உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 12

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கடந்த பகுதிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி... அடுத்த பதிவு இதோ!!!

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 12

rana-and-sai-pallavi.jpg

“அடியே!!!” என்று இருபதாவது முறையாக கத்தியிருந்தாள் கீர்த்தி. ஆனால், அவள் யாரை விளித்தாளோ, அவளுக்கு இது எதுவும் காதில் விழுந்தாற்போலே தெரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அவளும் புகழும் நேற்று பேசியதிலேயே நிலைத்திருந்தது.

*****

நேற்று வழக்கமாக இருவரும் பேசிக்கொண்டிருக்க, அப்போது இருந்த மனநிலையில் தான் தாயையும் தந்தையையும் பிரிந்திருப்பதைக் கூறியிருந்தாள் மகிழ். தற்போது பாட்டியின் வீட்டில் இருப்பதையும். தான் முன்பு அவனிடம் பேசியது அப்போது நினைவில் இருக்கவில்லை அவளுக்கு.

மகிழுக்கு சிறுவயதில் இருந்தே தாயும் தந்தையும் தன்னைவிட அவர்கள் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று ஒரு எண்ணம். இது பெரும்பாலும் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனியாக வளரும் குழந்தைகளுக்கு தோன்றுவது தான். வேலைக்கும் குடும்பத்துக்கும் சமமாக நேரம் ஒதுக்கி செயல்படுத்துபவர்கள் இதனை வெற்றி பெற்று பிள்ளைகளையும் அதன் தனிமையில் இருந்து மீட்டுவிடுகிறார்கள். பார்க்காமலே விட்டு விடுபவர்களின் குழந்தைகள் ஒன்று தவறான வழிகளில் அந்த அன்பைத் தேடும் அல்லது தனிமையில் மூழ்கிவிடும், அதுவும் இல்லையேல் விரக்தியில் அனைத்திலும் பிடிப்பில்லாமல் போய்விடும்.

இதில் முதல் வகை மகிழ். தன் பெற்றோருடன் ஒட்டாமல் போனவள் கீர்த்தியும் அவள் பெற்றோரும் இருக்கும் விதத்தைக் கண்டு அந்த கூட்டினுள் தானும் சேர அவா கொண்டாள். அதற்கு தான் அறியாமலே ஒரு தூபம் போட்டுவிட்டாள் கீர்த்தி. புகழைக் காணும் முன்பே அவன் குடும்பத்தின் மீது அன்பை வளர்த்துவிட்டாள் மகிழ்.

என்ன ஒரு விந்தை! காதலன் மூலம் அவன் குடும்பம் மீது பாசம் கொண்டவர்கள் மத்தியில் அவன் குடும்பத்தினால் அவன் மீது பாசம் கொண்டாள் மகிழ். அந்த பாசம் நாளாக நாளாக காதலாக மாறியது.

தன் பெற்றோரைப் பற்றி கூறியவள், அவர்களுக்கு தன் மீது பாசமே இல்லை என்று கூற, புகழோ அவ்வாறு இருக்கவே இருக்காது என்று கூறினான். பிள்ளைகள் மீது பாசம் வைக்காத பெற்றோர் எங்கு உள்ளனர்?

ஆம் என்று மகிழ் கூற, புகழ் அவளுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தான்.

புகழின் வீட்டிலும் முன்பு அவன் தந்தை வேலை என்று தன் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க மாட்டார். அவரை மாற்றி தந்தைக்கே தகப்பன்சாமியாக பாடம் நடத்தியவன் புகழ். தந்தை உடன் இல்லாமல் தாங்கள் படும் வேதனையைக் கண்டு ஒரு நாள் அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைத்திருந்தான் புகழ். அதன்பின், எத்தனை வேலை இருந்தாலும் மாலை தன் வீட்டிற்கு வந்துவிடுவார் அவன் தந்தை. சிறிது சிறிதாக அவர்களின் குடும்பம் பந்தம் என்னும் கயிறைக் கொண்டு அல்லாது அன்பெனும் கயிறைக் கொண்டு பின்னப்பட்டது.

இதையெல்லாம் அவன் விலாவரியாக கூற, முதல் முறை தனது கண்ணோட்டத்தைத் தாண்டி பெற்றோரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்தாள் மகிழ். அதில் அவர்கள் அவளுக்காக படும் பாடு எல்லாம் புரிய, உடனே அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது அவளுக்கு.

தனக்கு உதவிய புகழுக்கு நன்றி கூறினாள் மகிழ்.

அத்தோடு அன்றைய பேச்சு முடிந்தது.

****

“ஏன்டி இப்படி கத்துற. என்னமோ பத்து மைல்க்கு அந்தப்பக்கம் இருக்காப்போல!” என்று மகிழ் சலித்துக்கொள்ள,

“ஆமாம்டி, உனக்கு கத்துற மாதிரி தான் தெரியும்! இதுக்கு முன்ன எவ்வளவு டைம் கூப்பிட? அப்போ எல்லாம் உனக்கு கேட்காது!” என்று கீர்த்தி சலித்துக்கொள்ள,

“ஸாரி டி! ஏதோ நியாபகம்” என்று அவள் இழுக்க,

“வர வர உன் போக்கே சரி இல்ல” என்று கீர்த்தி கூற, ஒரு நொடி திக்கென்றது மகிழுக்கு.

“ஏ… ஏன் அப்படி கேட்கற? நான் நல்லா தானே இருக்கேன்” என்க,

“என்னமோ விடிய விடிய தூங்காதவ மாதிரி க்ளாஸ்ல தூங்கற, இப்போ எல்லாம் ஒன்பது மணிக்கு என்னால் வீட்டைப் பார்த்து ஓடிர்ற, கேட்ட, வேலை இருக்குன்னு சொல்ற. எனக்கே தெரியாம அது என்னடி உனக்கு மட்டும் தனியா வேலை தர்றாங்க நம்ம க்ளாஸ்ல?”

“அது ஒன்னும் இல்லடி, பாட்டி தனியா இருப்பாங்கல்ல, அதான்” என்று மகிழ் உள்ளூர நடுங்கிக்கொண்டே கூற, சரியென்று ஒத்துக்கொண்டாள் கீர்த்தி. ஏனென்றால், மாலையானதும் பாட்டி வீட்டை விட்டு வெளியில் எங்குமே செல்லமாட்டார்.

கீர்த்தியிடம் மறைத்து வைப்பது மகிழுக்கு சரியாக படவில்லை. எனவே, கீர்த்தியிடம் சொல்லிவிடலாம் என்று அவள் நினைக்க, அந்த நேரம் கீழே அவள் தந்தை சத்தமிடுவது கேட்க, இருவரும் மாடியில் இருந்து பார்த்தனர்.

தாயும் தந்தையும் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இது வழக்கம்தான் என்பது போல கீர்த்தி மகிழை அழைத்துக்கொண்டு தன் அறையினுள் வந்துவிட்டாள்.

“டி… உன் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுட்டு இருக்காங்க, நீ என்னன்னா, எனக்கென்னன்னு வந்து உட்காந்துட்டு இருக்க? போடி, அவங்கள சமாதானப்படுத்து” என்று மகிழ் கீர்த்தியைப் பிடித்துத் தள்ள,

“அடி போடி, யாருக்காக சண்டை போட்றாங்களோ, அவனே எனக்கென்னன்னு எங்கேயோ போய் உட்கார்ந்துட்டு இருக்கான். நான் அங்கே போய் திட்டு வாங்கனுமா?” என்று கீர்த்தி அசால்ட்டாக கூற,

“யாருக்காக?” என்று கேட்டாள் மகிழ்.

“வேற யாரு? எல்லாம் புகழுக்காக தான். அவனுக்கு ஆர்க் படிக்கனும்னு ஆசை. அப்பாவுக்கு அவன் மேனேஜ்மெண்ட் படிச்சிட்டு கம்பனியை எடுத்து நடத்தனும்னு ஆசை. இப்போ திரும்பவும் அப்பா அவன்கிட்ட கேட்டிருப்பாங்க. அவன் முடியாதுன்னு சொல்லிருப்பான்” என்றாள் கீர்த்தி.

“உன் அண்ணனுக்கு அப்பா சொன்னத படிக்க என்ன கஷ்டம்?”

“அவனுக்கு சின்ன வயசுல இருந்தே பில்டிங்க்ஸ்-ல ரொம்ப இஷ்டம். கம்பனிக்கு கூட்டிட்டு போனா கூட அங்க நடக்குற ப்ராசஸ் எல்லாம் பார்க்காம கம்பனியோட ப்ளூ பிரிண்ட் எங்கே இருக்குன்னு கேட்டு அதை எடுத்து பார்த்துட்டு இருப்பான். இஷ்டமானது ஒன்னு இருக்க, அதை விட்டுட்டு வேற ஒன்னு செய்ய அவனுக்கு விருப்பமில்லை. இந்த விஷயத்துல அவனுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டையே நடந்துச்சு. கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் அவங்க பக்கத்துல இருந்து இறங்கி வரவே இல்லை. அவன் இன்டெர்வியூவிற்கு கூட தனியா தான் போய்ட்டு வந்தான். இப்போ பார்க்கிறானே வேலை, இது கூட அவன் காலேஜ் ஃபீஸ் கட்டத்தான். முதலில் அம்மா ஃபீஸ் கட்டினாங்க. அப்பாக்கு இஷ்டமில்லைன்னு தெரிஞ்சு அவனே தனியா வேலையை தேடி அதிலிருந்து தான் இப்போ அவன் செலவை பார்த்துக்கறது எல்லாமே. அப்பாவுக்கு இதில் எல்லாம் பெருமை தான். இருந்தாலும் தனக்கு அப்புறம் யார் கம்பனியை பார்த்துப்பாங்கன்னு கவலை” என்று கீர்த்தி முடிக்க, யோசனையில் ஆழ்ந்தாள் மகிழ்.

அவளுக்கு இருவர் பக்கமும் நியாயம் இருப்பதாகப்பட்டது. இதனைப் பற்றி புகழிடம் பேச வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். அதற்கான நாள் விரைவிலேயே வந்தது.

*****

அன்றும் இரவு இருவரும் பேசிக்கொண்டிருக்க, இருவரது படிப்பைப் பற்றியும் பேச்சு திரும்ப, அவனிடம் கேட்டேவிட்டாள் மகிழ்.

“உங்க வீட்டில் பிசினஸ் செய்யறாங்கன்னு சொன்னீங்க. நீங்க ஏன் மேனேஜ்மெண்ட் படிக்காம ஆர்க்கிடெக்சர் படிக்கறீங்க?”

“எனக்கு பிசினஸில் இஷ்டமில்லை”

“ஒ.. உங்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?”

“முன்ன இல்ல, இப்போ கொஞ்சம் ஒகேங்கற மாதிரி இருக்காங்க”

“அப்போ, பிசினஸ் யாரு பார்க்கறாங்கா?”

“அப்பா மட்டும் தான் பார்க்கறார்”

“அப்பாவுக்கு இப்போ எவ்வளவு வயசாகுது?”

“50க்கும் மேல ஆச்சு”

“அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கனும்ல. அதுக்காக தானே உங்க அப்பா உங்கள படிக்க சொன்னாரு? அவரு கஷ்டப்பட்டு வளர்த்தது தனக்கு பிறகு தன் பையன் பார்த்துப்பான்ங்கற நம்பிக்கைல அவர் இருந்துருப்பாரு. அதை இப்படி…” என்று அவள் இழுக்க,

“அவருக்காக நான் வாழ்ந்தா நான் வாழ நினைக்கிற வாழ்க்கையை எப்போ வாழ்றது? கனவுலயா?” என்று நக்கலாக கேட்டான் புகழ், தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று காட்டி.

“சேச்சே! நான் அப்படி சொல்லல. உங்க விருப்பமும் நிறைவேற, அவங்க விருப்பமும் நிறைவேற வழி இருக்கும். அதை பார்க்கலாமே! இப்போ நம்ம விருப்பம் பெருசா இருக்கலாம். பிறகு என்னைக்காவது அவங்க சொல்றதை கேட்காம இருந்துட்டோமேன்னு யோசிக்கக் கூடாது இல்லையா? கொஞ்சம் யோசிங்களேன்! எனக்காக!” என்று அவள் கேட்க, அரைமனதாக சம்மதித்திருந்தான் புகழ்.

புகழ் மற்றவர்களுக்காக எதுவும் செய்வான், அது அவன் விருப்பத்தை அல்லது அவன் சம்பந்தப்பட்டதை பாதிக்காதவரையில். இங்கு அவன் அறியாமலேயே அவனை மாற்றிக்கொண்டிருந்தாள் மகிழ். அவனுக்கும் அதுதான் விருப்பமோ என்னவோ!

*****

“ஹாய் கீது!!!” என்று ஒரு பதின்ம வயது பெண் தன் கைப்பையை வாசலிலேயே போட்டுவிட்டு ஓடிவந்து கீர்த்தியை கட்டிக்கொள்ள,

“ஹாய் சின்னு!” என்று தானும் அவளை கட்டிக்கொண்டாள் கீர்த்தி.

இவர்கள் அருகில் நின்ற மகிழைக் கண்டு சிநேகமாய் புன்னகைத்த சின்னு என்ற அந்த பெண், “அத்தை, நான் வந்துட்டேன்!” என்றவாறு சமையலறைக்குள் ஓட,

“ஏய்… வாலு, பாத்து போ! வந்ததும் வராததுமா கீழ விழுந்துறாத!” என்றவாறு வண்டியை நிறுத்திவிட்டு வந்தார் கீர்த்தியின் தந்தை.

“நீங்க என்ன சொன்னாலும் அவ இன்னைக்கும் நாளைக்கும் தரைல நடக்க மாட்டாப்பா… ஏன்னா, அவ ஃபேவரைட் தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருவானே!” என்ற கீர்த்தி அப்போது தான் ‘பேபே’ என்று முழித்துக்கொண்டிருக்கும் மகிழைக் காண,

“டீ… என்னடி?” என்று கேட்க,

“யாரோ வந்தாங்களே! இப்போ என்ன ஆள காணோம்!” என்று கேட்டாள்.

“ஓ… அந்த புயலா? அது கிட்சன்ல கேரட் சாப்பிட்டுட்டு இருக்கும். நீ வா, நாம போகலாம். நான் வேற நாளைக்கு லீவ். சோ, எனக்கு நீ தான் நோட்ஸ் எல்லாம் தரனும்” என்று சொல்ல, (யாரும் கல்லைக் கொண்டு அடிக்காதீங்கப்பா! ஏதோ ஃப்லோல எழுதிட்டேன். பொறுத்தருள்க!)

“ஏன்டி லீவ்?” என்று கேட்டாள் மகிழ். மற்றது எல்லாம் பின்னுக்கு போயிற்று அவளுக்கு. தன் உயிர்த்தோழி இல்லாமல் முழுதாக ஒரு நாளை கடத்த வேண்டும் என்று நினைக்கையிலேயே அவள் மனம் என்ன சொல்லி மட்டமடிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டது.

“நாளைக்கு ஈச்சனாரி கோவிலுக்கு போகனும்டி. அதனால தான் நான் நாளைக்கு ஸ்கூல்க்கு வர மாட்டேன். அண்ணா விடியறதுக்குள்ள வீட்டுக்கு வந்துருவான். காலைல கோவிலுக்கு போய் அவன் பேர்ல அர்ச்சனை பண்ணனும்”

“என்ன? உன் அண்ணா வர்றாங்களா?” என்று சத்தமாக கீர்த்தியிடம் கேட்டவள், ‘என்கிட்ட சொல்லவே இல்லையே!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

“ஆமாம். அவனுக்கு நாளைக்கு பிறந்தநாள். அவனோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு போறது எங்க வழக்கம். அதற்காக தான் சின்னு வந்திருக்கா” என்றாள் கீர்த்தி.

“டி… சின்னு யாருடி?” என்று கேட்டாள் மகிழ். அவன் பிறந்தநாளுக்காக ஏன் மெனக்கெட்டு இந்தப்பெண்ணை அழைத்து வரவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

“அப்பாவோட ஃப்ரெண்ட் பொண்ணு. அவங்க அப்பாவும் அம்மாவும் ஆக்ஸிடெண்ட்ல இறக்கவும், பெற்றோர் இருவரும் காதல்திருமணம்ங்கறதால அவ சொந்தக்காரங்க ஏத்துக்கல. அப்பா தான் கார்டியன் அவளுக்கு” என்றவள், மகிழ் சிறிது ஆசுவாசப்படுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள்.

“அப்பா ஏதோ அவளை மருமகளாக்கிக்கறேன்னு அவர் ஃப்ரெண்டுக்கு வாக்கு கொடுத்திருப்பாரு போல. அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்கும்போது கேட்டேன். இதுவரைக்கும் அண்ணாக்கு அப்படி எதுவும் இவங்க சொன்ன மாதிரி தெரியல” என்றவள், தன் தோழி சிலையாய் மாறி நெடுநேரமாயிற்று என்பதை உணராமல், “அவனும் இதற்கு கண்டிப்பா ஒத்துப்பான், ஏன்னா அவனுக்கு சின்னுன்னா ரொம்ப இஷ்டம்” என்றுவிட்டு தானும் கிட்சனுள் சென்றாள்.

ஹாலிலேயே வேறூன்றி நின்றிருந்த மகிழின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.


ஏதாவது தவறிருந்தால் சொல்லுங்கப்பா! திருத்த வசதியாக இருக்கும்...
 

banumathi jayaraman

Well-Known Member
நிறைய இடைவெளி விழுவதால் இந்த ஸ்டோரி படிக்கும் ஆவல் குறைகிறது, லேகா டியர்
கதையை முழுவதும் எழுதி முடித்து விட்டு தொடர்ந்து அப்டேட் கொடுக்கலாமே
இது ஒரு ஆலோசனைதான்
ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம்
 

Deephi

Active Member
Story super than gape athiga neenga edukkarathunala before update ellam again padikkanum polathan irukku. Kobikkama weekly two update avathu potinganna nalla irukkum.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top