என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 10

Advertisement

Deiyamma

Well-Known Member
வணக்கம் friends

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ அடுத்த பதிவு கொடுத்துட்டேன். மறக்காம உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை like and கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம்10

"நிழல் போல நீயும்..
நிலையில்லா வெளிச்சம் போல
நினைவுகளும்...
எனதெண்ணத்தை ஆக்கிரமிக்கின்றன...
நித்தமும் குழம்பி..
நிஜத்தின் நகலில்
வாழ்கிறேன் நானடா...!"


"டேய்... நீ யாருடா...?! எதுக்காக டா என்னை அன்றைக்கு காப்பாற்றுன... ?!?
சரி...! காப்பாத்திட்ட..!! நல்ல விஷயம் தான்... ஆனால் முகத்தை காட்டிட்டு போயிருக்க வேண்டியது தானடா மடையா...?!! உன்னால நான் தினம் தினம் புலம்ப வேண்டியதா இருக்குது...!

போடா... ராஸ்கல்...! ஒரு மட்டு மரியாதை வேண்டாம்... இப்படியா பச்ச பிள்ளையை காப்பாத்தி.. அம்போன்னு விட்டுட்டு போறது...?!?

இப்போ பாரு நீ யாரா இருக்கும்ன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையே வெடிச்சிடும் போல இருக்குது...

இனி எப்போடா என்னை பார்க்க வருவ...?! இல்லை நீ வராமலே போய்டுவியா....??!

ஷிட்...!ஒன்னும் புரிய மாட்டுக்குது...

உன் நியபகர்த்தமா இந்த கற்கள் மட்டும் தான் இருக்கு.. இதை எதுக்கு அந்த நேரங்கெட்ட சிட்டுவேசன்ல தந்தன்னு எனக்கு சுத்தமா புரியல....!?

பாரு... இந்த கேணச்சியும்.. அதை பத்திரமா வைத்து கொள்ளனும் அப்டிங்கிற நினைப்பில.. கழுத்து செயின்ல டாலரா டிசைன் பண்ணி போட்டுக்கிட்டு சுத்துரா......!"

அந்த முகம் மறைத்த ஆண்மகன் தந்த.. நீலம் மற்றும் பச்சை நிற கற்களை இதயவடிவில் செதுக்கி அதை ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு ஒட்டி.. ஒரு பக்கம் நீல நிறம் மறு பக்கம் பச்சை நிறம் தெரியும் படி வடிவமைத்து,அதை தங்க நிற பிரேம்குள் அடக்கி டாலராக மாற்றி விட்டாள்.. இப்போது அது அவளது கழுத்து சங்கிலியில் தொங்கியபடி.. அவளது நெஞ்சை முத்தமிட்டு கொண்டிருக்கிறது....


ஹ்ம்மம்ம்....

"விழி திறந்து
பார்த்திருந்தால்..
விதி மாறி
பாடியிருக்குமோ?!?!..."


கைகளில் அந்த டாலரை ஒரு முறை தூக்கி பார்த்து கொண்டாள் ஆராதனா.

"நான் ஏன் இப்படி ஆனேன். உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... எதற்காக உன்னை பற்றி அறிய வேண்டும் என என் மனம் துடிக்கிறது...?"

"உன் நினைவு இப்பொழுது எல்லாம் அடிக்கடி வருகிறது. அதுவும் அவனை காண்கையில் ஏதோ பெயர் தெரியா உணர்வு..

நான் என்ன செய்ய... ?!"

எதற்கும் அவளிடத்தில் பதில் இல்லை...

ஹ்ம்ம்... கண்டிப்பா நான் இதை கூடிய சீக்கிரமே தெரிஞ்சிப்பேன் அப்படின்னு தோணுது... ஆனா.. அவன்கிட்ட அந்த தேஜா வூகிட்ட இனி ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப தான் பண்ணுறான்.
நான் யாருன்னு நினைச்சிக்கிட்டான்... காட்டுறேன்...

நான் ஒன்னும் உன்னோட இழுப்புக்கு எல்லாம் வளையிற ரப்பர்ன்னு நினைச்சியா... போடா... டேய்...

இனி தான் இந்த ஆராதனாவோட இன்னொரு முகத்தை பார்க்க போற..
ஹா ஹா ஹா...." தனக்கு தானே கை கொடுத்து கொண்டாள். காலரே இல்லாத சட்டையை தூக்கி விட்டு கொண்டாள் அவள்.

தன் சிந்தனையை ஒதுக்கி விட்டு.. கையில் இருந்த பென்சில் கொண்டு மனதில் தோன்றியதை வரையலானாள் அந்த ஓவியரசி.

இருந்தும் அந்த ஓவியம் கூட பாதகம் செய்தது போல. ஓவிய குவியலில் கடைசியில் பளிச்சிட்டது என்னவோ அந்த நிழல் தேவன் தான்.. கொஞ்சம் அழகாய் சிரித்த படி... இவளை மேலும் பைத்தியம் ஆக்க.

"யெஸ்... சேகர்... நாம நினைச்சது போல தான் எல்லாம் சரியா போகுது... "

"என்னாம்மா சொல்றீங்க... நீங்க பார்த்தீங்களா...? அந்த பொண்ணுட்ட பேசுனீங்களா...? ஏதாவது விஷயம் தெரிஞ்சா....?" குரலில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது...

"ஷ்... எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற...?!" அடக்கினார் அன்னை.

"எப்படிம்மா... என்னால அமைதியா இருக்க முடியும்...? என் தேவதைம்மா அவள்...! அவள் இல்லாம இவ்ளோ நாள் நான் பட்ட கஷ்டம் போதாதா...?!?" மனமுடைந்து அழுதார்... அந்த முதிர்ந்த மனதில் இத்தனை நாட்களாய் அடக்கி வைத்திருந்த சோகம்... குமுறளாய் வெளிவந்தது...


"டேய்.. என்ன இது...? முதல கண்ணை துடை...!" அதட்டினார் பெரியவர்.

"எல்லாம் நல்லா படியா நடக்கணும்ன்னா நாம கொஞ்சம் பொறுமையா இருந்து தான் ஆகணும்."

"இன்னும் கொஞ்ச நாள் தான்... நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கட்டும் ... அப்புறம் பாருடா... என்னோட ஆட்டத்தை...." கம்பீரமாய் கர்ஜித்தது பெண் சிங்கம் .

"இது நாள் வரை இங்கே...." என்று இதயத்தை தொட்டு காட்டி "சேர்த்து வச்சிருக்கேன்டா... என்னோட சோகத்தை எல்லாம் வெறியா சேர்த்து வச்சிருக்கேன்டா..."

"எல்லாம் எதுக்குன்னு நினைக்கிறா... பழி வாங்க தான்.... நம்ம குடும்பத்தை இந்த நிலைக்கு ஆளாக்குனவனை எப்படிடா சும்மா விடுவேன்னு நினைச்ச....??!"
இடியாய் வந்தது அவரது கர்ஜனை..

"அம்மா.... எனக்கு அவள் மீண்டும் திரும்பி வந்தா போதும்மா... நான் நிம்மதியா சந்தோஷமா என்னோட மிச்ச நாட்களை அவள் கூட கழிக்கணும். இது தான் என்னோட ஆசை.."

"அட... போடா....! நீ ஏன் கவலை படுற... கூடிய சீக்கிரமே அது நடக்கும்டா..."

"ஆனால் அவள் உன் கூட வாழணும்னா நமக்கு அது தேவை. அதுக்கு தடையா இருக்கிறவனை நாம கண்டுபிடிக்கணும்டா. அவனை தூக்குனா தான் நம்ம வம்சம் நிம்மதியா வாழ முடியும்டா.. புரிஞ்சிக்கோ....!அதுக்காக வேனும் நாம இப்போ இந்த காரியத்தை செய்து தான் ஆக வேண்டும்.

மனசை தேத்திக்கோ. எல்லாம் நல்ல படியா நடக்கும்"


அவரும் ஆமோதிப்பாய் தலை அசைத்தபடியே கேட்டார்..


"அம்மா... நாம் ஏன் இதை வேற டீடெக்ட்வ் ஏஜென்சி மாதிரி யார் கையிலையாவது பொறுப்பை ஒப்படைக்க கூடாது.... ?!"

தாயின் முகத்தின் கோபசாயல் தெரிவதை கண்டதும்..... குரல் பிசிறியது...

"இல்லைம்மா.. ஏன் சொல்றேன்னா... நாம் இவ்ளோ நாள் தனியா தேடியே கிடைக்கல... அதுவும் இல்லாம இப்போ வரை நம்முடைய எதிரி யாருன்னே கண்டுபிடிக்க முடியல... "

"டேய் நிறுத்துடா...! யாரு சொன்னா... கண்டுபிடிகலன்னு....? எப்போ நம்ம குலம் தலைக்க வந்தவளை சாய்த்தானோ.. அப்பவே எனக்கு ஒரு சந்தேகம். இருந்தும் அமைதியா இருந்தேன். ஏன்...?

எலியை பொரி வச்சி பிடிக்க தான்.. ஆனா அது கொஞ்சம் சாமர்த்தியமான எலி. ஆதாரம் இல்லாம நம்மலாள எதுவும் பண்ண முடியாது.

அதுவும் இல்லாம இதுக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்காங்கன்னு எனக்கு தெரியணும். வேர் நுனி வரை... ஒன்னும் இல்லாம ஆக்கணும்.. அதுக்காக தான்டா.... இவ்ளோ பொறுமையா யாருக்கும் தெரியாம ஹாண்டில் பண்ணுறேன்.

கவலைப்படதடா.. கூடிய சீக்கிரம் நீ பார்க்க தானே போற... இந்த லேடியோட ஆட்டத்தை...!"


பெண் சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் அதிகமாக தான் இருந்ததோ..?!


"குமரி பெண்ணின் உள்ளத்திலே..
குடியிருக்க நான் வர வேண்டும்...
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்...."


"ம் ம் ம் ம் ம் ம் ....."

காதல் தந்த உற்சாகத்தில் மனதை மயக்கிய படி பாடி கொண்டிருந்தான் ராஜேஷ். தன் மங்கையவளை பார்த்து.

ஆனால் அப்பெண்குட்டி கீதுவோ... நிமிர்ந்தாள் இல்லை. குனிந்த தலை குனிந்தபடி தன் காரியமே கண்ணாக மிஷினில் தைத்து கொண்டிருந்தாள்.
இப்பொழுது எல்லாம் இவனை அடிக்கடி எங்கேயாவது ஏதேச்சையாக சந்திப்பது போல தினமும் ஒரு முறையேனும் பார்க்க முடிகிறது.

அவளுக்கு இது புரியாமல் இல்லை. ஆனால் அவன் காதலின் மீது கன்னிக்கு அத்துணை நம்பிக்கை இன்னும் பிறக்கவில்லை. அதனால் விலகியே இருக்க விரும்பியது இப்பெண் மனம்.

"ஹ்ம்மம்ம்... இது வேலைக்கு ஆகாதுடா ராஜேஷ்... எடுத்து விடுறா உன் பாட்டை.." என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன்...

ஜன்னல் வழி தெரிந்த தன் காதல் நாயகியை பார்த்து....

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்"

மயக்கும் குரலில் பாடினான் அவன்.

அவளுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. இருந்தும் அடக்கினாள். எங்கே தன் உள்மனதை அறிந்து கொள்வானோ...? தனக்கே இன்னும் அவன் பால் வந்த உணர்வுக்கு அர்த்தம் சரிவர புரியவில்லை.. இதில் இவன் பாட்டிற்கு ஏதாவது செய்து மனதை கலைத்து விடுவானோ என்று ஒரு அச்சம்.

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே"


என்ற படி ஜன்னல் வழி தெரிந்த அவளது பாதி உருவத்தை தரிசித்த படியே... ரசனையாய் பாடினான்.

"ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்…"



பெண்ணவள் நாணி சிலிர்த்து போனாள். "ச் ச... இவன் என்ன இப்படி பாடுகிறான். இவன் உண்மையிலே என்னை விரும்புகிறானா... இல்லை இதுவும் ஆர்வ கோளாறா...?!"


ரதியின் மனம் அறியாத மன்மதனோ தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்..."



அழகாய் பைக்கில் சாய்ந்த படி ஜன்னல் தேவியை ரசித்த படி.. அவளை இம்சிக்கவே அம்சமாய் பாடினான். கடைசி வரியில் அவன் வார்த்தைகள் வெட்க பட்டதோ என்னவோ... பெண்ணவள் வெட்கம் ஆண் மகன் கண்ணுக்கு அச்சு பிசகாமல் பட்டது...

"அட... பிள்ளை வெட்க படுதே... அப்போ சம் திங் ... சம் திங்..... " என்ற படி அவள் இருந்த திசை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் அக்காதல் ஆசைக்காரன்.


அதற்குள் பட்டென ஜன்னல் கதவை அடித்து சாய்த்தினாள் அத்தேவி.

யாரோ கன்னத்தில் அடித்தது போல இருந்தது அக்காதலனுக்கு.

முகம் கூம்பி போனது. "நாம் அவசர பட்டு விட்டோமோ.... ஒரு வேளை... நமக்கு தோன்றிய உணர்வு அவளுக்கு தோன்ற வில்லையோ... தேவையில்லாமல் இப்பெண்ணை தொந்தரவு செய்கிறோமோ..." என்றெல்லாம் எண்ணம் தோன்றி மறைந்தது.

வருத்தத்துடன் திரும்பி நடந்து வந்து தன் பைக்கில் ஏறி அமர்ந்தான். மீண்டும் ஒரு முறை தேவியின் தரிசனத்திற்க்காக மனம் ஏங்கியது. மெதுவாக தலை உயர்த்தி பார்த்தான். மூடிய கதவு அவனை பார்த்து கண்ணடித்தது.

ஹ்ம்மம்ம்... பெருமூச்சு விட்டப்படி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அங்கே அச்சத்தத்தை கேட்டதும் பெண்ணவள் உள்ளம் துடித்து போனாள். "எ..ன்..ன.. கிளம்ப போகிறானா... இவ்வளவு தானா இவனது காதல்...?" மங்கையின் மனம் பரிதவித்தது. ஓடி சென்று வாசல் புறம் பார்த்தாள்.

அவனது பைக் தெரு முனையை கடப்பது புள்ளியாய் தெரிந்தது.

இப்போது ஏங்குவது பெண்ணவள் முறையாயிற்று.

"ஓடி மறைந்து...
பாடி களைத்து..
பாரமுகம் காட்டுவது...
காதலின் விந்தைகளில் ஒன்றோ..?!"



"டேய்.. எருமை...ஏன்டா.. இவ்ளோ ஸ்லோவா போற...கொஞ்சம் வேகமா தான் போயென். இப்படி ஒரு தகர டப்பா வண்டியில போய் ஏன் ஆண்டவா என்னை போக வச்ச...... ச்ச...உனக்கு கருணையே இல்லையா..." புலம்பியபடி ஆரு என்கிற ஆராதனா தன் தேரோட்டியை ... அதாவது வண்டி ஓட்டுபவனை.. கொஞ்சினாள். அப்புகழுக்கு சொந்தக்காரன் அகில் என்னும் அடிமை தோழன்.

"இவ்வளவு சொல்றேனே.. கொஞ்சமாது கேட்கிறியா... சரியான வெத்து வேட்டு... " அர்ச்சனை மலர்களால் மாலை தொடுத்தாள் ஆராதனா.

"ஏய்.. நீ தானே காலையிலே போன் போட்டு பஸ் மிஸ் பண்ணிட்டேன். என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போன்னு கெஞ்சுன... இப்போ என்னடான்..ன்..னா நான் என்னமோ அம்மணியை கெஞ்சி என் வண்டியில ஏற்றிக்கிட்டு வந்தது போல சொல்லுற... நீயெல்லாம் அடங்க மாட்டடி..."

"உன் கொலஸ்ட்ராலை குறைக்க ஒருத்தன் வருவான்டி.. அப்போ இருக்குடி உனக்கு கச்சேரி..."

"அட போடா... இவர் பெரிய விசுவாமித்திரர். சொன்னவுடன் நடந்துற போகுது. போடா... போடா... உன்னை மாதிரி நாங்க எத்தனை பேரை பார்த்திருப்போம்... வந்துட்டான்... சாபம் கொடுக்கிறாராம்."என்றபடி அவன் தலைமுடியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டினாள்.

கைகளின் கொஞ்சல் கொஞ்சம் மிஞ்சவே... பொறுத்து பார்த்த அகில் அல்லாலோலோ பட வைத்து விட்டான் ஆருவை.

அவள் எதிர்பாராத நேரத்தில் வண்டியை கீறிச்சிட்டு நிறுத்தியவன்... அவள் என்ன என்று உணர்வதற்குள்ளே அவளை பைக்கிலிருந்து இறக்கி விட்டு விட்டு சென்று விட்டான்.

"அட கிரதகா... சாமுண்டகா..."தலையில் கை வைத்த படி புலம்பினாள் பெண்.

"டேய்.. டேய்... நில்லுடா... டேய்..." பைக் பின்னால் கொஞ்சம் தூரம் ஓடினாள். அவன் நின்றால் தானே... மூச்சு வாங்க ஓடி வந்து நின்றவள்... கோபத்தின் வாசத்தை நுகர்ந்து நாடி நரம்பெங்கும் அனுப்பி கொண்டிருந்தாள் சுற்றம் மறந்து.

"எருமை மாடு... சரியான கடா எருமைடா நீ... போடா போ... போற வழியில எங்கயாவது போய் விழுந்து தொலைப்படா... "

"ஷிட்.. ஷிட்..." கைகளால் காற்றில் ஓங்கி அடித்து தன் கோபத்தை காட்டினாள்.


கோபம்...மனதனின் சிந்தையை மலுங்கடிக்கும் ஆயுதங்களில் ஒன்று..
ஆருவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஹவ் டார்..."
வார்த்தைகள் கொதித்தன.
"யூ.... ராஸ்கல்...."
குரல் கொப்பளித்தது.

பக்கத்தில் இருப்பவர்களை மறந்து வஞ்சகமில்லாமல் வசைமாரி பொழிந்தது அச்செவ்விதழ்கள்.

தன் சுடும் கண்களால் அக்கம் பக்கம் துலாவியவள்.. வேறு வழியின்றி பஸ் நிறுத்தம் நோக்கி நடக்கலானாள்.


அப்போது.. "ஹேய் ஆராதனா... ஆராத..னா.... என்ன..ங்..க... மிஸ்.ஆராதனா..."

அக்கோப கன்னிகைக்கு காது இப்போது எப்படி வேலை செய்யும்.. அவள் தான் எருமையை மேடையேற்றி வார்த்தைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாளே..

திரும்பவும்.. இப்போது வெகு அருகில் "மிஸ் ஆராதனா..." அழுத்தமாய் கொஞ்சம் சத்தமாய் அழைத்தது ஒரு ஆண்குரல். அவளது இரத்த அழுத்தத்திற்கு இடைவெளி விட்டது அவளிதயம் இம்முறை. அதனால் சிந்தனை திரும்பியது அப்பெண்ணிற்கு.

அடுத்த அடி எடுத்து வைக்கவிருந்த கால்களை நிறுத்தி திரும்பி பார்த்தாள். அருகில் அழைத்தபடி அவன் வந்து கொண்டிருந்தான். பைக்கின் வேகத்தை குறைத்தபடி வந்தவன், தன் தலைகவசத்தை கழட்டியவன்...

"என்ன ஆச்சு ஆராதனா... கூப்பிட கூப்பிட போய்கிட்டே இருக்கிறீங்க... ஏதாவது டென்ஷன்ல இருக்கிறீங்களா...?!" என்றான் அவன். அவன் அன்று வந்திருந்த எதிர் கம்பெனி காரன். அந்த வழிசல் பார்ட்டி.

"இவனா..?! இவன் கண்ணுல தான் நான் இப்போ மாட்டனுமா... அட.. ஆண்டவரே... உமக்கு இன்று என்ன ஆயிற்று... எனக்கு ஏன் இப்படி சோதனை மேல் சோதனையா கொடுக்கிறீர்...?!" தலையில் அடித்து கொள்ளாத குறையாக வெம்பினாள் பெண்.

"ஹீ ஹீ..."பற்கள் மின்ன முகம் கடுகடுக்க... சிடுசிடு சொற்களை கலகல சொல்லில் பதித்து... பொலபொலவென பேச தொடங்கினாள் இக்காவியரசி.

"ஹே... நீ..யா... என்ன இந்த பக்கம்..."

"என்னோட ஆபிஸ் உன்னோட புது ஆபிஸ் தாண்டி தான் இருக்கு... சோ இந்த பக்கம் தான் வந்தா..க..னு..ம்...?!" சிரித்தபடி பேசினான் அக்கயவன்.

"ஓ.. அப்படியா.. சரி.. ஓ. கே.. பாய்.." கை ஆட்டி விடைபெற முனைந்த மங்கையின் வழி மறைத்து சொன்னான் அக்கள்வன்..

"ஹேய்.. என்ன அதுக்குள்ள கிளம்புற... பொறு.. அந்த ஆபிசுக்கு தானே போற... வா.. நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்.." அழுங்காமல் குழுங்காமல் உறவை உயிர்பிக்க முனைந்தான்.

"ஒரு எருமை தள்ளிவிட்டா... இன்னொரு காட்டெருமை தூக்க வருதே.. இதுகள்ட்டலாம் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கே.." மனம் கூக்குரலிட்டது.

இருந்தும் மலர்ந்த முகமாகவே பேசினாள் பெண்.
"நோ.. நோ..நான் போகிடுவேன். உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம்.."

"இதுல என்னங்க கஷ்டம். கஷ்டம்ன்னு நான் நினைச்சிருந்தா இஷ்டப்பட்டு இருப்பேனா..?" ஆசை அவன் வார்த்தைகளில் பிரதிபலித்ததோ...?!

"நோ. மிஸ்டர் என்னால தனியா போயிட முடியும். இப்போ உங்களோட உதவி தேவையில்லை. தப்பா எடுத்துக்காதீங்க.." என்றபடி அவள் முன்னேறி நடந்தாள்.

"மிஸ்.ஆராதனா" மீண்டும் அழைத்தது அக்குரல்.

"ச்ச... சரியான இம்சைடா இவன்"

திரும்பி பாராமல் நடையை துரித படுத்தினாள். அவ்விருவழி சாலையின் ஒன்றை வேகமாக கடந்து, மறுபுறம் உள்ள அடுத்த சாலையை கடக்க எண்ணி அவள் கால் வைத்ததும் தான்... நடந்தது அச்சம்பவம்.

"எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தவறினால் அந்த எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்வுகளாய் மாறி விடும் ஆபத்து உண்டு" என்பது போல... மிக துல்லியமாக... இதய துடிப்பு நிறுத்தும் சிறு இடைவெளிக்குள்ளாக எல்லாம் கச்சிதமாக நடந்தது...

பெண்ணவள் உடல் அந்நொடி ஆட்டம் கண்டது. மூளை கூட அக்கணத்தின் வீரியத்தில் நடுநடுங்கி போனது. செய்வது அறியாமல் நின்ற இடத்திலே அசையாமல் நின்றிருந்தாள் பெண்.

"இதோ... இன்னும் கொஞ்சம் அடி தான் மிச்சம். நான் டயரடியில் வைத்த எலுமிச்சம் பழம் போல ஆக போகிறேன்..

அதோ.. வருகிறான்... மஞ்சள் நிற அரக்கன்... நிச்சயம் எமலோகம் தான்.

அந்த கடாமாடுக்கு சரியான கரிநாக்கு தான் போல. இல்லையெனில் எருமையின் சாபம் இப்படி உடனே பலிக்குமா என்ன..?! ஆனால் இவன் என் கொலஸ்ட்ராலை மட்டுமல்ல... மொத்த பாடியையே நசுக்கிடுவானே...?

நான் இப்போ என்ன செய்ய..?"

மங்கையவள் தேகம் தீண்ட காத்திருந்த அத்தருணத்தில்...

மாயம் நிகழ்ந்தது.. மங்கையவள் கண் முன்னே... மாயாஜாலம் நடந்தேறியேறியது... அந்த மந்திர வித்தைக்காரன் கைகள் தான் எவ்வளவு இலகுவாய் தாங்குகிறது... பஞ்சு போல... மென்மையாக ..

"நான் போகிறேன்.. மேலே.. மேலே....
பூலோகமே கீழே கீழே..."

அதோ அங்கே அந்த வெண்மகளுக்கு நடுவே தெரிவது யாரோ...?!

அ..து... கலர்புல் லேடி தானே.. ஆம்..
உலகத்திற்கே வண்ணங்களை வாரி வழங்கும் அந்த எட்டடுக்கு உடைக்காரியாம் வானவில்லின் நிறங்கள் மாறி மாறி... விழிகளில் நிரம்பி... தலையிலே கொஞ்சம் பட்டாம் பூச்சியாய் ரீங்காரமிட்டது...

அந்த ரகசிய பாஷையை அத்தலைவி தான் எப்படி தாங்குவாள்..?!

தானாக மேல் இமைகள் கீழ் இமைகளை சத்தமின்றி முத்தமிட்டது...
 

Deiyamma

Well-Known Member
Nice ud sis

ஹாய் ஜானவி டியர்..
உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...:D:love:
Nice update.

ஹாய் விஜயா டியர்..
எபி நல்லா இருந்தா.. நன்றி உங்கள் பதிலுக்கு. :D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top