உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 16

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஃப்ரென்ட்ஸ்...

கதையின் அடுத்த அப்டேட் இதோ... இன்னும் ஒரு பத்து பகுதிகளில் கதை முடிந்துவிடும். அவை அனைத்தையும் விரைவிலேயே தந்துவிடுகிறேன்.


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 16

rana-and-sai-pallavi.jpg


அடுத்த நாள் காலையில் ஆபிஸினுள் நுழைகையில் அவளுக்கு பட படவென்று இருந்தது. ஆனால், அதனை ஒதுக்கி வைத்தவள், முதல் நாள் தனக்குள் எடுத்த முடிவுதனை மேலும் ஒரு முறை உருபோட்டுக்கொண்டாள்.

அவள் சென்றபோது சிலர் முன்பே அலுவலகம் வந்திருக்க, மற்றவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு ராகுலின் கலாய்களை தாங்கியவாறு தன் அலுவல்களை பார்க்கலானாள்.

ஒன்பது மணியை தாண்டிய சில மணித்துளிகளில் உள்ளே நுழைந்த புகழ் அன்று முழுவதும் தன் நேற்றைய நினைவுகள் ஆக்கிரமிக்க, வேலைகளும் இழுத்துக்கொள்ள, மகிழின் புறம் தன் கண்ணையும் கருத்தையும் திருப்பவே இல்லை.

அதில் மகிழுக்கு ஒரு புறம் நிம்மதி எழுந்தாலும், மறுபுறம் வலி ஏற்படுவதையும் தடுக்க முடியவில்லை. பெண்ணவளின் மனம் காதலுக்கும் தனக்குள்ளே போட்டு வைத்த கட்டுக்கும் இடையில் அல்லல்பட்டுக்கொண்டிருந்தது.

அதனை தவிர்க்கும் பொருட்டு பணிகளில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள, அதுவும் அவள் விருப்பம் அறிந்தோ என்னவோ, ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி வந்து நின்றது.

*******

இவ்வாறே ஒரு வாரம் செல்ல, அன்று காலை ஆபீசில் நுழைந்தவளை அனைவரும் சூழ்ந்துகொண்டனர்.

திடீரென்று இவ்வாறு நடக்கவும், சிறிது தடுமாறியவள், “எ… என்ன?” என்று கேட்க, “கங்கிராட்ஸ் மகிழ்!” என்று முன்னே நின்றிருந்த ராகுல் கத்த, அவனைத் தொடர்ந்து அனைவரும் வாழ்த்தினர்.

இன்னும் குழப்பம் தீராதவண்ணம் பேந்தப் பேந்த விழித்தவள், “தேங்க் யூ காய்ஸ்… பட், இது எதுக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று கேட்க,

‘இங்கே வா’ என்று அவளை இழுத்துச் சென்ற ராகுல் ஒரு கணினியின் திரையைக் காண்பிக்க, அதனைக் கண்டவளின் கண்கள் நம்ப முடியா ஆச்சரியத்தில் விரிந்தது.

ஆர்க்கிடெக்டர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் சம்பந்தமான ஒரு மேகஜீனில் அவளது கட்டுரை ஒன்று வந்திருந்தது. அந்த மேகஜின் உலக அளவில் புகழ்பெற்றது; அதன் இந்திய நாட்டு எடிஷனில் அவள் கட்டுரை வெளிவந்திருக்க, மகிழுக்கு ஆச்சரியம்.

ஆனால், அவள் அறிந்து அவள் எங்கும் எழுதவே இல்லையே!

அந்தக் கட்டுரையை படித்தவளுக்கு புரிந்து போனது, இது யாருடைய வேலையென்று.

சில தினங்களுக்கு முன்னர், புகழ் அவளை அழைத்து வாடிக்கையாளர்களுக்கு புரியும்படியாக இன்டீரியர் டிசைனிங்கைப் பற்றி தெளிவாக, அவர்களைக் கவரும் வகையில் எழுதித் தரும்படி கேட்க, அவளும் அவன் கேட்டவாறு அளித்திருந்தாள்.

அதில் அவள் ஆர்வத்தோடு கற்றவற்றையும் கலந்தே எழுதியிருக்க, அதில் சில டிங்கரிங் வேலைகளை செய்து இந்த மேகஜீனுக்கு அனுப்பியிருந்தான் புகழ்.

‘ஐ… என் செல்லம்!’ என்று கொஞ்சிவிட்டு, உடனே அவனைக் காண விரும்பியது அவள் மனம். அவன் எங்கே என்று அவள் தேட, தன் அறை வாயிலில் அவளை முறைத்தவாறு நின்றிருந்தான் அவன்.

‘இப்போ என்ன செய்தேன்னு இப்படி முறைக்கிறான்?’ என யோசித்தவாறே அவள் திரும்ப, அவள் அருகிலேயே நின்று அந்த கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தான் ராகுல்.

தன்னிச்சையாக மகிழ் அவனை விட்டு விலகி புகழை நோக்க, ஒரு மந்தகாச புன்னகையோடு தன் அறைக்குள் நுழைந்தான் புகழ்.

அவனைக் காண நினைத்தவள், அனைவரது வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு அவன் அறையினுள் நுழைய, “எஸ் மிஸ். மகிழ்தினி” என்று அவன் சொல்ல,

‘இவன் ஒருத்தன், நான் மிஸ்ன்னு எனக்கு தெரியாது பாரு, ஒவ்வொரு டைமும் நியாபகப்படுத்திட்டே இருப்பான்’ என்று மனதில் அவனை திட்டியவாறே, நிமிர்ந்தவள், அவனின் கூரிய பார்வை தன்னை துளைப்பதைக் கண்டு, சற்று நிதானப்படுத்தியவாறு,

“தேங்க்ஸ் சார்!” என்றாள்.

“எதுக்கு?”

“நான் குடுத்த ஆர்டிக்கலை எடிட் செய்து மேகஜினுக்கு அனுப்பியதற்கு.”

“நான் பெருசா எதுவும் செய்யல. முதலில் அதனை வாடிக்கையாளர்களுக்கு இன்டீரியரிலும் இன்டரெஸ்ட் வரட்டுமே என்ற எண்ணத்தில் தான் வாங்கினேன். ஆனால், படிச்சு பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கவும் தான் அவங்களுக்கு அனுப்பினேன். அவங்களும் பப்ளிஷ் செய்தாங்க. ஐ ஹவ் நத்திங் டு டூ இன் இட்” என்றவன் தன் வேலைகளை பார்க்க,

“ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் சார்” என்றுவிட்டு வெளியேறப் போனாள்.

“ஒன் மினிட் மிஸ். மகிழ்” என்ற குரலைக் கேட்டு திரும்பியவளிடம் அடுத்த கேள்வியை எறிந்திருந்தான்.

“உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா?”

“எஸ் சார்”

“அப்போ, எனக்கு ஒரு ஹெல்ப் தேவைப்படுமே!”

“என்ன ஹெல்ப் சர்?”

“எங்க வீட்டுல கொஞ்சம் சேஞ்சஸ் செய்யறோம். அதுல ஹால்ல கிருஷ்ணா பெயிண்ட் செய்யலாம்னு ஒரு ஐடியா. அதுக்கு ஒரு மாடல் வரைஞ்சு தர முடியுமா?” என்று அவன் கேட்க, மகிழின் முகம் கேள்வியைத் தாங்கி இருந்தது.

நெட்டில் தேடினாலே பல வகையில் கிடைக்கும். அதனை விட்டுவிட்டு தன்னிடம் எதற்கு கேட்க வேண்டும்?

அவள் முகம் கண்டே மனதைப் படித்தவன், “யா… நிறைய கம்பனிஸ் செய்து தராங்க. பட், அது எல்லாம் ப்ரீ-டிசைன்ட் மாடலா தான் இருக்கு. இது நான் ஸ்பெஷலா செய்வது. சோ, இந்த மாதிரி வேறு யாரும் செய்திருக்க கூடாது” என்று அவன் கூற, அவன் ‘ஸ்பெஷல்’ என்று கூறிய விதத்திலும் முகத்தில் தோன்றிய பரவசத்திலும் அது யார் என்பது புரிய, மனம் வலித்தது அவளுக்கு.

ஒரு நொடி வானத்தில் பறக்க வைக்கிறான், மறு நொடி தரையில் வீசி விடுகிறான். அவனைச் சொல்லி எந்த குற்றமும் இல்லை. எல்லாம் நீயாக வாங்கிக்கொண்டது என்று அவள் மனம் கூப்பாடு போட, அதனை மறைத்தவள், “ஷ்யூர் சார். செய்து கொடுத்தர்றேன். பட், அதற்கு முன்னே அந்த இடத்தை பார்க்கனுமே. உங்களிடம் ஃபோட்டோஸ் இருக்கா?” என சிரிப்பை இழுத்து வைத்தபடி கேட்டாள்.

“ஹால் மட்டும் இல்லை, வேறு சில இடங்களிலும் சஜஷன்ஸ் வேணும். இஃப் யூ டோன்ட் மைண்ட், என்னுடன் வீட்டிற்கு வந்து பார்க்க முடியுமா?” என அவன் கேட்க,

அலுவலகத்தில் டிசைன் செய்ய முடியும் என்பதால் முன்பு சொன்னதை ஒத்துக்கொண்டவள், தற்போது அவன் வீட்டிற்கு அழைக்கவும், தயக்கம் கொண்டாள்.

“நம்ம ஆபிஸில் இன்னும் நிறைய டெக்கரேட்டர்ஸ் இருக்காங்களே சார். அவங்ககிட்ட கேட்கலாமே!” என்று அவள் கேட்க,

“இங்க நான் தான் பாஸ்ன்னு நினைக்கிறேன் மிஸ் மகிழ்தினி. யாருக்கு என்ன வேலை கொடுக்கனும்னு எனக்கு தெரியும்” என அவன் முடித்துவிட, தன் அதிகப் பிரசிங்கித்தனத்தை உணர்ந்தவள், ஒரு ‘சாரி சார்’ உடன் வெளியேறியிருந்தாள்.

அவள் தன் இடத்திற்கு சென்ற சில மணி நேரத்தில் அவள் ஐடிக்கு ஒரு தகவல் வந்திருந்தது, இன்று மாலை அங்கு சென்று செய்யவேண்டியவற்றை பார்க்க வேண்டும் என. அதற்கு சரியென்று தகவலனுப்பியவள், தன் அலுவல்களை கவனிக்கலானாள்.

சரியாக நான்கு மணிக்கு புகழ் அவள் எவ்வளவு மறுத்தும் தன் காரிலேயே அழைத்துச் செல்ல, விரைவில் அவன் வீட்டை அடைந்தனர்.

முன்புற தோட்டத்தோடு இரண்டு தளங்களில் அமைந்திருந்தது அந்த வீடு. அவனது பொள்ளாச்சி வீடு பழமையில் புதுமை கலந்து இருக்குமென்றால், இதுவோ முற்றிலும் புதுமையை மட்டுமே கொண்டு நின்றது.

இவை எல்லாம் யோசித்தவாறு வந்தவள், தன்னையும் அறியாமல் வலது காலை வைத்து உள்ளே நுழைந்தாள். அதனை பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் மெல்லியதொரு புன்னகை எட்டிப்பார்த்தது.

அதன்பின் இருவரும் அந்த வீட்டில் எங்கெங்கே மாற்றம் செய்யலாம் என்று விவாதிக்க, மகிழ் கூறுபவை அனைத்தையும் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான் புகழ்.

எங்கே அவன் அன்று போல் தன்னிடம் ஏதேனும் பேச நினைப்பானோ அல்லது நெருங்க நினைப்பானோ என்று நினைத்தவளுக்கு அவன் ஒரு எல்லையிலேயே நின்றது ஒரு புறம் நிம்மதியையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் ஒருங்கே அளித்தது.

ஆனாலும், அவனது பார்வை தன்னை சில நேரம் தொடர்வது கண்டு அவனை நோக்கி திரும்பும்போது தன் விழிகளை வேறு புறம் திருப்பி விடுவான் புகழ்.

அந்த வீட்டை முழுவதும் சுற்றிப்பார்த்தவள், சில உடைமைகள் மட்டும் இருக்க, “சார், நீங்க இங்கேயா தங்கறீங்க?” என்று அவள் கேட்க,

“இந்த வீடு சமீபத்தில் தான் வாங்கியது. ஒரு சில வேண்டாத பொருட்களை பழைய ஓனர்ஸ் விட்டுட்டு போயிட்டாங்க. எல்லா வொர்க்ஸும் முடித்ததும் தான் இங்க குடிவரனும்”

“உங்க அப்பா, அம்மா எல்லாம்?”

“அவங்க எல்லாருமே ஊரில் செட்டில்ட்”

“அப்போ தனியா தான இருக்கனும்? இவ்வளவு பெரிய வீட்டில் தனியா இருக்கனும்னா ரொம்ப கஷ்டமா இருக்குமே” என தன் போக்கில் பேசிக்கொண்டே போனவளினை இடையிட்டது அவன் குரல்.

“நான் தனியா தான் இருக்கப்போறேன்னு யாரு சொன்னா?”

‘சே… ஏண்டி இப்படி உன் காயத்த அவன் வாயாலயே கீறி துன்பப்பட்ற. பேசாம இரு’ என்று வலித்த தன் மனதையும் கலங்கிய கண்களையும் அவனுக்கு காட்டாமல் மறைத்தவள், தன்னை சரி செய்துகொண்டு,

“சூப்பர் சார். அப்போ சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடப்போறீங்கன்னு சொல்லுங்க” என்ற அவளின் கூற்றுக்கு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.

அதன்பின் இருவரும் புறப்பட, அவளை அவள் இடத்தில் விட்டுவிட்டு தன் இருப்பிடத்தை நோக்கி பயணப்பட்டான் புகழ்.

*******

சில நாட்கள் கடந்திருக்க, அந்த வார புதன்கிழமை புகழின் பிறந்தநாள். அவன் அதற்காக செவ்வாய் மாலையே ஊருக்கு செல்வதாக முடிவெடுக்கப்பட, தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள் மகிழ்.

அவள் வருடாவருடம் தவறாமல் அவனுக்காக செய்வது அது ஒன்று மட்டுமே. இது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று வந்தவளுக்கு இப்போது ஏனோ அவன் தன்னை கண்டுபிடித்து விடுவானோ என்று தேவையில்லாத பயம் வர ஆரம்பித்திருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. புகழ் இப்பொழுதெல்லாம் ஏதோ உள்ளர்த்தத்தோடு தான் தன்னிடம் பேசுகிறான் போல் தோன்றியது அவளுக்கு.

இதில் தான் எவ்வாறு அங்கே செல்வது என்று யோசித்தவளுக்கு வரப்பிரசாதமாக வந்தது அவளுடன் பயின்ற தோழியின் திருமண அழைப்பிதழ். மதுக்கரையில் திருமணம் நடக்கவிருக்க, நெருங்கிய தோழியில்லை என்றாலும் நல்ல பழக்கம் உள்ளதால் அவள் திருமணத்திற்கு செல்ல முடிவெடுத்தாள் மகிழ். அதனை சாக்கிட்டு பிள்ளையாரை தரிசிப்பதற்கும்.

அதன்படி அன்று காலையில் விஷேஷத்தில் கலந்துகொண்டவள் மாலை கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு அங்கே இருந்த ஒரு தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தாள்.

அப்போது அவளை கலைப்பதுபோல் ஒரு குரல், “மகிழ்!” என உற்சாகத்தோடு ஒலித்தது.

குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள் கண்ணில் விழுந்தாள், கீர்த்தி. அவள் அருகில் நின்றிருந்தான் புகழ்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top