உன்னாலே... நான் பெண்ணானேனே 6

varshakavin

Well-Known Member
#1
அத்தியாயம் 6

பெரிய கேட்டைத் தாண்டி போர்டிக்கோவில் காரை நிறுத்தியது தான் தாமதம் ,இறங்கி வீட்டினுள் ஓடியவளைக் கண்ட விஜய்க்கு ஆச்சரியமாகியது … குழந்தையாகப் பார்த்தவளை குழந்தையின் தாயாகப் பார்ப்பதுதான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம். அவள் மேல் அன்பு பெருகியது.இறங்கியவன் அவனும் அவள் பின்னேயேப் போக , அவன் கண்டது , கட்டிலில் கொசுவலைக் கூண்டில் உறங்கும் மகனின் தலையை கோதிக் கொண்டே ,

" பத்துமா… பால் சாப்பிட்டாரா … என்னையத் தேடுனாரா… "

"தமிழ் மா .. அவர் கொஞ்சம் தேடுனார் தான் …" என்ற பத்மாவை இடைமறித்த பாட்டி ,

"தாயி உன்னையத் தேடாம இருப்பாரா… நாங்க ரொம்ப அழாமப் பார்த்துக்கிட்டோம்..."

"அப்போ அழுதாரா … "அவளுக்கும் அழுகை வந்திடுமோ என்றக் குரலில் கேட்க , அவளருகில் வந்தவன் ,

"அவர தைரியமா வளர விடு … எப்பவும் கைலயே அடக்கி வைக்கக் கூடாது … இதுக்கே இப்படினா இன்னும் ஆறுமாசம் கழிச்சு அவருக்கு ஒரு வயசு ஆனதும் உன்னைய ஆஃபிஸ்க்கு அழைச்சிட்டுப் போறதா இருக்கேன் …அப்ப என்ன செய்வ … "

அவள் தான் இப்போது அழுதாளா என்று சந்தேகம் கொள்ளும்படியாக புடவை முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டே எழுந்தவள் ,

" என்னைக் கேக்காம எப்படி நீ முடிவெடுக்கலாம் … உன்னை … " என்று அவன் அருகில் வந்தவளை,

"தாயி ....." என்ற பாட்டியின் சத்தமான குரலில் , அப்படியே நின்றவளிடம் ,

" தாயி இப்படிப் பேசாதனு சொல்லிருக்கேன்ல… "

குழந்தையை உறக்கம் கலையாவண்ணம் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவுடன் , பாட்டி விஜயிடம் சமாதானம் சொல்ல முயல ,

"கிழவி அவ என்னைய திட்டுனா திட்டிட்டுப் போறா… ஏன் என் பொண்டாட்டி என்னைய உதைக்கக் கூட செய்வா … நீங்க எப்படி அவள திட்டலாம் …."

பேரனின் வார்த்தையில் மகிழ்ந்தவர் , " பத்தூ….எம்பேத்தி ஒரு நாள் சீலைய கட்டிட்டு போயே என் பேரன முந்தானைல முடிஞ்சிக்கிட்டாப் போலவே … இனி இந்தக் கிழவி என்னப் பேசப் போறேன்…" என்றவர் அவனருகில் வந்து ,

"எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு ராசா... நீ உன் பொஞ்சாதியப் புரிஞ்சுக்கிட்டாப் போதும்.... போ போய் அவள சமாதானப்படுத்து … "

"பாட்டி .... நான் … " என்றவனிடம் , "எனக்குப் புரியும் நீ முதல்ல அவளைப் பாரு"

"தேங்க்யூ பாட்டி" என்று கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றவனிடம் ,

"போய் எம்பேத்திக்கு கொடு …."

முறுவலித்துக் கொண்டே அவர்களது அறைக்குச் செல்ல , மகனைத் தொட்டியில் வசதியாகப் படுக்க வைத்துவிட்டு , சேலையைக் கூட மாற்றாது கட்டிலில் படுத்திருந்தவளை தான் பார்த்தான். அணிந்திருந்த கோட்டை அமைதியாக கழட்டியவன், டீ ஷர்டையும் கழட்டி விட்டு துண்டை எடுக்க திரும்ப , இறுக்கமாக கண்களை மூடியிருந்தவளைப் பார்க்க சிரிப்பு வந்தது.

குளியலறைக் கதவு மூடப்படும் சத்தம் கேட்கவும் கண்களைத் திறந்தவள் வேகமாக எழுந்து பாத்ரூம் கதவின் வெளிப்புறம் தாழ் போட்டுவிட்டு , புடவையில் இருந்த பின்னை கழட்டிக் கொண்டே திரும்ப , அவள் முன் வெற்றுடம்பில் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு கைகட்டி ,

"நான் உள்ள இருக்கேன்னு நினைச்சு தான இவ்வளவு வேகமாக லாக் பண்ணிட்டு வர்ற …. நான் இங்க தான் இருக்கேன்..."

"ஃபிராடு ...வேணும்னு தானே இப்படி பண்ற..."

"கரெக்ட்டா சொல்லிட்ட … நீ வேணும்னு தான் இப்படி பண்றேன் . " என்றவன் , அவனது தோளில் கிடந்ததுண்டை இரு கையால் பிடித்து அவள் முதுகுப்புறம் போட்டு அவளை அருகிலுக்க, பொத்தென்று அவன் நெஞ்சில் மோதியவளை இடைபிடித்துக் கொண்டான்.

மேனி சிலிர்க்க அவனை ஏறிட்டவள் , எதுவும் பேசாது அவனிடமிருந்து விடுபட முயல ,

"நீ வாய் திறந்து விடுங்கனு சொல்லு விடுறேன்.... " என்றவனை முறைத்தவள் மறுபடியும் தள்ள முயல , அவள் சேலையிலிருந்த ஊக்கை கழற்றி இருந்ததால் அது ஒரு புறம் நழுவி அவன் கண்களுக்கு விருந்தளிக்க தயாராக ,

புன்னகைத்தவன் , " நான் இப்போ உன்னை பட்டுனு விட்டேன்னா … இந்த பட்டுபுடவை பட்டு மேனிலருந்து பட்டுனு விழுந்துரும் பரவாயில்லையா...." என கண்களால் அவள் புடவையைக் காட்டிச் சொல்ல ,

தன்னைக் குனிந்துப் பார்த்தவள், திடுக்கிட்டு அவனைத் தள்ளுவதை விட்டு புடவையைப் பிடித்துக் கொண்டு ,

"என்னைய விடு.. விடுங்க …. நான் டிரஸ் சேன்ஜ் பண்ணனும".

மெல்ல கையை எடுத்தவனிடமிருந்து விடுபட்டு. தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறையில் புகுந்துக் கொண்டாள். அவள் வந்ததும் அவனும் குளித்து உடை மாற்றி அவள் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டவன் ,

"நீ விரும்பினாதான் ஆஃபிஸ் கூட்டிட்டுப் போவேன் . உனக்கேத் தெரியும் நமக்கு எத்தனை பிஸ்னஸ் இருக்குனு தனியா இத்தனை நாள் சமாளிச்சது போல சமாளிச்சுருவேன்… நீயும் அது சம்பந்தமா படிச்சுட்டு உங்கப்பா பிஸ்னஸ் பார்ப்பேன்னு சொன்ன ஞாபகம் அதுதான் சொன்னேன்.... இனி உன் இஷ்டம் ..." என்றவன் அதற்கு மேல் பேசவில்லை படுத்துறங்கி விட்டான்.

தமிழ் தான் உறங்காமல் விழித்துக் கிடந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எப்போதோ சொன்ன ஒன்றை இன்றும் ஞாபகத்தில் வைத்துச் சொல்கிறானே என்பதாக .... அவளுக்கு அந்நாளின் ஞாபகம் வந்து முகத்தில் புன்னகை மலர .., அப்படியே உறங்கிவிட்டாள்.

அவன் பெண் பார்க்க அவர்கள் ஊருக்கு வருகையில் அவளுக்கு பன்னிரெண்டாம் தேர்வு முடிந்திருந்த சமயம்… அவர்கள் வீட்டின் முன் ஓர் வெளிநாட்டுக் கார் நிற்க அதன் அழகில் லயித்தவள் அதனருகே நடந்து வந்தாள்.பக்கத்து வீட்டு சிறுமி ஒருவளோடு கை நிறைய பனங்காய்களோடு வந்தவள்,

"ஏய் கம்மலு என்னடி எங்க வீட்டு முன்னாடி ஆடி நிக்குது .... எங்கப்பாட்ட காசு இருக்குனு தான் பேரு … இப்படி கார் வாங்கி செலவழிக்க மாட்டாரே … "

"அதானடி மாமா மாட்டு வண்டி வாங்காம ஜீப் வாங்குனதே பெரிய விஷயம் …" என்று கம்மலு என்றழைக்கப்பட்ட கமலா சொல்ல ,

"ஏட்டி எங்கப்பாவ நான் சொல்லுவேன் நீ எப்படி சொல்லலாம் ...."

"எம்மா தாயே என்னை விட்ரு …தெரியாம பேசிட்டேன.. "

"ஆன்… அது…சரி வா யாருனு பாப்போம்..." இவர்கள் அருகில் செல்லுகையில் காரிலிருந்து உயரமாக ஒல்லியாக ஒரு இளைஞன் இறங்கி , கண்ணிலிருந்த கூலர்ஸைக் கழற்றி டீ ஷர்டில் செருகிக் கொண்டே வயதான ஒரு பெண்மணி கைப் பிடித்து இறக்கிக் கொண்டிருந்தான் .

"யார் டி இது நம்ம ஊர் பனை மரத்தையும் விட உயரமா இருப்பான் போல….. "

"ஆமாம்டி "

இவர்கள் நெருங்குகையில் , "என்ன ஊர் கிழவி இது… ஒரே பனை மரமா இருக்கு … இங்க தான் பொண்ணு எடுக்கணும் … அதுவும் கார் ஸ்பேர் பார்ட்ஸ் செய்ற ஃபேக்டரி வச்சிருக்க நமக்கு கருப்பட்டி செய்றவர் பொண்ணுதான் வேணும்னு அடம் பண்ணி கூப்பிட்டுட்டு வந்துட்டீங்க.... " என அவன் பேசப் பேச இங்கு தமிழ் மே மாத வெயிலைப் போல் அவனைப் பார்வையால் சுட்டெரித்ததோடு அல்லாமல் கையில் என்ன கிடைக்கும் அவனை அடிக்க என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அதற்கேற்றாற் போல் அங்கு ஓரமாக கிடந்த சாணக் குவியலைக் கண்டவள் ,அடுத்து அவன் பேசிய பேச்சைக் கேட்டதும் அதையே கையில் அள்ளி அவன் மீது வீசத் தயாராக நின்றாள்.