உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 17

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்... இதோ... கதையின் அடுத்த பதிவு... சென்ற அப்டேட்க்கு ஆதரவளித்ததற்கு ரொம்ப தாங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்...


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 17

rana-and-sai-pallavi.jpg

அந்த காரினை புகழ் அதிவிரைவாக ஓட்டிக்கொண்டிருக்க, அவன் அருகே இருளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மகிழ். வண்டி குடிமங்கலத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது.

‘எங்கே செல்லும் இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்?’

என அவள் மனசாட்சி அவள் இருந்த நிலையைப் பார்த்து கவுண்டர் கொடுக்க,

‘அவன் பாதை போகும் பாதை

நானும் போக வந்தேனே

அவன் மேல ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்றேனே

அவன் முகம் பார்த்து நிம்மதியாச்சு

என் மனம் ஏனோ வாடிடலாச்சு’

என்று அவள் பாட,

‘நீ எல்லாம், அவன் கிட்ட எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட… உனக்கு மனசாட்சியா வேலை பார்க்குறேன் பாரு… என்னை சொல்லனும்! பிள்ளையாரப்பா! என்னை சீக்கிரமா ரிலீவ் செய்திடு… நான் சொல்ல சொல்ல கேட்காம, எல்லாத்தையும் இவளே செய்துட்டு எனக்கு இருக்குற மனசாட்சி எந்நேரம் பார்த்தாலும் தூங்கிட்டு இருக்குன்னு என்னை கம்ப்ளைண்ட் பன்றா’ என அது கடுப்பாக, இதனைப் பற்றி கவலை கொள்ளாமல் மாலை நடந்ததை எண்ணியவாறு இருந்தாள் மகிழ்.

*****

மாலையில் இருவரையும் கோவிலில் பார்த்த மகிழுக்கு கீர்த்தியைக் கண்டு ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும், மறுநொடியே சோர்ந்தாள் அவள்.

முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் நின்றிருந்தாள் கீர்த்தி. இதற்கு தான் தகுதியானவள் தானா? என்ற எண்ணமே அவளை கூறுபோட்டது.

அவள் அவ்விடமே உறைந்து நிற்க, அவளை நோக்கி வந்த கீர்த்தி அவளை அணைத்துக்கொண்டு, “ஐ மிஸ்ட் யூ சோ மச் டி… எப்படி இருக்க? ஏன் இவ்வளவு நாளா எனக்கு ஒரு கால் கூட செய்யல? சரி, வா. வீட்டுக்கு போகலாம்” என்று எதிராளி தாம் கூறுவதற்கு பதிலளிக்கிறாளா இல்லையா என கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவள் பேசப் பேச தனக்குள் உடைந்தாள் மகிழ். தானும் கீர்த்தியை கட்டிக்கொண்டவள், “ஐ’ம் சாரி டி… உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… என்னை மன்னிச்சிடு” என்று அழுதுவிட்டாள்.

“ஹே லூசு… இதுக்கெல்லாமா போய் சாரி கேப்பாங்க? எனக்கு தெரியும், உனக்கு வர முடியாத ஒரு நிலைமை. இல்லைன்னா, என்னை பார்க்காம இவ்வளவு நாள் இருந்திருப்பியா?” என அவளை சமாதானப்படுத்தினாள், தன்னெதிரில் இருப்பவளை குற்றவுணர்வில் ஆழ்த்திவிட்டு.

(அவ ஏன் வந்து பாக்கலைன்னு தெரிஞ்சதும் நீ உருட்டுகட்டையால அவள சாத்தப்போற பாரு… கட்டை எல்லாம் ரெடிம்மா… ஜஸ்ட், அது உன்கிட்ட வந்து சேர நேரம் பார்த்துட்டு இருக்கு!)

மகிழை ஒரு வழியாக சமாதானப்படுத்தியவள், அவளை அழைத்துக்கொண்டு தாங்கள் வந்த வாகனத்தை நோக்கி செல்ல முயன்றாள். ஆனால், அவளது கையைப் பிடித்து தடுத்த மகிழ், உள்ளே வருமாறு கையைக் காட்ட, கீர்த்தியோ, காலையே தரிசித்து விட்டதாக கூறினாள்.

மகிழுக்கோ, மீண்டும் ஒரு முறை என்றாலும், வந்துவிட்டாயிற்று, வணங்காமல் எவ்வாறு போவது என்ற எண்ணம். எனவே, அவள் தவிப்போடு கீர்த்தி, மற்றும் புகழின் முகத்தைக் காண, அதுவரை எதுவும் பேசாமல் இருந்தவனோ, “சாமி கும்பிட்டு போகலாம் கீர்த்தி” என்றான்.

அவனிடம் ஏதோ சொல்ல வந்த கீர்த்தியை சைகையால் அடக்கிவிட்டு, உள்ளே நுழைந்தனர்.

அங்கே, மூலவரின் இடப்புறம் கீர்த்தியும் அவளை அடுத்து புகழும் நின்றுகொள்ள, தானும் கீர்த்தியிடம் செல்ல மகிழ் நினைக்கும்போது அவ்விடத்தில் மற்றொரு பெண்மணி நின்றுகொள்ள, புகழின் அருகேயே நிற்கவேண்டியதாயிற்று அவளுக்கு.

“வாங்கோ அம்பி, காலம்பர வந்து சேவிச்சிட்டு போனேள்ன்னு என் புள்ளையாண்டான் சொன்னான். வாழ்த்து கூட சொல்ல முடியலன்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டேள். இந்த வருஷம் உங்களுக்கு சிறப்பா இருக்கப்போறது. அடுத்த பிறந்தநாளுக்கு உங்க ஆத்துக்காரியோட தான் இங்க வரப்போறேள் பாருங்கோ!” என அவனை நன்கு தெரிந்த அந்த அர்ச்சகர் வாழ்த்தி பிரசாதத்தை அளிக்க, அதனைக் கேட்ட புகழ் அமைதியாக அவர் கூற்றை ஏற்றுக்கொண்டான்.

கீர்த்தியும் புன்னகைக்க, மகிழோ தன் முகம் மாறாமல் இருக்க பெரும் கஷ்டப்பட்டாள்.

தரிசனத்தை முடித்தபின் தங்களுடன் வீட்டிற்கு வரவேண்டும் என்று கீர்த்தி கேட்க, மறுத்து கூற வந்தவளை தடுத்து தங்கள் கையோடு அவளையும் அழைத்துச் சென்றுவிட்டனர்.

காரில், பின்னிருக்கையில் அமர்ந்து கீர்த்தியும் மகிழும் பேசியவாறே வர, புகழ் காரை ஓட்டினான்.

சந்தோஷமாக கதைத்துக்கொண்டிருந்த கீர்த்தி திடீரென்று, “எப்போடி மூக்கு குத்தின? ரொம்ப வலிக்கும், பொறுக்கவே முடியாதுன்னு சொல்வ?” என்று கேட்க,

மகிழின் நயனங்களோ, தங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தவனை நோக்கியது. அவனுக்காக செய்தது தானே இது. ஒரு முறை மூக்குத்தி பிடிக்கும் என்று அவன் சொல்லியிருக்க, அதற்காகவே வலியையும் பொறுத்து குத்திக்கொண்டாள்.

அவனும் அதே நேரம் அவளை பார்க்க, சட்டென்று தன் பார்வையை விலக்கியவள், கீர்த்தியிடம் எதையோ சொல்லி சமாளித்தாள்.

*******

வீட்டிற்கு சென்றவளை பாரியும் ராதையும் வெகுவாக வரவேற்க, அவர்களின் நலத்தை விசாரித்தவள், சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு கீர்த்தியுடன் அவளரையை நோக்கி நடந்தாள்.

“சாரிடி கீர்த்தி… என்னப் பத்தி யோசிச்சவ, உன்னப்பத்தி யோசிக்காம போயிட்டேன்… லூசுடி நான்… ரொம்ப சுயநலவாதியா இருந்துட்டேன்… ரொம்ப சாரிடி…” என்றவள் மேலும் பேசிக்கொண்டே போக,

கீர்த்தியோ, “என்ன டி ஆச்சு… என்னை பார்த்ததில்ல் இருந்து இப்படியே சொல்ற?” என்று கேட்க, என்னவென்று சொல்வாள் அவள்?

“ஒன்னும் இல்லடி…” என்று முடிக்க, “என்னமோ சொல்ற, நானும் நம்பறேன்” என்றவள் மேலும் பேசிச் சென்றாள்.

இவ்வாறே இருவரும் அங்கே இருந்த பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அங்கே பிரசன்னமானான் புகழ்.

“கீர்த்தி, உன்ன அம்மா கூப்பிடறாங்க” என்று அவன் உரைக்க, விரைவில் வருவதாக சொல்லிச் சென்றாள் கீர்த்தி.

அதன்பின் அங்கே இருக்க வேண்டாம் என்று நினைத்தவள் கீழே செல்ல நினைக்க, அவளை தடுத்தது புகழின் குரல். அதில் அங்கேயே நின்றவளிடம்,

“உங்க பாஸ்க்கு இன்னைக்கு பர்த்டே… நீங்க இன்னும் ஒரு விஷ் கூட செய்யலியே!” என்று அவன் கேட்க,

“சாரி சார்…” என்று அவனை நோக்கி திரும்பியவள், ஒரு புன்னகையுடன், “ஹப்பி பர்த்டே சார்” என வாழ்த்திவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவள் செல்லும் வழியையே பார்த்துக்கொண்டிருந்தான் புகழ்.

அன்று இரவு உணவை அங்கேயே அவளை உண்ண வைத்தவர்கள் புகழுடனேயே சென்னைக்கு அனுப்பியும் வைத்தனர். அவளது திடீர் பயணம் என்பதால் இரவு செல்லும் நேரத்திற்கேட்ப பஸ் பிடித்துக்கொள்ளலாம் என அவள் நினைத்ததும் அவர்களுக்கு நன்மையாகிப் போனது.

******

இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவள் தன்னருகில் அமர்ந்து ஓட்டி வருபவனைக் கண்டாள்.

அவன் மீது அவளுக்கு பயம் எதுவும் இல்லை, அவள் மீதான பயமே அவள் எண்ணம் முழுவதும் இருக்க, அதையும் மீறி ஒரு உணர்வு தோன்றியது. இருவர் மட்டும் அருகருகே! அந்த நினைப்பே இனிக்க, அவனை ரசிக்கத் தூண்டிய மனதை கடிவாளமிட்டு திருப்பினாள் அவள்.

ஆனால், கைக்கெட்டும் தூரத்தில் அவள் தேடிய சொர்க்கம் இருக்க, சமீபகாலமாக அவன் காட்டும் இலகுத்தன்மையில் அவள் மனமும் தவிக்க, இத்தனை நாள் செய்யாததை இன்று தன்னையும் அறியாமல் செய்துவிடுவோமோ என்று தவித்தே போனாள் பெண்.

எனவே, அவனை தவிர்ப்பதற்காக அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தவள், விரைவில் தன்னை அதிலே மூழ்கடித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அதனை மூடிவைத்துவிட்டு சீட்டில் சாய்ந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் கவனத்தை மகிழிடமும் வைத்திருந்த புகழ், அவள் கண்ணீரைக் கண்டதும் பதறி வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே படுமாறு சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், “என்ன ஆச்சு மகிழ்?” என்று கேட்க,

அவன் குரலில் நடப்பிற்கு வந்தவள், கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, “ஒன்னும் இல்ல. ஐ அம் ஆல்ரைட்” என்று அவன் வண்டியை இயக்க பணிந்தாள்.

ஆனால் அவனோ, அவள் காரணம் கூறாமல் நகர்த்த மாட்டேன் என்னும் பாவனையில் இருக்க, வேறு வழியில்லாதவள் தன் செல்ஃபோன் திரையை அவனை நோக்கி காட்ட, அதைப் பார்த்தவன் மனம் ஆசுவாசமடைந்தது.

பொன்னியின் செல்வனின் கடைசி அத்தியாயத்தை படித்து முடித்திருந்தாள் அவள். கதையின் சில அத்தியாயங்கள் மட்டும் படிக்காமல் இருக்க, அதனை படிக்க ஆரம்பித்தவள் மணிமேகலையின் இறப்பின் போது தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்திவிட்டாள்.

“இதற்காகவா நீ அழுகற?” என்றவன் காரை இயக்கியபடியே “இட் இஸ் ஜஸ்ட் அ கரெக்டர்” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அதில் அவனை நோக்கியவள், “கரெக்டராக இருந்தால் என்ன? அட்லீஸ்ட், நாம படிச்சு முடிக்கற வரைக்கும் நம்ம மனசுல வாழ்றாங்க தான? அதுவும்…” என்றவள் முடிக்க முடியாமல் தடுமாற,

“அதுவும்?” என்று அவன் எடுத்துக்கொடுத்தான்.

முழுவதும் சொல்லாமல், “மணிமேகலை ரொம்ப கொடுத்து வைச்சவ” என்க,

“வாட்? கொடுத்து வைத்தவளா? என்னைப் பொறுத்தவரை, ஒருத்தன் மேல் கண்மூடித்தனமாக காதலை வைத்து, அவனுக்காக உயிரை விட்ட கோழை, காதலுக்காக போராட தெரியாதவள்” என்று புகழ் கூற,

அவனை கண்ணீருடன் பார்த்தவள், “அவளே வாண்டட் ஆ போய் லவ் பண்ணா பாருங்க. ஆனால், தன்னை காதலிக்காத ஒருத்தன் கிட்ட, அதுவும் வேறு ஒருத்தியை காதலிக்கறவன் கிட்ட போய் என்னை காதலின்னு கேட்க சொல்றீங்களா? கெஞ்சி பெறுவதற்கு காதல் என்ன யாசகமா?” என்று அவள் எதிர்கேள்வி கேட்க, அதற்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? எனவே அவள் முன்பு கூறிய வரிகளை பிடித்துக்கொண்டு,

“முடியாது தான். ஆனால், நீ ஏன் அவளை கொடுத்து வெச்சவன்னு சொன்ன?” என்று கேட்டான்.

“நீங்க யாரையாச்சும் ஒன்-சைட் ஆ லவ் பண்ணீருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவளே தொடர்ந்தாள்.

“ஒரு பொண்ணா இருந்து பார்த்தாதான் அவ காதலோட அருமை தெரியும். பசங்க நீங்க ஒரு பொண்ண லவ் பண்ணா அவளிடம் தைரியமாக போய் சொல்லலாம். ஆனால், அதுவே பொண்ணுங்க போய் சொன்னா, அது வேற மாதிரி திரும்ப சான்ஸ் இருக்கு. தனக்கு ஏற்பட்ட காதலை வெளியில் சொல்லவேண்டும் என்றால் கூட, அதற்கு அவள் காதலிப்பவன் சிறிதளவேனும் அவள் மீது ஈடுபாடு இருக்குன்னு காட்டினால் மட்டுமே முடியும். ஆனால், மணிமேகலை அப்படி இல்லை. அவ வந்தியத்தேவனை எவ்வளவு காதலிக்கறான்னு எல்லாருக்குமே தெரியும். அதை உணர்ந்தவனாலையும் அவளை ஏற்கமுடியாது. அப்படி இருக்கும்போது அவளால என்ன பண்ண முடியும்?

அவளுக்கு இருந்தது இரண்டே ஆப்ஷன் தான். ஒன்னு, தான் காதலிச்சவன் தனக்கு கிடைக்கவே மாட்டான்னு தெரிஞ்சு மனசொடிஞ்சு அவன் தன்னோட காதலியோட வாழ்றத பார்த்து துன்பப்படனும், இல்லை வேற ஒருத்தனை கட்டிட்டு அவனை மறக்கவும் முடியாம, தன் வாழ்க்கையை முழுசா வாழவும் முடியாம தினமும் செத்து பிழைக்கனும். அவளுக்குன்னு மட்டும் இல்ல, காதலிச்சவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு ரெண்டுமே நரகம் தான். அவளை திருமணம் செய்பவனுக்கும் அது நரகம் தான். காதலில்லாத திருமண வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதுவும், தன் துணையின் காதல் தனக்கே வேணும்ங்கறது பேசிக்கா எல்லாரும் நினைக்கிற ஒரு விஷயம். அதைகூட அவளால் அவளுக்கு வரும் கணவனுக்கு தர முடியாது. அது ஒரு வகையில் அவனுக்கு செய்யும் துரோகம்தான். அவளுக்கு கல்யாணம் செய்ய நினைத்திருந்தால் தற்கொலை தான் செய்திருப்பாளே தவிர, வந்தியத்தேவனை மறந்து வேற வாழ்க்கை தேடியிருக்க மாட்டா.

சோ, நான் முதல்ல சொன்னது நடக்கத் தான் நிறைய வாய்ப்பிருக்கு. அதுவும் கிட்டத்தட்ட சாகுறதுக்கு சமானம்தான்! அந்த கஷ்டமும் அவளுக்கு கிடைக்கல. அதுவும், அவ இறந்தது யார் மடியில? அவள் உயிருக்குயிரா காதலிச்ச வந்தியத்தேவன் மடியில. இத விட அவளோட ஒரு தலைக் காதலுக்கு எப்படி ஒரு சிறப்பு கொடுக்க முடியும்? அந்தவகையில் இது ஒரு விடுதலை; காதலில்லாம வாழ்வதை விட, காதலிச்சவன் மடியிலேயே இறக்கறதுக்கு உண்மைலயே அவ ரொம்ப கொடுத்துதான் வைச்சிருக்கனும். கடைசில, அவன் மனசுல அவளுக்கு ஒரு இடம் கிடைத்ததே! அது காதலியா இல்லைன்னா என்ன?

கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவளுக்கு இதுவே பெரிய பாக்கியம் தான்” என்றவள் சிறிது நேர அமைதிக்குப் பின் மேலும் தொடர்ந்தாள்.

“அப்போ எப்படி இருந்துருந்தாங்களோ எனக்கு தெரியாது. ஆனால், இப்போதைய நிலைமைய வெச்சு சொல்றேன். ஒரு ஆண் இவ தான் நான் காதலிச்ச பெண்ணுன்னு தைரியமா தன் மனைவியிடம் அறிமுகப்படுத்தலாம். அதுவே ஒரு பெண் தன் கணவனிடம் அறிமுகப்படுத்த முடியுமா? அவ அப்படி சொன்ன மறு நிமிடத்தில் இருந்து அவ சொல்ற/செய்யற விஷயங்களை சந்தேகத்தோட பார்க்கிற ஆண்கள் தான் அதிகம். உங்களுக்கு வர்ற அதே உணர்வு எங்களுக்கும் வரக்கூடாதா? இங்க எல்லாம் ஆண்களுக்கு ஒரு நியாயம், பொண்ணுகளுக்கு ஒரு நியாயம் தான? இதேபோல் அன்றைய ஆண்களும் இருந்திருந்தால், அப்படிபட்டவன் ஒருவேளை அவளுக்கு கணவனாக வாய்த்திருந்தால், ஆல்ரெடி காயப்பட்ட அவள் மனதை மேலும் நோகடித்து அடக்கம் செய்வதைவிட, அவளை மொத்தமாக அடக்கம் செய்வதே மேல்” என்று மகிழ் எங்கோ பார்த்தவாறு பேசிக்கொண்டே போக, அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் புகழ்.

அவனுக்கு அவனவள் எழுதிவைத்திருந்த அந்த வரிகள் கண்முன்னே வந்து போனது.



மடல் இல்லை

எருக்கங்கண்ணி இல்லை

கிழி இல்லை

மடலேறுதலும் இல்லை

வரைப்பாய மட்டும் தயாராகிவிட்டேன்

பெண்ணாய் பிறந்து காதலித்ததால்!


Disclaimer: மேலே இருப்பது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top