் உயிரின் உயிரான மனைவிக்கு.....
குறும் தொடர்
(மனைவிக்கு ஓர் கடிதம்)
பாகம்-2

2. வாழ்வின் அதிஷ்டமும், புரிதலுக்கு அர்த்தமும் நீ...

சிநேகத்தின் சுடரான மனையாட்டியே... என்னுடைய வாழ்வு இன்று உச்சத்தில் நிற்க உற்சாகம் ஆனவளே...

எத்தனையோ தருணங்களில் என் வாழ்வு சறுக்கியது. பணியில் சுமை, அழுத்தம், உறவுகள் தந்த அர்த்தமற்ற விதண்டாவாதம். அத்தனையும் என்னை மூழ்கடிக்க முயற்சித்த போதும் நீ என்னை முங்கிப் போகவிடவில்லை. புரியாத மனிதர்களுக்கு முன் என்னை புத்துணர்வில் மீண்டும் புதுப்பித்தாய். அழுத்தங்கள் மாற எனக்கு நம்பிக்கை ஊட்டினாய். ஒவ்வொரு சறுக்கலும் என் என்று எனக்காக உட்கார்ந்து நீ ஆராய்ந்தாய்..தவறுகளை சுட்டிக்காட்டி "கடந்தது என்றும் திரும்பாதது... நடப்பதை திருத்தி வெல்வோம்" என்று நேர்மறை எண்ணத்தில் என்னை குளிப்பாட்டி, வெற்றி என்னும் புத்தாடை உடுத்தினாய்....

புரிதலுக்கு அர்த்தம் உலகில் நீயும் நானும் என்றால் அது நிச்சயம் மிகையாகாது சினேகிதி... என் கண்ணசைவை கொண்டே என் என்ன ஓட்டத்தை உணர்பவள் நீ... உணர்வது மட்டுமல்ல... எனக்காக என் சார்பில் செய்து முடிப்பவள்.

எத்தனையோ தருணங்களில் இதை உணர்ந்து உள்ளேன்... ஆச்சரியப்பட்டு அதிசயித்து போயுள்ளேன்...

"நம் நண்பர் ஒருவரின் தங்கைக்கு நடக்க இருந்த திருமணத்தில் பணப் பற்றாகுறையில் திருமணம் தடைபட இருந்தது. கையில் பணமின்றி அவரின் உறவுகளிடம் கையேந்தி அவமானப்பட்டு நின்றவரை நான் தேற்றிக்கொண்டிருந்தேன்... இதயமோ உன்னுடைய தங்க காப்புகள் இரண்டை ஏன் அவருக்கு உதவிக்கு கொடுக்க கூடாது என்று எண்ணியது... ஆனால் அமைதியோடு இருந்தேன்... விழியசைவில் என்னை தனித்து அழைத்தாய்... கரம்பற்றி காப்புகளை தந்தாய்... இதுகூட அவர்களுக்கு போதாது.. உங்கள் சங்கிலியும் கொடுங்கள்... பிறகு பார்த்து கொள்வோம் என்றாய்... ". விக்கித்து திக்கிப்போனேன் உன் புரிதல் உணர்ந்து..

உன்னை என் உறவுகள் பொறாமையுடன் பார்த்த நேரங்கள் ஆயிரம். கருத்த இந்த காக்கைக்கு பொன்னில் செய்த பேரழகு துணையா? எப்படி இவர்கள் இருவரும் இணைந்து வாழ இயலும்? இவனுக்கு அவளை வைத்து வாழத் தெரியாது... என்றெல்லாம் ஆயிரம் கருத்துக்கள். உன் தோழிகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு உன்னை தனியே கேட்ட கேள்வி...

"நிச்சயமாக நீ வாழ்வை தெரிந்து தான் தேர்ந்தெடுத்தாயா...???".

ஒவ்வொரு எதிர்மறை கருத்துக்களையும் புறம் தள்ளினாய். என்னை மட்டுமே நம்பினாய். அடுத்தவரின் கருத்துக்களை தள்ளிவிட்டு என்னிடம் கேட்டாய்... நான் உங்களை நம்பி என்னை ஒப்படைக்கின்றேன். என்னுடைய அனைத்தும் இனி நீங்கள்... நான் என்பதே இனி இல்லை... நாம் மட்டுமே... என்று நீ கூறிய வார்த்தைகள் இன்றுவரை எனக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்கும் திருவாசகம். அப்போது தீர்மானித்தேன்...உன்னை எங்குமே நீயாக மட்டும் விட்டுவிட கூடாது என்று...

ஒவ்வொரு நிகழ்விலும் நாம் ஒன்றாகவே நின்றோம்... அதிசயித்து போயினர் நம்மை கண்டு வார்த்தைகளை கொட்டியவர்கள்... பிரமித்து போன நண்பர்கள், இன்றுவரை நம்மை தானே தங்கள் பிள்ளைகளுக்கு உதாரணம் காட்டுகின்றனர். இது நீ என் மீதும் நான் உன்மீதும் கொண்ட அன்பாலும் நம்பிக்கையாலும் அல்லவா சாத்தியப்பட்டது.

சிறிய வேலையும், பகுதிநேர வணிகமும் என்று வாழ்வை துவங்கிய நாம் இன்று யாருமே எதிர்பாராத உயர்வில் நிற்க உன்னுடைய சமயோஜித யோசனைகளும் அக்கறையும் அல்லவா காரணமாக அமைந்தது. என்னுடைய ஒவ்வொரு செயலையும், அதன் வெற்றியையும் நீயல்லவா சினேகிதி தீர்மானித்து தந்தாய்...

உன்னுடைய பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு என்னை நீ தாங்கினாய்... உன்னுடைய ஒவ்வொரு தேவையையும், எண்ணங்களின் வண்ணங்களையும் நான் ஓவியமாக வரைந்து வைத்தேன்... அழகானது நம் எதிர்காலம் மட்டுமல்ல நாமும் தான்.
எங்குமே நீ என்றும், நான் என்றும் கூறிக்கொண்டதாக நினைவில் இல்லை. எப்போதுமே நாம் என்றே வாழ்ந்தோம். இதற்கு பெயர் தான் புரிதல் தோழி... நாம் உணர்ந்து கொள்ளாத ஒன்று என்று எதுவுமே நம்மிடம் இல்லை.


விவாதிக்க ஒரு கட்டம், தீர்மானிக்க ஒரு கட்டம், வடிவமைக்க ஒரு கட்டம், நிறைவேற்ற ஒரு கட்டம்... ஆனால் எந்த கட்டமும் நம்மை கட்டுப்படுத்தியது இல்லை. நாமே அதை கட்டமைத்து கட்டுப்படுத்தி உள்ளோம்.

அதிர்ஷ்டம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு அதிசயமும் அல்ல... ஒவ்வொரு மனித வாழ்வும் அதன் துணையால் மகிழ்ந்து திளைத்து உருவாகும் சுகானுபவம்.. அந்த வகையில் என்னுடைய அதிஷ்டமாக நீயும், உன்னுடைய அதிஷ்டமாக நானும் இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம்.

ஆருயிராகிய ஓருயிர் நாம்... எப்போதும் நம் வாழ்வை நாம் சேர்ந்து எதிர்கொள்வோம், என்னும் தீர்மானத்தில் உறுதிப்பட்டு நிலைத்து நிற்போம்..

கடிதம் தொடரும்....

( வாசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ஒரு தகவல். இது ஏதோ ஒரு கற்பனை படைப்பு அல்ல. உளமார உணர்ந்து அனுபவித்து வரும் உண்மை. இது எனக்கும் என் மனைவிக்குமான சிநேகம். அதைத்தான் இங்கு வார்த்தையாக தந்துள்ளேன். என் மனைவியின் சம்மதத்தோடு)
 
bavi1308

Active Member
#5
அருமையான கடிதம்... ஆருயிராகிய ஓரியிராய் நாம்...அருமையான உணர்வு... சினேகிதி.. மனைவியைப் பெருமைப் படுத்த வேறொரு எந்த சொல்லும் இருக்க முடியாது...உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள்...
 
#6
அருமையான கடிதம்... ஆருயிராகிய ஓரியிராய் நாம்...அருமையான உணர்வு... சினேகிதி.. மனைவியைப் பெருமைப் படுத்த வேறொரு எந்த சொல்லும் இருக்க முடியாது...உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரி
 
#8
Every story has a real life inspiration. Nice to hear that this series is based on your own life. this sharing requires a lot of courage. Kudos to this man who has recognised a friend in his better half and making her proud. the fact that a husband understands what a woman goes through in life itself is something good. my best wishes for this wonderful couple.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes