இருளில் ஒரு ஒளியாய் -6

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -6

'அட பாவி.. கேப்ல கெடா வெட்டிடானே.. பட் ஒய்? ' மனம் சிந்திக்க எப்போது தான் அவகாசம் கொடுத்தார்கள் லைம் லைட் பறாறாக்கள்.

"உங்களுக்கும் தீனாவிற்கும் விரைவில் திருமணமாமே? "
அவர்கள் வெகு சுவாரசியமாக கேட்க,

"சொல்லவே இல்ல " என்றது எனக்குள் இருந்த வடிவேல் வெர்சன்.

"உங்களைப் பற்றிய வதந்திகள் உண்மையா மிச்செஸ். தீனா.. விஷயம் அறிந்து தான் உங்க அம்மா விஷம் குடித்தார்களா? "

"ஏது விஷமா? டேய்.. உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா டா.. இதுல கல்யாணம் வேறு.. மிச்செஸ் வேற.. " மீண்டும் எனக்குள் அதே வடிவேல் புலம்பல்.

என் அமைதி அவர்களை இன்னும் சீண்டியது போல.

அந்த மைக்கை வாயில் திணித்தவன் முன் வந்து "உங்கல அக்கம் பக்கம் இருக்கவங்க லதா மங்கேஷ்கர்னு சொல்ராங்களே? நீங்க பாட சான்ஸ் கேட்க போய் தான் உங்களுக்கும் அவருக்கும் லவ் பத்திக்கிச்சா? "

"கேள்வியாடா கேக்கற? அதுக்குள்ள எவன் மங்கேஷ்கர் டீட்டெயில்லாம் சொன்னது.. அந்த ஜோ பக்கியா இருக்குமோ? என்னவோ? கடவுளே லதுவ ஆனாலும் நீ இவ்ளோ சோதிக்க கூடாது " மைண்ட் வாய்ஸ் ஒருபக்கம் புலம்ப,

இன்னொரு புறம் மனமோ "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி " என்று சோககீதம் பாடி அரற்றியது.

கூட்டத்தில் பின்னின்றபடி அகியும் ஜோவும் கையாட்ட, அவசரமாக ஒரு முடிவுக்கு வந்தவளாக, அகியிடம் ஓடினேன்.

என்னை தொடர்ந்தன கேமராக்களும் தீனாவின் கண்களும்..

அகியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு, "இவன் தான்.. " என்று நான் தொடங்க, பாய்ந்து குறுக்கே புகுந்த தீனா..

"ஹி இஸ் லதா'ஸ் மாமா.. எங்க காதலுக்கு பச்சை கொடி காட்டுவதே இவரும்.. லதுவோட பெஸ்ட் பிரின்ட் ஜோசப்பும் தான்".

தீனா பேசவதை கேட்ட நாங்கள் மூவருமே அதிர்ந்து நிற்க, எகிறிவிட்டான் ஜோ.

"யோவ்.. வாய் இருக்குனு இஷ்டத்துக்கு பேசாத.. நீ என்ன பிளான் பண்றனு புரியுது.. எங்க லதுவ உன்னால நெருங்கவே முடியாது.. மரியாதையா உண்மைய நீயே சொல்லிரு.. " படபடவென தீனாவிடம் பொரிந்தவன்,

அவசரமாக திரும்பி, மீடியாவிடம் நடந்தது அனைத்தையும் சொல்ல, இப்போது லைட் எல்லாம் தீனா பக்கம்.

"விருப்பம் இல்லாதவங்க மேல உங்களுக்கு காதலா தீனா சார்? "

"அப்போ தேஜுவோடான உங்கள் உறவு வெறும் நட்பா? "

"லதா மேல் கொண்ட காதல் தான் உங்கள மௌனமா இருக்க செய்யுதா? பதில் சொல்லுங்க சார்? "

"நீங்க லதாவை விரும்பறீங்களா? "

கேள்வி மேல் கேள்வியாக அவனை துளைக்க, ஆர்வமாக அவன் பதிலுக்காக காத்திருந்த மற்றவர்களோடு என்னையும் ஆழ நோக்கியவன், மந்திரப் புன்னகையோடு சொன்னான்..

"அவளை விரும்ப நான் என்ன மாமனா மச்சானா " என்று.

எனக்கு தூக்கிவாரி போட்டது.

நான் காரினுள் பேசியதன் எதிரொலி இது என்று புரிந்தது.

அமைதியாக நின்ற என்னை கைபிடித்து அவ்விடம் விட்டு அழைத்து சென்றுவிட்டனர் ஜோவும் அகியும்.

நாங்கள் உள்ளே நுழைந்த நிமிடம், மருத்துவர் எங்களை அழைக்க, அவரது அறைக்கு சென்றோம்.

பொதுப்படையான அம்மாவின் உடல் நலம் பற்றி கூறியவர், அவர்களது மன பலம் தான் மோசமாக உள்ளதாக கூறினார்.

"செகண்ட் அட்டாக்.. நீங்க பத்திரமா பாத்துக்கணும் இனி அவங்கள.. மனசலவுல ஏதோ பெரும் கவலை அவங்களுக்கு.. எனிவே.. டூ டேஸ் பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும்.. அப்பறம் நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்.. "

"அண்ட் மிஸ். லதா, இப்போ டிவில உங்கள பத்தி பரவுற வதந்திகள் உங்க அம்மாக்கு தெரிய வேண்டாம்.. அவங்கள அது கண்டிப்பா பாதிக்கும்.. "
அறிவுரையாக சொன்ன டாக்டர் எழுந்து சென்றதும், மனம் வெறுமையாக இருந்தது.

இத்தனை நாட்களின் குறும்பை தள்ளிநின்று நினைத்துப்பார்த்தேன்.

அழகிய நிமிடங்கள் அனைத்தும்.

ஆனால் இனி பொறுப்புடன் நடந்தாக வேண்டும்.
தீனா விஷயம் அதன்பிறகு என்னை பாதிக்க நான் விடவில்லை.

அமைதியாக எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் என்னுள்.

அம்மாவை தாங்கவேண்டும். அப்பா இல்லாத குறை அம்மா உணர கூடாது. அம்மாவின் வேலை பளுவை
குறைக்கவேண்டுமானால், கொஞ்சம் வெளியே ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு, வீட்டில் அம்மாவோடு அதிக நேரம் கழிக்கவேண்டும்.

பலநேரம், நம் பெற்றோரின் அருமையை நாம் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது உணருவதே இல்லை.

அப்பாவின் அருகாமைக்காக இப்போது நான் ஏங்குவது போல..

அன்றைய பொழுது அதன் பின் சஞ்சலங்கள் இல்லாமல் கடந்தது.

ஜோவின் அம்மாவும் அப்பாவும் இரவு என்னோடு இருந்தார்கள்.

உணவும் அவர்கள் வீட்டில் இருந்தே வந்தது.

இரவு உறக்கத்தின் முன் ஏனோ மீண்டும் தீனாவின் நினைவு என்னுள்.

ஒரே நாளில் அவனால் எத்தனை களேபரங்கள்.. பரபரப்பு.. கலாட்டாக்கள்.

கில்லாடி தான். அத்தனை நடந்தும் வாயே திறக்கவில்லையே.
நினைவோடு உறங்கிபோனேன் நான்.

அடுத்த நாள் காலையே அத்தையும் மாமாவும் வந்துவிட்டார்கள்.

அம்மாவை நார்மல் வார்டிற்கு மாற்றியதும், என்னை அருகே அழைத்து உச்சி முகர்ந்தவர், அதன் பின் எங்களை வெளி இருக்க சொல்லிவிட்டு, அத்தை மாமாவிடம் ஏதோ பேசினார்.

சிறிது நேரம் கழித்து வெளி வந்த அத்தையின் முகத்தில் அத்தனை திருப்தி இல்லை. மாமாவின் முகம் கலக்கமாக இருந்தது என் நெஞ்சை பிசைந்தது.

சோகமோ மகிழ்ச்சியோ அதிகமாக வெளிக்காட்டாத குணம் மாமாவுடையது.

அவரே முகத்தில் கலக்கத்தை காட்டிக்கிறார் என்றால்?
ஒருவேளை அம்மாவிற்கு பெரிதாக ஏதேனும் நோய் வந்துவிட்டதா? எனக்கு தெரிந்தால் கலங்குவேன் என்று மறைக்கிறார்களோ?
நேற்று மருத்துவர் அறையில் இருந்து நான் வந்த பிறகு இதுபற்றியெல்லாம் டாக்டர் அகி ஜோவிடம் சொல்லி இருப்பாரோ?

குழப்பம் சூழலாக என்னை உள்ளே இழுத்தது. அவசரமாக மருத்துவர் அறைக்கு ஓடினேன்.

யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

அதை எல்லாம் கவனிக்காமல், என்னை தடுக்க வந்த நுர்சையும் தள்ளிவிட்டு, அவரிடம் கேட்டேன் "என் அம்மாவிற்கு என்ன டாக்டர்? " என்று.

ஒருகணம் அமைதி காத்தார். அவர் கண்கள் எதிரே இருந்து பேசிய நபரிடம் பாய்ந்தது.

எரிச்சலோடு திரும்பி பார்த்தேன். தேஜுவோடு அமர்ந்திருந்தான் தீனா.

கடுப்புடன் அவனை மதிக்காது தலையை சிலிப்பிக்கொண்டு மீண்டும் மருத்துவரை பார்த்தேன்.

இப்போது அவர் என்னை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
"சார்.. ப்ளீஸ்.. எதுனாலும் மறைக்காம என்கிட்ட சொல்லுங்க.. "

மீண்டும் தீனாவை பார்த்தவர், என்னிடம் திரும்பி "உங்க அம்மாக்கு ஒன்னும் இல்லம்மா " என்றார் அமைதியான குரலில்.

நான் நம்பவே இல்லை.

"நீங்க பொய் சொல்றீங்க டாக்டர்.. மத்தபடி அம்மா எப்படி சோர்ந்து இருக்க மாட்டாங்க.. மாமா இப்டி கவலைப்படமாட்டார். எல்லாரும் என்ன இரக்கமா பாக்கறீங்க.. எனக்கு அது பிடிக்கல.. ப்ளீஸ் உண்மைய சொல்லுங்க.. " நான் ஆத்திரத்தில் தொடங்கி கெஞ்சலில் முடிக்க,

குறுக்கே புகுந்தான் தீனா,
"சொல்லுங்க டாக்டர்.. என்னிக்காச்சு ஒரு நாள் அவளுக்கும் தெரிஞ்சு தானே ஆகணும் "

எனக்குள் பயபந்து உருள தொடங்கியது. அம்மாவிற்கும் தீனாவிற்கும் என்ன சம்மந்தம்? இவன் எதற்காக இதில் தலையிடுகிறான்? அம்மாவிற்கு அப்படி என்ன நோய்? எதுவாய் இருந்தாலும் அம்மாவை காத்தே ஆகவேண்டும்.

நான் பயமும் கலக்கமுமாக நிற்க, மருத்துவர் சொன்னார். சொன்னார் என்பதை விட இடியை இறக்கினார் எனலாம்.

என் ரத்தம் உறைந்தது. அம்மாவை காக்க முடியுமா? முடியும்.. நான் காப்பாற்றியே தீருவேன்.. அவர் விளக்க விளக்க எனக்கு ஒன்றும் புரிய வில்லை. அம்மாவிற்கா? ஏன்? ஏன்? கடவுளே.. என்னால் நம்பமுடியவில்லை. ஆண்டவன் பொல்லாதவன். சுயநலவாதி.. அப்பாவை பிடுங்கிக்கொண்டது போதாது என்று அம்மாவையும் இழுத்துக்கொள்ள பார்க்கிறானா? லதா விடுவாளா?

சிறுவயதில் அம்மா சொன்ன கதை ஒன்று தெளிவில்லாமல் ஞாபகம் வந்தது. சிவனை கட்டி அணைத்து கொண்ட சிறுவனின் உயிரை பறிக்காமல் விட்டு சென்றாராம் எமன்.
அதேபோல் நானும் செய்தால்.. அம்மாவையும் விட்டுவிடுவாரா? எதற்கும் முயற்சித்து பார்ப்போம்.

எண்ணம் ஒருபக்கம் செல்ல, கண்ணீர் ஒருபக்கம் வழிந்தது.

ஆத்திரத்துடன் கண்ணீரை துடைத்தெறிந்தேன்.

வலிய வரவழைத்துக்கொண்டு வலியோடான சிரிப்புடன் அம்மாவிடம் ஓடினேன்.

அம்மா ஓய்வாக படுத்திருந்தார். பக்கத்தில் அத்தையும் அகியும்.

அத்தை ஊட்ட ஊட்ட அம்மா மெல்லமாக சாப்பிட்டு கொண்டிருந்தார்.
நான் அத்தையிடம் இருந்த கிண்ணத்தை வாங்கி ஊட்ட தொடங்கினேன்.

என்னை தொடர்ந்து வந்த தீனாவை அம்மாவின் கண்கள் நோக்கின. அத்தையும் அகியும் தவிப்புடன் எழுந்து நின்றனர்.

நான் யாரையும் கண்டுகொள்ளவில்லை.
சிரிக்க சிரிக்க அம்மாவிடம் வாயடித்தேன்.

"அம்மா.. பாருமா அந்த பக்கத்து வீட்டு குட்டி பிசாசு என்ன மங்கி மங்கினு கூப்பிடுது.. மங்கேஷ்கர் ஓட ஷார்ட் போர்ம்னு சொல்றான்.. ஓட ஓட அடி தொவச்சு எடுத்துட்டேன்..
அப்பறம் எங்க கோஹினூர் கிங் இருக்கானே.. எனக்கு பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட்னு அவார்ட் தர போறேன்னு சொல்லி காண்டு ஏத்தறான்.. சரியான சைக்கோ.. அவன் கோஹினூர் கிங் இல்ல.. இனி அவன் பேர் கேனயன் மங்.. "

வாயில் வந்ததை எல்லாம் நான் சிரித்துக்கொண்டே வழவழக்க, அகி கோவமாக "லூசா டி நீ... உனக்கெல்லாம் கவலையே வராதா? " என்றான்.

சிரித்துக்கொண்டே "கவலையா இருந்தா கவலை நம்மள கவலை ஆக்கிரும். கவலைய பத்தி கவலைப்படாம சிரிச்சா கவலை நம்மள பாத்து கவலைப்படும்.. அதான் நான் கவலபடாம கவலைய கவலை பட வெக்கறேன்.. "

சிரித்துக்கொண்டு தான் சொல்வதாக நம்பினேன். பாழாய் போன கண்ணீர் எட்டப்பனாக காட்டிக்கொடுக்க,

"பாத்தியா.. நான் கவலை படாம சிருக்கறத பாத்து கவலை கவலைப்பட்டு கண்ணீர் வடிக்குது " நான் சொல்லி முடிக்கவும், என்னை ஆர தழுவிக்கொண்டான் தீனா.

எனக்கும் அவனை விலக்க தோன்றாத வகையில், அந்த அணைப்பு தேவைப்பட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top