உன்னாலே... நான் பெண்ணானேனே 3

varshakavin

Well-Known Member
#1
அத்தியாயம் 3

வேகமாக எழுந்து வாஷ் பேசின் அருகே இருந்த கண்ணாடியைச் சென்றுப் பார்க்க, கீழ் உதடு வீங்கி அவனது பற்தடங்கள் உதட்டின் வெளியேயும் தெரிந்தது. இப்பொழுது அழுகைக்கு பதில் கோபம் பெருகி , முகத்தை நன்கு கழுவி, வாயையும் நன்கு கழுவினாள்.

"அந்த எவரெஸ்ட் கடிச்சு வச்சுட்டுப் போயிருக்கு … இந்தப் பாட்டி என்னவோ அவன் உருகி உருகி முத்தம் கொடுத்த ரேன்ஜ்ல டயலாக் விட்டுட்டுப் போறாங்க … இரு உன்னைய என்ன செய்றேன் பார்... "

அன்று இரவு பாட்டி உறங்கும் வரை விஜயின் அறையில் இருந்தவள் , மெல்ல கீழே வந்து முதல் நாள் தங்கிய அறையை திறக்க முயன்றவளுக்குக் கதவைத் திறக்கவே முடியவில்லை… அது சாவிக்கொண்டுப் பூட்டப்பட்டு இருக்கும் போல , விஜயின் அறையைத் தவிர மற்ற அறைகளை திறக்க முடியாதபடி செய்யப்பட்டு இருந்தது .இது பாட்டியின் வேலை தான் என்பதைப் புரிந்துக் கொண்டவளுக்கு , கோபம் இயலாமை எல்லாம் சேர்ந்து மறுபடியும் அழுகை வரப் பார்க்க , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் விஜய் அறைக்கே சென்று , நேற்றுப் போலல்லாது சில்லென்று இருந்த அந்த மார்பிள் தரையில் ஒரு போர்வை விரித்து அதில் படுத்துக் கொண்டாள்.

அவன் வந்ததும்தெரியாது … அவன் வந்த போது குழந்தை விழித்து விளையாட, அவள் தயார் செய்து வைத்திருந்த பாலை புகட்டியதோ … அவள் மொபைலில் அடித்த அலாரத்தை நிறுத்தியதோ… கீழே படுத்திருந்தவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்ததோ…. எதுவும் அவளுக்குத் தெரியாது … அதிகாலையில் விழிப்பு வர , கண் திறக்க முயன்றவளுக்கு ஏதோ சுவற்றில் இடித்துக் கொண்டு உறங்குவது போல இருக்க விழித்தவள் அதிர்ந்தே விட்டாள் . விஜய் ஒருக்களித்துப் படுத்திருக்க , அவள் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டுப் படுத்திருந்தாள்.

வேகமாக எழுந்து கட்டிலை விட்டு இறங்கியவள் , குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். அவனை ஒட்டிக் கொண்டுப் படுத்ததை உணர்ந்திருப்பானோ என்று மனம் தடதடக்க யோசித்தவள் , " நான் கீழ தானப் படுத்தேன். எப்ப எந்திரிச்சு கட்டில்லப் படுத்தேன்… அடப்பாவி தூக்கியிருக்க என்னைய …. உன்னைய …."

அவன் எழுவதற்குள்ளாக குளியலறையிலயே உடை மாற்றி விட்டு வந்தவள் கீழே சென்று விட்டாள்.

இப்படியே பத்து நாட்கள் செல்ல … அந்தப் பத்து நாட்களும் அவன் வருவதற்கு முன்பே உறங்கி அவன் எழுவதற்குள்ளாக எழுவதுமாக இருந்தாள் … மொத்தத்தில் அவனை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தாள் எனலாம்.

இன்றும் அதிகாலையிலயே எழுந்து தயாராகி வரவும் அவளைக் கண்ட பாட்டி,

"தாயி நீ தயாராட்டியா ... போய்ட்டு வந்துட்டு சாயந்திரம் வீட்ல வச்சு சாமி முன்னாடி பேர வச்சுடுவோம்.தாயி புள்ளைக்கு பேர் என்ன வைக்கனு முடிவு பண்ணிட்டீங்களா …… "

"இ... இல்லையே பாட்டி ... அவங்க என்ன சொன்னாங்க...."

"எவங்க…." , "ம்.... உங்க பே…..ராண்டி.."

" அவன் என் பேராண்டிதான் … இப்ப உன் புருஷன் உன் புள்ளைக்கு தகப்பன் .. அவன இப்படி அவங்க இவங்கனு யாரோ போல பேசுறதையும் , அவன் இவன்னு மரியாதை இல்லாமலும் என் முன்னாடி பேசுறதையும் கொஞ்சம் குறைச்சிக்க தாயி… முன்ன நீ விசய் அத்தான்னு சொன்ன நியாபகம் … இப்ப அத்தான்னு சொல்லுமா ...."

பாட்டியின் மனம் புண்படுவது விரும்பாமல் … "ம் சரி… ஆனா பாட்டி நான் ஒன்னும் விசய் அத்தான்னு கூப்பிடல... " என்று உதட்டில் புன்னகையை அடக்கி கண்களில் அதை பிரதிபலித்தவளிடம் ,

"இல்லயே நீ அப்படித்தானேக் கூப்பிட்ட நியாபகம் " என்று யோசித்தவரிடம் ,

"நான் விஜய் அத்தான்னு தான் கூப்பிடுவேன் … விசய் அத்தான்னுக் கூப்பிடல … நீங்க சரியா சொல்லுங்க நான் அப்படிக் கூப்பிடுறேன்..." ,

"விசய் ... விசய் ... விசய் …போ தாயி வாய்க்குள்ளயே வர மாட்டிக்குது.… " என அவர் சொல்லிப் பார்த்த விதத்தில் அவளுக்கு எவ்வளவு அடக்கியும் சத்தமாக சிரிப்பு வந்து விட கலகலவென சிரித்தவளை வாஞ்சையுடன் பார்த்த பாட்டி ,
" நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இருப்பன்னா நான் தப்பாவே சொல்லிட்டுப் போறேன் தாயி.... அத்தான்னுக் கூப்பிடுப் போதும் … "பாட்டிக்காக தழைந்தவள் ,

"என் கிட்ட வம்பு பண்ணினா நான் உங்களுக்காகக் கூட மரியாதை தர மாட்டேன் ஆமா...."

"உன்கிட்ட வம்பு பண்ணாம யாருகிட்ட வம்பு பண்ண … சரி சரி கோவிச்சுக்காத போய் எழுப்பு .. நான் அவங்கிட்ட அன்னைக்கே சொன்னேன் … இன்னைக்கு செய்யலாம்னு … ஆனா அவன் தான் இப்பலாம் ரொம்ப நேரம் கழிச்சுவரதும்… காலையிலயே எழுந்து ஓடுறதுமா இருக்கான்.....பாவம் புள்ள ஒத்தையா இழுத்துக்கட்டி கஷ்டப்படுது..... எல்லாம் விதி …. சரி தாயி…என்ன முடிவு பண்ணி இருக்கான்னு கேட்கணும்.. என் கொள்ளுப் பேரனுக்காவது என் வாய்ல நுழையற மாதிரி பேர் வைங்க."

" நான் போய் எழுப்பணுமா… " என்று சிணுங்கியவளை ,

"நீதான் போகணும்.... இல்ல அவனுக்கு வேற பொண்டாட்டி இருக்காளா என்ன.... "

" ஆமா உங்க பேரன் பெரிய மன்மதராசா … நிறைய பொண்டாட்டி இருப்பாளுக ...." என்று கழுத்தை வெட்டியவள் … "ஞாபகம் வந்தவளாக… "பாட்டி...ஆமா …ஏன் எல்லா ரூமையும் பூட்டு போட்டு வச்சுருக்கீங்க… நானும் திறப்பீங்கனுப் பார்க்கிறேன். இத்தனை நாளாச்சு இன்னும் திறந்த மாதிரியில்ல .... "

"ம்... என் பேரன் மன்மதனே தோத்துப் போற அளவுக்கு வசியக்காரன். என் பேரன் அழகுல எம்சிஆர் மாதிரி தெரியுமா....."

"எம்சிஆர் னா ….எம்சிஆர் கம்பெனி வேட்டியா.... சரி உங்க பேரன் எப்படியும் இருக்கட்டும் .. ரூம்லாம் ஏன் பூட்டினீங்க"

"ஆத்தா உன்கிட்ட வாய் கொடுக்க எனக்கு முடியாது....ஒரு எலி உள்ள உள்ள பூந்துக்குது அது தான் .... அதனால அதெல்லாம் இப்ப திறக்க மாட்டேன் .. எப்ப திறக்கனுமோ அப்பதான் திறப்பேன்.."

"என்னையா எலினு சொல்றீங்க.... "

"இல்லயே நீ தான் அந்த எலியா அப்ப…"

"பாட் ..... டீ…." என்றுப் பல்லைக் கடித்தவள்,அவரை முறைத்துக் கொண்டும் , "சும்மா என்ன எல்லாரும் என் வாயவே சொல்லிட்டு இருங்க..." என்று முணுமுணுத்தவாறே ..மாடியேறினாள் . மெத்தையில் அவனருகில் கிடந்த தலையணையால் குப்புறப் படுத்திருந்தவனின் முதுகில் தட்ட , அவன் எழும்புவது போல் தெரியவில்லை என்றதும் , அருகில் சென்று ,

"எவரெஸ்ட் … எந்திரி பாட்டிக் கூப்பிடுறாங்க … "

அவனிடம் அசைவில்லை என்றதும் , அருகிலிருந்த பாட்டிலைத் திறந்தவள் அப்படியே அவன் முகத்தில் கவிழ்க்கப் போக ,

எந்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்தாளோ , அவன் மீது ஊற்றப் போன தண்ணீர் அவள் மீதே கவிழ்ந்ததோ தெரியவில்லை ,

அவளை வயிற்றோடு ஒரு கையால் அணைத்திருந்தவன் , " சுகரு….ஐயா ரொம்ப… உஷாரு.. தெரியுமா…"

ஒன்றும் பேசாமல் அவன் கையை எடுத்து விட்டவள், கட்டிலை விட்டு இறங்கி , உறக்கம் கலைந்துக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டே ,

"செல்லக்குட்டி … உங்கப்பாவ உங்க பெரிய பாட்டி உடனே வரச் சொன்னாங்கனு சொல்லுங்க" என்றவள் திரும்பிப் பாராது கீழேச் சென்று விட்டாள்.
அவன் என்னப் பேசினாலும் பதில் தருபவள் , இப்போது எல்லாம் அமைதியாகவே செல்லவும் , " இவள புரியவே மாட்டிக்குதே…." என்று புலம்பலோடு எழுந்து ,

குளித்து முடித்து வெளியே செல்ல தயாராகி டீ ஷர்ட் ஜீன்ஸ் பேன்ட்டில் வந்தவன் ,

"பாட்டிக் கூப்பிட்டீங்களாம் …. என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க …. ஃபிரண்ட் வீட்டுப் பார்ட்டிக்குப் போகணும்..... இப்பவே எல்லா வேலையும் முடிச்சுட்டு வரணும்"

மகனைத் தரையில் மெத்தை விரித்து படுக்க வைத்துக் கொண்டே அவர்களதுப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தமிழினி.

"அன்னைக்கு நான் சொன்னதுக்கு என்ன முடிவெடுத்துருக்க...."

"என்னைக்கு…. என்ன சொன்னீங்க பாட்டி ...."

"அன்னைக்குத் தலைய .. தலைய ஆட்டிட்டுப் போகும் போதே நீ இப்படித்தான் கேப்பனு நினைச்சேன்…."

"நான் எப்ப தலைய ஆட்… " என்றவன் ஞாபகம் வந்தவனாக தமிழைப் பார்க்க , அவள் பிள்ளையைக் கொஞ்சும் சாக்கில் கீழேக் குனிந்துக் கொண்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே , "அது… பாட்டி .... நிறைய வேலைகள் மறந்துட்டேன் …. என்னனு இப்ப சொல்லுங்க...."

"சரி தான்… உன் மவனுக்கு தடுப்பூசிப் போடப் போகணும்னு சொன்னேனே … மகனுக்கு என்ன பேர் முடிவு பண்ணியிருக்க … எனக்கு கூப்பிட வசதியா வை… அப்புறம் என்னையத் திட்டாத ... சாயந்திரம் வீட்ல சாமி முன்னாடி வச்சுறலாம்…. வீட்டுல வேலை செய்றவங்களுக்கு மட்டும் புதுத்துணியும் சாப்பாடும் போடுவோம்."

"பாட்டி அவங்கம்மா எப்படியும் பெயர் செலக்ட் பண்ணியிருப்பா … அதையே வச்சுடலாம் .... மற்றது உங்க விருப்பம் … ரவிய வரச் சொல்றேன் உங்களுக்குத் தேவையான எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்குவான்…. சரி நான் கிளம்புறேன் பாட்டி … "

"பாட்டி ரவியண்ணா எல்லாம் செய்வார் தான் ஆனா பிள்ளையவிட பார்ட்டி முக்கியமா போச்சா ….இன்னைக்கு ஒரு தடுப்பூசிப் போடணும். இங்க யாரையும் தெரியாது … இல்லனா நான் பாட்டுக்கு கிளம்பி ஹாஸ்பிட்டல் போயிருப்பேன் …."

"தாயி சொல்றதும் சரிதான். எங்கள ஆசுபத்திரிக்கு கூட்டிக்கிட்டு போய்ட்டு வீட்ல விட்டுட்டு நீ கிளம்பு.."

"பாட்டி .... அதுக்கில்ல… சரி வாங்க போகலாம்...." என்றவாறு அவன் காருக்குச் செல்ல , ஏற்கனவே தயாராக இருந்ததால் பாட்டியும் தமிழினியும் உடனே கிளம்பி விட்டனர்.

அவர்கள் உள்ளே சென்று விவரம் தெரிவித்து விட்டு அமர்ந்திருக்கையில் ,

"பாட்டி … நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வாரேன் … கூப்பிட்டா நீங்களும் உங்கப் பேரனும் உள்ளப் போங்க...." எனத் தமிழினி சொல்ல ,

"பாட்டி … எனக்கு ஃபோன்ல கொஞ்சம் வேலை இருக்கு … நீங்க ரெண்டு பேரும் உள்ளப் போங்க … நான் இதோ வந்துடுறேன்.." என விஜய் சொல்ல ,

அதற்குள் ஒரு நர்ஸ் வெளியே வந்து , பாப்பா குழந்தைய அங்கம்மாகிட்ட கொடும்மா… போய் வெய்ட் செக் பண்ணனும் …

"சிஸ்டர் நான் தான் குழந்தையோட அம்மா...."

"ஓ சாரி… ரொம்ப சின்னப் பொண்ணா தெரியறீங்களா… அது தான் … "

குபுக்கென்று சிரித்த விஜய் ...." பாப்பா போ பாப்பா…. " என்றுக் கிண்டல் செய்ய ,

கண்டுக்கொள்ளாமல் சென்று வந்தவளிடம்,

"இதுக்குத்தான் ஒரு சீலைய கட்டச் சொல்றது .... எப்பவும் இப்படி பாவாடை சட்டையும் , குழாயும் மாட்டினா சின்ன பிள்ளணு தான் நினைப்பாங்க."

ஒரு ஸ்கர்ட் டாப்ஸ் போட்டு இருந்ததைத் தான் அவர் அப்படிச் சொன்னார்.

அதற்குள் மருத்துவரிடமிருந்து அழைப்பு வர … ஊசிப் போடுவதைப் பார்க்க இயலாது … குழந்தையின் அழுகையோடு தமிழினியும் அழ , விஜயோ கண்ணீர் மட்டும் தான் விடவில்லை. பாட்டிதான் அவர்களை ஆறுதல்படுத்த வேண்டியிருந்தது.

"பாட்டி.. இதுக்குத் தான் நான் வரலனு சொன்னது... பிஞ்சு உடம்புல ஊசியக் குத்திப் பாருங்க … பிள்ளை எப்படி அழறான்.... என்னால இதெல்லாம் பார்க்க முடியால...."

விஜய் இப்படி பேசினான் என்றால் தமிழினி பேசாமல் அமர்ந்திருந்தாள் ,

"என்னய்யா நல்லதுக்குத்தானே… எல்லாம் சரியாகிடும் … "

அவர்களை வீட்டில் விட்டு விட்டு அவன் கிளம்பி விட , மாலையில் வீட்டுக்கு வந்தவன் பாட்டியின் கையிலிருந்த மகனைப் பார்த்து கொஞ்சி விட்டு அவன் அறைக்குச் செல்லக் கதவை திறக்க முற்பட அது திறக்கவில்லை .எனவேக் கதவைத் தட்ட ,

"இதோ வாறேன் …" என்றவாறு கதவைத் திறந்துவிட்டு கட்டிலில் இருந்த ஒரு கவரை எடுத்து , " இதைப் போட்டு விட்டுடுங்க பத்துமா…. "

திரும்பியவள் அதிர்ந்து நிற்க , நின்றுக் கொண்டிருந்தவன் கண்களிலோ அப்படி ஒரு ரசனைப் பார்வை …

சட்டென்று திரும்பிக் கொண்டவள் , "நா .... நான்.... பத்துமானு நினைச்சுட்டேன்...."

ஜாக்கெட் பாவாடை அணிந்து புடவையை அப்போதுதான் கட்டிக் கொண்டிருந்தவள் , கதவு தட்டப்படவும் பத்மா வந்திருக்கிறார் என்று நினைத்து , நெஞ்சோடு புடவையை வைத்துக் கொண்டு கதவைத் திறந்து விட்டிருந்தாள். மொத்தத்தில் அரைகுறை உடையில் நின்றிருந்தாள்.

பின்னால் நெருங்கி வந்து நின்றவன், எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டே , அவள் காதருகில் குனியவும் , நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தவளிடம் ,

" நான் எடுத்துட்டுப் போறேன் …" என்றவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டான்.

அவளால் வெகு நேரத்திற்கு சம நிலைக்கு வர இயலவில்லை , நேரம் கழித்தே கீழே வந்தவள் விஜயின் முகம் பார்க்க முடியாது வேறு புறம் திரும்பி அமர்ந்துக் கொண்டாள். அதன் பிறகு வீட்டிலிருந்த பூஜையறையில் நின்று மகனுக்கு , " யுவகிருஷ்ணா " என்றப் பெயரைச் சூட்டி வீட்டில் வேலை செய்தவர்களுக்கு உணவு உடை அளித்து மகிழ்ந்தனர் .