அத்தியாயம் 18 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-18

வால்பாறை வரும் போது
இயற்கையை ரசித்த மதுவிற்கு
இப்போது அதை எதையும் கண்டு
ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன்
வந்தோம் என்று இருந்தது.
தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய
கணவன் அறியாமல் முகத்தைத்
திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

அழுதழுது வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் இப்படிக்
கஷ்டப்படுத்துகிறோமே என்று
வேதனையாக இருந்தது மதுவிற்கு.
அதற்காகக் குழந்தையிடம்
மன்னிப்பையும் யாசித்தாள்.

இவனிடம் இப்போது
சொல்லிவிடலாமா என்று
நினைத்தவள் கழுத்தை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் தன்னைப் பார்ப்பது
தெரிந்தும் அவளிடம் முகத்தைத்
திருப்பாமல் முகத்தை மேலும்
கடினமாக்கி காரை ஓட்டினான். இப்படி
முகத்தைக் கூடப் பார்க்க
மறுப்பவனிடம் எப்படிச் சொல்ல
என்று நினைத்தாள் மதுமிதா.

ஏன் கார்த்திக் இப்படிப் பண்றீங்க?
எந்த அளவு காதலைக் காண்பித்து
உணர வைத்தீர்களோ அந்த அளவுக்கு வெறுப்பையும் காட்டுகிறீர்கள்.
என்னோட சந்தோஷம் எல்லாம் நீங்க
தான். என்னதான் நீங்க என்னிடம்
கோபம் காட்டினாலும் என்னால்
உங்களைப் போல இருக்க
முடியவில்லை. நீங்கள் நேற்று இரவு
அணைத்ததும் நெற்றியில் தந்த
முத்தமும் கூட கனவு என்று
நினைத்துத் தான் நெருங்கினேன்.
ஆனால் என் மனதின் ஏக்கத்தில்
கனவு எது நிஜம் என்பது கூட மறந்து
உங்களிடம் இருந்திருக்கிறேன்
என்பதைக் காலையில் தான்
உணர்ந்தேன். அப்போது என்னை
உணராமல் தான் நேற்று
அணைத்தீர்களா? என்றுத் தன்
மனதிற்குள்ளே கேட்டபடி நொந்து
கொண்டு இருந்தாள்.

என்னை விட உங்களுக்கு உங்க
பிரண்ட் தான் முக்கியமா கார்த்திக்?
உங்கள் வாழ்க்கையில் நான்
இருக்கும் இடம் அவ்வளவு தானா?
என்னை நீங்கள் நம்ப மறுப்பது நம்
தாம்பத்தியத்தையும் கேவலப்
படுத்துவது ஆகாதா? என்று
பல கேள்விகள் மனதில் எழுந்தது.
ஆனால் எதையும் வாயைத் திறந்து
கேட்காமல் தனக்குள்ளேயே போட்டபடி வந்தாள்.

ஆனால் அவன் மனதில் உள்ள
காதலையும் உணர்வுகளையும்
அப்போது அவள் அறியவில்லை.

"முருகா இப்படி என்னைத்
தவிக்கவிடத்தான் கல்யாணம் என்ற
ஒன்றை என் வாழ்க்கையில் கொண்டு வந்தாயா... இதற்கு வாழ்நாள் முழுதும்
தனியாகவே வாழ்ந்திருப்பேனே"
என்று கடவுளின் முன் தன்
மனக்குமுறல் அனைத்தையும்
வைத்தபடி வந்தாள் மது.

பொள்ளாச்சி வந்து வீட்டை அடைய
மணி பண்ணிரெண்டு ஆகிவட்டது..
இந்நேரத்தில் யார் என்று வெளியே
வந்த ஜானகி அப்படியே
நின்றுவிட்டார். காரணம் இரவு
உணவிற்குத் தான் வருவோம் என்று
சொல்லிவிட்டுக் கிளம்பிய இருவரும்
போனவுடன் புயல் வேகத்தில் திரும்பி
வந்தது ஜானகியை யோசனையில்
ஆழ்த்தியது. முக்கியமாக இருவரின்
முகமும் சரியில்லை. கார்த்திக்கின்
முகம் முழுதும் கோபத்தில் எரிந்து
கொண்டு இருந்தது என்றால் மதுவின்
முகத்தில் போகும் போது இருந்த
கொஞ்சநஞ்ச நிம்மதியையும்
துடைத்து எறிந்திருப்பதைக் கண்டார்.
மனைவியின் பின்னால் வந்த
வேலுமணியும் இருவரையும் கண்டு
திகைத்தார்.

கார்த்திக்கும் மதுவும் அங்கு இருவர்
நின்றிருப்பதைப் பார்க்காதது போல
மேலே தங்கள் அறைக்குள் சென்று
புகுந்து கொண்டனர்.

ஜானகிக்கு இதற்கு அவர்களை அங்கு
அனுப்பாமலே இருந்திருக்கலாம்
என்று நினைத்தார். தன் ஆதங்கத்தை
கணவரிடம் காட்டவும் செய்தார்.
"நீங்களும் உங்கள் ஐடியாவும். பெரிய
ப்ளான் போட்ட மாதிரி என்னிடம்
காலரை உயர்த்திக் காட்டி ஜம்பம்
அடித்தீர்கள்.. இப்போது என்ன ஆச்சு
பாருங்கள்" என்று புகைந்தார்.

"நான் என்ன இந்த மாதிரி ஆகும்
என்று நினைத்தா அவர்களை அங்கு
அனுப்பினேன்.. அங்கு சென்றால்
அந்தச் சூழலில் கொஞ்சம் மனம்
விட்டுப் பேசுவார்கள் என்று
நினைத்தேன்" என்றவர் "இந்த அளவு
இருவருக்கும் பிடிவாதம் இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை" என்று மனைவியிடம் தலையைச் சொறிந்த
படிச் சொன்னார்.

அவர் பிடிவாதம் என்று சொன்ன
வார்த்தையில் ஜானகிக்கு கோபம்
பொங்கியது.. "பிடிவாதம் என்று
சொல்லுகிறீர்களே.. அது யாரிடம்
இருந்து வந்தது என்று
நினைக்கிறீர்கள்?.. உங்களிடம்
இருந்து தான் வந்து இருக்கிறது..
ஆனால் உங்கள் மகனிற்கு
உங்களைவிட இரண்டு மடங்கு
பிடிவாதம் அதிகம். அவன் காட்டக்
காட்ட மதுவிற்கும் ஏறிவிட்டது" என்று
சத்தம் போட்டவர் "எல்லாம் தலை
விதி.. உங்கள் அம்மாவும் உங்கள்
அப்பாவின் பிடிவாதத்தைப் பற்றி
சொல்லி இருக்கிறார்கள்.. எல்லாம்
வழிவழியாக வருகிறது போல இந்தப்
பரம்பரையில்" என்று தன் கூந்தலைக்
கொண்டைப் போட்டபடி கணவனிடம்
பொரிந்து தள்ளிவிட்டார். அவரும்
மனைவியிடம் பதில் சொல்ல
முடியாமல் உட்கார்ந்திருந்தார்.

மேலே வந்த கார்த்திக்கும் மதுவிற்கும்
என்ன செய்வது என்று தெரியாமல்
ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து
இருந்தனர். மதுவும் கார்த்திக்கும்
நேற்று சென்ற பிறகு ஜானகி தன்
கணவர் வேலமணியை அழைத்து,
அவர்கள் கல்யாண போட்டோ ஒன்று
ப்ரேம் போட்டு வந்ததை எடுத்து
அவர்கள் கட்டிலிற்கு எதிரில் மாட்டி
இருந்தார். அது வேறு இருவரையும் வாட்டி எடுத்தது.

கார்த்திக்கிற்கும் மனதை ஏதோ
சுமை அழுத்துவது போல
உணர்ந்தான். பிறகு மது ஒரு புக்கை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்து
விட்டாள் . பின்பு பிடிக்காமல் புக்கை
படிக்கவும் முடியாமல் மூடி வைத்துப்
படுத்து விட்டாள்.

கார்த்திக்கும் தன் லேப்டாப்பை
உயிர்ப்பித்தான். ஆனால்
அவனாலும் சரியாக வேலையில்
மூழ்க முடியவில்லை. கார்த்திக்கிற்கும் தலை வலிப்பது போல இருந்தது.
அப்போது தான் மதியம் இருவரும்
சாப்பிடவில்லை என்ற நினைவே
அவனிற்கு வந்தது. மதுவும்
படுத்திருந்தாளே தவிர தூங்கவில்லை. அவனிற்கு முதுகுக் காட்டிப் படுத்து சுவரை வெறித்த படி இருந்தாள். ஜானகியும் கோபத்தில் இருவரையும் அழைக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து தொண்டையைச்
செறுமினான் "க்ஹும்" என்று.
ஆனால் மதுவிடம் சிறு அசைவு கூட
இல்லை. அவளை அப்படியே
சாப்பிடாமல் விடவும் அவனிற்கு மனம்
இல்லை. அவளின் தோளைத்
தொட்டுத் திருப்பியவன் "லன்ஞ் டைம்
ஆச்சு.. கீழே போலாம் வா" என்று
அவளை அழைத்துப் பார்த்தான்.

"இல்லை பசியில்லை" என்று
பழையபடி மீண்டும் திரும்பிவிட்டாள்.
அவளின் முகத்தில் புதியாய் இருந்த
கருவலையமும் உடம்பின் இளைப்பும்
அவனைத் தாக்க ஒரு முடிவு
எடுத்தவனாய்க் கீழே சென்றான்.

கீழே சென்று அன்னையை
அழைத்தவன் "அவள் சாப்பிட
வரமாட்டேன் என்கிறாள்.. நீங்கள்
போய்க் கூப்பிடுங்கள்" என்று சொல்ல
ஜானகிக்குக் கோபம் வந்தது.

இந்த மாதிரிச் சமயத்தை அவர்
விடுவாரா என்ன? மகனின் மேலும்
அனைத்தையும் காட்டினார்.

"அவள் சாப்பிடாமல் இருப்பதற்கு
நானா காரணம்?" என்று கேட்டு
மகனைப் பார்த்தவர் "பின் நான் எப்படி
அழைத்து வர முடியும்பா... நீயாச்சு
உன் பொண்டாட்டியாச்சு" என்று
மகனைக் குத்திய திருப்தியில் அவர்
சென்று சோபாவில் அமர்ந்து
டி.வியைப் போட்டார்.

தன் அன்னையின் மேல் கோபம்
வந்தாலும் மது சாப்பிடாமல் இருப்பதே அவனின் மூளையில் முன் நின்றது.
மதுவைக் கீழே வரவைக்க
எண்ணியவன் ஒரு ஐடியா தோன்ற
"இப்போது நீங்கள் அவளைக் கூட்டி
வரப்போறீங்களா இல்லையா?"
குரலை உயர்த்திக் கேட்டான் கார்த்திக்.

"என்னடா ரொம்பத்தான்
மிரட்டுகிறாய்.. உன் பொண்டாட்டி
வேண்டுமானால் உன் மிரட்டலுக்கு
அடங்கலாம்.. நான் இல்லை" என்று
பதிலுக்குக் குரலை உயர்த்திவிட்டு
மறுபடியும் டி.வி சேனலை மாற்றியபடி
உட்கார்ந்து விட்டார்.

கார்த்திக்கின் சத்தத்தைக் கேட்ட மது
"இப்போது எதற்கு அவர்களை
அதட்டுகிறான்" என்று எழுந்தவள்
தனது மாமியாரின் குரலையும் அவர்
சொன்னதையும் கேட்டாள். "ஆமாம்
இவர் மகன் அடங்கவில்லை
என்றாலும் அடக்கி விடுவான் என்று
இவருக்குத் தெரியாதா?" என்று
மனதிற்குள் மாமியாரைப் புகைந்தபடி
பெட்டில் உட்கார்ந்திருந்தாள்.

இருவரின் சத்தத்தில் வேலுமணியும்
அறையில் இருந்து வெளியே வந்தார்.
தனது மாமியார் சொன்னதைக்
கேட்டவள் மேல் இருந்து எட்டிப்
பார்த்தாள்.

அதைக் கவனித்தக் கார்த்திக்
மதுவைப் பார்க்காததைப் போல
பாவனை செய்து விட்டு "இப்போ
சாப்பாடு எடுத்து வைக்கப்
போறீங்களா இல்லையா?" என்று
மறுபடியும் இரைந்தான்.

மேலே மருமகள் நிற்பதைப் பார்த்த
ஜானகிக்கு மகனின் முயற்சி
புரிந்துவிட்டது. "நானும் காலையில்
இருந்து சமையல் வேலைகளை
முடித்து விட்டு இப்போது தான்
உட்கார்ந்து இருக்கிறேன்.. வேண்டும்
என்றால் நீயே போட்டுக்கொள்" என்று
ஜானகி சொன்னது தான் தாமதம் மது
வேக நடையுடன் தலைக்கு ஒரு
ரப்பர்பான்ட் போட்ட படியே கீழே
வந்தாள்.

என்னதான் கணவனிடம் சண்டையாக
இருந்தாலும் மாமியாரின் பேச்சை
அவளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அவனின் அம்மா
என்றாலும் அவனிடம் அப்படிப்
பேசியதும் அவளை சுரண்டிவிட்டது.
"நான் இருக்கும் போது இவன் ஏன்
அவரைக் கேட்கிறான். அதான்
அவனின் கைகுள் முடித்து என்னை
வைத்திருக்கிறானே.. கூப்பிடுவதற்கு
என்ன?" என்று கணவனையும்
மாமியாரையும் திட்டியபடியே கீழே
வந்தாள்.

கீழே வந்தவள் ஒரு தட்டை
எடுத்து அவனிற்கு உணவை எடுத்து
வைக்க கையை கழுவி விட்டு வந்த
கார்த்திக் அவளிற்கும் ஒரு தட்டை
எடுத்து வந்து வைத்தான். "எனக்கு
வேண்டாம்.. பசியில்லை" என்றவளை
ஜானிகியின் கரம் வந்து தோளைத்
தொட்டு "நாங்களும் இன்னும்
சாப்பிடவில்லை.. நீயும் உட்காரு மது
எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்"
என்று அவளின் தோளைப் பற்றி
கார்த்திக் அருகில் உட்கார வைத்தார்
ஜானகி.. மதுவிற்கு அப்போது தான்
அவன் அவளைக் கீழே வரவழைத்தது
புரிந்தது. என்ன ஒரு ஒற்றுமை
அம்மாவும் மகனும் என்று
நினைத்தபடியே அமர்ந்தாள்.

சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்தவள்
மேலே சென்று அறைக்குள் புகுந்து
கொண்டாள்.. "ஒரு நிமிடம் கோபமாக
இருக்கிறான்.. மற்றொரு நிமிடம்
அப்படியே தணிந்து விடுகிறான்.
இவனை புரிந்து கொள்வது கஷ்டம்"
என்று நினைத்தவள் "ஒரு வேளை
நம்மால் தான் இவனைப் புரிந்து
கொள்ள முடியவில்லையோ" என்று
நினைத்துக் கலக்க முற்றாள்.

காலையில் அவன் சொன்ன
வார்த்தைகள் வேறு அவளைப் போட்டு வாட்டி வதைத்துக் கொண்டே
இருந்தது. நாம் அவன் பின்னால்
சென்றது தான் தப்பு.. அப்படியே
உள்ளே வைத்திருந்தால் கூட இப்படி
அசிங்கப்பட்டு வேதனை கொண்டு
இருக்க மாட்டோம் என்று
எண்ணினாள். இப்போது மட்டும்
என்ன கடமைக்காகச் சாப்பிட
அழைத்து இருக்கிறான் என்று அவளே முடிவு செய்தாள் . எப்படி.... எல்லாம்
இப்படி ஆனது என்று யோசித்த போது
மிதுனா என்று வந்து நின்றது..

போனை எடுத்தவள் மிதுனாவிற்கு
சும்மா முயற்சி செய்யலாமே என்று
அவளிற்கு ஒரு போன் போட்டாள்..
அதிசயமான ரிங் போனது.. ஆனால்
கட் செய்து விட்டாள். கோபத்தை
அடக்கிய மது போனை பெட்டில்
பட்டென்று வைத்துவிட்டு புக்கை
எடுத்து உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு
விட்டுத் தந்தையுடன் பேசிவிட்டு
வந்தக் கார்த்திக் லாப்டாப்பை
உயிர்ப்பித்து உட்கார்ந்தான்.

கரெக்டாக அவர்கள் இருவருக்கும்
நடுவில் இருந்த போன் அடிக்க
கார்த்திக் போனை பார்க்க அதில்
மிதுனா என்ற பெயர் தெரிந்ததைக்
கண்டான். மதுவும் அதே சமயம்
போனைத் தான் பார்த்திருந்தாள்.

போனை மது எடுக்கும் முன் கார்த்திக்
எடுத்து "ஹலோ" என்றான் இறுகிய
குரலில். போனை வைத்துவிட்டாள்.
ஒரு நிமிடம் போனை உடைத்து எறிய
கையைத் தூக்கியவன் அதற்குள்
சென்று கால்லாக்ஸைப் பார்த்தான்.
பின்னர் ஏளனமாக உதட்டை
வளைத்தவன் "இந்தா... புதுமணத்
தம்பதியரிடம் பேச அழைத்திருப்பாய்..
இப்போது போன் செய்திருக்கிறாள்..
போ போ போய் உன்
உயிர்த்தோழியிடம் பேசு.. அவள்
ரொம்ப முக்கியம் அல்லவா.." என்று
அவளின் கையில் போனைத்
திணித்தான்.

வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது
என்று நினைத்த மது, எதுவும்
பேசாமல் அப்படியே உட்கார்ந்து
இருந்தாள். போனை மறுபடியும் அதே
இடத்தில் வைத்துவிட்டு புத்தகத்தில்
ஆழ்ந்தாள் மது.

'திமிர் பிடித்தவள்.. திட்டுகிறேன்..
சாதரணமாக உட்கார்ந்து புக்
படிக்கிறாள் பார்' என்று
எரிச்சலுற்றான். 'நாம் என்ன
சொன்னாலும் அவன் நம்பப்போவது
இல்லை' என்ற நினைப்பே மதுவை
அப்படி உட்காரச் செய்தது.

சிறிது நேரம் கழித்து "எதற்கு
மிதுனாவிற்கு கூப்பிட்டாய்?" என்று
வினவினான். "சொன்னால் நம்பி
விடுவீர்களாக்கும்? என்று முகத்தைப்
புத்தகத்தில் வைத்தபடியேக் கேட்டாள்.

"சொல்லேன்.. எனக்கும் போர்
அடிக்கிறது.. என்னதான்
சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன்"
என்று ஏளனமாக சொல்ல மதுவிற்கு
கோபம் வந்துவிட்டது.. "அது
ஒன்றுமில்லை கோயம்பத்தூர்
வருகிறேன் என்றாள் அவள் மாமியார்
வீட்டிற்கு.. அதான் மீட் பண்ணலாம்
என்று அவளைக் கேட்பதற்காகக்
போன் செய்தேன்" என்று சீரியசாக
புக்கைப் படித்தபடிச் சொன்னாள்.

அவன் கோபமாக மதுவை நோக்க
"என்ன நீங்களும் கூட வருகிறீர்களா?"
பார்த்துவிட்டு வருவோம்" என்று
இப்போது கார்த்திக்கை பார்த்துப்
புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

"இனி மிதுனாவிடம் நீ பேசுவதை
என்னால் அனுமதிக்க முடியாது"
என்றான் லாப்டாப்பில் கண்களை
வைத்துக் கண்டிப்பானக் குரலில்.
அவன் சொன்னவுடன் அவனைப்
பார்த்த மது "ஏன் பேசக்கூடாது?"
என்று கையில் இருந்த புக்கை
மூடியபடிக் கேட்டாள்.

"ஏன் என்று உனக்குத் தெரியாதா?"
என்று லாப்டாப்பில் டைப் செய்து
கொண்டே கேட்டவன் "எனக்குப்
பிடிக்கவில்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.

"அதான் ஏன்?" என்று மறுபடியும்
பார்வை மாறாமல் கேட்டாள் மது..
ஆனால் இம்முறை கார்த்திக்கிற்கு
கோபம் வந்துவிட்டது.. "எனக்கு
பிடிக்காததைச் செய்ய வேண்டும்
என்று ஆசை இருந்தால் செய்து
கொள்" என்றவன் "அப்போது உன்
ப்ரண்ட தான் உனக்கு முக்கியம்
இல்லை?" என்று கேள்வியாகப்
பார்த்தான்.

"எனக்கு எல்லாரும் முக்கியம் தான்...
ஆனால் அவள் காதலித்து கல்யாணம்
செய்ததிற்காக அவளை ஒதுக்க
வேண்டுமா? எந்தக் காலத்தில்
இருக்கிறீர்கள் நீங்கள்?" என்று
அவனிடம் பாயந்தாள்.

"இப்போது யார் அவளை ஒதுக்கியது..
கல்யாணம் செய்தது தெரிந்தும் சிவா
அவளையும் அந்தப் பையனையும்
கூப்பிட்டது உனக்குத் தெரியுமா.
அவள் வரவில்லை என்றால் அவளே
பதில் சொல்லி இருக்க வேண்டும்..
போன் கூட பேச மறுத்து
போலீஸ்காரனை விட்டுப் பேசி
இருக்கிறாள்" என்று கடுகடுத்தான்.

மேலும் "சரியான சுயநலவாதி" என்று
பல்லைக் கடித்தான்.

"அவள் எந்தச் சூழ்நிலையில் என்ன
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
நமக்கு என்ன தெரியும்?" என்று மது
மிதுனாவின் பக்கம் பேச
கார்த்திக்கிற்கு கைமுஷ்டி எல்லாம்
இறுகியது.

"நமக்கு என்று சொல்லாதே.. அவளை
அனுப்பி வைத்த உனக்கு தான் அவள்
என்ன சூழ்நிலை.. மண்ணாங்கட்டி
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
தெரியும் தான்" என்று எரிச்சலுடன்
சொன்னான்.

"நான் ஒன்றும் அவளை அனுப்பி
வைக்கவில்லை" என்று மது பல்லைக்
கடிக்க "இப்போது தான் நான் பார்க்கப்
போகிறேன் என்று சொன்னாய்?"
என்று சாதரணாமாக அவளைப்
பார்த்துக் கேட்டான்.

மது தான் ஏன் அப்படிச் சொன்னேன்
என்று விளக்க.. "ஆங்.. நம்பிட்டேன்"
என்று கார்த்திக் சொல்ல மது
படுக்கையில் இருந்து எழுந்து பெட்டை சுற்றி வெளியே செல்லப் பார்த்தாள்..
ஆனால் மது கார்த்திக்கை கடக்கும்
போது கார்த்திக்கின் கரம் அவள்
கரத்தை பலமாகப் பற்றியது.
 

Yaazhini madhumitha

Well-Known Member
மது அவனைத் திரும்பிப் பார்க்க
"பதில் சொல்லிவிட்டுப் போ" என்றான்
அவளை நேராகப் பார்த்து. "என்ன
பதில்... முதலில் கையை விடுங்க"
என்று மது கையை உருவப்
பார்த்தாள்.

ஆனால் கார்த்திக் விடாமல் மதுவின்
கையைப் பிடித்து இருந்தான். "ஓ....
நான் தொட்டா உனக்கு அவ்வளவு
கஷ்டமா இருக்கா?" என்று கையைப்
பிடித்தபடியே எழுந்தவன்
வேண்டுமென்றே அருகில் சென்று
ஒரு இன்ச் இடைவெளி விட்டு அவளை
நகர விடாமல் நின்றான். மதுவும்
தன்னவன் அவ்வளவு அருகில்
நிற்கவும் பழைய எண்ணங்கள்
எழுந்து எதுவும் பேச முடியாமல்
நின்றாள். சில நொடிகள் அப்படியே
கடக்க தன்னைச் சமாளித்தவள்
"என்ன பதில் வேண்டும் உங்களுக்கு?"
என்று அவனை முறைத்தபடிக்
கேட்டாள்.

"மிதுனாவிடம் இனிப் பேசுவது பற்றி"
என்று கார்த்திக் சொல்ல "ஆமாம்
இப்போது டெய்லியும் பேசிக்கொண்டு
இருக்கிறேன் பார்.." என்று மது
மனதில் நினைத்தாள். மிதுனாவின்
மீது கோபம் இருந்தாலும் என்ன
நடந்தது என்று தெரியாமல்
மிதுனாவின் மீது முழுக் கோபத்தைக்
காட்டவும் முடியவில்லை. ஏனென்றால்
எல்லாவற்றையும் சொல்லுபவள்
இதை மறைத்திருக்கிறாளே என்று
மதுவின் மனம் மிதுனாவிற்காகவும்
யோசித்தது.

"நீ இவ்வளவு யோசிப்பதைப்
பார்த்தால்" என்று கார்த்திக்
ஆரம்பிக்க "ஆமாம்.. நீங்கள்
நினைப்பது சரிதான்.. நீங்கள் சிவா
அண்ணாவிற்காக இப்படிப் பேசும்
போது நான் ஏன் மிதுனாவிற்காக
யோசிக்கக் கூடாது.." என்று கேட்டாள்.

"நான் சிவா இப்படி காதல் என்று வந்து
நின்றிருந்தால் அவர்கள் வீட்டில் பேசி
இருப்பேன்.. ஒத்துக்கொள்ளவில்லை
என்றால் வெயிட் பண்ண
சொல்லியிருப்பேன்.. உன்னை மாதிரி
அனுப்பி வைத்து இருக்க மாட்டேன்..
சிவா மிதுனாவைப் போல சென்று
இருந்தால் கூட அவனை முதலில்
நீ செய்தது தவறு என்று திட்டிவிட்டுத்
தான் அவனிடம் அடுத்து என்ன என்று
பேசியிருப்பேன்.. உன்னை மாதிரி
எல்லாவற்றிருக்கும் துணை
செல்பவன் என்று நினைத்தாயா
என்னை" என்று கர்ஜித்தவனின்
கண்கள் சிவப்பேறியது.

"நான் என்ன சொன்னாலும் நீங்கள்
என்னை நம்பப் போவது இல்லை
விடுங்கள்.. ஆனால் மிதுனா
என்னிடம் பேசினால் நானும்
பேசுவேன்" என்றாள் அவனிடம்
விடாப்பிடியாக.

"சரி உன் இஷ்டம் போல இரு.. ஆனால்
என் கண் முன் இனி வராதே.." என்று
அடிக்குரலில் அழுத்தமாகச்
சொன்னவன் அவளை விலக்கித்
தள்ளிவிட்டுச் சென்று விட்டான்.
மதுவும் அப்படியே நின்றுவிட்டாள்.

இரவு வந்தவன் மதுவை ஏறிட்டுக்
கூடப் பார்க்கவில்லை.. சாப்பிடும்
போது கூட அவள் எடுத்து வைக்க
வந்த போது தன் அம்மாவிடம் திரும்பி
"அம்மா... அந்த சாம்பாரை இங்கு
நகத்துங்க" என்று அவள் அவனுக்கு
பரிமாற வந்த உணவைத் தவிர்த்தான்.
அவள் எடுத்து வைப்பது கூடப்
பிடிக்காதவனாய் நடந்தான்.

மது தன் மாமியாரின் முன்னால்
முகத்தை மறைக்கச் சிரமப்பட்டாள்.
கண்டுகொண்டால் அவர் வேறு
எதையாவது யோசிப்பார் என்று
நினைத்தாள். இரவு அறைக்குள்
நுழைந்தவனும் எதையும் கண்டு
கொள்ளாமல் லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டான்.

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல...
மதுவை நிமிர்ந்து கூடப்
பார்க்கவில்லை கார்த்திக்.. மதுவிற்கு
கஷ்டமாக இருந்தாலும் எதையும்
வெளிக்காட்டமலே இருந்தாள்.

அடுத்த நாள் விடியற்காலை ஐந்தரை
மணிக்குக் கார்த்திக்கின் போன்
அடித்தது.. போன் அடித்ததில் மதுவும்
விழித்துவிட்டடாள்.

போனை எடுத்தப் பார்த்தவன்
டக்கென்று போனை அட்டெண்ட்
செய்து காதில் வைத்து "ஹலோ..
சொல்லுங்க மாமா.. என்ன இந்த
நேரத்தில்..." என்று பேசினான்.
மதுவிற்கு யார் யார் என்று அடித்துக்
கொண்டது மனது. அவன் பேசுவதைப்
பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

"........."

"சரி வரோம் மாமா" என்று போனை
அணைத்தவன்.. கட்டிலை விட்டு
எழுந்து கீழே சென்றான்.. மதுவும்
எழுந்து அவன் பின்னாடியே குழந்தை
அன்னையின் பின்னால் செல்வது
போலச் சென்றாள். மது வருவதைப்
பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.
கீழே வந்து தன் பெற்றோர்களின்
அறையைத் தட்டினான். அவர்களும்
இந்த நேரத்தில் என்ன என்று
கதவைத் திறந்தனர்.

தன் அப்பாவைத் தனியே அழைத்துக்
கொண்டு போனவன் "அப்பா மதுவின்
தாத்தா இறந்துவிட்டாராம்.. இப்போது
தான் மதுவின் அப்பா போன் செய்து
சொன்னார்.. ஹார்ட் அட்டாக் என்று
சொன்னார்" என்று பொறுமையாகச்
சொன்னான்.

"என்னப்பா சொல்ற.." என்று தன்
அதிர்ச்சியை முகத்தில் காட்டியவர்
"மதுவிடம் சொல்லிவிட்டாயா" என்று
வினவினார்.

"இன்னும் இல்லைப்பா" என்று தன்
பின்னங்கழுத்தைத் தேய்த்தபடிச்
சொன்னான். அவனிற்குத் தெரியும்
தாத்தா என்றால் அவள் எப்படி
பாசத்தால் உருகுவாள் என்று.
அவளிடம் அதைச் சொல்லும் தைரியம்
அவனிடம் இல்லை.

இருவரும் உள்ளே வர மதுவும்
ஜானகியும் ஏதோ பேசிக் கொண்டு
இருந்தனர். இருவரின் முகமுமே
கேள்வியாய் இவர்களைப் பார்த்தது.
தன் மனைவியின் அருகில் சென்ற
வேலுமணி "ஜானகி நம் மதுவின்...
தாத்தா இறந்துவிட்டாராம்" என்று
பொறுமையாக எடுத்துச் சொல்ல
சொல்ல மது அதிர்ச்சியில்
உறைந்துவிட்டாள். ஒரு நிமிடம்
மூச்சடைக்க நின்றவளால் அசையக்
கூட முடியவில்லை.

ஜானகி அம்மாள் அவளைத் தொட்ட
போது தான் சுயநினைவிற்கு
வந்தவளாய் "அத்தை... தா.. தாத்தா..
தாத்தா" என்று கண்களில்
கண்ணீருடன் அவரின் மேல் சாய்ந்து
விக்கினாள். மேலே சென்ற கார்த்திக்
அவள் எப்படியும் தங்க நேரும் என்று
அவளின் துணிகள் சிலதை பையில்
எடுத்து வந்தான்.

கார்த்திக், மது, வேலுமணி, ஜானகி
ஆகியோரும் கிளம்பி விட்டனர்.
மதுவின் வீட்டை அடைந்ததும், மது
இறங்கி ஓட உள்ளிருந்து வந்த
உமாவும் ராதாவும் மதுவைக் கட்டிக்
கொண்டு அழுதனர்.

பிறகு உள்ளே வந்து தன் பாட்டியைப்
பார்த்த மதுவிற்கு மேலும் அழுகை
வந்தது.. உள்ளே கண்ணாடிப்
பெட்டியில் வைத்திருந்த தாத்தாவைப்
பார்க்கையில் சின்ன வயதில் இருந்து
இப்போது வரை அவருடன் இருந்தது
நினைவு வர மதுவிற்கு வேதனையாக
இருந்தது.. போனவாரம் தன்னைப்
பார்க்க வந்தவர் இன்று மாலையுடன்
படுத்திருப்பதைக் கண்டவளுக்குத்
தாங்கவே முடியவில்லை.

"உன் குழந்தைகளையாவது பார்த்து
விட்டு போய் இருக்கலாம்.. இப்படி
அவசரமாகச் சென்று விட்டாரே" என்று
மதுவைப் பிடித்து பாட்டி அழ...
மதுவிற்கு அன்று வரை இருந்த எல்லா
துயரமும் வெடித்து சத்தம் போட்டு
அழுதுவிட்டாள். மதுவின் சத்தம் கேட்டு
உள்ளே வந்து அனைவரும் அவளை
தேற்றினர். அந்த நேரத்திலும் மதுவின்
கண்ணைத் துடைத்து விட்டுப் பாட்டி
பேத்தியைச் சமாதானம் செய்ய
கையை நெஞ்சின் மேல் வைத்து
அழுதாள் மது.

வருண் தண்ணீர் எடுத்து வந்து தந்து
அக்காவை சமாதானம் செய்தான்.
கார்த்திக்கிற்கு அவள் அப்படி
அழுவதைப் பார்க்கவே முடியவில்லை.
எல்லோரும் அவளைச் சுற்றி கூடி
இருக்க கார்த்திக்கினால் அவளை
நெருங்க முடியவில்லை.. ஏதோ மனது
அளவிலும் தூரம் சென்றது போல
இருந்தது அவனுக்கு. அவளைச்
சமாதானம் செய்துவிட்டு எல்லாரும்
கலைய கார்த்திக்கும் சுந்தரமூர்த்தி
திருமுருகனோடு வெளியே வந்து
நின்றுவிட்டான். அவர்களுடன்
நின்றுவிட்டானே தவிர மனம் எல்லாம்
தன்னவளைச் சுற்றியே இருந்தது.
பிறகு காலை ஆறு மணிக்கு பிறகு
எல்லா வேளைகளையும் தொடங்கினர்.

கார்த்திக் வீட்டு மாப்பிள்ளையாய்
எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று
நடத்தினான். உறவினருக்கு
தெரிவிப்பது, சாப்பாட்டிற்கு சொல்வது
என இறுதிக் காரியத்திற்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்தான்.

சண்முகம் அய்யாவின் இறுதிக்
காரியங்கள் முடிய, வீட்டில் இருந்த ஒரு
சில உறவினர்களும் ஞாயிறு கருப்பு
முடிந்து கிளம்பிவிட்டனர்.
காரியங்களுக்கு நிலா அரவிந்த்
மற்றும் அரவிந்துடைய பெற்றோர்,
துரைசாமி பார்வதி தம்பதியினர் வந்து
சென்றனர்.

மேலும் ஒரு வாரம் முடிந்து ஜானகி
கிளம்ப "அத்தை நான் இன்னொரு
பத்து நாள் இருந்துட்டு வரேனே" என்று
தன் பெட்டில் அமர்ந்து இருந்தபடியேக்
கேட்ட மருமகளை யோசனையாய்ப்
பார்த்தார் ஜானகி.

"சரி மது.. உன் இஷ்டம் போல செய்.."
என்றவர் மதுவின் அருகில் வந்து
அவளின் தலையை வருடியவர் "பார்
மது கணவன் மனைவி சண்டை
எல்லாம் சகஜம் தான் டா.. அவன்
பிடிவாதக்காரன் என்று எனக்கும்
தெரியும்.. ஆனால் அவன் அளவு
அன்பாகவும் இருக்க முடியாது டா..
அதற்காக அவனைச் சகித்துக்
கொண்டு போ என்று நான்
சொல்லவில்லை. ஆனால் இப்படி நீ
இங்கேயே இருந்தால் இன்னும் தான்
விலகல் வரும்.. கோபமும் வரும்.. அது
எல்லா ஆம்பிளைகளின் இயல்பும் கூட.
அதனால் சீக்கிரம் வந்து விடு.. நீ
இல்லை என்றால் எனக்கு போர்
அடிக்கும்" என்று மருமகளின்
தாடையைப் பிடித்துவிட்டு கீழே
இறங்கி வந்தார்.

அவர்களை கூட்டிப் போக வந்தக்
கார்த்திக் தன் அன்னை மட்டும்
வருவதைக் கண்டு மதுவைப்
பார்த்தான்.

மது அவனின் பார்வையை எற்காது
வேறு எங்கோ பார்த்தபடி நின்று
இருந்தாள். மகனின் பார்வையை
புரிந்து கொண்ட ஜானகி "மது ஒரு
பத்து நாள் இருந்து விட்டு
வருகிறாளாம் கார்த்திக்" என்று
சொல்ல, ஏன் அதை அவள் சொல்ல
மாட்டாளா என்று மனதிற்குள்
நினைத்தவன் "சரி அம்மா" என்று
அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தன்
அன்னையை அழைத்துக் கொண்டு
கிளம்பிவிட்டான்.

திரும்பி உள்ளே வந்தவள் பாட்டியை
நாடிச் சென்றார். அவரைப் பார்க்கத்
தான் மதுவிற்கு கஷ்டமாக இருந்தது.
பாட்டியுடன் அவ்வளவு
அன்னியோன்யம் ஆக இருப்பார்
தாத்தா என்று நினைத்தாள். அவர்
இல்லாமல் பாட்டி மருகுவது
அனைவரையும் வாட்டியது. அவரிடம்
சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டு
இருந்தாள் மது.

"உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன
பிரச்சனை கண்ணு" என்று பாட்டி
வினவ மதுவிற்கு தூக்கிவாரிப்
போட்டது.

"ஒன்றுமில்லையே பாட்டி" என்று மது
அதிர்வை மறைத்தபடி சொல்ல "ஏன்
மதுமா பொய் சொல்ற.. அன்னிக்கு
வீட்டிற்கு வந்தபோதே உன் தாத்தா
என்னிடம் 'மதுவிற்கும்
கார்த்திக்கிற்கும் சண்டை போல..
இருவரின் முகமும் சரியில்லை' என்று
சொன்னார்.

நான் தான் உன் தாத்தாவிடம் 'ஏதாவது
சின்ன ஊடலாக இருக்கும்..
சரியாகிவிடும்..' என்று சொன்னேன்..
ஆனால் இன்னமும் சரியாகவில்லை
போலயே மது.. நானும் இங்கு வந்த
நாளில் இருந்து பார்த்துக் கொண்டு
தான் இருக்கிறேன்" என்று மதுவின்
முகத்தை உற்று நோக்கிப் பேசினார்.

மது பேசாமல் இருக்க "நீ இங்கு
இருந்தால் அந்தப் பையனிற்கு
இன்னும் தானே கோபம் வரும்..
அதற்கு என்று பாட்டி விரட்டுகிறேன்
என்று நினைக்காதே.. உன் இஷ்டம்
போல இங்கு இரு.. ஆனால் சண்டை
போட்டுவிட்டு இருக்காதே.. அதனால்
அந்தப் பையனிடம் கோபத்தை
வளர்த்துக் கொண்டு இருந்து
விடுவாய்.." என்று கண்டிப்புடன்
பேசியவர் "அந்தப் பையன் தங்கம்
மது.. சீக்கிரம் பேசிக் கொள்ளுங்கள்"
என்று பேசி முடிக்கையில் பாட்டியின்
குரலில் சற்று வருத்தம் இருந்தை மது
உணர்ந்தாள். "சரி பாட்டி" என்று தன்
அறைக்கு வந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள் "இந்த நல்ல
செய்தியைக் கேட்காமல்
போய்விட்டார்களே தாத்தா" என்று
வயிற்றைத் தடவினாள். கார்த்திக்கை
நினைத்தவள், 'சீக்கிரம் வீட்டுக்கு வா
என்று கூடச் சொல்லவில்லையே..
வீட்டிற்கு போனால் மட்டும் என்
முகத்தில் விழிக்கப் போவது இல்லை'
என்று நினைத்தவளுக்கு முதல்
முறையாக கோபம் வந்தது.

'மாப்பிள்ளை பரவாயில்லை நன்றாக
பழகுகிறார்.. நல்ல பொறுப்பான
பையனும் கூட' என்று தன்
அப்பாவிடன் காரியத்திற்கு வந்தவர்
யாரோ சொன்னது நினைவு வந்தது.
'பெரிய்ய்ய்யய மாப்பிள்ளை' என்று
கையில் இருந்த தலையணையைத்
தூக்கி எறிந்தவளுக்கு கோபமும்
அழுகையும் ஒரு சேர வந்தது.
அவனே இனி வந்து பேசட்டும்
என முடிவெடுத்தவள் அழுகக் கூடாது
என்று முடிவு செய்துவிட்டு
படுக்கையில் சாய்ந்தாள்.

அதேநேரம் கார்த்திக்கும் தன்
அறையில் குறுக்கும் நெடுக்குமாக
நடந்து கொண்டு இருந்தான். 'தவறு
எல்லாம் தன் மேல் வைத்துக்
கொண்டு மூஞ்சியைத் திருப்புகிறாள்
ராங்கி' என்று நினைத்து பல்லைக்
கடித்தான்.

வேலுமணி வேறு கார்த்திக் வீட்டிற்கு
வந்தவுடன் "கார்த்திக் முடிந்தவரை
மதுவை சீக்கிரம் கூட்டி வரப்பார்..
முன்னாடி எப்படியோ ஆனால்
இப்போது அவள் இந்த வீட்டுப் பெண்.
அவள் அழுதவுடன் அவள் வீட்டில்
எப்படி எல்லோரும் எப்படித்
தாங்கினார்கள் என்றுப்
பார்த்தாயல்லவா.. நானும் இந்த
விஷயத்தில் மூக்கை நுழைக்கக்
கூடாது என்று நினைத்து இருந்தேன்..
இப்படியே விட்டால் இருவரும்
எங்களை எல்லாம் மன அழுத்தத்திற்கு
ஆளாக்கிவிடுவீர்கள் போல.. நான் நீ
பிறந்த பிறகு திட்டியதற்கே உன்
அம்மா உன்னைத் தூக்கிக் கொண்டு
அவள் அம்மா வீட்டிற்குச் சென்றாள்..
ஆனால் இந்தக் காலத்தில் நீ கை
நீட்டியும் அவள் அமைதியாக
இருக்கிறாள்.. இந்த மாதிரி
பொண்டாட்டி உனக்குக் கிடைப்பது
கஷ்டம் எங்களுக்கும் இப்படி ஒரு
மருமகள் கிடைப்பதும் கஷ்டம்...
சீக்கிரம் கூட்டி வருகிற வழியைப் பார்"
என்று கூறிவிட்டு அறைக்குள் புகுந்து
விட்டார். யாரும் தன்னை அட்வைஸ்
பண்ணாமல் நன்றாக இருந்தவனுக்கு
இப்போது ஒருவர் அதுவும் தந்தையே
அட்வைஸ் தருவது அவமானமாக
இருந்தது. அந்தக் கோபமும் மதுவின்
மேல் திரும்பியது.

"ஏதோ அன்னிக்குப் பெருசா பேசினா...
நீங்க இல்லாம எப்படி அம்மா வீட்டிற்கு
போறதுன்னு. இன்னிக்கு அங்கேயே
இருந்துட்டு என்னப் பண்றாலாம்.
இவனால நான் அட்வைஸ் வாங்க
வேண்டியாதா இருக்கு" என்றவனுக்கு
கோபம் கோபமாக வர சிகரெட்டை
எடுத்தான். அதுவும் "சிகரெட்
வேணாமே" என்று அவள்
சொல்லுவதை நியாபகத்தைக்
கொடுக்க ஆத்திரத்தில் தூக்கி
அதையும் எறிந்தான்.

'சிவா சிறு வயதில் இருந்தே நண்பன்..
சிவாவின் வீட்டில் கார்த்திக்கை
இன்னொரு மகன் போலவே பார்ப்பர்.
அப்படி இருக்க சிவாவின் குடும்பத்தை
இப்படித் தலை குனிய வைத்து
விட்டாளே இந்தப் பெண் மிதுனா...
இவள் அவளிற்கு சப்போர்ட் வேறு.
என்னிடமும் மறைக்கிறாள்' என்று
ஆத்திரத்தோடு வந்து படுக்கையில்
விழுந்தான்.

"பெரிய்யயயய ஊரில் இல்லாத
மருமகள்.. இவர் வேறு" என்றுத் தன்
தந்தையை நினைத்தான் கார்த்திக்.
அவள் பக்கத்தில் இல்லாதது வேறு
அவனை இம்சித்தது. எப்போதுமே
ஈவ்னிங் வந்தவுடன் ஓயாமல் பேசி
சேட்டை செய்பவள் இன்று முகத்தைக்
கூடப் பார்க்காமல் திருப்பியது
அவனுக்கும் ஏதோ மாதிரி இருந்தது.
பேசாமல் இருந்தாலும் அவள் தூங்கிய
பின்பு அவளை பார்த்துக் கொண்டு
இருந்த பல நாட்களும் நினைவில்
எழுந்தது.

"அவளின் அன்பை மிஞ்சிய
சொர்க்கமும்...
அவளின் பிரிவை மிஞ்சிய
நரகமும்..
இவ்வுலகில் எங்கு தேடினாலும்
கிடைக்காது..."

என்பதை உணர்ந்தான் கார்த்திக்.
அவள் வீடு வந்ததும் அவளே வந்து பேசட்டும் என்று தூங்கினான். ஆனால்
கூடிய விரைவில் அவளிற்காக
அலைந்து தான் கலங்கப் போவதை
அப்போது கார்த்திக் அறியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top