உயிரினில் இனிக்கிறாய் நீயே-1

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...இந்த கதை நிறைய பேர் படிச்சிருப்பீங்க.நம்ம பிரண்ட்ஸ் சிலர் கேட்டுக்கிட்டதால இங்க பதிவிடறேன்.முடிஞ்ச கதைன்னாலும் ஒவ்வொரு எபியா தினமும் போடறேன். துளி மையல் கொண்டேன் கதை திங்களிலிருந்து தொடராலாம்னு பார்க்கறேன்.இடையில கொஞ்சம் உடம்பு சரியில்லாம போச்சு.கிளைமேட் இங்க ரொம்ப மோசமா இருக்கு.சூரியனே கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது...ம்ம்ம்...என் கதை பெரிய கதையா போகும்..ஸோ இந்த கதைக்கு போகலாம்.. ரொம்ப நார்மலான கதை. சிம்பிளா இருக்கும்.ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம் என்பதையும் சொல்லிக்கொண்டு..

1



உலகம் ஒன்று தான்.ஆனால் அதில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்...அவர்கள் வாழும் சூழ்நிலையில் தான் எவ்வளவு மாறுபாடுகள்!



அடுத்த நொடி என்ன நடக்குமென்பது தெரியாமல் எத்தனை எத்தனையோ கனவுகளுடனும்,எதிர்கால திட்டங்களுடனும் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறமென்றால்,அன்றாட வாழ்க்கையில் கனவுகளோ,எதிர்பார்ப்போ அன்றி..ஏன் இப்படியெல்லாம் கூட வாழலாம் என்ற நினைப்புகள் கூட இல்லாமல் வாழும் ஜனங்கள் தான் இங்கு அதிகமே.



பிளாட்பாரம் நடைபாதைகளில் வாழும் மக்களுக்கும் சில ஆசைகள் உண்டு.அவை நிறைவேறுவதும் உண்டு.நிறைவேறாமல் போவதும் உண்டு.நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு.ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக்கிடப்பவர்களும் உண்டு..அவர்களில் சிலர் தான் இவர்கள்!!!



“அம்சு..அடியே அம்சு”கத்திக்கொண்டிருக்கும் பெண்ணின் குரலின் டெசிபல் கூடிக்கொண்டே போக,ஓடைக்கு பக்கத்தில் இருந்த சிறு குடிசை போன்ற அமைப்பில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்சவேணி.



“என்ன மசமசன்னு நிக்கறவ..இந்தா,இந்த துணிய கொண்டு போய் காயப்போடு”என்றவர் அவளின் அம்மா நீலவேணி.



“ஏம்மா,உனக்கு எத்தன வாட்டி தான் சொல்றது..இப்படி பாவாடைய கட்டிக்கிட்டு ஓடைல குளிக்காதன்னு! சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? ரோட்டோராம் எத்தன மனுஷ மக்க வந்து போயிட்டு இருக்காக..உனக்கு வெட்கமாவே இல்லையாம்மா...”-இறுதியில் தாயின் வெட்கத்தை பற்றி அறியும் உண்மையான ஆவலுடன் கேட்டு வைத்தாள்.



அதற்கு பரிசாக,பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து அவள் மேல் நீலவேணி வீச,சுதாரித்து நகர்ந்தவள்,”ஜஸ்ட் மிஸ்ஸு ”எனவும்,தீப்பார்வை பார்த்தவர்,



“ஒழுங்கா உள்ள போடி.பெருசா சொல்ல வந்துட்டா! ஒளிஞ்சு மறைஞ்சு குளிச்சு நீராடி ஆட்டம் போட உங்கப்பன் என்ன அடுக்குமாடி வீடா கட்டி வச்சிருக்கான்..இருக்க இடத்துக்கு தகுந்த மாதிரி வாழ்ந்துட்டு போகாம வேக்கானம் பேச வந்துட்டா”என்றபடி பாவாடையை பிழிந்துவிட்டு தோள் மேல் துண்டை போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் வந்து உடைமாற்ற தொடங்கியவர்,தன் பெண்ணின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ..



“அம்சு..நானும் உன்ன மாதிரித்தேன் வயசுப்புள்ளைல இருந்தேன்.லேசா இடுப்பு சேலை விலகினாக் கூட மனசு பதறிப்போயிடும்.ஆனா அதுக்காக எத்தன நாளைக்கு உடம்ப மறைச்சு சோறு துண்ண முடியும்.இங்க வயித்த காட்டுனா தான்.வயிறு நெம்பும்”என்று அமைதியாக ஆரம்பித்தவர்,இறுதியில் காட்டமாக சொல்லிவிட..மகளின் முகமோ கலங்கிப்போனது.



அதில் மனம் நொந்தவராய்,மகளை தாஜா செய்ய நினைக்கும் வேளையில்,“நீலு..நீலுக்குட்டி....எங்கடா இருக்க...”என்ற குரல் கேட்கவும், தலையில் அடித்துக்கொண்ட நீலவேணி,



“எத்தனையோ ஆம்பளைங்கள சமாளிச்சு வந்துட்டேன்டி அம்சு.ஆனா உங்கப்பன ஒண்ணும் பண்ண முடியல.எத்தன அடிச்சாலும்,வெக்கமே இல்லாம வந்துடறான்..நானும் பொம்பளைப்பிள்ள இருக்கியேன்னு தான், இத்தன நாளா அந்த ஆள விட்டு வைச்சிருக்கேன்.இல்லைன்னா அந்த ஆள் படுத்தற பாட்டுக்கு ராவோடு ராவா கொண்ணு புதைச்சிருப்பேன்”பேசியபடியே சேலையை உதறி கட்டியவர்,



“இந்தா வாரன்-யா..சும்மா ‘நய்நய்’-னு உசுரை எடுக்கறியே”என்றவர் தன் மணி பர்சிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து..



“இந்தாய்யா.இந்த அளவுக்கு தான் இன்னைக்கு குடிக்கணும்.மேல காசு கேட்டு வந்துடாத! ஷோ வேற குறைஞ்சுக்கிட்டே வருது.அந்த மேனேஜர் என்னன்னா..உன்னால முடியலைன்னா உம்பொண்ண அனுப்பி வைன்னு வித்தாரம் பேசறான்.அவன் கழுத்த திருகிப் போடணும்னு வெறிய, எப்படியோ நேத்து அடக்கிட்டு வந்துட்டேன்..நீ எங்க போனாலும்..சரியா இன்னைக்கு ராவைக்கு ஷோக்கு வந்துடணும்..இல்லைன்னா நாளைக்கு வூட்டுக்குள்ள விடமாட்டேன் பார்த்துக்க”விடாது பேசியபடி அளவாய் இருந்த அந்த சமையலறைக்குள் சென்று பாத்திரத்தை உருட்ட..என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுக்கியபடி அம்மாவையும்,அப்பாவையும் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்சவேணி.





நினைவு தெரிந்த நாளிலிருந்தே தன்னுடைய தகப்பன் சொக்கன் இப்படித்தான் என்று தெரிந்ததால் அவளுக்கு பெரிதாக கவலையெல்லாம் இல்லை.ஒருவேளை சொக்கன் குடித்துவிட்டு அவரது நண்பன் முனியனை போல் மனைவி மகளை அடித்து கொடுமை படுத்தியிருந்தால் கவலைப்பட்டிருப்பாளோ என்னவோ? சொக்கனோ தானுண்டு,தன் வேலையுண்டு என்று இருப்பதினால் அப்பா என்ற வகையில் அவரை இவளுக்கும் பிடிக்கத்தான் செய்கிறது.





குடிக்கிறார் என்பதற்காக வெறுப்பை காட்டிவிட முடியுமா? முகம் திருப்பத்தான் முடியுமா? இங்கே தன்னை சுற்றியுள்ள குடும்பங்களில் இல்லத்தலைவிகள் கூட உடல் நோவுக்காக மாலை வேளைகளில் மறைவிடங்களை கூட நாடாமல் வெட்ட வெளியிலையே கும்பலாக அமர்ந்து ராவாக சரக்கை ஊற்றி குடிப்பதை பார்த்து வருபவளாயிற்றே..



அதனாலையே சொக்கன் அவளுக்கு சொக்கத்தங்கமே என்ற போதிலும் சொக்கன் ஒன்றுக்குமே லாயக்கில்லாத பிறவி என்பதை அவளே ஒத்துக்கொள்ளத்தான் செய்வாள்.



மெதுவாக அவளுக்கென்று ஒதுக்கியிருந்த ஒரே ஒரு ஆள் மட்டுமே படுக்கக்கூடிய அவளது அறைக்கு...இல்லையில்லை அவளது இடத்திற்கு சென்று கதவை...ம்ஹூம்..சேலைத்திரையை விளக்கி உள்ளே சென்றவள் அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள்.



ஆளை அசரடிக்க வைக்கும் அழகெல்லாம் இல்லை. மாநிறம் தான்.அளவான கூந்தல் தான்.சராசரி உயரம் தான்..உயரத்திற்கேற்ற உடல்வாகு தான்.பத்தொன்பது வயது நிரம்பிய பருவச்சிட்டு என்பதால் அவளை ரூட் விட ஆட்கள் ஏராளமாய் இருக்கிறார்கள் தான்.இப்படி எத்தனையோ ‘தான்’ போட்டுக்கொண்டே போகலாம்.மொத்தத்தில் உங்களைப் போலவோ,இல்லையேல் உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணை போலவோ தான் இருப்பாள்.



படிப்போ பிளஸ் டூவை தாண்டவில்லை.நீலவேணிக்கு மகளை பெரிய டாக்டராகவும் கலெக்டராகவும் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை தான்.ஆனால் அவளோ படிப்பில் சுமாராகத்தான் இருந்தாள்.எல்லோருமே முதல் ரேன்க் மாணவர்களாகி விட முடியாதில்லையா.அதில் நீலவேணிக்கு வருத்தம் தான் என்றாலும்..’விதையொன்று விதைத்தால்,அந்த பயிரை தானே அறுவடை செய்ய முடியும்’ என்று பழமொழி சொல்லி..மகளும் தன்னைப்போல தான் என்று தேற்றிக்கொள்வார்..சொக்கனுக்கு மகள் என்ன படிக்கிறாள் என்பதிலெல்லாம் ஆர்வமில்லை.



அதிலும் இவர்களது பிழைப்பு ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதால் அம்சவேணி பெரும்பாலும் அவளுடைய பாட்டி வீட்டில் தான் இருப்பாள்.இப்போது கூட தீபாவளி விடுமுறைக்காக..அவள் வேலை செய்யும் மில்லில் லீவு விட்டிருப்பதால் இங்கே வந்திருக்கிறாள்.மற்றபடி அவளது வாசம் பாட்டி வீடு தான்.



மகளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ள நீலவேணி விரும்பாததே, அவள் பாட்டி வீட்டில் தங்குவதற்கான முக்கிய காரணம்.தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அவரது வாழ்க்கையே சர்க்கஸ் கூடாரம் என்றாகிவிட்டது.



அவ்வப்போது சில ஆட்களால் ஏற்படும் பிரச்னையை தவிர,வயிற்றுக்கு உணவிடும் இந்த தொழிலை மிகுந்த பணிவோடு தான் செய்து வருகிறார்.ஆனால் மகள் அவரைப்போல தைரியசாலி இல்லை. நான் இப்படித்தான் என்று அடித்துப்பேச தெரியாதவள் என்றே மகளை பற்றி எண்ணியிருந்ததால்,அவளை இன்னும் குழந்தையாகவே பாவித்து வந்தவர்,இப்போது மகளுக்கு திருமணத்திற்காக நல்ல மணமகனை தேடிக்கொண்டிருக்கிறார்.



நிறைய வரன்கள் வந்து கொண்டேயிருக்கிறது.ஆனால் நீலவேணிக்கு தான் பிடித்தமில்லை.அவரது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.அவரால் கொடுக்க முடிந்த சீர் செனத்திக்கு ஏற்ப வந்த வரன்களில் பத்தில் எட்டு பேர் குடிகார கனவான்கள் தாம்.மீதி இரண்டில் குடும்பம் சரியில்லாமல் இருந்தது...
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
‘இந்தக் காலத்தில எவன் குடிக்காம இருக்கான்.ஊர் ஊருக்கு பள்ளிக்கூடம் இருக்கோ இல்லையோ,டாஸ்மாக் இருக்கு.இதெல்லாம் சகஜம்டி நீலா’என்று புரோக்கர் பெண்மணி வெத்தலையை வாயில் அதக்கிக்கொண்டே கூறியது வயிற்றில் புளியை கரைக்க...மிகுந்த சிரமத்திற்கு பின் எப்போதாவது குடித்தால் பரவாயில்லை என்று தன் கண்டிஷனை தளர்த்திக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டார்.



‘ஒரே ஒரு பொட்டப்பிள்ளைய பெத்துட்டு நான் படறபாடு இருக்கே,யப்பா யப்பா’என்று செல்லமாய் அழுத்துக்கொள்வார்.



சமையல் வேலையை பார்த்துக்கொண்டே மகள் என்ன செய்கிறாள் என்று எட்டிப்பார்த்தவர்,



“அந்த கண்ணாடில என்னதான் இருக்கோ? இம்புட்டு நேரமா அதையே பார்க்கறவ.அதை ஓரமா வைச்சுட்டு கம்பியூட்டர் கிளாசுக்கு சாயங்கல நேரமா போயிட்டு இருக்கேன்னு சொன்னியே! அதையெடுத்து படிக்கறது!! அந்த மேனஜர் பொண்ணு எல்லாம் எப்போ பார்த்தாலும் அந்த லேப்புடாப்புக்குள்ள தான் கண்ணை வச்சிருக்கு.நீயும் தான் இருக்கியே...



அரசாங்கம் கொடுத்ததை படம் பார்த்து பார்த்து தேய்ச்சு ஒண்ணுக்கும் ஆகாம பண்ணி...இப்போ எவனுக்கோ காசு கொடுத்து படிச்சிட்டு இருக்க..எனக்குன்னு எங்குட்டுதேன் வந்து சேருதுகளோ”என்று படபட பட்டாசாய் பொரிந்தவர் மகளின் பதிலையெல்லாம் எதிர்பாராமால்,பொம்மையாய் நின்றிருந்தவளின் தலையை அழகாக வாரிவிட ஆரம்பித்தார்..தன்னுடன் இருக்கும் போது பெண்ணிற்கு எல்லாமே தானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு..



‘போற வீட்டுல என்ன கஷ்டப்படப்போறாளோ..என் கண்ணு முன்னாடி இருக்க வரைக்கும் ராசாத்தி மாதிரி வச்சுக்கணும்’எண்ணமிட்டபடியே சாதத்தையும் கருவாட்டு குழம்பையும் தட்டில் போட்டுக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனார்..



அம்சவேணியும் அமைதியாக வேகவேகமாக உண்ண ஆரம்பித்தாள்.இல்லையென்றால் அதற்கும் செல்லாமாய் திட்டு விழும்..தட்டில் உணவு காலியாவதை எப்படித்தான் உள்ளிருந்தவாறே தெரிந்துகொள்வாரோ,விடுவிடுவென்று நடந்து வந்து,தட்டை பிடுங்கிக்கொண்டு போய் நிரப்பிக்கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனார்.



தட்டிலிருக்கும் உணவு மலைக்க வைத்தாலும்..அதிலும் அம்மாவின் அன்பு தெரிய மறுபேச்சு பேசாமல் உண்டு முடித்தாள்.



இப்படியெல்லாம் அம்சா அமைதியாக இருக்கிறாள் என்பதற்காக அவளை அமைதியின் சிகரம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.அம்மாவிடம் மட்டுமே இந்த அமைதி.மற்றபடி தேவையான இடங்களில் வாயும்,புத்தியும் நன்றாகவே அவளுக்கு வேலை செய்யும்.



இன்றோடு ஊருக்கு வந்து ஆறு நாட்கள் ஆகியிருக்க,நாளை மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே அவளுக்கு மலைப்பாய் இருந்தது.இங்கிருந்து போவதற்கே மனமில்லாமல் இருக்கவும்,சோம்பலாய் உண்டு முடித்த களைப்பில் படுத்துவிட்டாள்.



அடுத்ததாய் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எப்போது வருமோ? வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பன்று மட்டும் பாட்டியின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.மற்ற நாட்களில் மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கென்று இருக்கும் பகுதியில் தங்கிக்கொள்வாள்..பாட்டியின் வீடும் அவள் வேலை செய்யும் மில்லும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் என்றாலும்,பாதுகாப்பு கருதி அம்சவேணியை தனியாய் வந்து போவதற்கு அனுமதிக்கவில்லை.



அங்கே மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏழு மணி நேர வேலை தான்.அதன் பின் அறைக்கு செல்பவர்களும் செல்லலாம்.அந்த கம்பெனிக்கு சொந்தமான கல்லூரியில் பகுதி நேர வகுப்பில் படிக்கவும் செய்யலாம்.இவளுக்கு தான் படிக்க விருப்பமில்லை.ஏதாவது வரன் வந்தாலே திருமணம் இப்போது நடந்துவிடும்,அடுத்த மாதம் நடந்துவிடும் என்பது போன்ற நீலவேணியின் பேச்சுக்களால்..படிக்கும் ஆர்வத்தை அறவே விட்டுவிட்டாள்..



இப்போது முன்பை போல ஏனோ திருமண பேச்சு அடிபடவில்லை..ஒருவேளை முடிவு தெரியாமல் பெண்ணின் மனதில் ஆசையை வளர்க்கக் கூடாதென்று நீலவேணி எண்ணியிருக்கலாம்..அதனாலையே கணினி சார்ந்த டேலி வகுப்பில் சேர்ந்தாள்..அதற்கும் இப்போதெல்லாம் போக மனதில்லை இவளுக்கு...



‘வேலை முடிஞ்சா அப்படியே போய் படுக்கணும் போல தான் இருக்கு..இதுல இவளுக எப்படித்தான் படிக்கறாளுகளோ’என்று நொந்து கொள்வாள்..அவளது வேலையும் அப்படியே...துணி பிட்டுகளை தைத்து கொடுப்பது தான் பிரதான வேலை..



சில நேரம் சூப்பர்வைசிங் பிரிவுக்கும் போக வேண்டும்..அப்படி போனால் அன்றைக்கு நேரம் சரியில்லையென்று அர்த்தம்...முழுதாய் பத்து மணி நேரம் வேலை..உட்கார நேரமில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்..ஆரம்பத்தில் மேற்பார்வை செய்யும் போது ‘கெத்’ஆகத்தான் இருந்தது..ஆனால் வேலை முடிவில் கால் வலி பின்னி எடுத்த கதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவாள்....



மனதிற்குள்ளையே புழுங்கிவிட்டு மாலை நேர வகுப்புக்கு கும்பிடுபோட்டுவிட்டு தூங்கிவிடும் அம்ச வேணியின் சின்ன உலகம் இதுவே...



2


இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை
முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
திருமண வயதில் தினமொரு ஆசை-கண்ணதாசன்


“ஆச்சி..ஆச்சி...நான் கடைக்கு போயிட்டு வரவா”-தலையை வாரியபடியே ஓரக்கண்ணில் பாட்டியை பார்த்தபடி அம்சவேணி அனுமதி வேண்ட,



“இங்கன வந்ததில இருந்து இம்புட்டு நேரம் நீ இத கேட்காம இருந்ததே அதிசயந்தானாத்தா! ஞாயித்துக்கிழமை வந்தா போதுமே!! நாவுக்கு ருசியா வேணும்..அதுவும் அந்த கண்ணன் கடை புரோட்டா தான் வேணும்..உன்னோட நாக்கை அப்படியே செவத்த மொளகாய வைச்சு தேக்க்கணுமாத்தா.அப்போ தான் அடங்குவ”வசைபாடியபடியே தன்னுடைய சுருக்கு பையிலிருந்து காசை எடுத்து,



“இந்தா துட்டு,உனக்கு மட்டும் வாங்காமா எனக்கும் சேர்த்து நாலு வாங்கு..கோழித்துண்டு ரெண்டு எச்சா போட சொல்லு..குழம்புல மசால் வாடை தான் வருது..ஒரு ருசியும் இல்ல”என்றவர் வெத்தலையை மெல்ல ஆரம்பித்தார்.



அவரது அடைமழை பேச்சில்,விட்டால் போதும் சாமி என்றாகிவிட,கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை தன்னைப்பார்த்து முகத்தை திருத்திவிட்டு நடையில் அவசரத்தை காட்டும் முயற்சியை அடக்கி,மெதுவாக சிரமப்பட்டு நடந்தாள்.



அடுத்த தெருவில் தான் கடை என்றாலும்,ஞாயிற்றுக்கிழமை ஐந்து மணிக்கு மேல் கடைப்பக்கம் செல்ல முடியாது..எங்கு எவர் குடித்துவிட்டு எப்படி சண்டை போட்டுக்கொண்டிருப்பார்களோ தெரியாது.குடிபோதையில் கிழவர்கள் கூட வம்பிழுக்க தயங்கமாட்டார்கள்.அதனாலையே நாலு மணிக்கெல்லாம் கடைக்கு சென்றுவிடுவது வழக்கம்..இன்று சற்று தாமதமாகிவிட....’கண்ணன் உணகவம்’கடைக்குள் நுழையும் போதே..ஓரக்கண்ணால் பார்த்தபடி உள்ளே வர...



அவள் வந்தது தான் தாமதம்..



“ஏம்மா..தங்கச்சி..இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு..கடையில கூட்டம் வர்ற நேரம் வேற.இனிமேக்கொண்டு நேரமா வா.இல்லைன்னா வராத..”என்று சொன்ன பிரவீன்....



‘உன்னால நான் பேச்சுக்கேட்க வேண்டியிருக்கு’மனதிற்குள் புலம்பிவிட்டு,அவளுக்கென்று ஸ்பெஷலாக கட்டி வைத்த புரோட்டா பார்சலை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தவன்..



அவள் இன்னும் தயங்கி நிற்பதை பார்த்து,தலையில் மானசீகமாக அடித்துக்கொண்டான்.



“அரசு..டேய் அரசு..அந்த இலையை இங்கன வச்சிட்டுப் போ”என்றவுடன்.....இலைக்கட்டுடன் அரசு வந்தவன்..அதே வேகத்தில் திரும்பி உள்ள போய்விட...அதேவேகத்தில் அம்சவேணியும் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.



அவள் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னரே வெளியே வந்தான் அரசு...



பிரவினுக்கோ ஏகப்பட்ட கடுப்பு..



“ஆனாலும் உனக்கு எங்கேயோ மச்சம்டா அரசு..புரோட்டா கட்டி கொடுத்தே ஆள கரெக்ட் பண்ணிட்ட..ஆனா எனக்கோ..எம்புட்டு செலவு பண்ணாலும் எவளும் மடிய மாட்டேங்கறாளுங்க”பெருமூச்சுவிட்டவனின் முதுகில் ரெண்டு போட்ட அரசு..



“நீ தான்டா,தேவையில்லாம எங்க ரெண்டு பேருக்குள்ள எதுவோ இருக்குன்னு எல்லாரையும் நம்ப வைச்சிட்டு இருக்க..அந்தப்பொண்ணோட பேர் என்னன்னு கூட எனக்கு தெரியாது..ஆனால் நீ,உன் இஷ்டத்துக்கு புரளியை கிளப்பிவிட்டுட்டு இருக்க..இதெல்லாம் நல்லாயில்ல..”என்றவன் கீழே அமர்ந்து பெரிய பெரிய வாழை இலைகளை இரண்டாக வெட்ட ஆரம்பித்தான்.



“நிஜமாவே உங்களுக்குள்ள ஒண்ணுமே இல்லாம தான்,அந்தப்புள்ள வர்றதுக்கு முன்னாடியே பார்சலை கட்டி ரெடியா வச்சியா அரசு..”நக்கலாக கேட்க..



“ரெகுலர் கஸ்டமர்ஸ்-க்கு இந்த மாதிரி பார்சல் கட்டறது வழக்கம் தானே”என்றான்.



“டேய்..டேய்,சமாளிக்காதடா..வாரத்துக்கு ஒரே ஒரு தடவ மட்டும் வாற அந்தப்புள்ள உங்களுக்கு ரெகுலர் கஸ்டமரா..நான் நம்பிட்டேன்..”என்று மேலும் வாயடித்துக்கொண்டிருந்தவன் சிறிது நேரத்திற்கெல்லாம் அதையெல்லாம் மறந்தவனாக,வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.



கடை ஓனர் கண்ணன் தன் பங்குக்கு அவரும் ஓடியாடி வேலை செய்து கொண்டும்,கல்லாவில் ஒரு கண்ணுமாக இருக்க..அன்றைய வேலை அவர்களுக்கு முடியவே இரவு பதினொன்றை தாண்டிவிட்டது.





“ஹப்பா”-ஓய்வாக அமர்ந்தவர்களை கனிவுடன் பார்த்தார் கண்ணன்.
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
“ஏம்ப்பா பிரவீன்,உன்னோட பிரண்டு அரசு,,இப்படி ஒருநாள் கூட லீவு எடுக்காம வர்றானே,அய்யன்,அம்மா தேட மாட்டாங்களா.அவன பார்க்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல. இந்த தீபாவளிக்கு கூட ஊருக்கு போகல.அதனாலையே நானும் எங்கேயும் போகாம கடைய திறந்து வச்சிருந்தேன்.நீயாவது எடுத்து சொல்லலாமில்ல”பணத்தை எண்ணியபடி வேண்டுமென்றே பேசியவரை,பிரவீன் சங்கடமாக பார்க்க,



அங்கே சமையல் வேலைக்கு இருந்த இரண்டு பெண்மணிகளும்,மேல் வேலைக்கென இருக்கும் இரண்டு ஆட்களும் இவர்களின் பேச்சை கேட்பதை உணர்ந்தவன்...என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.



அரசுக்கு அந்த சங்கடமெல்லாம் இல்லை போல..தன்னுடைய நிலை என்பதை தெளிவாகவே சொன்னான்.அதை சொல்வதற்கு கூச்சப்படவில்லை..அப்படி மறைத்தால் தான் அசிங்கம் என்று நினைப்பவன்..



“அண்ணா.என்னோட குடும்பத்த பத்தி உங்கள தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்? ஐயனும்,அம்மாவும் தேடுவாங்க தான்.காசுக்காக தேடுவாங்க! நான் போனா,கையில இருக்க பணமெல்லாம் கரைஞ்சு போயிடும்.அவங்க கேட்டா என்னால ‘இல்லை’-ன்னு சொல்ல முடியாது.கையில இருக்கதை எல்லாம் கொடுத்துட்டு,பஸ் டிக்கெட் எடுக்கக் கூட காசில்லாம நான் சிரமப்பட்ட கதையெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும்..



எனக்கு இப்போதைக்கு பணம் ரொம்ப அவசியம்-ண்ணா..இந்த தடவை பீஸ் கட்டவே உங்ககிட்டதான் பணம் வாங்கினேன்.இன்னும் ஸ்காலர்ஷிப் பணம் கைக்கு வரலை.உங்களுக்கு எப்படி பணத்தை திருப்பி தரப் போறேன்னு தெரியலை.என்னோட நிலைமை இப்படி இருக்கும் போது,அங்க போக எனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு”என்றவனின் நிலையை எண்ணி பரிதாபப்பட்டார் கண்ணன்.



கண்ணன் கொஞ்சம் வசதியானவர்.அசையா சொத்துக்கள் ஏராளம்.அதை விற்க அவருக்கு மனமில்லை.சொத்துக்களை விற்று அந்த பணத்தை என்ன செய்வது என்ற எண்ணமே அதற்கு முக்கிய காரணம்.



ஏனென்றால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.மனைவியும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட,அவருக்கு சில பெண்களின் பழக்கம் இருக்க..’அந்த’ செலவுகளுக்காக போய் நிலங்களை விற்பதற்கு அசிங்கமாக இருக்கவும்,பணம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நடத்திய கடையை லாபமீட்டும் கடையாக மாற்றிய பொறுப்பு பிரவீனையும்,அரசுவையுமே சாரும் என்பதால் அவர்கள் கேட்கும்போது பணத்தை கொடுக்க அவர் தயங்கியதும் இல்லை.



கொடுத்த கடனை திருப்பி கொடுக்கும் போது,வேண்டுமென்றே சம்பளத்தை கூட்டி கொடுக்க தயங்கியதும் இல்லை. இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும்..எதையும் கொண்டு போகப்போவதில்லை என்பதால்,இவர்கள் இருவருக்கும் உதவி செய்ய அவர் தயங்கியதே இல்லை.



பிரவீன் குடும்பமும் கஷ்டப்படும் குடும்பம் தான் என்றாலும்,அரசுவின் குடும்ப நிலை அளவுக்கு மோசமில்லை.பிரவீனை தூணாக தாங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் இருந்தனர்..இவன் வேலைக்கு செல்ல வேண்டுமென்றே அவசியமில்லை.



‘உருப்படியா படிக்கற பொழப்பை நிம்மதியா பாரு..உன் செலவுக்கு நானாச்சு’அப்பா பலமுறை சொன்னாலும்,இந்த வயதில் அவர்களை கஷ்டபடுத்தி பார்க்க அவனுக்கு மனமில்லை..



கல்லூரி சென்ற நேரம் தவிர மீதி இருக்கும் நேரங்களில் இந்த ஹோட்டலுக்கு வேலைக்கு வருவதும்..விடுமுறை நாட்களில் எங்கேயாவது விசேஷம் என்றால்,உணவு ஆர்டர் எடுக்கும் வேலைகளில்,அரசுக்காக மட்டுமே அவனுடன் சென்று வேலை பார்ப்பான்..



ஆனால் அரசுவோ கிடைத்த எந்த வேலையும் விடமாட்டான்..வார விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை வந்தால்...விசேஷ நாட்கள் இல்லையென்றால்...எப்படியாவது யாரிடமாவது ஏதாவது வேலை வாங்கி தினக் கூலிக்கு சென்றுவிடுவான்..



இந்தக் கதை இங்கு வேலை செய்யும் அனைவருக்கும்..ஏன் சில வாடிக்கையாளருக்கு கூட தெரிந்திருக்க...அவர்களுக்கு தெரிந்த இடத்தில் வேலை இருந்தால்,தயங்காமல் முதலில் இவனிடம் தான் சொல்வார்கள்..அப்படியொரு நன்மதிப்பை பெற்றிருந்தான்...



வியர்வையால் நனைந்து போயிருந்த தன் அழுக்கு பனியனை காற்றோட்டத்துக்காக இழுத்துவிட்ட அரசு,தன் நண்பனுடன் பைக்கில் அமர்ந்து,கண்ணனிடம் விடைபெற்ற பின் நேராக அவர்கள் தனியாக வீடெடுத்து தங்கிருக்கும் பகுதிக்கு சென்றான்.



அறைக்கு வந்த இருவருக்கும் அடுத்து எதையும் யோசிக்கவோ,பேசவோ கூட தெம்பில்லை.பாயை விரித்து படுத்த இருவரும் அடுத்த நாள் எழுவதற்கு எழரையாகிவிட்டது..அதன்பின் அவசரம் அவசரமாக கல்லூரிக்கு கிளம்ப அன்றைய நாள் வழக்கம் போல சென்றது.



அன்றைய நாளின் பிற்பகல் நான்கு மணி அளவில்...



“வலைக்கோட்டை இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க”நடத்துனரின் குரலில்,எழுந்த நின்ற பயணிகளின் மத்தியில் இருந்த ஒரு பெண்மணியின் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும்.பேருந்திலிருந்து இறங்கியவர் ஊருக்குள் செல்லாமல்,கொஞ்சம் காட்டுப்பகுதி போல இருந்த பகுதிக்குள் நடக்க ஆரம்பித்தார்.



வேக வேகமாக நடந்தவர் அருகே இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று,”ரெண்டு கோட்டரூ வேணும்”என்று கேட்டவர்,பணத்தை செலுத்தி வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்குள் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.



வரிசையாக இருந்த சிறிய சிறிய ஓட்டு வீடுகளில் இவரது வீடும் இருக்க,கதவை திறந்து உள்ளே சென்றது தான் தாமதம்.



“ஏன்-டி சிறுக்கி..எவன் கூட போயிட்டு வர்ற..சொல்லுடி..”என்ற ஆணின் சத்தமும்,அவரது கையிலிருந்த தடியில் அந்த பெண்ணின் முதுகில் சுளீரென்று இரண்டு அடிகளும் விழ..



“ஐயோ,ஏன்யா இப்படி போட்டு படுத்தற,இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்..உனக்கு கோட்டரு வாங்கி வர லேட்டாகிடுச்சு..”குரல் அழுத்துக்கொள்வது போல இருந்தாலும் மிதமிஞ்சிய பயமே அந்த பெண்மணியின் முகத்தில் தெரிய,



“அதக் கொண்டா முதல்ல”என்றவர் அவரது மடியில் இருந்த ஒரே ஒரு கோட்டரை சந்தேகமாகப் பார்த்துவிட்டு மேலும் தடியால் அடிக்க வேறு செய்ய,



“யய்யா சாமி..”என்ற மனைவியின் அலறலை அமோகமாய் ரசித்த பின்னர்,தண்ணீரை கூட கலக்காமல் மடமடவென்று குடித்தார்..



முக்கால் பகுதி காலியான பின்னர்,அவரையே ஆசையாக பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் மேல் கரிசனம் பொங்க..”இந்தா..குடிச்சுத்தொலை சனியனே”என்று பாட்டிலை அவர் மேலையே வீசவும்,அதை அவர் சரியாகப் பிடித்துக்கொண்டார்..



“நாய்..தெரு மேயற நாய்..எப்படி பிடிக்குது பாரு..ஏன்டி...எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.உம்மவன எவனுக்குடி பெத்த..”போதையிலையே கேட்க..



கொஞ்சம் கூட அசராமல்,”உனக்கு பெத்துப் போட்டதினால தான்யா,உன்னோட வைத்திய செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்பறான் என்னோட மவன்.உனக்கு பிறக்கலைன்னா இந்நேரம் ராசா மாதிரி வாழ்ந்திருப்பான்”கண்ணீர் கண்ணில் மிதக்க,அவர் பேச..



“போடி சனியனே”எட்டி உதைத்துவிட்டு,மேலும் சில அசிங்கமான பேச்சுக்களை பேசியபடியே கட்டிலில் படுத்து உறங்கிப்போனார்.



அவர் உறங்கிப்போனதை உறுதிப்படுத்திய பின்பு..வெளியில் மறைத்து வைத்திருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து மடமடவென்று காலி செய்தவர்...சட்டியில் இருந்த கஞ்சியையும் வயிறு நெம்ப குடித்துவிட்டு அவரும் களைப்பில் படுத்து உறங்கிவிட்டார்.



சரக்கு இல்லையென்றால் இந்த பெண்மணி..அதாவது நம் அரசுவின் அம்மா பழனியம்மாவிற்கு உறக்கம் வராது.உடல் உழைப்பு அப்படி! கல் குவாரியில் வெயிலில் ஓய்வாக நிற்க நேரமில்லாமல் வேலை செய்பவருக்கு இந்த சரக்கு தான் பிரதான உற்சாக பானமே!! இது இல்லையென்றால் அன்றைய இரவில் உடல்வலி பின்னி எடுத்துவிடும்..



இவரது கணவருக்கு குடிக்க காசு கொடுப்பதற்காகவே வேலைக்கு செல்கிறார்.. சில வருடங்களுக்கு முன் செல்லப்பாவிற்கு விபத்தில் இடது கால் பறிபோய்விட,செயற்கை கால் பொருத்தியும் அவர் நடந்த விபத்திலிருந்தோ,தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவோ இல்லை..



விபத்து நடக்கும் முன்பு அவரது பகுதியில் பிரபல ரவ்டியாகவே வலம் வந்தவர்.கஞ்சா விற்பது தான் இவரது முக்கிய வேலையே.அவரது மனைவியும் அதே தொழில் தான் செய்து வந்தார்..இதன் பொருட்டே இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஜெயிலுக்கு சென்று வருவார்கள்...அப்போதெல்லாம் அரசுவின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்....?அரசுவின் சிறுவயது வாழ்க்கை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.



செல்லப்பாவிற்கு மகனை படிக்க அனுப்ப விருப்பமேயில்லை.தன்னைப்போல அல்லாமல் பெரிய ரவ்டியாகவே, ஜம்பமாக ஊரை மகன் வலம் வர வேண்டும் என்று விரும்பினார்..பழனியம்மாவின் ஆசையும் அதுவே.ஜாடிக்கேற்ற மூடி.ஆனால் விரும்பியது எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? அரசுவின் வாழ்க்கை நேர்மை,உண்மை,உழைப்பு என்றல்லவா விதியால் எழுதப்பட்டிருந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உயிரினில்
இனிக்கிறாய் நீயே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நிஷாலக்ஷ்மி டியர்
 
Last edited:

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "உயிரினில்
இனிக்கிறாய் நீயே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நிஷாலக்ஷ்மி டியர்
நன்றி பானு ம்மா. புது கதையில்ல. பழசு தான்.நீங்க இப்போ தான் படிக்கிறீங்களா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top