உன் கண்ணில் என்னை கண்டேன் epi 23

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
23

அடுத்த நாள் அனாடமி கிளாஸ் இருந்தது ஆனால் வர்ணா அதில் பங்கெடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவள் தனியாக அமர்ந்து சித்தார்த் சொன்ன படங்களை வரைய தொடங்கினாள். பின் தன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை முன்னெச்சரிக்கையாக வைத்துக்கொண்டு சித்தார்த் கொடுத்த வீடியோக்களை பார்க்க தொடங்கினாள். ஒவ்வொரு முறை தலை சுத்துவது போல் தோன்றினாலும் தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து பின் பார்க்க தொடங்கினாள்.

அங்கு அனாடமி வகுப்பில் அவர்களின் ஆசிரியர் அடுத்த அனாடமி கிளாசில் வர்ணா பங்கேற்க போவதாகவும் அவளுக்கு அவர்கள் அனைவரும் உதவுமாறும் வேண்டிக் கொண்டார். பின் அவர்களின் பாடம் முடிந்து அனைவரும் தங்களின் வகுப்புக்கு வர சித்தார்த் வர்ணாவின் முயற்சிகளை கண்டு பாராட்டினான்.

அடுத்த மூன்று நாட்களும் இதே பயிற்சிகளை தொடர்ந்து செய்தாள் வர்ணா. இரு நாட்கள் கழித்து அவள் இரு பொம்மைகளை கொண்டு வந்தாள். ஒன்று மனித இதயம் போல் வடிவம் கொண்டது இன்னொன்று மனித மூளையை ஒத்திருந்தது.

அதன் மேல் ரெட் இங்க் பூசி அதனை உண்மையான உறுப்புகள் போல் பாவித்து வெட்ட தொடங்கினாள். இதை பார்த்த நிலாவும் ரம்யாவும், “என்ன டி பண்ற? பார்க்கவே கன்றாவியா இருக்கு. இதுக்கு நீ காடவர்லயே இதெல்லாம் பண்ணிடலாம் போல் இருக்கு டி.” என்று பாவமாக கூறினர்.

“ஏய் அவளே ஏதேதோ முயற்சி செய்துட்டு இருக்கா அவளை டிஸ்டர்ப் பண்ணாம போய் கேன்டீன காலி பண்ணுங்க போங்க” என்று அவர்களை விரட்டினான் சித்தார்த்.

“ஆமாம் இதை பார்ததுக்கப்பறம் எங்க சாப்பிடறது? நைட் டின்னெர் கூட சாப்பிட தோனாதுனு நினைக்கிறேன்.” என்று ஒரு மாதிரி முகத்தை சுளித்தவாறு கூறினாள் ரம்யா.

இது எதையும் கண்டு கொள்ளாத வர்ணா தன் வேலையை தொடர்ந்தாள். அதே போல் பொம்மைகளை வைத்து சில நாட்கள் தன் பயிற்சிகளை தொடர்ந்தாள்.

சில நாட்களுக்கு பின் பீட்ரூட் மற்றும் தர்பூசணி பழங்களை கொண்டு வந்து வெட்டிக்கொண்டிருந்தாள். சித்தார்த் நிலா மற்றும் ரம்யா ஆகிய மூவரும் அவளின் அருகில் சென்று என்ன என்று கேட்க ரத்தத்துடன் வேலை செய்கிறேன் என்று கூறி அவர்களை கண்டு கொள்ளாது அவள் கொண்டு வந்த இரண்டையும் வெட்டி வெட்டி ஒரு கிண்ணத்தில் கலந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அவள் செய்வதை கவனித்தவர்களுக்கு குமட்டுவது போல் இருந்தது “அடி பாவி இனி நாங்க ஜூஸும் குடிக்க முடியாதா?” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ரம்யா.

“ஏன் டி இதெல்லாம் உங்க வீட்ல செய்ய கூடாதா?” என்று பாவமாக கேட்டாள் நிலா.

“இல்ல டி முயற்சி செய்தேன். ஆனால் பாவம் தம்பி அதன் பிறகு ரெண்டு நாள் ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குறான் டி அதான்” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

“அடி பாவி எங்கள பார்த்தா உனக்கு பாவமா தெரியலையாடி?” என்று பாவமாக கேட்டனர்.

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க டி. பிரேம் புது பிரண்ட்ஸ் நிறைய கிடைச்சதால நிறைய விளையாடறான் இப்போல்லாம். அம்மா வேலைக்கு போய்டாங்க. இனி எப்போ வருவாங்கனு தெரியாது. அப்பா ஏதோ இம்போர்ட்டண்ட் ஒர்க்னு சொல்லிட்டு இப்போல்லாம் வீட்டுக்கு லேட்டா தான் வரார். டின்னெர் கூட நான் தான் சமைக்கிறேன். தனியா இந்த ரத்தம் சம்பந்தமான சோதனைகளை பண்ணா நான் மயங்கி விழுந்துட்டா யாரு டி பத்துப்பாங்க அதான் ஒரு பாதுகாப்புக்கு இங்க கொண்டு வந்து செய்றேன் என்று தொடர்ச்சியாக காரணங்களை அடுக்கி விட்டு வெட்டும் வேலையை தொடர்ந்தாள்.

அவளின் நிலை புரிந்து மற்றவர்கள் தங்கள் கிண்டலை நிறுத்தி விட்டு அவளுக்கு உதவ தொடங்கினர்.


அன்று சனிக்கிழமை, வரும் திங்களன்று அவளுக்கு அனாடமி வகுப்பு. அதனால் மிகவும் படபடப்பாக உணர்ந்தாள்.


புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தன் அறைக்கு வந்தவள் வேறு ஏதோ நியாபகத்தில் பிரஷுடன் வெளியில் வந்தாள். இதை பார்த்த அவளின் அப்பா, “என்ன டா மா இப்போ தான பிரஷ் பண்ணிட்டு சாப்ட. ஏன் திரும்பவும் பிரஷோட வர?” என்று கேட்டார்.

“இல்ல பா ஏதோ நியாபகத்தில்,.. சாரி பா.” என்று வாயில் வந்ததை கூறிவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள். அந்த நேரம் உள்ளே வந்த சித்தார்த் அவள் அனாடமி வகுப்பை நினைத்து படபடப்பாக இருக்கிறாள் என்பது புரிந்து என்ன செய்யலாம் என்று யோசிக்க தன் வீட்டிற்கே திரும்பினான்.

சிறிது நேர யோசனைக்கு பின் தன் தாயிடம் சென்று வர்ணா பிரேம் மற்றும் நண்பர்களுடன் தீம் பார்க் செல்வதாக கூறிவிட்டு, நிலா மற்றும் ரம்யாவையும் வர சொல்லி போன் செய்தான். அவர்களும் ஒத்துக்கொண்ட பின் வர்ணாவின் தந்தை வெங்கட்டிடமும் அனுமதி வாங்கினான்.


படபடப்புடன் அங்கும் இங்கும் அலைந்தவள் சிறிது நேரம் வரையலாம் என்று வரைய உட்கார்ந்தாள். அந்த நேரம் அவளின் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சித்தார்த்,

“தொடர்ந்து இதே போல் உனக்கு ஒத்துக்கொள்ளாத வேலைகளையே செய்து கொண்டிருந்தால் அழுத்தம் தான் அதிகமாகும்” என்று கூறியவன். வர்ணா பிரேம் நிலா மற்றும் ரம்யா அனைவரையும் குயின்ஸ்லாண்ட் அழைத்து வந்தான்.

வெளியில் செல்கிறோம் அதுவும் நண்பர்களுடன் என்றதும் மிகவும் குதூகலமாக தயாராகி வந்தாள் வர்ணா.

அடல்ட் பேண்டுடன் உள்ளே வந்தவர்கள் நீர்வீழ்ச்சியின் முன் நின்று புகைப்படம் படம் எடுத்துக்கொண்டார்கள். அனைவரும் குதூகலமாக அனைத்து ரெய்டுகளிலும் ஏறி இறங்கி விளையாடினார்கள்.

பெண்கள் மூவரும் ரைடில் மேல் நோக்கி செல்லும் போதெல்லாம் “ஓ” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களை அடக்கி அழைத்து வருவதே பிரேம் மற்றும் சித்தார்த்தின் வேலையாக இருந்தது.

வாட்டர் கேம்ஸில் வர்ணா அனைவரின் மீதும் தண்ணீரை கை நிறைய அள்ளி ஊற்றினாள். மற்றவர்களும் அவளை பின்பற்றி தண்ணீரில் மற்றவர்களை நனைத்தனர்.

மொத்தமாக விளையாடி முடித்து செயற்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்தனர். சீசன் டைம் இல்லாததால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் இல்லாததால் முதலில் திறக்க மாட்டார்கள் என்று கூறியிருந்த நீர்வீழ்ச்சி இப்போது திறக்கப்பட்டிருந்தது. அதனால் மழிச்சியாக அதில் முங்கி மகிழ்ந்தனர்.

மாலை ஆறு மணி போல் அனைத்து ரெய்டுகளும் மூடி விடவே வெளியில் வந்தவர்கள் வழியில் டின்னர் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். அடுத்த நாள் முழுதும் அடித்து போட்டது போல் தூங்கி எழுந்தனர்.


நாளை அனாடமி கிளாஸ் வர்ணா இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். “இப்போ தூங்காம யோசிச்சு ஒன்னும் மாத்த போறதில்ல. முடிந்தளவு முயற்சி செய்வோம். நிறைய ட்ரைனிங் எடுத்திருக்கோம் பார்ப்போம்” என்று மனதிற்குள் யோசித்தவாறே தூங்க முயற்சித்தாள்.

அடுத்த நாள் அனைவரும் சார் வருவதற்கு முன்பாக வகுப்பில் குழுமியிருந்தனர். இந்த முறையும் சார் வந்ததும் சித்தார்த் அனுமதி வாங்கி வர்ணாவின் குழுவில் வந்து இணைந்து கொண்டான்.

இம்முறை வர்ணாவின் குழுவிற்கு ஒரு பெண்ணின் உடல் காடவராக அமைந்தது. இம்முறை வர்ணா தைரியமாகவே அதன் ஜிப்பை திறந்தாள். பின் சார் கூறும் அனைத்தையும் பயம் இல்லாமல் கவனித்தாள்.

அதே போல் அனைவரையும் செய்ய சொல்லி கூறியதும் வர்ணாவின் கை நடுங்க தொடங்கியது. சமாளித்து அழுத்தமாக பிடித்தால் பின் காடவரின் தோலை கீறியவள் அந்த பிளவின் வழியாக திறந்தவள் சமாளிக்க முடியாமல் மயங்கி சரிந்தாள்.

சித்தார்த் வேகமாக அவளை ஹெல்த் சென்டருக்கு அழைத்து சென்றான். இந்த முறை சார் வகுப்பில் எதுவும் கூறவில்லை. மற்றவர்களை வேலையை தொடருமாறு கூறினார்.

மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்த வர்ணா, “சித்து என்னால முடியாதா? நான் உண்மையா ரொம்ப ட்ரை பண்ணேன் சித்து. ஆனாலும் மயக்கம் வந்துடுச்சு. நான் டாக்டர் ஆக மாட்டேனா? நம்ம ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்பிடல்ல வேலை செய்ய மாட்டோமா?” என்று பயந்தவாறே கேட்டாள்.

“இப்போது எவ்வளவோ பரவால்ல டா. முதலில் காடவர் பார்த்ததுமே மயங்கிடுவ ஆனா இப்போ சார் எடுத்த முழு பாடத்தையும் நீ கவனித்தாயே அதுவே இப்போதைக்கு வெற்றி தான். உன்னால் முடியும் இன்னும் ஒரு மாதம் முழுதாய் இருக்கு கவலைபடாத.” என்று சமாதானம் செய்தான்.

வர்ணா தான் இங்கேயே ஓய்வெடுப்பதாக கூறி அவனை திரும்பவும் வகுப்புக்கு அனுப்பினாள். சிறிது நேரத்தில் வகுப்பு முடிந்து வெளியில் வந்த ஆசிரியரும் அவளிடம் வந்து முன்னை விட இப்போது பரவாயில்லை என்று பாராட்டிவிட்டு இன்னும் முயற்சி எடுக்க கூறிவிட்டு சென்றார்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு
கார்த்திக்பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top