உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01

Advertisement

eanandhi

Well-Known Member
வணக்கம் ப்ரெண்ட்ஸ்....

இதோ, இக்கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.

View attachment 4956

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01


திருச்சி

கௌசல்யா சுப்ரஜா ராம​

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே​

உத்திஷ்ட நர ஸார்தூல​

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்​

என்று அந்த வீட்டில் அதிகாலை வேளையில் ஒரு தேன்குரல் ஒலிக்க, (அது நம்ம ஹீரோயின்னு நீங்க நெனைச்சா, வெரி சாரி! அவங்க அம்மா!) அதில் துயில் கலைந்து எழுந்தவள் முகத்தில் சிறு புன்னகை. தாயின் இந்த குரலில் விழிப்பது அவளுக்கு அப்படி ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும். அன்றும் அதே மகிழ்வுடன் தன் தினசரி வேலைகளை தொடங்கலானாள் அகமகிழ்தினி. பின்னே, மாதத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பல்லவா இது!

அகமகிழ்தினி, இருபத்தி நான்கு வயது மங்கை, கோதுமை நிறம், ஐந்தே கால் அடி உயரம், ஒல்லியான உடல்வாகு என நடிகை சாய் பல்லவியை ஒத்திருப்பாள். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை, அதனை விட தன் மனம் நிறையுமாறு என்றும் மகிழ்வுடன் பார்த்துக்கொள்ளும் தாய் தந்தையருக்கு ஒற்றை மகளாய் பிறந்து அவர்களது உலகமாய் இருப்பவள். தான் மகிழ்ச்சியாக இருப்பதே அவர்களுக்கு ஒரே லட்சியம் என்று நன்கு தெரிந்து வைத்திருப்பவள்; அதனாலேயே, எத்தனை துக்கங்கள் இருந்தாலும் அதனை தன்னுள் பதுக்கிக் கொள்பவள், தற்போது அவர்களை ஒரு பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டிருந்தாள். இருந்தாலும், மகளின் மனம் புரிந்த அந்த பெற்றோரும் அவளை எதுவும் கேட்காமல் அவள் வழியிலேயே சில காலம் செல்லட்டும் என்று விட்டிருந்தனர். அவர்கள் எவ்வாறு அறிவர், பெற்றோருக்குத் தெரியாமல் அவள் தனக்குள் கொண்டுள்ள ரகசியங்களைப் பற்றி?

ராஜசேகரன்-பத்மா இருவரும்தான் மகிழின் பெற்றோர். திருச்சியின் BHEL நிறுவனத்தில் வெகுகாலம் பணியாற்றுபவர் ராஜசேகர். பத்மாவும் அங்கு இருந்த ஒரு பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் தமிழ் மீது இருக்கும் பற்றே தங்கள் மகளுக்கு தமிழ் பெயரை வைக்கத் தூண்டியது. தங்கள் மகள் என்றும் மகிழ்வுடனேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவரும் தேடி வைத்த பெயர் இது.

மகிழ், வார விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். சென்னையில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பயணிப்பவள் இங்கே வந்தால் தான் சிறிதேனும் நிதானித்து நடப்பாள். அதற்காகவே பத்மா அவள் இங்கே இருந்தால் எந்த வேலையும் சொல்வதில்லை. மகள் இரண்டு நாட்களேனும் எந்த தொந்திரவும் இல்லாமல் இருக்கட்டுமே என்ற எண்ணம். ஆனால், மகிழ் அவ்வாறெல்லாம் விட்டுவிட மாட்டாள். ‘நீயே நாள் பூரா ஓடி வந்துருக்க. இங்கேயும் ஏன் வேலை செய்யுற?’ என்று கேட்கும் தாயிடம், ‘நீங்க தான எப்பவும் செய்யறீங்க? ஒரு நாள் நான் செய்யுறதால ஒன்னும் ஆகாது’ என்று கூறி அடக்கிவிடுவாள்.

இன்றும் அதேபோல குளித்து தயாராகி வந்தவள், தாய் பூஜையறையில் இருப்பதைப் பார்த்து தானே மூவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள். தற்போது எல்லாம் ராஜசேகர் காபி, டீ போன்றவற்றை வெகுவாக குறைத்துவிட்டார். அவருக்காகவே காபிபிரியையான பத்மாவும் தான் குடிக்கும் அளவையும் எண்ணிக்கையையும் குறைக்க, மகிழ் கூட கிண்டலடித்திருந்தாள், காவியக் காதல் போல காபிக் காதல் என்று. இருந்தாலும், அவள் வரும் வேலைகளில் இருவருமே அவள் கைகளில் செய்த காபியை மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால், அவள் செய்பவை அனைத்திலும் தனி சுவை இருக்கும். இதனை அறிந்த மகிழும், தாயை சமையல் செய்ய விட மாட்டாள், அவள் வீட்டிற்கு வரும் நாட்களில்.

“குட் மார்னிங்ப்பா” என்றவாறு நாளிதழ் வாசித்த தந்தையின் முன் கோப்பையை நீட்டியவளிடம் தானும் குட் மார்னிங் சொல்லி பெற்றுக்கொண்டு ஒரு மிடறு விழுங்கியவர், “சூப்பர்டா குட்டிமா… உன் அம்மாவும் தான் இத்தனை வருஷமா காபி கலக்குறா… ஆனா, உன்னை மாதிரி வர்றதே இல்லடா… உன் கைமணமே தனி!” என்றவர் கூறவும், “அதை அப்படியே பின்னாடி திரும்பி இன்னொரு முறை சொல்லுங்கப்பா!” என்று வாயில் கையை வைத்து சிரித்தவாறே அவள் கூற, மகிழின் செய்கையிலேயே பின்னால் திரும்பாமலே அங்கு யார் இருப்பது என்று தெரிந்துவிட, திரும்பியவருக்கு இடுப்பில் கை வைத்து அவரை முறைத்தவாறு தரிசனம் தந்தார் அவர் மனைவி.

“இப்போதான் நல்ல சாப்பாடு சாப்புடறீங்களா? உங்க மக இருக்காங்கற தைரியம்ல… இரண்டு நாள் கழித்து பத்து, இது செய்து கொடு, அது செய்து கொடுன்னு வருவீங்கள்ள, அப்போ இருக்கு” என்று அவர் உள்ளே செல்ல, அவரை சமாதானப்படுத்த தானும் பின் சென்றார் ராஜசேகரன்.

இருவரின் செல்ல சண்டையை ரசித்தவள், தந்தை அமர்ந்த நாட்காலியிலேயே அமர்ந்து காபியை பருகலானாள். அவள் மனமோ, தந்தை சொல்லிச் சென்றவற்றையே நினைத்திருந்தது. அவள் தந்தை கூறுவதும் உண்மைதான். மகிழ் அருமையாக சமைப்பாள். ஒவ்வொன்றும் அவள் ரசித்து ரசித்து கற்றுக்கொண்ட உணவு வகைகள். அவள் தாயின் செய்முறையும் அவள் முறையும் வெகுவாக மாறுபடும். சில சமயம், பத்மா கூட கேட்பதுண்டு. ‘இப்படி நான் சமைக்க மாட்டேனே! நீ எங்கே இருந்து கத்துக்கிட்ட’ என்று. ஒரு சிறு புன்னகையுடன் நகர்ந்து விடுவாள் மகிழ்.

அதிலிருந்து வேறு சில சம்பவங்கள் நினைவிற்கு வர, நினையாதே மனமே! நினையாதே! என்று தன்னைத் தானே நிதானப்படுத்திக்கொண்டவள், எங்கேனும் வெளியில் சென்றால் நலம் என்று தோன்ற, தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பலானாள்.

*****

மலைக்கோட்டை

திருச்சியில் அவளுக்கு மிகவும் பிடித்த இடம். மனம் கவலையில் இருக்கும்போதெல்லாம் மலையின்மேல் இருக்கும் யானை முகத்தானே அவளுக்கு துணை. அவரை தரிசித்துவிட்டு அங்கே நின்று திருச்சியை பார்த்து சிறிது நேரம் நின்றாலே அவள் துயர் எல்லாம் அகல்வது போல இருக்கும். அன்றும் அதேபோல் விநாயகரை தரிசித்து அங்கே இருந்து தெரிந்த ஸ்ரீரங்கத்து கோபுரத்தை பார்த்து நின்றாள்.

இன்று ஏனோ அவள் காலையில் எழுந்ததில் இருந்தே அவன் நியாபகம் அதிகமாக இருந்தது அவளுக்கு. ஏதோ நடக்கப்போவதாக அவள் உள்மனம் உணர்த்திக்கொண்டிருந்தது. என்றுமே அவள் பிரார்த்தனையில் கலந்திருப்பவன்தான். ஆனால், மற்றைய நாள் போல் அல்லாது, இன்று அவனுக்காக இன்னும் பிரார்த்தித்தாள் மகிழ்.

எவ்வளவு நேரம் அங்கே இருந்தாலோ, மணி நான்கு என்று அவள் கைப்பேசியில் தாய் அழைக்கவும், விரைவில் வருவதாக உரைத்தவள், பிள்ளையாரை வணங்கிவிட்டு வீட்டிற்கு சென்றாள் மகிழ்.

இரண்டு நாட்கள் தாய் தந்தையுடன் நன்றாக பொழுதை கழித்தவள், ஞாயிறன்று இரவு வீட்டை விட்டு செல்லும் துக்கம் சிறிது இருக்க, அதனை காட்டினால் வருத்தப்படுவார்கள் என்று இருவரிடமும் காட்டாமல் சிரிப்புடன் விடைபெற்று வந்திருந்தாள்.

****

“அடடே! சேகரா! எப்படி இருக்க? உன் பொண்ணா இது? எப்படிம்மா இருக்க?”

பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தபோது எதிர்பட்ட ஒருவர் கேட்க, அவருக்கு பதிலளித்தவர்கள், சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றனர்.

அந்த நபர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் புன்னகையுடன் பதிலளித்து அதே புன்னகை மாறாமல் தன்னை வழியனுப்ப காத்திருந்த தந்தையின் முகத்தில் தெரியும் சிறு சோகரேகையை துடைக்கும் வழி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அவள் அவர் முகத்தையே பார்த்திருக்க, “என்னடாம்மா?” என்று கேட்ட தந்தையிடம், “ஒன்றுமில்லைப்பா” என்று சாலையை நோக்க, சிறிது நேரத்திலேயே அவள் செல்ல வேண்டிய பேருந்து வர, தந்தையிடன் விடைபெற்று ஏறிக்கொண்டாள்.

தானும் துன்பப்பட்டு அவர்களையும் வருத்தி, எதற்கு இந்த வாழ்க்கை! என்ற ஒரு எண்ணம் கூட எழுந்தது அவளுக்கு. அதே நேரம், தன்மீது வருத்தம் இருந்தும் அதனை சிறிதும் காட்டிக்கொள்ளாத தாய்-தந்தையரை நினைத்து சிறிது கர்வம் கொண்டது அவள் உள்ளம்.

சீக்கிரமா அவர்கள் துயர் தீர்க்க ஒரு வழி காட்டு ஆண்டவா! என்று வேண்டிக்கொண்டாள் மகிழ்.

*****

கோவை

“டே… நில்லுடா!” என்று தன் அண்ணனை துரத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஓடிக்கொண்டிருந்தான் அவள் துரத்துபவன்.

“நானு… நானு…” என்று இவர்கள் இருவரின் பின்னும் தத்தித் தாவியவாறு சென்றது ஒரு வாண்டு.

இவர்களது சத்தத்தை சமையலறையில் இருந்து கேட்ட ராதை, ஹாலிற்கு வந்து, “என்ன நடக்குது இங்கே?” என்று ஒரு அதட்டல் போட, ஓடிக்கொண்டிருந்தவன் சடன் ஹால்ட்.

அவனை துரத்தியவளுக்கும் அந்த குரல் கேட்டாலும், தன் முன்னால் நிற்கும் நெடியவனே முக்கியமெனப் பட, அவன் தலையில் தன் கையில் இருக்கும் போத்திலில் இருந்து தண்ணீரை ஊற்றியவள் ஆர்ப்பரிக்கலானாள்.

அவள் பின் வந்த அந்த வாண்டும், “ஐ… மாமா அவுட், மாமா அவுட்” என்று குதுகலித்து தன் முன்னே மண்டியிட்ட சித்தியுடன் ஹை-ஃபை கொடுத்துக்கொண்டது.

இவை அனைத்தையும் கண்ட ராதைக்கு முகத்தில் இருந்த ஈரத்தை வழித்தவாறு நின்ற மகனைக் கண்டு சிரிப்பு வர, தான் சிரித்தால் மகள் மேலும் ஏதேனும் வம்பிழுப்பாள் என்று அதனை அடக்கியவர், “காலங்கார்த்தால இப்படிதான் உன் அண்ணனை வம்பிழுப்பியா? எப்படி தண்ணீர் சொட்ட சொட்ட நிற்கிறான் பாரு. எதுவும் வேலை இல்லையென்றால் என்னுடன் வா கீர்த்தி!” என்றுவிட்டு உள்ளே போக, அன்னையிடம் திட்டு வாங்க வைத்த அண்ணனை முறைக்கலானாள்.

“பாருண்ணா இந்த அம்மாவை! உன் தலைல இருந்து மட்டும் தண்ணீர் வழியுதாம். என் தலையில் என்ன பன்னீரா வழியுது? என்னை கண்டுக்கவே இல்லை இந்த ஹிட்லர்!” என்று தான் காலையில் ஆறு மணியாகியும் எழாததால் தன் தலையில் தண்ணீர் ஊற்றிய அண்ணனிடமே புகார் வாசித்தாள் கீர்த்தி.

“ஹே வாலு! ஆறு மணிக்கு மேல தூங்குனா அப்பா திட்டுவாரு. நம்ம தங்கை திட்டு வாங்க கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல எழுப்பினால், நீ என்னை முறைக்கிற” என்றான்.

அப்பொழுது சரியாக ஏழு மணியடிக்க, பதறியடித்து அண்ணனை விட்டுவிட்டு தன்னறை நோக்கி ஓடினாள் கீர்த்தி. அப்பா வரும்முன்பு தயாராகாவிட்டால் அவரிடம் யார் மண்டகப்படி வாங்குவது?

தன் தங்கையின் செயலில் சிரித்தவன், அங்கேயே நின்றுகொண்டிருந்த தன் மூத்த அக்காவின் பெண்ணை காண, அவளும் மாமனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன செல்லம்? எதுக்கு மாமாவை முறைக்குறீங்க?” என்று அவன் அவளிடம் கேடக,

“போங்க மாமா! சித்தி மட்டும் உங்க தலையில் தண்ணீர் ஊத்தி குளிப்பாட்டுனாங்க. நான் செய்யவே இல்ல” என்று உதட்டை பிதுக்கிய அந்த சின்னன்சிறு பூஞ்சிட்டிடம் தங்கை வைத்துவிட்டு சென்ற மீதி பாட்டிலை அளித்து அவளுக்கு வாகாக குனிந்து நின்றான் அவன்.

மாமனின் செய்கையைக் கண்டு மகிழ்ந்த வான்மதியோ, அவன் தலையில் எஞ்சியிருந்தவற்றை கவிழ்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் அதனை உரைக்க பாட்டியை நோக்கி விரைந்தாள்.

“ஹே! பார்த்துடா!” என்று பதறியவன், அவள் கண்விட்டு மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றான்.

தன் அறைக்கு சென்று குளித்து தயாராகி கீழே வந்தவன் அனைவருடனும் உணவருந்திவிட்டு வெளியேறினான்.

அதுவரை இருந்த இலகுத்தன்மை அவ்வீட்டின் வாசலை தாண்டியவுடன் காணாமல் போக, அங்கே நின்றிருந்த தன் காரினை எடுத்துக்கொண்டு அலுவலகம் விரைந்தான் புகழேந்தி தமிழ்வேந்தன்.



முதல் அத்தியாயம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.... அண்ட், இந்த அளவு ஒவ்வொரு பார்ட்டும் போதுமா என்றும் சொல்லுங்கப்பா...

தேங்க் யூ!

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்!
super iruku sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top