உயிரினில் இனிக்கிறாய் நீயே-1

Advertisement

Umadinesh

Well-Known Member
“ஏம்ப்பா பிரவீன்,உன்னோட பிரண்டு அரசு,,இப்படி ஒருநாள் கூட லீவு எடுக்காம வர்றானே,அய்யன்,அம்மா தேட மாட்டாங்களா.அவன பார்க்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல. இந்த தீபாவளிக்கு கூட ஊருக்கு போகல.அதனாலையே நானும் எங்கேயும் போகாம கடைய திறந்து வச்சிருந்தேன்.நீயாவது எடுத்து சொல்லலாமில்ல”பணத்தை எண்ணியபடி வேண்டுமென்றே பேசியவரை,பிரவீன் சங்கடமாக பார்க்க,



அங்கே சமையல் வேலைக்கு இருந்த இரண்டு பெண்மணிகளும்,மேல் வேலைக்கென இருக்கும் இரண்டு ஆட்களும் இவர்களின் பேச்சை கேட்பதை உணர்ந்தவன்...என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.



அரசுக்கு அந்த சங்கடமெல்லாம் இல்லை போல..தன்னுடைய நிலை என்பதை தெளிவாகவே சொன்னான்.அதை சொல்வதற்கு கூச்சப்படவில்லை..அப்படி மறைத்தால் தான் அசிங்கம் என்று நினைப்பவன்..



“அண்ணா.என்னோட குடும்பத்த பத்தி உங்கள தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்? ஐயனும்,அம்மாவும் தேடுவாங்க தான்.காசுக்காக தேடுவாங்க! நான் போனா,கையில இருக்க பணமெல்லாம் கரைஞ்சு போயிடும்.அவங்க கேட்டா என்னால ‘இல்லை’-ன்னு சொல்ல முடியாது.கையில இருக்கதை எல்லாம் கொடுத்துட்டு,பஸ் டிக்கெட் எடுக்கக் கூட காசில்லாம நான் சிரமப்பட்ட கதையெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும்..



எனக்கு இப்போதைக்கு பணம் ரொம்ப அவசியம்-ண்ணா..இந்த தடவை பீஸ் கட்டவே உங்ககிட்டதான் பணம் வாங்கினேன்.இன்னும் ஸ்காலர்ஷிப் பணம் கைக்கு வரலை.உங்களுக்கு எப்படி பணத்தை திருப்பி தரப் போறேன்னு தெரியலை.என்னோட நிலைமை இப்படி இருக்கும் போது,அங்க போக எனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு”என்றவனின் நிலையை எண்ணி பரிதாபப்பட்டார் கண்ணன்.



கண்ணன் கொஞ்சம் வசதியானவர்.அசையா சொத்துக்கள் ஏராளம்.அதை விற்க அவருக்கு மனமில்லை.சொத்துக்களை விற்று அந்த பணத்தை என்ன செய்வது என்ற எண்ணமே அதற்கு முக்கிய காரணம்.



ஏனென்றால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.மனைவியும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட,அவருக்கு சில பெண்களின் பழக்கம் இருக்க..’அந்த’ செலவுகளுக்காக போய் நிலங்களை விற்பதற்கு அசிங்கமாக இருக்கவும்,பணம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நடத்திய கடையை லாபமீட்டும் கடையாக மாற்றிய பொறுப்பு பிரவீனையும்,அரசுவையுமே சாரும் என்பதால் அவர்கள் கேட்கும்போது பணத்தை கொடுக்க அவர் தயங்கியதும் இல்லை.



கொடுத்த கடனை திருப்பி கொடுக்கும் போது,வேண்டுமென்றே சம்பளத்தை கூட்டி கொடுக்க தயங்கியதும் இல்லை. இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும்..எதையும் கொண்டு போகப்போவதில்லை என்பதால்,இவர்கள் இருவருக்கும் உதவி செய்ய அவர் தயங்கியதே இல்லை.



பிரவீன் குடும்பமும் கஷ்டப்படும் குடும்பம் தான் என்றாலும்,அரசுவின் குடும்ப நிலை அளவுக்கு மோசமில்லை.பிரவீனை தூணாக தாங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் இருந்தனர்..இவன் வேலைக்கு செல்ல வேண்டுமென்றே அவசியமில்லை.



‘உருப்படியா படிக்கற பொழப்பை நிம்மதியா பாரு..உன் செலவுக்கு நானாச்சு’அப்பா பலமுறை சொன்னாலும்,இந்த வயதில் அவர்களை கஷ்டபடுத்தி பார்க்க அவனுக்கு மனமில்லை..



கல்லூரி சென்ற நேரம் தவிர மீதி இருக்கும் நேரங்களில் இந்த ஹோட்டலுக்கு வேலைக்கு வருவதும்..விடுமுறை நாட்களில் எங்கேயாவது விசேஷம் என்றால்,உணவு ஆர்டர் எடுக்கும் வேலைகளில்,அரசுக்காக மட்டுமே அவனுடன் சென்று வேலை பார்ப்பான்..



ஆனால் அரசுவோ கிடைத்த எந்த வேலையும் விடமாட்டான்..வார விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை வந்தால்...விசேஷ நாட்கள் இல்லையென்றால்...எப்படியாவது யாரிடமாவது ஏதாவது வேலை வாங்கி தினக் கூலிக்கு சென்றுவிடுவான்..



இந்தக் கதை இங்கு வேலை செய்யும் அனைவருக்கும்..ஏன் சில வாடிக்கையாளருக்கு கூட தெரிந்திருக்க...அவர்களுக்கு தெரிந்த இடத்தில் வேலை இருந்தால்,தயங்காமல் முதலில் இவனிடம் தான் சொல்வார்கள்..அப்படியொரு நன்மதிப்பை பெற்றிருந்தான்...



வியர்வையால் நனைந்து போயிருந்த தன் அழுக்கு பனியனை காற்றோட்டத்துக்காக இழுத்துவிட்ட அரசு,தன் நண்பனுடன் பைக்கில் அமர்ந்து,கண்ணனிடம் விடைபெற்ற பின் நேராக அவர்கள் தனியாக வீடெடுத்து தங்கிருக்கும் பகுதிக்கு சென்றான்.



அறைக்கு வந்த இருவருக்கும் அடுத்து எதையும் யோசிக்கவோ,பேசவோ கூட தெம்பில்லை.பாயை விரித்து படுத்த இருவரும் அடுத்த நாள் எழுவதற்கு எழரையாகிவிட்டது..அதன்பின் அவசரம் அவசரமாக கல்லூரிக்கு கிளம்ப அன்றைய நாள் வழக்கம் போல சென்றது.



அன்றைய நாளின் பிற்பகல் நான்கு மணி அளவில்...



“வலைக்கோட்டை இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க”நடத்துனரின் குரலில்,எழுந்த நின்ற பயணிகளின் மத்தியில் இருந்த ஒரு பெண்மணியின் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும்.பேருந்திலிருந்து இறங்கியவர் ஊருக்குள் செல்லாமல்,கொஞ்சம் காட்டுப்பகுதி போல இருந்த பகுதிக்குள் நடக்க ஆரம்பித்தார்.



வேக வேகமாக நடந்தவர் அருகே இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று,”ரெண்டு கோட்டரூ வேணும்”என்று கேட்டவர்,பணத்தை செலுத்தி வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்குள் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.



வரிசையாக இருந்த சிறிய சிறிய ஓட்டு வீடுகளில் இவரது வீடும் இருக்க,கதவை திறந்து உள்ளே சென்றது தான் தாமதம்.



“ஏன்-டி சிறுக்கி..எவன் கூட போயிட்டு வர்ற..சொல்லுடி..”என்ற ஆணின் சத்தமும்,அவரது கையிலிருந்த தடியில் அந்த பெண்ணின் முதுகில் சுளீரென்று இரண்டு அடிகளும் விழ..



“ஐயோ,ஏன்யா இப்படி போட்டு படுத்தற,இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்..உனக்கு கோட்டரு வாங்கி வர லேட்டாகிடுச்சு..”குரல் அழுத்துக்கொள்வது போல இருந்தாலும் மிதமிஞ்சிய பயமே அந்த பெண்மணியின் முகத்தில் தெரிய,



“அதக் கொண்டா முதல்ல”என்றவர் அவரது மடியில் இருந்த ஒரே ஒரு கோட்டரை சந்தேகமாகப் பார்த்துவிட்டு மேலும் தடியால் அடிக்க வேறு செய்ய,



“யய்யா சாமி..”என்ற மனைவியின் அலறலை அமோகமாய் ரசித்த பின்னர்,தண்ணீரை கூட கலக்காமல் மடமடவென்று குடித்தார்..



முக்கால் பகுதி காலியான பின்னர்,அவரையே ஆசையாக பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் மேல் கரிசனம் பொங்க..”இந்தா..குடிச்சுத்தொலை சனியனே”என்று பாட்டிலை அவர் மேலையே வீசவும்,அதை அவர் சரியாகப் பிடித்துக்கொண்டார்..



“நாய்..தெரு மேயற நாய்..எப்படி பிடிக்குது பாரு..ஏன்டி...எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.உம்மவன எவனுக்குடி பெத்த..”போதையிலையே கேட்க..



கொஞ்சம் கூட அசராமல்,”உனக்கு பெத்துப் போட்டதினால தான்யா,உன்னோட வைத்திய செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்பறான் என்னோட மவன்.உனக்கு பிறக்கலைன்னா இந்நேரம் ராசா மாதிரி வாழ்ந்திருப்பான்”கண்ணீர் கண்ணில் மிதக்க,அவர் பேச..



“போடி சனியனே”எட்டி உதைத்துவிட்டு,மேலும் சில அசிங்கமான பேச்சுக்களை பேசியபடியே கட்டிலில் படுத்து உறங்கிப்போனார்.



அவர் உறங்கிப்போனதை உறுதிப்படுத்திய பின்பு..வெளியில் மறைத்து வைத்திருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து மடமடவென்று காலி செய்தவர்...சட்டியில் இருந்த கஞ்சியையும் வயிறு நெம்ப குடித்துவிட்டு அவரும் களைப்பில் படுத்து உறங்கிவிட்டார்.



சரக்கு இல்லையென்றால் இந்த பெண்மணி..அதாவது நம் அரசுவின் அம்மா பழனியம்மாவிற்கு உறக்கம் வராது.உடல் உழைப்பு அப்படி! கல் குவாரியில் வெயிலில் ஓய்வாக நிற்க நேரமில்லாமல் வேலை செய்பவருக்கு இந்த சரக்கு தான் பிரதான உற்சாக பானமே!! இது இல்லையென்றால் அன்றைய இரவில் உடல்வலி பின்னி எடுத்துவிடும்..



இவரது கணவருக்கு குடிக்க காசு கொடுப்பதற்காகவே வேலைக்கு செல்கிறார்.. சில வருடங்களுக்கு முன் செல்லப்பாவிற்கு விபத்தில் இடது கால் பறிபோய்விட,செயற்கை கால் பொருத்தியும் அவர் நடந்த விபத்திலிருந்தோ,தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவோ இல்லை..



விபத்து நடக்கும் முன்பு அவரது பகுதியில் பிரபல ரவ்டியாகவே வலம் வந்தவர்.கஞ்சா விற்பது தான் இவரது முக்கிய வேலையே.அவரது மனைவியும் அதே தொழில் தான் செய்து வந்தார்..இதன் பொருட்டே இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஜெயிலுக்கு சென்று வருவார்கள்...அப்போதெல்லாம் அரசுவின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்....?அரசுவின் சிறுவயது வாழ்க்கை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.



செல்லப்பாவிற்கு மகனை படிக்க அனுப்ப விருப்பமேயில்லை.தன்னைப்போல அல்லாமல் பெரிய ரவ்டியாகவே, ஜம்பமாக ஊரை மகன் வலம் வர வேண்டும் என்று விரும்பினார்..பழனியம்மாவின் ஆசையும் அதுவே.ஜாடிக்கேற்ற மூடி.ஆனால் விரும்பியது எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? அரசுவின் வாழ்க்கை நேர்மை,உண்மை,உழைப்பு என்றல்லவா விதியால் எழுதப்பட்டிருந்தது.
Nalla iruku story
 

kayalmuthu

Well-Known Member
ஏற்கனவே ஒரு ud மட்டும் படிச்சிருக்கேன்..
இப்போ miss பண்ணாம படிச்சிடுறேன்4sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top