உன்மேல் காதல் தானா என்னுயிரே 5

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...:giggle::giggle::giggle: படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:):):) (பி.கு கீழ இருக்க போட்டோ பார்த்துட்டு இவங்க தான் ஜோடின்னு நினைச்சுடாதீங்க... சில ஜோடிகள் மாறலாம்... சிலருக்கு ஜோடியே இல்லாம இருக்கலாம்...;););))

IMG_20210107_144251.jpg

காதல் 5

அவர்களைத் தான் பார்க்க வந்திருப்பதாக சஞ்சீவ் கூறியதும், மூவரும் முழித்தவாறு நின்றிருப்பதைக் கண்டவன் சிரிக்க ஆரம்பிக்க, அப்போதும் அவனைப் பார்த்து மூவரும் விழித்தனர்.

சஞ்சீவ் தான் சிரிப்பை அடக்கியபடி, “ஹே நான் சும்மா சொன்னேன்… அதுக்கு எதுக்கு இப்படி மூணு பேரும் ஸ்டான்னாகி நிக்குறீங்க… ரிலாக்ஸ்…” என்றான்.

அப்போதும் சந்தேகம் தீராத தர்ஷு, “அப்போ எதுக்கு இங்க வந்துருக்கீங்க..?” என்றாள்.

“அட இது என்ன உங்களுக்கு மட்டும் பட்டா போட்ட ஊரா… நான் இங்க வரக்கூடாதா..? என்ன சிஸ்டர்…” என்று கடைசி வரியை சஞ்சுவை பார்த்து கேட்க, அவனின் ‘சிஸ்டர்’ என்ற அழைப்பில் சகோதர பாசம் பொங்க, “ச்சே அப்படியெல்லாம் இல்ல ப்ரோ… நீங்க தாராளமா வரலாமே…” என்று அவனிற்கு ஒத்து ஊதினாள்.

“ம்ம்ம் இங்க எங்க பூர்விக பண்ணை வீடு இருக்கு… இத்தனை நாளா அதை பராமரிச்சுட்டு வந்தவங்க வயாசானதால அவங்க பிள்ளைங்க கூட இருக்க போறாங்க… அதான் இனிமே அதை நானே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்… “ என்று அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்த பண்ணை வீட்டைக் காட்டினான்.

“ஹே ப்ரோ, அது உங்க பண்ணை வீடா… சூப்பரா இருக்கு…” என்று சஞ்சு கூற, “எல்லாரும் வீட்டுக்கு வாங்களேன்…” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

சஞ்சு துள்ளிக் குதித்து முன்னே நடக்க, ரஞ்சு கூட அவ்வீட்டைப் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருந்தாள். ஆனால் தர்ஷு மட்டும் சஞ்சீவையே சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டும் காணாதவாறு அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஊரில் இருந்ததை விட சற்று சிறிய அளவில் இருந்தாலும், அழகில் அதை விட சிறந்தாக இருந்தது. சுற்றிலும் பல்வேறு மரங்கள் அழகாக பராமரிக்கப்பட்டு இருக்க அதில் வாசம் செய்யும் பட்சிகளின் ரீங்காரம் அவ்விடத்தை உயிர்ப்பாக வைத்திருந்தது.

பூக்களின் வாசம் காற்றில் கலந்திருக்க, மெல்ல அப்பக்கம் எட்டிப் பார்த்தவர்கள், அங்கிருந்த நந்தவனத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஒவ்வொரு செடிகளின் அருகிலும் நின்று பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்தனர் மூவரும். அவர்களின் உலகில் இருந்தவர்களைக் கலைத்தது சஞ்சீவின் வருகை.

அவனருகே வந்த வேலையாளின் கையில் இளநீர் இருக்க, ஆளுக்கு ஒன்றை தந்துவிட்டு கிளம்பினார் அவர்.

“அப்பறம் கேர்ள்ஸ்… தோட்டம் எப்படி இருக்கு..?” என்றான் சஞ்சீவ்.

“ஆவ்ஸம் சஞ்சு…” என்று ரஞ்சு கூற, சஞ்சுவும் அதை ஆமோதித்தாள்.

“உங்க பிரெண்டுக்கு தான் பிடிக்கல போல…” என்று தர்ஷுவை காட்டி அவன் கூற, வேண்டுமென்றே அவன் செய்கிறானோ என்று தர்ஷு புருவ முடிச்சுடன் அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையை தவறாக புரிந்து கொண்ட சஞ்சு அவள் காதருகே, “ஹே என்ன டி இப்படி பப்லிக்கா சைட்டடிக்கிற…” என்று முணுமுணுக்கவும், தன் யோசனையை கைவிட்டு சுயத்திற்கு வந்தவள், சஞ்சுவை முறைத்தாள்.

மேலும் சில நொடிகள் பேசியே பொழுதைக் கழித்தனர். அப்போதும் சஞ்சு தான் சஞ்சுவிடம் (!!!) வாயடித்துக் கொண்டிருந்தாள். ரஞ்சு அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள், அவ்வப்போது பேசினாள். தர்ஷு தான் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

இப்போதும் சஞ்சீவிடம் ஏதோ தவறாக இருப்பதாக அவளின் உள்ளுணர்வு கூறியது. ஆனால் அதை தோழிகளிடம் கூறினால், கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அமைதியாகவே வந்தாள்.

“அப்பறம் ப்ரோ… எப்படி எப்பயும் சிரிச்சுட்டே கலகலன்னு இருக்கீங்க..?” என்று சஞ்சு வினவ, அதற்கும் புன்னகையே பதிலாக அளித்தான்.

“இதுக்கும் சிரிப்பு தானா… பார்த்துட்டே இருங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள், இப்படி சிரிச்சுட்டே இருக்கீங்கன்னு யாராவது உங்களை ஏமாத்த போறாங்க…” என்றாள்.

சஞ்சு எதார்த்தமாக தான் அப்படி கூறினாள், ஆனாலும் சஞ்சீவின் முகம் ஒரு நொடி இருண்டது. சஞ்சு பேச்சு சுவாரஸ்யத்தில் அதை கவனிக்க வில்லை என்றால், தர்ஷு சஞ்சீவைப் பற்றிய தீவிர சிந்தனையில் இருந்ததால் அதை கவனிக்க வில்லை.

ஆனால் அந்த ஒரு நொடி மாற்றத்தை பார்த்த ரஞ்சுவோ, ‘என்னாச்சு சஞ்சுக்கு… மேபி யாராவது ஏமாத்திருப்பங்களோ… ச்சு இந்த சஞ்சுவை யாரு இப்போ இப்படி சொல்ல சொன்னது… சஞ்சு ஹர்ட் ஆகிருப்பாங்களோ…’ என்ற யோசனையிலேயே மீண்டும் அவன் முகம் பார்க்க, அவன் எப்போதும் போல சிரிப்புடனே இருந்தான்.

‘நாம இப்போ சரியா தானா பார்த்தோம்…’ என்று ரஞ்சு எண்ணுமளவிற்கு உடனடியாக அவனின் இறுக்கத்திற்கு விடை கொடுத்திருந்தான் சஞ்சீவ். பல வருட பயிற்சியின் தாக்கமோ!!!

அதன்பின்பு பேச்சு வேறு திசையில் செல்ல, ரஞ்சுவும் அதை மறந்து விட்டாள். அந்த பண்ணை வீட்டை சுற்றிப் பார்த்தவர்கள் கிளம்ப ஆயத்தமாக, சஞ்சீவ், “அப்பறம் எப்போ ஊருக்கு கிளம்புறீங்க..?” என்று வினவினான்.

அதுவரையிலும் குழப்பமாக சுற்றிக் கொண்டிருந்த தர்ஷு அவனின் கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளைத் தான் அவனும் பார்த்துக் கொண்டிருந்தான், கேலி சிரிப்புடன்.

“நாளைக்கு கிளம்பிடுவோம் சஞ்சு…” என்று அவர்களின் பார்வையினை கவனிக்காமல் சாதாரணமாக கூறினாள் ரஞ்சு.

வேறெதுவும் கூறாமல், அவர்களை வழியனுப்பி வைத்தான் சஞ்சீவ். சற்று தூரம் நடந்ததும், ஏதோ உந்த திரும்பிப் பார்த்த தர்ஷு அங்கு இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த சஞ்சீவைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்.

அவன் கண்களில் தெரிந்த தீவிரம் தர்ஷுவை அதிர்ச்சிக்குள்ளாக்க, அவனோ மீண்டும் புன்னகையை மீட்டெடுத்து, அவளை நோக்கி கண்ணடித்தான்.

அதில் மீண்டும் அதிர்ந்த பெண்ணவள் முன்பக்கம் திரும்பிக் கொள்ள, அவளின் மனமோ, சஞ்சீவ் நல்லவனா கெட்டவனா என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.

அவளின் முகம் கண்ட ரஞ்சு, “ஹே தர்ஷு… என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று வினவினாள்.

தனக்கு சரிவர தெரியாத ஒன்றை தோழிகளிடம் கூறி அவர்களை பதற்றமடைய செய்ய வேண்டாம் என்று எண்ணிய தர்ஷு, “லேசா தலை வலிக்குது… வேற ஒண்ணுமில்ல ரஞ்சு.” என்று கூறி சமாளித்தாள். பின் சஞ்சுவின் கலாட்டாவில், சஞ்சீவை தற்காலிகமாக மறந்தும் போனாள்.

*****

விமானம் தரை இறங்கியதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது சஞ்சய்க்கு. கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைக் கூட கண்ணசைவில் தனக்கு கீழ் கொண்டு வருபனிற்கு, தன் மனநிலை மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் சஞ்சய், சில நொடிகளாக அந்த விமான நிலையத்தில் தேங்கி நின்றதைக் கண்ட கோகுலுக்கு ஆச்சரியமாக இருக்க, அவனருகே சென்று, “பாஸ்…” என்று அழைத்தான்.

கோகுலின் குரலில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “கோகுல், இன்னைக்கு இருக்க மீட்டிங் எல்லாம் கேன்செல் பண்ணிடு… அண்ட் ஒன்ஸ் ஹோட்டல் போனதும், என்னை டிஸ்டர்ப் பண்ணாத… ஏதாவது வேலை வந்துச்சுன்னா நீயே கவனிச்சுக்கோ…” என்று கூறியவன் தளர்ந்து நடக்கத் துவங்கினான்.

ராஜசேகர் பற்றி கேட்க வந்த கோகுல், சஞ்சயின் நிலை கண்டு, எதுவும் பேசாமல் அவனை பின் தொடர்ந்தான். அவன் மனமோ, ‘பாஸுக்கு என்னாச்சு..? அவரு இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லயே…’ என்று யோசித்தது.

சஞ்சயும் அதையே யோசித்துக் கொண்டிருந்தான். சமீப காலமாக போட்டிருந்த முகமூடியின் காரணமாக இறுகிப் போய், ஓடிக் கொண்டிருந்தவனின் மனம் கடந்த கால வாழ்க்கைக்கு ஏங்க ஆரம்பித்தது. அவன் கடைசியாக சிரித்த நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். அவனின் எண்ணவோட்டம் மகிழ்ச்சியாக கழித்த நாட்களுக்கு பின்னர் வந்த கொடும் நாட்களையும் அவனிற்கு காட்ட, அன்று அனுபவித்த வேதனையின் சாயல் இன்றும் அவன் முகத்தில் தோன்றியது.

முன்பு ஒருமுறை இதே போல் அவன் மனம் தவித்த அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவனின் மனதில் உலா வர, அந்த கம்பீர ஆண்மகனிற்கும் கண்ணீர் சுரப்பிகள் உண்டென்று நிரூபிக்க கண்ணீரை உற்பத்தி செய்ய, இருக்கும் இடம் உணர்ந்து அதை அடக்கிக் கொண்டான்.

இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று அவனின் மூளை பழையதைக் கிளற ஆர்வம் காட்டியதோ… அவன் உணர்ச்சிக் குவியலாக இருந்தான்.

அவர்களின் மகிழுந்து அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்து நிமிடங்கள் இரண்டை கடந்திருந்தாலும், அதிலிருந்து சஞ்சய் இறங்கவில்லை என்பதைக் கண்ட கோகுல் அவனை அழைக்க, அப்போது தான் அவனின் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றான் சஞ்சய்.

கண்ணீரை அடக்கியதாலோ, இல்லை கோபத்தை அடக்கியதாலோ, அவனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, கோகுலிற்கே அவனைக் கண்டு பாவமாக இருந்தது.

கோகுலின் குடும்பமும், சஞ்சயின் குடும்பத்திற்கு நெருக்கம் என்பதால், சஞ்சயின் தவிப்பிற்கு என்ன காரணம் என்பதை ஓரளவிற்கு கோகுலும் அறிவான்.

கோகுலை பொறுத்தவரை சஞ்சய் ஒரு ஹீரோ… எத்தனையோ இழப்புகள், வேதனைகள், தவிப்புகளுக்கு மத்தியிலும் தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பவன். அவனின் தந்தை சஞ்சய் போல் இருக்க வேண்டும் என்று கூறும்போது வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், அவனிற்கு சஞ்சயே ‘ரோல் மாடல்’.

அப்படிப்பட்டவனின் இன்றைய நிலை காண இயலாதவனாக, “பாஸ்… ஹோட்டல் வந்துடுச்சு… நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்குறேன்…” என்றான்.

ஒரு விரக்தி சிரிப்புடன் அங்கிருந்து நகர ஆரம்பித்தவனிற்கு, அப்போது தான் அவன் இங்கு வந்த காரணம் மனதில் உதிக்க, “கோகுல், அந்த ராஜசேகர்…” என்றான்.

“பாஸ், அவனை நாளைக்கு பார்த்துக்கலாம்… இப்போ உங்களுக்கு ரெஸ்ட் தான் அவசியம்…” என்றான்.

சஞ்சய்க்கும் அதுவே சரியென்று பட்டதால், அவனின் அறைக்கு விரைந்தான். அவனின் விரக்தியை மாற்ற கூடிய நபரை காண்பான் என்று முன்பே தெரிந்திருந்தால், அப்போதே கிளம்பியிருப்பானோ… அவர்களின் சந்திப்பை ஒரு நாள் நீட்டித்து வைக்க வேண்டும் என்று விதி நினைத்தால், யாரால் அதை மாற்ற முடியும்!!!

அறைக்கு செல்லும் சஞ்சையை பார்த்த கோகுலோ ஒரு பெருமூச்சுடன், ‘அடேய் சஞ்சீவ்… எங்க டா போய் தொலைஞ்ச…” என்று தான் ஆருயிர் நண்பனை வசைபாடினான் மனதிற்குள்…

*****

நண்பன் மனதிற்குள் திட்டியது சஞ்சீவிற்கும் கேட்டதோ, கடந்த கால நினைவுகளின் மிச்சமாய் அவனுடன் இருந்த டைரிகளிலிருந்து பார்வையை திருப்பினான். சிறுவனாகவே இருந்திருக்க கூடாதா என்னும் கேள்வி ஆயிரமாவது முறையாக அவன் மனதில் எழுந்தது.

அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், நேரம் தான் கழியும் என்று உணர்ந்தவனாக, ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.

அவன் எக்காரணத்திற்காக இங்கு வந்தானோ, அவளே ஊருக்கு செல்கிறாள் என்னும் போது அவனிற்கு இங்கென்ன வேலை..!

*****

ஒரு நாள் முழுவதும் அறையிலேயே அடைந்து கிடந்த சஞ்சய், கடந்த கால நிகழ்வுகளை மனதிற்குள் புதைத்து வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

இதோ இரையைத் தேடும் புலியாக, கம்பீரத்தை மீட்டெடுத்துக் கொண்டு வந்தான் அவன். ஆஸ்திரேலியாவிலுள்ள தொழில்களை ஒளி ஒலி கலந்தாய்வு மூலம் கவனித்தான். மற்ற தொழில்களின் நிலவரங்களையும் அதன் மேலாளர்களுடன் கலந்தாலோசித்தான். இவையே அந்நாளின் முக்கால்வாசியை ஆக்கிரமித்துக்கொள்ள, மாலை வேளை தான் சற்று தளர்வாக அமர்ந்திருந்தான்.

அப்போதும் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பாதவன், “கோகுல், அந்த ராஜசேகர் இருக்க இடத்தை ட்ராக் பண்ண சொன்னேனே… அவரை கண்டுபிடிச்சாச்சா…” என்று வினவினான்.

“பாஸ்… அது வந்து… தேடிட்டு இருக்காங்க…” என்று திக்கினான் கோகுல்.

“வாட் இன்னமும் தேடிட்டு தான் இருக்காங்களா… எவ்ளோ நாளாச்சு… இன்னமும் தேடிட்டு இருக்காங்கன்னா என்ன அர்த்தம்..?” என்று கோபத்துடன் கேட்க, ‘மை பாஸ் இஸ் பேக்…’ என்று வெளியே அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு, மனதிற்குள் நினைத்தான் கோகுல்.

“இப்படி என் மூஞ்சியவே பார்த்துட்டு இருக்காம, சீக்கிரம் தேட சொல்லு… ஐ டோன்ட் விஷ் டு ஸ்பெண்ட் சோ மச் ஆஃப் மை டைம் வித் திஸ் கல்ப்ரிட்…” என்று பற்களை கடிக்க, வேகமாக அறையிலிருந்து வெளியேறினான் கோகுல்.

அடுத்த அரை மணி நேரத்தில், ராஜசேகரை தேடும் பொறுப்பை ஒப்படைக்கப்பட்ட துப்பறிவாளர், சஞ்சய் முன்பு நின்றார்.

“என்ன மிஸ்டர். டேனியல்… இன்னுமா அந்த ராஜசேகரை கண்டுபிடிக்குறீங்க..?” என்று சஞ்சய் சிறிது கோபத்துடன் வினவ, “சார்… நாங்க எங்களாலான எல்லா முயற்சியும் செஞ்சுட்டு தான் இருக்கோம்… ஆனா அவருக்கு பின்னாடி யாரோ இருந்து அவரை காப்பாத்திட்டு இருக்காங்க… ஏன்னா எங்களுக்கு ஒவ்வொரு முறையும் அவர் இருக்குமிடம் பத்தி தகவல் கிடைச்சு போறதுக்குள்ள, அங்கயிருந்து அவரு எஸ்கேப் ஆகிடுறாரு… நாங்க இதுவரைக்கும் எடுத்து வைக்குற ஸ்டெப் எல்லாமே மறைமுகமா பண்றப்போ எப்படி இது வெளிய லீக்காகுதுன்னு தெரியல… சோ அடுத்து எடுத்து வைக்குற அடியை இன்னும் கொஞ்சம் கவனமா எடுத்து வைக்கனும்… அதுக்கு கொஞ்சம் நேரமாகும்.. “ என்று கூறி முடித்தார்.

சஞ்சய்க்கும் அந்த சந்தேகம் இருந்தது. ராஜசேகரினால், யாருடைய உதவியும் இல்லாமல் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடியாது. வேறு யார் அவரின் பின்னாலிருந்து அவரை ஆட்டுவிப்பது. கண்ணிற்கு தெரியாமல் தன்னுடன் மோதுபவன் யாரென்ற யோசனையில் இருந்தவனை கலைத்தது டேனியலின் அழைப்பு.

“சார்…” என்று தயக்கத்துடன் இழுத்தவரைக் கண்ட சஞ்சய், “என்ன டேனியல், வேற ஏதாவது சொல்லணுமா..?” என்றான்.

“ஆமா சார். ராஜசேகரை தேடப் போன இடத்துல, என்னோட டீம் மேட் ஒருத்தன் எடுத்த போட்டோ இது…” என்று ஒரு புகைப்படத்தை சஞ்சயிடம் காட்டினான்.

அதைக் கண்கள் விரிய கண்டவனின் மூளை அடுத்து செய்ய வேண்டியவற்றை திட்டமிட, டேனியலிடம், “ராஜசேகரை விட இவன் தான் எனக்கு முக்கியம். டேக் இட் அஸ் எ ஹை ப்ரையாரிட்டி… இவன் எங்க இருக்கான்… என்ன பண்ணிட்டு இருக்கான்னு எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க…” என்றான்.

மீண்டும் அந்த புகைப்படத்தில் பார்வை பதித்தவன், ‘இந்த தடவை உன்னை விட்டுட மாட்டேன் சஞ்சு…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்

*****

விடுமுறை நாட்கள் முழுவதையும் தர்ஷுவின் வீட்டிலேயே கழித்தனர் தோழிகள் மூவரும். ரஞ்சுவின் பெற்றோர் அவள் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் அவர்களின் வரவைப் பற்றி தெரிவிக்கவில்லை. அவர்களின் இந்த செயல் ரஞ்சுவை பெரிதும் வருத்தியது. அவளின் முகத்தை வைத்தே மனதை உணர்ந்த சஞ்சுவும் தர்ஷுவும் தான் அவளை சமாதானப்படுத்த ஊர் சுற்றுவது, மற்றவர்களை வம்பிளுப்பது என்று அவளின் கவனத்தை திசை திருப்பினர். அதுவும் ஓரளவிற்கு வேலை செய்தது.

இந்த காரணத்தினால் தான் சஞ்சு கூட அவளின் வீட்டிற்கு செல்லவில்லை. அவளின் தாயிடம் ரஞ்சுவைப் பற்றிக் கூறி, இங்கேயே இருக்க அனுமதி வாங்கினாள்.

இதோ விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பும் சமயம்… மூவரும் அவர்களின் பைகளில் வாங்கிய சிற்றுண்டிகளை அடைத்து வைத்தனர்.

“ச்சே… என்ன இது இந்த பேக் பத்தவே இல்ல… அடுத்த தடவை பெரிய பைய்யா எடுத்துக்கணும்…” என்று புலம்பிய சஞ்சுவைக் கண்ட ரஞ்சு, “எவ்ளோ பெரிய பை எடுத்தாலும், நீ கொண்டு வர ஸ்னாக்ஸுக்கு பத்தாது தான்…” என்று கூறி தர்ஷுவுடன் ஹை-ஃபை அடித்துக் கொண்டாள்.

அப்போது அறைக்குள் வந்த மலர்விழி அவர்களின் சிரிப்பைக் கண்டு, ‘இவங்க மூணு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்...’ என்று வேண்டிக் கொண்டார். அவர்களின் கஷ்ட காலம் இனி தான் ஆரம்பம் என்று தெரியாதவராய்…

“மூணு பேரும் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா… தர்ஷு உன் சார்ஜர் ஹால்ல இருக்கு பாரு… ரஞ்சு இந்தா நீ கேட்ட பால்கோவா… பேக்குள்ள வச்சுக்கோ… சஞ்சு உங்க அம்மா கிட்ட கிளம்ப போறதை சொல்லிட்டீயா… அவங்களே உங்களை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்றதா சொன்னாங்க…” என்று அந்த மூவரையும் விட அவர் தான் படபடப்பாக காணப்பட்டார்.

“ஸ்ஸ் ஆன்ட்டி எதுக்கு இவ்ளோ டென்ஷன்… எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்… கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா இருங்க…” என்றாள் ரஞ்சு. பின் சஞ்சுவின் தயவால் அங்கு கலாட்டா களைகட்ட, நால்வரின் சிரிப்பு சத்தம் அந்த வீட்டையே உயிர்ப்பாக வைத்திருந்தது.

“நீங்க மூணு பேரும் கிளம்பிட்டீங்கன்னா, கலகலன்னு இருக்க வீடு மறுபடியும் அமைதியாகிடும்…” என்று மலர்விழி வருந்த, மூவரும் அவரருகே அமர்ந்து அவரின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டனர்.

அவர்களின் சிறு வயது முதலே ஏதோவொரு காரணத்தினால், பெற்றோரின் அன்பு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, பெற்றோர் ஏக்கத்தை போக்கிய ஜீவன் தான் மலர்விழி. அன்பை மட்டுமே கொட்டி தந்து, அதற்கு பிரதிபலனாக எதையுமே எதிர்பாராமல் இருப்பவர்.

அவரின் வருத்தம் கண்டு மூவருமே அவரை அணைத்துக் கொண்டனர். நொடிகள் நீள, சூழ்நிலையின் கனத்தை குறைக்க, “ஆன்ட்டி, நம்ம சவுண்ட் சுரேஷ், மாடர்ன் மது, சைரன் சைமன் இவங்க எல்லாரும் இப்போ சேட்டை பண்றது இல்லையா…” என்று சற்றும் சம்பந்தம் இல்லாமல் வினவ, அதைக் கேட்ட மலர்விழி விழித்தார் என்றால் மற்ற இருவரும் அவளின் சேட்டை கண்டு புன்னகைத்தனர்.

“அதெல்லாம் இல்ல… இன்னமும் மூணும் அடங்க மாட்டிங்குது… இத்துணூண்டு சைஸ்ல இருந்துட்டு எவ்ளோ சவுண்ட்… மூணு பேரையும் ஒரு இடத்துல உக்கார வைக்குறதுக்குள்ள, நான் இந்த வீட்டை மூணு தடவை சுத்தி வந்துடுவேன் போல… ஆமா இப்போ எதுக்கு இதை கேக்குற…” என்றார்.

“நீங்க தான வீடு அமைதியா இருக்கும்னு சொன்னீங்க… அதான் அவங்களுக்கு ட்ரைனிங் பத்தலையோன்னு நினைச்சேன்…” என்று கூறி கண்ணடிக்க, அவளின் சேட்டையை உணர்ந்து, “அப்போ நீ தான் அவங்களுக்கு சொல்லிக் குடுத்ததா…” என்று காதைப் பிடித்து திருகினார்.

இப்படியே நேரம் கழிய, அவர்கள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. மூவரும் தர்ஷுவின் பாட்டியின் கூற செல்ல, அவர் தர்ஷுவை மட்டும் வாழ்த்தி அனுப்ப, மற்ற இருவரும் அவரின் குணம் இதுவென்று அறிந்ததால், எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பினர்.

அவர்களை பேருந்து நிலையத்தில் விடுவதற்கு, வசுந்தரா வந்திருந்தார். மீண்டும் சில பல அறிவுரைகள், எச்சரிக்கைகளை வசுந்தரா மூவருக்கும் பொதுவாக கூற, “ப்ச்… இந்த அட்வைஸ் சொல்றதெல்லாம் யாரு தான் கண்டுபிடிச்சாங்களோ…” என்று அலுத்துக் கொண்டாள் சஞ்சு.

அவளை முறைத்த வசுந்தராவின் பார்வையில் அடங்கியவளாக அமைதியாக பேருந்தில் ஏறினாள் சஞ்சு. நமுட்டுச் சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தனர் மற்ற இருவரும்.

வசுந்தரா கூறிய அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால், பிற்காலத்தில் இவர்களை சுற்றி பின்னப்படும் வலையிலிருந்து தப்பியிருப்பரோ… அதை தோழிகளும் அறியவில்லை… வசுந்தராவும் அறியவில்லை…

தொடரும்...
 

padhusbi

Well-Known Member
கொஞ்சம் குழப்பமா இருக்கு
நிறைய சஞ்சு சஞ்சய்
அடுத்த எபிசொட் லே புரியுமோ
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
கொஞ்சம் குழப்பமா இருக்கு
நிறைய சஞ்சு சஞ்சய்
அடுத்த எபிசொட் லே புரியுமோ
இனி சஞ்சீவ் சஞ்சய் னே கூப்பிட்டுக்கலாம்... சஞ்சிதாவ மட்டும் சஞ்சு சொல்லலாம்... பாவம் பிள்ள அழுதுரும்:D:D:D
 

padhusbi

Well-Known Member
இனி சஞ்சீவ் சஞ்சய் னே கூப்பிட்டுக்கலாம்... சஞ்சிதாவ மட்டும் சஞ்சு சொல்லலாம்... பாவம் பிள்ள அழுதுரும்:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top