உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 21

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

வெரி சாரி... இரண்டு எபிஸ் ஒன்றாக கொடுக்க நினைத்தேன். முடியவில்லை. இதோ, முதல் எபி. மற்றது, வெறி கொண்டு எழுதுவதால் இரண்டொரு நாளில் வந்துவிடும்.


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 21

rana-and-sai-pallavi.jpg


எத்தனை நேரம் அழுதுகொண்டிருந்தாளோ மகிழ்! அவளுக்கு மணிகளின் கணக்கும் தெரியவில்லை, அவள் விழிகளில் இருந்து விழும் மணிகளின் கணக்கும் தெரியவில்லை. இரண்டையும் அவள் சிவந்திருந்த கண்கள் கூறியது.

நெஞ்சை அறுக்கும் துக்கம் இருந்தும் அதனை வெளிப்படையாக வாய் விட்டு கதறி அழாமல் இருப்பது கொடுமை அல்லவா? அதைத் தான் செய்துகொண்டிருந்தாள் அவள்.

சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையர் தன் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற மட்டில் அவள் அறிவாள் தான். ஆனால், அவர்களுக்கு தான் எவ்வளவு முக்கியம் என்று அவள் புரிந்துகொண்டது புகழ் அவளிடம் எடுத்துக்கூறியபின் அவர்களை கவனித்ததால் அல்லவா? இன்று அவர்கள் தன் மீது வைத்த பாசத்திற்காக தன் காதலை களபலி கொடுத்துவிட்டு அமர்ந்திருக்கிறாள் அவள்.

படித்துமுடித்ததும் அவளுக்கு வரன் பார்க்க, முடிந்தவரை வந்தவர்களையெல்லாம் தடுத்துவிட்டாள். அதுவும் சில காலமே முடிந்தது. அவள் முன்பு எதுவும் காட்டாமல் இருந்தாலும், இரவில் அவள் தாயும் தந்தையும் புலம்புவது எத்தனை நாட்கள் அவள் கண்களில் படாமல் இருக்கும்? அதனாலேயே அடுத்து வந்த வரனுக்கு சம்மதம் சொல்லிவிட்டாள்.

அவனைப் பற்றி தந்தை கூற, கடனே என்று கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு எப்போதடா அந்த இடத்தை விட்டு நகர்வோம் என்றாகிவிட்டது. அவளுள் இருக்கும் காதலை புதைக்க இடம் தேட வேண்டுமே! அதற்கான கண்ணீரஞ்சலி தான் இது.

அனைத்தையும் நினைத்து அழுதாள் விடியும்வரை. சிறிது நேரம் விழிகளில் சிந்தியது, காலை வரை மனதில் சிந்தியது. பெண்களுக்கு மட்டுமே கிட்டிய வரம், விடிய விடிய அழுதாலும் மறுநாள் காலை ஒன்றுமே நடக்காததுபோல் நடந்துகொள்வது. அந்த வரத்தை அவளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கொடுத்துவிட்டார் போல கடவுள்.

விடிய விடிய ஒரு முடிவெடுத்தவள், புகழை மறக்க நினைத்தாள். ஆனால், அவள் பார்க்கும் ஒவ்வொன்றிலும் அவனைக் கண்டவளால் எவ்வாறு அது இயலும்?

பூமராங் கடையைக் கண்டால், ‘இங்க தான அவன் அடிக்கடி வருவான்?’ என்று தோன்றும். அவன் கல்லூரி செல்லும் பேருந்தைக் கண்டால், ‘இதில் அவன் போயிருப்பான் இல்ல?’ என்று மனம் குதுகலிக்கும். இவ்வளவு ஏன், அவள் பெற்றோரைக் காண்டால் கூட ‘அவன் சொல்லலைன்னா கடைசி வரைக்கும் இவங்கள கஷ்டப்படுத்திட்டே இருந்துருப்பேன் இல்ல?’ என்று அவனை நினைத்து பெருமிதம் கொள்வாள். இந்த லட்சனத்தில் எங்கே இருந்து அவனை மறக்குறது?

மகிழ் தான் அவள் உலகத்தில் சுழன்றுகொண்டிருக்க, ஏனைய உலகம் தன் சுழற்சியை நிறுத்திவிடுமா என்ன? நடப்பவை எல்லாம் நடந்துகொண்டு தான் இருந்தது.

ஆனால், மகிழைப் போலவே தோமே என்று அனைவரும் இருப்பார்களா என்ன? அவளிடம் பேச அவளுக்கு நிச்சயிக்கப்பட்டவன் விழைய, அவன் அழைத்தபோது அவளுக்கு அவன் பெயர்கூட நினைவிலில்லை. அவனது சில நிமிட பேச்சுகளையே தாங்க முடியாதவள் தன் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டாள்.

அன்று அவளுக்கு புரிந்துதான் போனது, இந்த திருமணத்தால் தான் தனக்கு வரப்போகின்றவனுக்கும் துரோகம்தான் செய்கிறோம் என்று. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவனையும் மறக்க முடியல, இவரையும் ஏத்துக்க முடியல… என்னை படைக்காமலே இருந்திருந்தால் என்ன? மக்கள்தொகைல ஒன்னு கொறைஞ்சுருக்கும். அத வேற எங்கேயாவது டேலி பண்ணிருக்கலாம்ல… எல்லாருக்குமே தொல்லையாக தான் இருக்கேன்’ என்று நினைத்தவள் திருமணத்தை நிறுத்தப்பார்க்க, அதுவும் முடியவில்லை.

அன்புச்செல்வனிடத்தில் மனதைத் திருப்ப நினைக்கும்போது எல்லாம் அவள் மனம் நீரில் அமிழ்ந்த பந்தாய் மீண்டும் புகழிடத்தே வந்து நின்றது. ஒரு கட்டத்தில் உயிரை விட்டால் என்ன என்று கூட தோன்றியது. தற்கொலை கோழைகள் முடிவு என்று வசனம் பேசியவள் ஒரு கட்டத்தில் கோழையாகித் தான் போனாள்.

அதையும் செயலாற்ற அவளால் இயலவில்லை, அவளது இந்த முடிவு தன் பெற்றோருக்கு எவ்வளவு வருத்தத்தைத் தரும் என்று. இந்த நாட்களில் அவள் எத்தனையோ முறை ‘என்ன வாழ்க்கடா இது?’ என்று நினைத்துவிட்டாள்.

ஒருவேளை, திருமணத்திற்குப்பின் அவளும் மற்றவர்களைப் போல் தன் மனதை மா(தே)ற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிடுவாளோ? வாழ்ந்துதானே ஆகவேண்டும்?

அதில் காதல் இருக்குமா? என்று தன்னையே கேள்வி கேட்டவளுக்கு இல்லை என்னும் பதிலே கிட்டியது. கடமையாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்… இது எப்படி? என்று நினைத்தவளின் நெஞ்சக்கூடு காலியானது போலானது.

அப்போதே மற்றொரு எண்ணமும் வந்தது. தன் காதலுக்கு புதைகுழிதான் என்று தெரிந்தும் விட்டது. இனி இருக்கும் வாழ்வு முழுவதும் அவன் காதலும் தனக்கு கிட்டாது, தானும் யாருக்கும் காதலை தர முடியாது. ஆனால், ஒரு முறையாவது புகழிடம், அவளின் தமிழிடம் தன் காதலை உரைத்துவிட வேண்டும். அதன்பின், என்ன நடக்கிறதோ, நடந்துவிட்டு போகட்டும் என்று முடிவெடுத்தவள், வீட்டை விட்டு வெளியேறி சிறிது தொலைவு வந்து ஒரு ஃபோன் பூத்தில் இருந்து புகழுக்கு அழைத்தாள். அவன் என்றோ அவளிடம் தன் அலைப்பேசி எண்ணை கொடுத்தது இப்போது உபயோகமாக இருந்தது.

‘தமிழ்! உன் நம்பர் மாறாம இருக்கனும்’ என்று வேண்டிக்கொண்டே அவனுக்கு அழைத்தாள். எடுக்கவில்லை அவன். இங்கோ அவளுக்கு பயத்தில் இதயம் எம்பிக் குதித்தது. ஏதோ ஒரு தைரியத்தில் இதுவரை வந்துவிட்டாள். வேண்டாம் என்று அவள் நினைக்கையிலேயே மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்ட அறிகுறியாக அவன் குரல் கேட்க, நீண்ட நாள் கழித்து கேட்ட அவன் குரல் அவள் இதயத்திற்குள் இறங்கியது.

இரண்டு மூன்று முறை ஹலோ என்று கத்தியவன் காலை கட் செய்ய கைப்பேசியை காதில் இருந்து எடுக்க, அப்போது அவன் காதில் காற்றோடு காற்றாக வந்து மோதியது மெல்லிய அந்த குரல்.

“ஐ லவ் யூ தமிழ்!”

உடனே அழைப்பிற்கு காதைக் கொடுத்தவன் “ஹலோ! யாரு?” என்று கத்த, அதற்கு பதிலாக எதிர்புறம் இருந்து பீப் என்னும் சத்தம் மட்டுமே கேட்டது.

இங்கோ,

புகழிடம் தன் காதலை உரைத்தவளுக்கு உலகையே வென்றது போல் மகிழ்ச்சி உண்டாக, அந்த சந்தோஷத்தில் மூச்சடைத்து இறந்துவிட மாட்டோமா? என்று இருந்தது. அங்கே இருந்து சிறிது தள்ளிச் சென்று அமர்ந்தவள் அந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

அப்போது சரியாக அவள் அலைப்பேசிக்கு அன்புவின் அழைப்பு வர, அதனைக் கண்டவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் வடிந்தது. டிஸ்ப்ளேயை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அதனை இயக்க பிடிக்கவில்லை. அக்கணம், மீண்டும் பழைய நிலைக்கே வந்தது அவள் மனது. ‘என்னால் அவனை சத்தியமாக மறக்க முடியாது!’ என்று மனம் அரற்ற, அதனை அடக்க வழி தெரியாது அமர்ந்திருந்தாள் அவள்.

அப்போது தூரத்தில் இருந்து ஒரு லாரி வர, ஒரு முடிவுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆள் நடமாட்டமற்ற அந்த இடம் வசதியாக இருந்தது. வாகனம் அருகில் வரும்வரை பார்த்திருந்தவள், அது அருகில் வரும்போது அதன்முன் பாய்ந்திட ஆயத்தமாக, அவளை பிடித்திழுத்தது ஒரு கை.

தன் துன்பத்திற்கு எல்லாம் வடிகாலாக இருந்த அந்த லாரியிடம் இருந்து தன்னை பிரித்தவனை கோபம் கொண்டு பார்த்தாள் மகிழ். அவள் முன்னால் ருத்திரமூர்த்தியாக நின்றிருந்தான் ஆதித்தியா.

*******

“அடியே! என்னடி பண்ணிட்டு இருக்க? உக்கார்ந்துட்டே தியானமா?” என்று மகிழின் தோள்களை கீர்த்தி குலுக்க, அதில் கண்விழித்தாள் அவள்.

‘சே! அவனைப் பற்றி நினைக்கவே கூடாது இனிமேல்… அதுவும் எங்க வந்து என்ன செய்துட்டு இருக்கேன்?’ என்று எண்ணியவள், தன்னைப் பார்த்தவாறு நின்றிருந்தவளைக் கண்டு சிறு புன்னகையை சிந்திவிட்டு அவளுடன் ப்ரார்த்தனாவின் அறையை நோக்கி நடந்தாள்.

இன்று தான் புகழுக்கும் ப்ரார்த்தனாவிற்கும் நிச்சயம். சிலருக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருந்தனர். அதில் அவள் குடும்பமும் அடக்கம். ஏன் என்று கேட்டதற்கு, புகழ் திருமணத்தை விமர்சையாக செய்யலாம் என்று கூறிவிட்டானாம். கீர்த்தியின் நட்பு முறையில் அவள் குடும்பத்திற்கு அழைப்பு விடுத்திருக்க, அவர்களும் காலையே வந்துவிட்டிருந்தனர். அவர்களால் இவளும் காலையே வர வேண்டியதாயிற்று.

அறையில் ப்ரார்த்தனாவின் அலங்காரம் அனைத்தும் முடிந்து தேவதையாக அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் புன்னகைத்தவளுக்கு தானும் ஒரு சிரிப்பை உதிர்த்தவள், அவளை மேலிருந்து கீழ்வரை நோக்கினாள். ஏனோ, அவள் காதலனுக்கு ப்ரார்த்தனாவை விட நல்ல துணை கிட்டாது என்றே தோன்றியது. அவனை சிறுவயதில் இருந்தே பார்ப்பவள், காதலிப்பவள்! வேறு என்ன வேண்டும்? He is in safe hands என்று நினைக்கும்போது அவளுக்கு ஏற்படும் வலியை மீறியும் சந்தோஷம் பெருக்கெடுத்தது. அப்போது தான் அதை கவனித்தாள்.

“உன்னோட சாரி என்ன ஆச்சு ப்ரார்த்தனா?” என்று அவள் கேட்க,

“ஓ… அதுவா… ப்ளவுஸ் ஸ்டிச் பண்ண லேட் ஆகிருச்சு. சோ, இந்த லெஹங்கா எடுத்தோம். இப்போதான் வரவும், நிச்சயம் முடிந்ததும் கட்ட கொடுக்கறோம்னு சொன்னாங்க” என்றவள் கூறும்போதே வெளியில் இருந்து அழைப்பு வர, சட்டென்று வெளியேறி தன் குடும்பத்தினரோடு சேர்ந்துகொண்டாள் மகிழ்.

அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் புகழ் நின்றுகொண்டிருக்க, அவன் முன்னே இரண்டு பெட்டிகளில் நிச்சயமோதிரம் இருந்தது. கருநீல நிற கோர்ட் சூட் அவனுக்கு பொறுத்தமாக இருக்க, அதை ரசிக்க துடித்த மனதை அடக்கினாள் மகிழ்.

சலனம் வந்த பக்கம் அனைவரும் கண்களை திருப்ப, அங்கே நீல நிற லெஹங்கா அணிந்து கீர்த்தியின் கைபிடித்து அழகுற நடந்து வந்தாள் ப்ரார்த்தனா. அவள் ஒரு கையை கீர்த்தியிடம் அளித்துவிட்டு மறு கையால் அந்த உடையை பிடித்து நடந்து வரும் அழகு சிறு குழந்தை தாயைப் பிடித்து வருவதை நினைவுபடுத்த, ‘தமிழுக்கு மெட்யூரிட்டி ரொம்ப. சின்னு அதற்கு டோட்டலி ஆப்போசிட். அவன் வாழ்க்கையை நல்லபடியா வெச்சிருக்கனும். அதே சமயம் எந்த ஒரு மனசுணக்கமும் வந்துவிட கூடாது அவங்க வாழ்க்கையில்’ என்று வேண்டினாள் மகிழ். அவளுக்கு தெரிந்ததெல்லாம் புகழின் மகிழ்ச்சி மட்டும்தான். அதையே முன்னிருத்தி இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ப்ரார்த்தனா மேடையேறி புகழின் முன் நிற்க, அவளைக் கண்டவன் மெலிதாக கண்ணடிக்க, அதில் அவள் தலைகுனிந்து கொண்டாள். இவை அனைத்தையும் கண்டவளுக்கு அவர்கள் இருவரும் மகிழ்வுடன் இருப்பார்கள் என்று தோன்றியது. இதே மகிழ்வுடன் இங்கிருந்து வெளியேறிவிடலாம் என்றவள் நினைக்க, அப்போது அங்கே வந்தாள் கீர்த்தி.

ப்ரார்த்தனாவை மேடையேற்றிவிட்டவள் மகிழைக் காண, அவளுடன் வந்து நின்றுவிட்டாள். அதனால் வெளியேற முடியாமல் போக, என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்தாள் மகிழ்.

என்னதான் அடக்கி வைத்திருந்தாலும் அவள் காதல் கொண்(ன்ற)ட மனம் அடிக்கடி எட்டிப்பார்க்க, அது வெளிப்பட்டு விடுமோ என்னும் பயம் சிறிது இருந்தது அவளுக்கு. அதனாலேயே இருவரையும் ஒருசேர கண்டுவிட்டு வெளியேற நினைத்தது. அது முடியாமல் போக, இறுக்கமாக தன் கண்களையும் காதுகளையும் மூடி மனதை கல்லாக்கி நின்றாள் அவள்.

நடப்பதைப் பார்க்கும் திடம் தனக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும், அதற்காக கலங்காமல் இருக்க தன் மனம் இன்னும் முழுவதும் மரத்துப்போகவுமில்லை. இன்று அவர்கள் மேல் பூக்கள் மட்டுமே தூவப்படவேண்டும். தன் கண்ணீரல்ல என்று எண்ணியவள், மனதை அடக்கி தன் துன்பத்தை முகத்தில் காட்டாமல் கண்மூடி நின்றாள்.

அங்கே புகழ் தன் முன் வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை எடுத்து ப்ரார்த்தனாவை நோக்க, அவளும் அவன் முன் தன் கையை நீட்டினாள். புகழ் அவள் கைப்பிடித்து மோதிரம் அணிவிக்கும் சமயம், ஒரு குரல் “நிறுத்துங்க…” என்றது.

அது யார்?… கண்டிப்பாக மகிழ் இல்லை…

எனி ஐடியா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top