உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 20

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையோட அடுத்த பதிவு. இன்னும் ரெண்டு ஃப்ளேஷ்பேக் சீன்ஸ் மட்டும் இருக்கு.


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 20



புகழ் தன் நண்பனுடன் பேசியதை கேட்ட மகிழ் எவ்வளவு நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ, அவள் தாய் அழைக்கும் வரை.

மாலை நெருங்கவும் இன்னும் மகிழ் வரவில்லையே என்று அவளுடைய கைப்பேசிக்கு அழைத்திருந்தார். என்றும் தனியே வெளியே செல்லும் வேளைகளில் மட்டுமே அவளுக்கென்று ஒரு கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. சுருக்கமாக சொல்லப்போனால், அவசரதேவைக்கு. அதனால் இன்று எடுத்து வந்திருந்தாள் அவள்.

அதுதான் தற்போது அழைத்தது.

தாயிடம் பேசிவிட்டு வைத்தவள், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து எழுந்து மெதுவே நடக்கலானாள்.

காதலுக்கு மட்டுமா கண்ணில்லை? காதல் தோல்விக்கும் இல்லை போலும்!

எண்ணம் முழுவதும் புகழைப் பற்றியும் அவன் கூறிய பெண் யாராக இருக்கும், ஏன் அவன் இவ்வளவு நாட்கள் தன்னிடம் எதுவும் கூறவில்லை என யோசித்துக்கொண்டே வந்தவள், அவள் எண்ணத்தின் நாயகனே எதிரே வந்ததை கவனிக்கவே இல்லை.

பின்னால் திரும்பி பார்த்தவாறு வந்தவனும் எதிரே வருபவளை பார்க்காமல் போனான்.

விளைவு, ரசவாத மாற்றம். (RDX வெடிக்குறது கூட ரசவாத மாற்றம் தானே!)

இருவரும் இடித்துக்கொள்ள, புகழைக் கண்டவளுக்கு வாயில் இருந்து வார்த்தை வரவில்லையெனில், காண்டாக வந்தவனுக்கோ அவள் தன்னைக் கண்டு ஈஈ ஈஈ என்று நின்றதைப் பார்த்து நல்ல எண்ணம் கண்டிப்பாக தோன்றிடவில்லை.

அதுவும் அவள் தன் தோளில் இருந்து துப்பட்டா சரிவது கூட தெரியாமல் நின்றிருக்க, அவன் மனதில் அவள் மேலும் கீழிறங்கி தான் போனாள்.

“சே! எல்லாம் என்ன ஜென்மங்களோ… ஒன்னு மேல வந்து ஈஷிகிட்டு நிக்குது. இன்னொன்னு ஈஈ ஈஈன்னு நிக்குது, பசங்களே பார்க்காத மாதிரி. இந்தா பாரும்மா… இப்படி நின்னா வேற யாராவது மயங்குவாங்க. நான் ஒன்னும் அப்படி இல்ல” என்று அவன் கோபமாக பேசிக்கொண்டே செல்ல, அது அவள் மூளைக்குள் ஏறினால் தானே? அது தான் மயங்கி நின்றிருந்ததே!

“தமிழ்!” என்று அவள் அவன் முகத்தையே ஆசையுடன் பார்த்து அழைக்க, அவனோ எரிமலையானான்.

“கூப்பிடாத! உன்னை மாதிரி ஒரு பொண்ணு வாயிலிருந்து என் பேர் கூட வருவதை நான் விரும்பல. இனி மேல் என் கண்ணு முன்னாடி வராத. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. தன்மானம்-ன்னு ஒன்னு இருந்தா…” என இழுத்தவன், “இல்லைன்னு தான் நினைக்குறேன்… பட், இஃப் சப்போஸ் கொஞ்சமாவது அப்படி ஒன்னு இருந்தா…” என்று சேர்த்து சொல்ல, அவன் கத்தியதும் பேந்தப் பேந்த விழித்தவள், அதே முழியுடன் அவன் கூறியது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அது அவள் காதில் மட்டும் தான் விழுந்தது. ஆனால், மனதில் பதியவே இல்லை.

‘ஏதோ கோபம் போல! ஆனா, எதனால? நான் சொல்லாம வந்துட்டேன்னு கோபமா? ஆனா, என்னைத் தான் அவருக்கு தெரியாதே!’ என்று நினைத்தவள், அவனிடம் விளக்க முற்பட்டு அவனைத் தேட, அவனோ பல அடிகள் அவளைத் தாண்டி சென்றிருந்தான்.

“தமிழ்!!!” என்று அழைத்துக்கொண்டே அவள் அவனை நோக்கி ஓட, அவள் குரல் கேட்டு திரும்பியவன் கண்கள் அவள் முகத்தைக் கண்டு, பின் அவள் கழுத்திற்கு கீழே சென்று மீண்டும் அவள் முகத்திற்கு வந்து அருவருப்பைக் காட்டியது. இவை அனைத்தும் சில நொடிகளில் நிகழ்ந்துவிட, அவன் கண்களின் மாற்றம் கண்டவள் அதனை புரிந்த நொடியில் தன்னை நோக்க, துப்பட்டாவை தேடினாள். புகழோ, அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன் வழியில் நடக்கலானான்.

அதுவோ, அவள் விட்டுச் சென்ற இடத்திலேயே அம்போ என்று கிடக்க, அதனை எடுத்து அணிந்தவள் அந்த ப்ளாட்ஃபாரத்திலேயே தொய்ந்து அமர்ந்தாள்.

தமிழ் கூறியது அனைத்தும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவளுக்கு அவன் தன்னை எவ்வாறு நினைத்திருக்கிறான் என்று எண்ணுகையில் தணலில் போட்டாற்போல ஒரு உணர்வு.

மனம் அரற்ற, இருக்கும் இடம் உணர்ந்து அங்கே இருந்து விரைந்து வெளியேறினாள் மகிழ். அவள் நல்ல நேரமோ என்னவோ, அன்று பார்த்து அவ்விடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

மகிழ் சுடிதார் அதிகம் அணியமாட்டாள். அன்று அவனை பார்க்கவேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த துணிகளையெல்லாம் களைத்து அதில் இருந்து தேடி எடுத்திருந்தாள் அந்த அனார்க்கலி சல்வாரை. அதன் நிறத்தைக் கண்டதுமே அதையே அன்று அணியவேண்டும் என்று தோன்ற, சிவப்பும் கறுப்புமான அந்த சுடிதார் லோ நெக் என்பதை மறந்துவிட்டாள். அதனால் விளைந்த அனர்த்தமே இது.

அன்று வீட்டிற்கு வந்து அதனை நினைத்து வெகுவாக அழுதவள், அதில் இருந்து அவன் பெயரை ஒரே ஒரு முறை தவிர வேறு எப்போதும் உச்சரித்ததில்லை, அவன் கண்முன் வந்ததும் இல்லை.

ஆனால், விதி அவன் விபத்து மூலம் அவள் கண்முன் அவனைக் காட்டினால், அவளுக்கு மேலதிகாரியாய் அவன் கண்முன் அவளை நிறுத்தியது.

அந்த தினத்தில் இருந்து அவள் உடை விடயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டாள். அவன் சொற்கள் தன்னை நோக்கி பாய்ந்தவை அல்ல என்பதை ‘எங்கேயோ போன மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா’ என்று வந்ததென அவள் மனம் சில காலம் கழித்து தெளிவுகொண்டாலும், அதனை தாங்கியவள் அவள் தானே! அதன் வலியும் வடுவும் மாறுமா என்ன?

*******

பெசண்ட் நகர் கடற்கரையில் அமர்ந்திருந்தவளுக்கு காலை பத்து மணிக்கே உச்சியை தொடும் வெயில் உரைக்கவே இல்லை. இன்று அனைவரும் புகழின் நிச்சயத்திற்காக உடை எடுக்க செல்கின்றனர். அவள் வரவேண்டும் என்று கீர்த்தி முதல் நாளே அழைத்துவிட்டாள். ஏன் தான் மகிழ் விலக நினைக்கும்போது அவளை இவ்வாறு விலகவிடாமல் செய்கின்றனரோ?

தன்னையும் அறியாமல் கூட புகழையோ சின்னுவையோ நினைத்து சிறு வருத்தம் கூட தனக்குள் ஏற்பட்டு விடக்கூடாது, அதனால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்பட்டால் தன்னை என்றுமே அவளால் மன்னிக்க முடியாது. அதனாலேயே அவள் அவர்களை விட்டு விலக நினைத்தது.

ஆனால், அதுவும் அவளால் முடியவில்லை. எப்போது புகழ் அவளை நெருங்கத் துவங்கினானோ அன்றே ரிசிக்னேஷன் அளித்துவிட்டாள். ஏற்கவேண்டியவன் ஏற்கவேண்டுமே! அவன் குறுகுறு பார்வைகளும் உள்குத்து வைத்து பேசும் பேச்சுகளும், அப்பப்பா! போதும் போதும் என்னும் அளவுக்கு அவனை ஆசை தீர பார்த்தாகிவிட்டது. இத்தோடு அவனை விட்டு விலகிவிடலாம். இனி எக்காரணம் கொண்டும் அவனை பார்க்கவே கூடாது.

ப்ரார்த்தனாவுடன் திருமணம் நடந்ததும் அவன் தன்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டான். ஆம்! கண்டிப்பாக அதைத் தான் செய்வான். ஏனென்றால், அவன் உறவுகளுக்கு கொடுக்கும் மதிப்பு அவ்வளவு. இதை நினைக்கும்போது அவள் இதயத்தில் பல்லாயிரம் குண்டூசிகளை இறக்கிய உணர்வு. இருந்தும் தாங்கித் தானே ஆக வேண்டும். அதுவரை அவளும் இங்கே இருக்கத் தான் வேண்டும். அதன்பின், அவனே அவளை அவன் வாழ்வில் இருந்தும் வெளியேற்றிவிடுவான் என்று நினைக்கும்போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. விலக நினைக்கும்போது வராத வலி விலக்குவான் என்று சொல்லும்போது வருவது என்ன விந்தையோ!

அவளால் அவனை மறக்க முடியுமா? என்பதற்கான பதில் அவள் வெகு நேரம் யோசிக்காமலேயே புரிந்தது அவளுக்கு, தான் இருக்கும் இடத்தை அறிந்து. என்றோ கூறியிருந்தான் புகழ், அவள் சென்னையைப் பற்றி பேசும்போது. தனக்கு பெஸ்ஸி பீச் மிகவும் பிடிக்கும் என்று. சென்னை வந்ததில் இருந்து வாரம் ஒரு முறையும் அவள் மனம் சரியில்லாதபோதும் இங்கே வருவது வழக்கமாகிற்று.

இன்றும் அதேபோல் மகாலட்சுமியை காலையிலேயே தரிசித்தவள், இங்கே வந்து அமர்ந்திருந்தாள். இந்தக் காதல் ஏன் தான் தனக்கு வந்ததோ என்று அவள் தன்னையே திட்டித் தீர்ப்பது அவள் பெற்றோரை பார்க்கும்போது மட்டும் தான். அவர்களுக்கு மகளாக நிம்மதி அளிக்க முடியவில்லையே! ஆண்டவா! எனக்கு ஏன் இந்த சோதனை? என்று அவள் கேட்டுக்கொண்டிருக்க,

‘இன்னும் சோதனை முடியவில்லை மகளே!’ என்றாற்போல் இசைத்தது அவள் அலைபேசி.

“எங்கடி இருக்க? நாங்க டி.நகர் வந்தாச்சு. சீக்கிரம் வா” என்றாள் கீர்த்தி.

“நான் அவசரமா வெளியே வந்தேன் கீர்த்தி. இப்போதைக்கு என்னால வர முடியாது”

“எவ்வளவு நேரம் ஆகும்?”

“ரெண்டு மணி நேரம்…” என்று இழுத்தவளுக்கு சில நிமிடங்கள் மற்றைய பக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.

பின், “நீ எவ்வளவு நேரம் கழிச்சு வந்தாலும் சரி. நைட் பத்து மணி வரைக்கும் கடை இருக்கும். தயவு செஞ்சு வா டி. எனக்கு சரி, சின்னுவுக்கும் சரி, கலர்ஸ் பத்தி எதுவும் தெரியாது. அம்மா கட்டம் போட்ட சேலையா எடுத்துக்க சொல்வாங்க. நீ வந்தா தான் கரெக்ட்டா இருக்கும் டா… ப்ளீஸ் டி…” என்று கீர்த்தி கெஞ்ச, வருவதாக சொல்லி வைத்துவிட்டாள் மகிழ்.

‘எக்ஸ்ரா ஹவர் போட்டு என்னை படுத்தறீங்களே ஆண்டவா!’ என நினைத்தவள், டி.நகர் செல்லும் பேருந்தில் ஏறி அங்கே சென்றாள்.

அனைவரும் போத்தீஸில் குழுமி இருக்க, அவர்களை கண்டவுடன் அவள் விழிகள் தானாக அலைபாய்ந்தது, புகழ் எங்கே என்று.

கீர்த்தியும் ப்ரார்த்தனாவும் ராதையுடன் சேர்ந்து புடவைகளை பார்த்துக்கொண்டிருக்க, அவர்களின் அருகில் பாரிவேந்தன் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார். புகழோ, சற்று தள்ளி தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதவாறு தன் செல்லை நோண்டிக்கொண்டிருந்தான்.

மகிழ் சென்று கீர்த்தியை அழைக்க, அந்த சத்தத்தில் தலையை நிமிர்த்தியவன், பின் தோளை குலுக்கியவாறு மீண்டும் கைப்பேசியில் மூழ்கினான்.

ராதை மூவரையும் தேர்வு செய்ய சொல்லிவிட்டு தன் கணவருடன் வேறு பக்கம் சென்றுவிட்டார்.

விற்பனையாளர் பல சேலைகளை குவிக்க, எதுவுமே அவளுக்கு திருப்தியாக இல்லை.

“அண்ணா, ரெட் கலர்ல எடுத்து குடுங்க” என்றவள் கேட்க, ரகம் ரகமாய் இறங்கின சேலைகள். அவற்றை ஒவ்வொன்றாய் பார்த்தவளை கவர்ந்தது நீள பார்டர் வைத்த முழுவதும் சரிகையிட்ட சிகப்புப் பட்டு. அதனை அவள் காட்ட, மற்ற இருவருக்கும் அதுவே பிடித்திருந்தது.

புகழை அழைத்தவர்கள் அவனிடமும் அபிப்பிராயம் கேட்க, ப்ரார்த்தனாவின் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், சரி என்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.

ப்ரார்த்தனாவின் கண்ணசைவில் செயல்படும் புகழைக் கண்டு மகிழுக்கு மனம் மகிழ்ந்தாலும் அவன் இனி தனக்கு இல்லை என்பதை நினைக்கும்போது வலிக்கத் தான் செய்தது.
nice dr
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top