உனக்காகவே நான் - 10

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 10
Heroin.jpg
“வா மா மித்ரா. பாலு... நான் சொன்னேனில்ல மித்ரா.. அது இவள்தான்” என அறிமுகம் செய்தார் பார்வதி.

“வணக்கம் அங்கிள்” என இருகரம் குவித்து வணங்கினாள் மித்ரா.

“வணக்கம்மா. என்ன சென்னைதான் பூர்வீகமா?” எனக் கேட்டுவிட்டு நேசமாகப் புன்னகைத்தார் பாலய்யா.

“ஆமாம் அங்கிள். “ எனச் சொல்லிவிட்டு ‘வேறெதுவும் கேட்டுவிடப் போகிறார்கள்’ எனச் சிறிது அச்சப் பட்ட வண்ணம் நின்றாள் மித்ரா.

“அப்பறம். உன் அ..” எனத் தொடங்கிய பாலய்யாவின் பேச்சு , “அப்பறம் மித்ரா. இவன் பெயர் வேணு, இவள் பெயர் சுரேகா. பாலுவின் பிள்ளைகள்” என்ற பார்வதியின் குரலில் நின்றது.

பார்வதி பாட்டியை நன்றியுடன் நினைத்து , அருகிருந்த இருவரிடமும் நேச புன்னகை செய்தாள் மித்ரா. அவர்களைப் பார்க்கும் போது, தன் சமவயது இருக்கும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

ஆனால் சுரேகாவிற்கு தன்னைப் பார்த்த பார்வையிலே பிடிக்கவில்லை என்பது அவளின் ஏளனப் பார்வையிலே தெரிந்தது. உச்சி முதல் கால் வரை தன்னை அளவெடுத்த சுரேகாவின் பார்வை நக்கலாக அவள் உதடுகளில் புன்னகையாக பிரதிபலித்ததை மித்ராவால் தெளிவாக உணரமுடிந்தது.

அது மித்ராவின் ஆடையினால்தான். வீட்டில்தான் இருக்கப் போகிறோம் என்று மித்ரா ஆடையில் அதிக அக்கறை காட்டவில்லை. அதனால்தான் இந்தப் பார்வையோ.! என சில வினாடிகள் நினைத்தாள் மித்ர. ஆனால் மித்ராவிற்கு ‘அது ஏளன புன்னகையா? இல்லை பொறாமையா?’ என்ற சந்தேகமிருந்தது. ‘எதுவாக இருந்தால் என்ன? நன்றாகப் பேசினால் பேசுவோம். பேசவிரும்பாமல் ஒதுங்கி நின்றால் நாமும் அமைதியாக இருப்போம்’ எனத் தீர்மானம் கொண்டவளாக அமைதியாகவும் கம்பீரமாகவும் நின்றாள் மித்ரா. ஆனால் வேணு மிகவும் நேசமுடன் புன்னகைத்தார்.

“மித்ரா. நீங்க மிகவும் அழகாக இருகீங்க “ என்றான் வேணு.

புன்னகைத்தவிதமாக “தாங்க்ஸ்” என்றாள் மித்ரா.

“ஹே ரிஷி.. நீங்க எங்க போனீங்க.. உங்களைத்தான் என் கண் தேடிக் கொண்டே இருந்தது.” என்று மித்ராவின் பின்னோடு நடந்து வந்த ரிஷியின் கைகளை ஓடிச்சென்று பிடித்த வண்ணம் பேசிக் கொண்டே வந்தாள் சுரேகா.

சுரேகாவின் குரலைத் தொடர்ந்து அவளையே பின் தொடர்ந்த மித்ராவின் கண்கள் அவளது கைகள் ரிஷியின் கைகளை இறுகப் பற்றி இருப்பதைக் கண்டு அவளையும் அறியாமல் வாடியது.

சுரேகாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் , “ காலையிலே சோர்வாக இருந்தாய் மித்ரா.. பார் இப்போது இன்னும் சோர்ந்திருக்கிறாய். கண்களைப் பார்க்க மிகவும் கலைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. போ.. போய் ஓய்வெடு மித்ரா.” என்று மித்ராவை நோக்கிப் பேசிய வண்ணம் சொல்லிக் கொண்டே சென்று sofa – ல் அமர்ந்தான் ரிஷி. அவனோடு சேர்ந்து சுரேகாவும் அவன் கைகளைப் பிடித்த வண்ணம் அவனுடன் அமர்ந்தாள்.

“என்னடா ரிஷி. இன்று முழுவதும் ஒரே உற்சாகமாக இருந்த பிள்ளையைப் பார்த்துச் சோர்ந்து தெரியிர என்கிறாய்.” என்று பேரனை செல்லமாகக் கடிந்துவிட்டு “ நீ கொஞ்ச நேரம் பேசி இருந்துவிட்டு போமா மித்ரா” என்றார் பாட்டி பார்வதி.

“ம்ம்.. “ என்ற மித்ராவின் முகம் மேலும் சோர்ந்தது.

அவள் சோர்வு சுரேகாவின் செய்கையால் வந்தது என்று யாரும் அறியவில்லை. ஏன் மித்ராவுமே உணரவில்லை, திடீரென்று மனம் கனமானது போன்ற உணர்வு மட்டுமே அவள் அறிந்தது.

அதன் பிறகு பாட்டியும் , பாலய்யாவும் ஏதோ பேசிய வண்ணம் தோட்டத்தின்புரம் நடந்து சென்றனர். இளையவர்கள் நால்வரும் பொதுவாக பேச அமர்ந்தனர்.

மித்ராவின் முக சோர்வையே கவனித்திருந்த ரிஷி சிந்தனை முடிச்சு நெற்றிப் பொட்டில் விழ அவளை நோக்கினான். ‘கொஞ்ச நேரத்திற்கு முன் கூட நன்றாகத் தானே இருந்தாள் அதற்குள் என்ன நடந்திருக்கும்.!?’ என்று புரியாமல் விழித்தான் ரிஷி.

அவன் சிந்தனையை கலைக்கும்விதமாக “என்ன ரிஷி. எனக்கு இந்த வாரமும் அந்த *short tops வாங்கி வரலையா?. அந்தப் படத்தில் பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருந்தது. எனக்கும் அது போல் வேண்டும் என்றதற்கு வாங்கி வருவதாக சொன்னீங்களே” என ரிஷியின் கைகளை உலுக்கிய வண்ணம் சின்ன பிள்ளை போல் கொஞ்சினாள் சுரேகா.



சுரேகா என்ற ஒருத்தி அருகில் இருப்பதையும் மறந்து ரிஷி மித்ராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது சுரேகாவிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. ரிஷி தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவள் அவனைப் பற்றி உலுக்க வேண்டியதாக இருந்தது.

‘இவன் இன்று வருவான் என்று, beauty parlor எல்லாம் போய் make up போட்டுவிட்டு வந்தா. இவன் என்னடானா, இந்த இந்த பிச்சகாரியை வெறித்து வெறித்துப் பார்க்கிறான்’ என்ற கடுப்பு சுரேகாவிற்கு.

“ஓ... மறந்தே போய்டேன் சுரேகா” என்று அப்போதுதான் நினைவு வந்தவனாக தன் தலையில் தட்டிக் கொ’ண்டு, “அடுத்தமுறை கண்டிப்பாக வாங்கி வருகிறேன்” என அவளுக்கு சமாதானம் செய்வது போல் சொன்னான் ரிஷி.

‘ஓ.. ரிஷியுடன் அவ்வளவு நெருங்கிய உறவு போல இருக்கிறதே! ஒன்றாகச் சேர்ந்து படமெல்லாம் பார்ப்பார்கள் போல் இருக்கிறதே!’ என காரணமின்றி சுரேகாவின் மீது பார்வை சென்று மீண்டது மித்ராவிற்கு.

‘தானும்தான் தன் கரணுடன் சினிமாவுக்கு சென்று இருக்கிறாள் என அவள் புத்தி அவளை தெளிவுற முயன்றது. ஆனால் தான் ஒன்றும் இப்படி உறவாடிக் கொண்டு செல்லவில்லையே. அவனுக்கும் எனக்கும் இருப்பது ஆரோக்கியமான நட்பு. அதுவும் 20 வருட நட்பு’ என அவளது உள் மனம் அவளுக்குப் பரிந்து பேசியது. எது அப்படி இருந்தாலும் மித்ராவிற்கு சுரேகாவின் செய்கை பிடிக்காததுப் போல்தான் இருந்தது.

“போங்க ரிஷி.” என்று ரிஷியின் கன்னத்தை லேசாகத் தட்டினாள் சுரேகா. “அடுத்த முறை வாங்கிதரவில்லை என்றால் செல்லமாக தட்டிய இடத்தில் பிடித்துக் கிள்ளி வைத்துவிடுவேன்” என மறுபடியும் கொஞ்சினாள் சுரேகா.

“அம்மாடியோ.. வேண்டாம் வேண்டாம்.. நான் அடுத்த முறை கண்டிப்பாக வாங்கிவந்துவிடுகிறேன். தாயே” எனப் பயந்தவன் போல் அவளைவிட்டுத் தள்ளி அமர்ந்தான் ரிஷி.

ஆனால் “அது அந்தப் பயம் இருக்கட்டும்” என்று மேலும் அவனை நெருங்கி அமர்ந்து மித்ராவை ஒரு வெற்றி பார்வைப் பார்த்தாள் சுரேகா.

சுரேகாவின் பார்வையின் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அது மித்ராவின் முகத்தை இறுக்கமடைய செய்தது. அவள் அறியாமல் மனம் மேலும் சோர்வுற்றது. என்ன செய்தும் இயல்பு போல சிரிக்க முடியவில்லை.

“நீங்க என்ன படிச்சிருக்கிங்க மித்ரா” என வேணு கேட்ட கேள்விக்கு அவள் பதில் கூறும் நிலையிலும் இல்லை போலும் ,கடினப்பட்டு புன்னகைத்து, “நா.. நான் B.Tech , IT படித்திருக்கிறேன்.” என்றால் மித்ரா.

“அப்படியா!.. நானும் B.Tech தான். அதனோடு, ஒரு MBA வும் முடித்திருக்கிறேன். இன்னும் மூன்று மாதங்களில் USA போயிடுவேன். இப்போது சும்மா, அப்பாக்கு உதவி செய்துட்டு இருக்கிறேன்” என்று தன் Bio Data வை ஒப்புவித்தான் வேணு.

“ஓ..” என்றதோடு எதுவும் பேச தோன்றாமல் நிறுத்தினாள் மித்ரா. அந்த இடத்தைவிட்டுப் போனால் கொஞ்சம் பரவாயில்லை போல் இருக்கும் என்று நினைத்தாள் மித்ரா.

சுரேகா ரிஷியைவிடாத அட்டைப்பூச்சி போல் ஒட்டிக் கொண்டு சிரிப்புவராத ஜோக்காக சொல்லி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“வேணு. நான்.. எனக்கு லேசாகத் தலை வலிக்கிறது. தப்பா எடுத்துக் கொள்ளவில்லையென்றால், நான் உள்ளே போகவா?” என்று திக்கி திணறி கேட்டாள் மித்ரா.

“ஹே மித்ரா. இது என்ன கெஞ்சுவது போல். நீங்கப் போங்க . போய் ஓய்வெடுத்துக்கோங்க” எனப் பெருந்தன்மையாக சொன்னான் வேணு.

“புரிந்து கொண்டதற்கு நன்றி” என்றுவிட்டு , மரியாதைக்காக சுரேகாவிடம் சொல்ல எத்தனித்தவள், ‘சுரேகாவின் கண்களில் ரிஷியைத் தவிர வேறு தெரிவதற்கில்லை என்று அவளது ரிஷியுடனான தீவிர பேச்சிலே தெரிந்தது.

இருந்தும் , “வேணு சுரேகாவிடம் சொல்லிவிடுங்கள்” என்று வேணுவிடம் சொல்லிவிட்டு வேகமாக மாடிப் படிகளை நோக்கி நடந்தாள் மித்ரா.

சுரேகாவின் அருகில் இருந்த போதும் ரிஷியின் கவனம் முழுதும் மித்ராவின் மீதே இருந்தது. அவள் சோர்ந்து செல்வதைப் பார்க்கையில் ரிஷியின் உள்ளும் வேதனையாக இருந்தது. தீடிரென்று உடல் நிலை எதுவும் சரி இல்லையோ! என எண்ணி அவள் செல்வதையே சில வினாடிகள் பார்த்திருந்தான்.

மெதுவாகப் படிகளை கடந்து தன் அறைச் சென்று கட்டிலிலே அமர்ந்தாள் மித்ரா. அவள் கண் இமைகள் லேசாக நனைந்திருந்ததை உணர்ந்தாள்.

மெதுவாகப் படிகளை கடந்து தன் அறைச் சென்று கட்டிலிலே அமர்ந்தாள் மித்ரா. அவள் கண் இமைகள் லேசாக நனைந்திருந்ததை உணர்ந்தாள். கண்ணீரினால் நனைந்திருந்தது. ஏன் என்று யோசிக்காமல் யோசிக்கவும் விரும்பாமல் தன் அம்மாவின் நினைவில், தன் தலையணைக்கு அடியிலிருந்த புகைப்படத்தை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.



ஏனோ தன் அம்மாவின் நினைவு இன்று அதிகமாக உணர்வது போல் மித்ராவிற்கு இருந்தது. கண்கள் நனைவதைத் தடுப்பது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மனச் சோர்வு மூளையையும் சோர்வடைய செய்து , மயங்கிய நிலை ஏற்பட்டு , உறங்கியும் போனாள் மித்ரா.

வேணுவும் சுரேகாவும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

“2 வாரங்களில் அறுவடை விருக்கும். அன்றைய விலை நிலவரப்படி நாம் கணக்குகளைப் பேசிக்கொள்வோம் ரிஷி. வியாழக்கிழமை அன்றே வந்துவிடு.” என்று பாலய்யா சொல்லிவிட்டு மூவருமாகக் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பியதும் மின்னலென தன் கால்களை மித்ராவின் அறைகளை நோக்கிச் செலுத்தினான். இருமுறை தட்டியும் திறக்காததால், மெதுவாக கதவைத் திறந்து பார்த்தான் ரிஷி.

சிறுப்பிள்ளை போல் கையில் எதையோ அணைத்துக் கொண்டு கால்கள் குறுக்கி படுத்திருந்த மித்ராவை பார்த்து ரசித்தது ரிஷியின் கண்கள். அதே சமயம் அவளின் விழியோரம் இருந்த காய்ந்த கண்ணீரின் கறை அவனை வருத்தியது. விரைந்து அவள் அருகே சென்று அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் ரிஷி.

காய்ச்சலோ என்று எண்ணிய ரிஷி., அவள் உடல் சுடவில்லை என்பதில் மகிழ்ச்சியே. ஆனால் அவளின் இந்த வேதனைக்கு என்ன காரணம் என்று சில வினாடிகள் யோசிக்கையில் அவள் உடல் திடீரென்று பயத்தில் தூக்கிப் போட்டது போல் நடுங்கி அமைதி நிலைக்கு வந்தது. அவள் கையிலிருந்த புகைப்படம் நழுவி அருகில் விழுந்தது.

இதனைக் கண்டு துணுக்குற்ற ரிஷி அவள் நிலைக்கண்டு சில வினாடிகள் பயந்தே போனான்.

“அவளது தோளைத் தட்டி மித்தி.. மித்தி” எனக் கலக்கத்துடன் அழைத்தான் ரிஷி.

“போமா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்கிறேனே!” என கண்களைத் திறவாமல் கனவில் பேசுவது போல் முனங்கிவிட்டு திரும்பிப் படுத்தாள் மித்ரா. ஏதோ கனவில்தான் எதையோ எண்ணி பயந்திருக்கிறாள் என்று எண்ணி தன்னை சமன் செய்தவன் அவளருகிலிருந்த புகைப்படத்தை எடுத்துப்பார்த்தான் ரிஷி.

‘ஓ.. இதுதான் இவளுடைய அப்பா, அம்மா வா. திடீரென்று இவர்கள் நினைவு வந்துதான் சோர்ந்தாளோ!’ என நினைத்தான் ரிஷி. பிறகு அந்தப் புகைப்படத்தை அவளருகிலே வைத்துவிட்டு, போர்வையை அவள் கழுத்துவரை போர்த்திவிட்டு நகர்ந்தான் ரிஷி.

இதை எதையும் அறியா மித்ரா குழந்தை போல தன் கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு தூங்கிய நிலையிலிருந்தாள்.

சிறிது நேரத்தில் விழித்த மித்ரா. தன் கழுத்துவரைப் போர்த்தியிருந்த போர்வையைத் திகைத்த வண்ணம் பார்த்துவிட்டு, அதனை மடித்து வைத்தாள். நேரம் 8.30 என்பதால் விரைந்து Refresh ஆகிவிட்டு கீழே வந்தாள் மித்ரா.

சரியாகச் சாப்பிடும் நேரம் என்று மரகதம் ரிஷியிடம் “மித்தியை அழைத்து வா தம்பி. சாப்பிடலாம்” என்ற குரல் மித்ராவின் செவியிலும் விழுந்தது.

“சரி மரகதம்மா.” என்றுவிட்டு எழுந்த ரிஷி, “ மித்ராவை காணவும். இதோ “உங்கள் மித்தியே வருகிறாளே” என்றுவிட்டு அவளைப் பார்த்து மோகனமாய் புன்னகைத்தான் ரிஷி.

அந்தப் புன்னகைக்கு எதிரோலியாக ஒரு புன்னகையோ அல்லது அவளது வழக்கமாகச் செய்கையான கன்னத்தை தடவும் செயலையோ எதிர் பார்த்த ரிஷியை, அவளது அமைதியான தோற்றம் என்னமோ செய்தது.

அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு மித்ரா தன்னறை சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு, பாட்டிக் கொடுத்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துப் படிக்க எத்தனித்தாள் மித்ரா.

ஆனால் படிக்க முடியாமல் அவளது நினைவுகள் ரிஷியிடம் சென்றது. அவனைச் சந்தித்ததிலிருந்து நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தது. அப்போது அவளது அறைக் கதவு தட்டப்பட்டது. அவனேதான். அவளது நினைவுகளின் நாயகனே தான். ரிஷி.

அவன் உள்ளே வர வழிவிடாமல் கதவில் கைவைத்த வண்ணம் இருந்த மித்ராவை தன் கைகளால் விலக்கிவிட்டு உள்ளே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவள் புரியாமல் ‘இந்த நேரத்திற்கு ஏன் இங்கு வந்தான்’ என்று புரியாமல் அவனை விழி விலகாமல் பார்த்தாள் மித்ரா. மாலை வரை இருந்த படபடப்பை அவள் இப்போது உணரவில்லை. என்னவென்று புரியாத உணர்வுதான் இப்போது அவளிடம்.

“இங்கே வந்து உட்கார்” என அதிகாரமாக அவளை நோக்கி அருகிலிருந்த கட்டிலை காட்டினான் ரிஷி.

“என்ன? ஏன்?” எனப் புரியாமல் அவனைப் பார்த்த கேட்ட வண்ணம் சிலை போல வந்து அமர்ந்தாள் மித்ரா.

“நீ தான் சொல்ல வேண்டும். என்ன? ஏன் சோர்வாக இருக்கிறாய்? உடலுக்கு ஏதும் செய்கிறதா?” என அக்கறையாகக் கேட்டான்.

வியப்பாக அவனை நோக்கி ‘இவனுக்கென்ன தன்மீது அக்கறை. வீட்டினுள் தங்க வைக்கவே அங்களிடம் அத்தினை ஆர்ப்பாட்டம் செய்தவன். இப்படி ஏன் கேட்கிறான்’ என்று நினைத்தாள் மித்ரா.

அவளிடம் எந்தப் பதிலும் இல்லாததும் மேலும் “என்ன உண்மையிலே தலைவலியா? ஏதோ போல் இருக்கிறாயே?” என்றான் ரிஷி.

“அ.. அது.. ஒன்றுமில்லை.” என்றாள் மித்ரா. என்னவென்று அவளே அறியாத போது அவள் எப்படி விளக்கம் தர முடியும். அது அவளுள் சுரேகாவின் மீது ஏற்பட்ட பொறாமையில் வந்தது என்பதை அவளால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லைப் போலும்.

நம்பாதவனாய், “ஓ... அது சரி.. என்னுடன் வா.” என்று அவளது கையைப் பற்றி அவளை அழைத்துச் சென்றான் ரிஷி.

அவனது கைக்குள் தன் தளிர் கை அழகாக அடங்கியது எண்ணி வியந்தவள் , சட்டென விடுவித்துக் கொள்ள நினைத்து , முயற்சித்தாள் மித்ரா. ஆனால் அவன் இதை எதிர் பார்த்தானோ என்னமோ அவனது பிடி மிகவும் இறுக்கமாகவும் இதமாகவும் இருந்தது.

அவனுடன் இணைந்து நடந்த வண்ணம், “என் கையை விடுங்கள்” என்றாள் மித்ரா. கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான் என்றே சொல்ல வேண்டும்.

அவளது குரலில் சற்று நின்றான் ரிஷி. எதிர்பாராமல் அவன் நிற்கவும் முன் போய் அவன் மீதே மோதிக் கொண்டாள். மெய் சிலிர்க்க நின்ற மித்ரா , மென்குரலில் “சாரி” என்று தரையைப் பார்த்த வண்ணம் சொன்னாள்.அவளது காது மடல் சிவந்தது. ஒருபார்வைப் அவளைப் பார்த்தவன் , அவளது கையை விடுவித்தான் இல்லை. மீண்டும் அவளை அழைத்துச் சென்றான் ரிஷி.

திகைத்த வண்ணம் அவன் பின்னோடு நடந்தாள் மித்ரா. வேறு வழியும் அவளுக்கு இருக்கவில்லை. இவன் என்ன செய்கிறான் என்பதுப் புரியாமல் சென்றவள், அவன் காண்பித்த இடம் அவளைக் கனவா என்பது போல் நினைக்க வைத்தது.

அது வெளியிலிருக்கும் பால்கனி. அன்று பௌர்ணமி. முழு நிலவுடன் சில மேகங்கள் ஒளிந்துவிளையாடிக் கொண்டிருந்தது. கண்கள் விரிய அதன் அழகை ரசிக்க ஆரம்பித்தாள் மித்ரா. அவளது கையை விட்டான் ரிஷி. இதமான அந்த குளிரில் , அந்த சூழ்நிலை அவளது மனதிற்கு தெம்பளித்தது. அதனுடன் அவர்கள் நின்றிருந்த இடத்தில் அதிக குளிரில்லாமல் வீசிய மென் தென்றல் அவளை மறக்கச் செய்தது.

அவள் தன் நிலையுணரும் வரை அவளையே பார்த்திருந்தான் ரிஷி. அவளது முக மாறுதல்களையே கவ்னிதிருந்த ரிஷிக்கு அவளது மன மாறுதலையும் அது உணர்த்தியது.

ஒவ்வொரு மேகமும் ஒரு சில உருவங்களை பிறதிப்பலிக்க மித்ரா, அருகிலிருப்பது ரிசி என்பதையும் மறந்து , “அங்க பாருங்களேன் அது, அந்த மேகம் பார்ப்பதற்கு மான் போல அழகாக இருக்கிறது” என்று அவன் கையை தட்டிச் சொல்லிய வண்ணம் திரும்பியவள் ரிஷியின் பார்வை மேகத்தின் மீதில்லை அவளது கையின் மீது என்பதை உணர்ந்து , சட்டென எடுத்துக் கொண்டாள்.

மீண்டும் அவள் உள்ளம் படபடப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் கன்னம் சிவப்பதைத் தடுக்க முடியவில்லை.

“மித்ரா...” என மெதுவாக அழைத்தான் ரிஷி.

வார்த்தை வராமல் , “ம்ம்...” என்ற மித்ரா , மறந்தும் நிமிர்ந்தாள் இல்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
போங்கப்பா
சும்மா சும்மா எவளாவது ஒருத்தி வந்து
எங்கள் மித்ரா பேபியை அழ வைச்சுட்டே இருக்காங்க

முதலில் எவளோ ஒரு சுமித்தாவாம்
இப்போ ஒரு சுரேகாவாம்
சுரேகா பேரைப் பாரு பேரை
வெளக்குமாத்துக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம்ன்னு வைச்ச மாதிரி

இப்படி ஒவ்வொருத்தியா வந்து மோசம் செஞ்சா நல்ல பொண்ணான எங்கள் மித்ராதேவிதானே ரிஷியிடம்
கெட்ட பெயர் வாங்குகிறாள்

அட இவளுக்கு ரிஷி பௌர்ணமி நிலவைக் காட்டுறானே
இது எவ்வளவு நேரத்துக்கோ?
எப்போ வேதாளம் முருங்கை மரம் ஏறி மித்ராவை அழ வைக்கப் போறானோ?

பாலய்யாவின் மகன் வேணு மித்ராவை
ரூட் விடுறானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top