உனக்காகவே நான் - 8

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 8
Heroin.jpg

புன்னகைத்துவிட்டு"சரிங்க அங்கிள்."என்றுவிட்டு, 'நான்தான் பாட்டியை பார்த்துக் கொள்ளும் வயதிலிருக்கிறேன்.ஆனால் இங்கு அங்கிள் வேறு ஏதோ சொல்கிறாரே'என்று வியப்புடன் உள்ளே நுழைந்தாள் மித்ரா.


பாட்டியின் அறையினுள் நுழைந்ததும்,அவர்கள் உள் நுழையும் அரவம் கேட்டு படித்துக் கொண்டிருந்த ராமாயண புத்தகத்தை மூடி வைத்துவிட்டு “வா மா” என்று புன்னகையுடன் அழைத்தார் பார்வதி.


புன்னகைத்தவிதமாக வந்த மித்ரா , ‘பாட்டி தூங்கிக் கொண்டிருப்பார்கள்’ என்று எதிர்பார்த்தாள்,ஆனால்70வயதிலும் மூக்கு கண்ணாடிப் போட்டுக் கொண்டு விரும்பியதைப் படிக்கும் அளவு இளமையுடன் இருப்பது அவளுக்கு ஆச்சரியமே.அதனை மறைத்து “ எ..எப்படி இருக்கிறீங்க பாட்டி” என்றாள் மித்ரா.


“நல்லா இருக்கேன்மா.காலையில சாப்பிட்டு வந்தீங்களா ஜீவா..?”என்று தன் மகனிடம் விசாரித்தார் பார்வதி.


“சாப்பிட்டோம் மா” என்றார் ஜீவானந்தம்.


“உட்காரு மா..உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்குது.”என்று அருகில் வந்த மித்ராவின் முகவாயை வருடிய வண்ணம் கேட்டார் பாட்டி.


அவளுக்குத் தெரிந்தவரையில் ‘தன்னைப் பாட்டி பார்த்ததே இல்லை என்பது மித்ராவிற்கு தெரியும்’ அதனால் எந்தத் தயக்கமுமின்றி புன்னகையுடனே அமைதியாக இருந்தாள் மித்ரா.


மின்னலென ஜீவானந்தம் மித்ரா அறியாமல் திரும்பி தன் அம்மாவைப் பார்த்தார்.அந்தப் பார்வையில் எதைக் கண்டாரோ பார்வதி பாட்டி ,உடனே பேச்சை மாற்றி “உன் பெயரென்ன சொன்ன மா?”என்று மித்ராவின் கைகளை பற்றிய வண்ணம் கேட்டார்.


“மித்ரா பாட்டி” என தன் கொஞ்சும் மொழியில் சொன்னாள் மித்ரா.


“காலையிலே நீ வருவதாகவும்,இங்க கொஞ்சம் காலம் தங்க போவதாகவும் ஜீவா சொன்னான்.உனக்காக மாடியிலிருக்கும் குருவின் அறையைத் தயார் செய்யச் சொல்லிருக்கிறேன் மித்ரா.”என்றுவிட்டு “மரகதம்” எனச் சிறிது சத்தமிட்டு அழைத்தார் பாட்டி.


“வந்துட்டேங்க மா” என்று ஒரு 45வயது இருக்கக்கூடிய ஒரு அம்மா வந்தார்கள்.


“துரைக்கிட்ட பாப்பாக்கு மாடியிலிருக்கும் அறையைத் தயார் செய்யச் சொல்லியிருந்தேன்.சுத்தம் செய்துவிட்டானா?என்று கேட்டு வா.வரும்போது ஜீவாக்கும் பாப்பாக்கும் காபிப் போட்டு எடுத்துவா” என்று வந்த மரகதத்திடம் பாட்டி சொன்னார்.


“சரிங்க மா” என்றுவிட்டு மரகதம் சென்றுவிட்டார்.


“பாட்டி.இவங்கதான் வள்ளியின் அம்மா வா” என மனதில் தோன்றியதை கேட்டாள் மித்ரா.


“ஆமா.மித்ரா.என்ன வள்ளி சொல்லி அனுப்பினாளா?”என்று கேட்டார் பாட்டி.


“ஆமா பாட்டி.அம்மாவையும் பாட்டியையும் கேட்டதாக சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினாள்” என்றாள் மித்ரா.


புன்னகைத்துவிட்டு “ துடிப்பான பெண் வள்ளி.பள்ளியில் சேர்த்துவிட்டால் படிக்கமாட்டேன் என்று வந்துவிட்டாள்.மரகதமும் சொல்லி பார்த்துவிட்டு விட்டுவிட்டாள்.படிப்பும் அவ்வளவாக வராததால் நாங்களும் விட்டுவிட்டோம்.ஆனால் சமையலில் படு சுட்டி.அவள் சமையலுக்கு இதுவரை ஈடாக யாருமில்லை.எங்க குடும்பம் என்றால் அவ்வளவு பிரியம் அவளுக்கு.”என்று வள்ளியின் பெருமையை பெருமிதத்துடன் சொன்னார் பார்வதி.


“ஓ...”என்ற மித்ராவின் கண்களில் வியப்பின் சாயல் அதனோடு வள்ளியின் மதிப்பு இன்னும் உயர்ந்தது. “ஆமாம் பாட்டி.ரொம்பவும் பாசமுள்ள பெண்” என்றாள் மித்ரா.


அதற்குள் காபியுடன் வந்த மரகதம் அவர்களுக்குக் காபி கொடுத்துவிட்டு, “ துரை ஐயா மேல் அறையத் தயார் செஞ்சுட்டாரு அம்மா.”என்றார் மரகதம்.


“சரி மரகதம்.பாப்பா பெயர் மித்ரா.கொஞ்ச நாள் இங்கதான் இருக்க போரா.”என்றார் பார்வதி.


மரகதமும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். “ஆன்டி வள்ளி உங்கள கேட்டதா சொல்ல சொன்னா.எப்படி இருக்கீங்க ஆன்டி.”என்றாள் மித்ரா.


“எனக்கென்ன மா.நா ரொம்பவும் நல்லா இருக்கேன்.இங்க இருக்கிறவர நா எதுக்கு கலைப்படணும் சொல்லு.அவளும் சந்தோஷமாகத்தான் இருப்பானு எனக்கு நல்லாதெரியும்” என மகிழ்ச்சியுடன் சொன்னார் மரகதம்.


அங்கிளின் குடும்பத்தை எண்ணி பெருமிதம் கொண்டாள் மித்ரா.


இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த புன்னகைத்தவிதமாக இருந்தனர் பார்வதியும் ,ஜீவானந்தமும்.


“சரி மரகதம் பாப்பாவோட பெட்டிகளையெல்லாம் காரிலிருந்து அவளது அறையில் வைக்கச் சொல்லி துரையிடம் சொல்லிவிடு.மித்ராவையும் அவளது அறைக்கு அழைத்துச் செல்” என்றார் பார்வதி.


“சரிங்க மா” என்றார் மரகதம்.


“மித்ராமா.பார்த்து மெதுவாக போமா.கால் வலிக்கும் போல் இருந்தால் கீழே இருக்கும் guest room – ஐ தயார் செய்து தர சொல்கிறேன்.என்ன அதில் கொஞ்சம் வசதி இருக்காது.அந்த காலத்து முறைப்படி இருக்கும் அறையல்லவா.மாடியில் இருக்கும் அறைகள் இரண்டும் ரிஷி,குரு ரெண்டுப் பேருக்கும் பார்த்து புதுசாக கட்டியது.அதனால்தான் பாட்டி உனக்கு குருவின் அறையைத் தயார் செய்திருக்கிறார்கள்” என்று தன்னிலை விளக்கமாக அறைகளைப் பற்றி மித்ராவை எச்சரித்துவிட்டுச் சொன்னார் ஜீவானந்தம்.


“சரிங்க..அங்கிள்.இப்போதெல்லாம் அவ்வளவாக வலியில்லை.ஆனாலும் படிகளில் கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்க முடியும்.பரவாயில்லை.கஷ்டமாக இருந்தால் சொல்கிறேன் அங்கிள்” எனப் பாட்டி இருப்பதை மறந்து சொன்னாள் மித்ரா.


“என்னாச்சு மித்ரா.உன் காலுக்கு..”என்றார் பார்வதி.


“அ..அது..வந்து பாட்டி..”என என்ன சொல்வது என்று புரியாமல் ஜீவானந்தத்தை பார்த்தாள் மித்ரா.


மித்ராவிற்கு உதவியாக “அதுவா அம்மா.அது அவள் ஒரு நாள் நன்றாக முட்டியில் இடித்துக் கொண்டாள்.அதனால் கொஞ்சம் காயம் ஏற்பட்டது.முட்டியில் என்பதால் மாடிப் படிகளில் மடக்கி ஏறக் கஷ்டமாக இருக்குமென்று எண்ணிச் சொன்னேன்” என்றார் ஜீவானந்தம்.


“ஓ..அப்படியா.!!?உன்னால் மாடிப் படிகளில் ஏற முடியுமா?இல்லையென்றால் பக்கத்து அறையைத் தயார் செய்யவா?”என்று பரிவாக கேட்டார் பார்வதி.


“இல்ல..இல்ல பாட்டி எதற்குச் சிரமம்.எனக்காக ஏற்கனவே இருக்கும் தயாரான அறையிலே நா தங்கிக் கொள்கிறேன்.ஒருவேளை எனக்குக் கஷ்டமாக இருந்தால் சொல்கிறேன்” எனப் புன்னகை மாறாமல் சொன்னாள் மித்ரா.


“அப்போ சரி மா.ஆனால் கஷ்டம் என்றாலோ?இல்லை வேரெதுவும் தேவையென்றாலோ தயங்காமல் கேள் புரிகிறதா?இது நம் வீடு என்று எண்ணி நீ விரும்பியதைச் செய்ய வேண்டும்!!என்ன??!”என்று அவளுக்கும் சேர்த்து யோசித்து பாசமும் கண்டிப்புமாகப் புன்னகையுடன் சொன்னார் பார்வதி.


“சரிங்க பாட்டி. “ என்று விட்டு கண்டிப்புடன் கூடிய அந்தப் பாட்டியின் அன்பு அவளது அம்மாவின் நினைவை ஏற்படுத்தக் கண்கள் கலங்க,முகத்தை மறைக்கும்விதமாக குனிந்து திரும்பி நடக்கத் தயாராக இருந்தாள் மித்ரா.


“மரகதம் நீ மித்ராவை அவளது அறைக்கு அழைத்துச் செல்”,என்றார் ஜீவானந்தம்.


“சரிங்க ஐயா..வா பாப்பா” என அழைத்துச் சென்றார் மரகதம்.


“நீ ஓய்வெடுத்துக் கொள் மித்ரா.ஜீவா கிளம்பும் போது சொல்லி அனுப்புகிறேன்” என்றார் பார்வதி.


“ஓ..சரிங்க பாட்டி.வரேன் அங்கிள்” என்று குனிந்த தலை நிமிராமல் கையசைத்துவிட்டு மரகத்துடன் நடந்தாள் மித்ரா.


மௌனமாக இருந்த சூழ்நிலையை மாற்றும்விதமாக மரகதம் பேச்சுக் கொடுத்தார். “என்னமா...முகம் ரொம்ப சோர்ந்து இருக்கு.தூங்கிரியா?”என்று பாசத்துடன் கேட்டவிதமாக மாடி அறைக்குப் படிகளில் நடந்தவிதமாக கேட்டார் மரகதம்.


“இல்ல ஆன்டி.இந்தப் படிதான்..கொஞ்சம் கஷ்டமா இருக்கு.இன்னும் ரெண்டு நாள்களில் போட்ட கட்டு பிரித்துவிடலாம் என்றார் டாக்டர்.அது இழுத்துபிடிக்கறது ,கொஞ்சம் இறுக்கமா இருக்கா?அதான்.அதோட கொஞ்சம் தூங்கணும் போலவும் இருக்கு” என தன் மனச் சோர்வை மறைக்கும்விதமாக சொன்னாள் மித்ரா.


“ஓ...பெரிய காயமா?என்ன?கண்ணு.”என்றார் மரகதம்.


“இல்லை இல்லை” என்று அவசரமாக மறுத்து “குணமாகிடுச்சு ஆன்டி.சும்மா கட்டு இருக்கிறதுதான் கொஞ்சம் சாதாரணம் போல் இருக்க முடியவில்லை.அதுதான் வேறெதுவுமில்லை” என்றாள் மித்ரா.


“சரிமா.இதோ இதுதான் உன் அறை.அது அங்க பக்கதுல இருக்குல அது ரிஷி தம்பியோட அறை.குளிர் அதிகம் இருக்கிறது போல இருந்த இந்த ஸ்விட்சை ஆன் பண்ணிக்கோ.இந்த பொட்டிலருந்து கொஞ்சம் சூட்டோடு காத்துவரும்.அப்பறம் இதோ இது அழுத்தினா?வெப்பம் நமக்கு விரும்பினாப் போல வருமாம்.ரிஷி தம்பி ஒரு நாள் சொன்னாரு"எனair conditioner ரிமோடை அவளிடம் தந்தார் மரகதம்.


"சரிங்க ஆன்டி"என்றவிதமாக ரிமோட்டை வாங்கினாள் மித்ரா.பிறகு அந்த அறையிலிருந்த கட்டிலில் அமர்ந்தாள் மித்ரா.


“ஆன்டி நான் கொஞ்சம் தூங்கட்டுமா?”என்று கெஞ்சும் தோனியில் கேட்டாள் மித்ரா.


“சரிமா.நானும் அதுதான் சொல்ல நினைத்தேன்.ரொம்ப சோர்வா தெரியிர.நீ தூங்கு.நான் மதியம் உணவின் போது வந்து கூட்டிட்டு போரேன்” என்றார் மரகதம்.


“சரிங்க ஆன்டி” என்றுவிட்டு தலையணையை சரி செய்து படுத்தாள் மித்ரா.


மரகதம் அழகும்,அமைதியும்,மரியாதையும் தெரிந்த மித்ராவை சில வினாடிகள் பார்த்துவிட்டு ,அவள் முகத்தின் சோர்வில் சொல்ல விரும்பாத கஷ்டம் அவளுள் இருப்பதை உணர்ந்து,அவளது கழுத்துவரை போர்வையை இழுத்துவிட்டு அறையை மூடிவிட்டு கீழே சென்றாள்.


படுத்திருந்த மித்ரா.,சில நிமிடங்கள் கண்களை இறுகமுடி மனதை அமைதிப் படுத்த முயன்றாள். 'முடிந்த அளவு தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நினைத்து முகத்தில் காட்டிவிடாதபடி இருக்க வேண்டும்.மரகதம் ஆன்டி கண்டுபிடித்து என்ன என்ன என்று துருவி கேட்டிருந்தால் பொய் சொல்லமுடியாமல் உளறி அல்லவா?வைத்திருப்பேன்.அதன் பிறகு இங்கும் பரிதாப பார்வைதான் இருந்திருக்கும்.இன்னும் பாட்டியிடம் பேசவே ஆரம்பிக்கவில்லையே!?'என்று தனக்குள் பேசிக்கொண்டவள் எச்சரிக்க உணர்வுடன் இருக்க வேண்டும் என மன உறுதிக் கொண்டு சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.


மித்ரா சென்றதும் ,பார்வதிப் பாட்டி தன் தலையணை அடியிலிருந்த புகைப்படத்தை எடுத்தார். “என்ன ஜீவா.?என்னிடமே உண்மையை மறைக்க முயற்சியா?”என ஜீவானந்ததின் முகத்தைப் பாராமல் புகைப்படத்திலே கண்ணை வைத்துக்கொண்டுக் கேட்டார் பார்வதி.


‘அம்மா கண்டு பிடித்துவிட்டாரே!’என்று எண்ணிய மறுவினாடி, “அம்மா...உண்மையை மறைக்க வேண்டுமென்று நான் எண்ணவில்லை.ஆனால் சூழ்நிலை என்னை அப்படி நடக்கவைத்தது.”என அவசரமாகச் சொன்னார் ஜீவானந்தம்.


“ம்ம்..அவள் முகத்தில் சுந்தரம்-சாந்தி இருவரின் சாயல் கலந்திருக்கிறது.எப்படி நான் கண்டுபிடிக்காமல் இருக்க முடியும் சொல்.அதுவும் சுந்தரம் என் மீது எவ்வளவு அன்பாக இருப்பான்” எனக் கண் கலங்கினார் பார்வதி.


“அம்மா..இதற்குத்தான்..இதற்குத்தான் நான் உங்களிடமிருந்து மறைக்க எண்ணியதும்.முதலில் கண்களைத் துடையுங்கள்” எனப் பரிவாக தன் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கைகளைப் பற்றினார் ஜீவானந்தம்.


"அதுவும் இந்தப் புகைப்படத்தை ஆறு மாதத்திற்கு முன்புதான் தந்தாய்.நான் வாரத்தில் ஒருமுறையாவது பார்க்கும் முகம் இது ஜீவா.எப்படி மறந்திருக்கும் என்று எண்ணினாய்?!... மெலிந்திருக்கிறாள்.அதனால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிவிட்டாயா?இவள் முகத்தைப் பார்த்திருந்தால் இருக்கும் வேதனையெல்லாம் மறைந்துவிடுமே"என்று மீண்டும் அந்தப் புகைப்படத்தை வருடினார் பார்வதி.


“அம்மா.மித்ரா இப்போது அவளைப் பற்றியோ,அவள் குடும்பம் பற்றியோ யாருக்கும் தெரிவதை விரும்பவில்லை அம்மா.யாரும் பரிதாபத்துடன் பார்ப்பது அவளை இன்னும் வேதனையாக்கும் என்று என்னிடம் உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டாள்” எனக் கோர்வையாக ஜீவானந்தம் கூறினார்.


சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.பிறகு “புரிகிறது.சின்ன பெண்.இந்த அளவு மனதெம்புடன் இருப்பதே எனக்கு ஆச்சரியம்தான்.அவள் போக்கிலே சில நாட்கள் விடுவது நல்லது.அதன் பிறகு நம் விஷயம் பேசுவோம்.”என்றார் பார்வதி.


“ஆமாம் மா.அதுவும் ரிஷி இன்னும் நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்கிறான்.குருவிற்கும் இதனால் வருத்தமே.இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டியதுதான்” என்றார் ஜீவானந்தம்.


“ம்ம்..அதுவும் சரி..”என்றவர் திரும்பவும் தன் கையிலிருந்த புகைப்படத்திலிருந்த மித்ராவை வருடி, “ஆறு மாதங்களுக்கு முன் எப்படி இருக்கிறாள்.?!!இப்போது மிகவும் மெலிந்துவிட்டாள்” என வருந்தும் குரலில் கூறினார் பார்வதி.


“ம்ம்..அம்மா மித்ராவிற்கு இருக்கும் வேதனைகளோடு ..,அவளது அத்தை என ஒரு பெண் ,ஆனந்தி என்று பெயர்.அவளும்,அவளது மகனும் ஒரு மாதத்திற்கு முன் மித்ராவின் வீட்டிற்கு வந்தனர்.வந்தவர்கள் வந்த வேலை முடிந்ததும் கிளம்பாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.நானும் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை.வந்தவர்கள் இடம் தெரியாமல் திரும்பவும் போய்விடுவார்கள் என நினைத்தேன்.ஆனால் அவர்கள் மித்ராவிடம் என்ன என்னமோ பேசியிருக்கின்றனர்.ஏற்கனவே சோர்ந்து பலமிழந்து இருந்த மித்ரா ,அவர்களது பேச்சில் மிகவும் வேதனைப் பட்டுவிட்டாள்.சிறிது பயந்து மித்ரா கலங்கியிருக்கும் அந்தத் தருணத்தில் அவளது மகன் ‘ரங்கனை கல்யாணம் செய்து கொள்.அவன் இனி உன்னைப் பார்த்துக் கொள்வான்.நீ எதற்கும் கவலை கொள்ள வேண்டாம்.


இனி உன்னை யார் வந்து பொண்ணுக் கேட்டு கல்யாணம் செய்து கொள்வார்கள்.யார் கல்யாணம் செய்து வைப்பார்கள்’ என சலுகையாக சொல்லிருயிருக்கிறாள் ஆனந்தி.எல்லாம் மித்ராவின் சொத்தின் மீது வைத்த ஆசையால் கேட்ட கேள்வி.கல்யாணம் என்ற வார்த்தையில்தான் மித்ரா வியப்புடன் அவர்களை நோக்கி தன்னிலையுணர்ந்தது.அதனோடு அவளது வயதையும் அறிந்தது.இதுதான் திருமண வயதோ!அதற்கு விருப்பமில்லை என்ற மித்ராவை,அவள் வீட்டிலே இருந்து கொண்டு ஆனந்தி வார்த்தைகளால் வேதனையுற செய்திருக்கிறாள்.யார் மனமும் புண்பட பேசத் தெரியாத மித்ரா அந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் மிகவும் கலங்கிவிட்டாள்.


இவ்வளவு நடந்தப் பிறகுதான் அவள் என்னிடம் அனைத்தையும் சொன்னாள்.அப்போதும் ‘அவர்களை எதுவும் சொல்லிவிட வேண்டாம் அங்கிள்’ என வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.அப்போது அவளைக் கண்டு எனக்குப் பெருமிதமே உண்டானது.பிறகு என்னிடம் மனம் தெளிவுறும் வரை என்னை யாரும் தெரியாதவர் இடத்தில் எனக்கு ஒரு வேலை பார்த்து தரக் கேட்டாள்.அதன் பிறகு ஒருவழியாகச் சமாளித்து சம்மதிக்க வைத்து இங்கே அழைத்து வந்தேன்.அந்த ஆனந்தியும் ர்ரங்கனும் இன்னும் அவள் விட்டிலேதான் இருக்கின்றனர்.அவர்களை நான் சமாளித்துக் கொள்வேன்.நீங்கதான் மித்ராவை பார்த்துக் கொள்ள வேண்டும் மா” என்றுவிட்டு பெரிய மூச்செறிந்தார் ஜீவானந்தம்.


“ என்ன ஆனந்தியா?.இது என்னது புது சொந்தம்.?நீ சொல்வதைப் பார்த்தாள் அவள் ஒரு கணக்குடன்தான் உள் நுழைந்து இருப்பாள் போல இருக்கே!நீ நன்றாக விசாரித்தாயா?அவள் சுந்தரமின் சகோதரிதானா என்று?நமக்குத் தெரிந்து அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளைதானே!?”என்று வியப்பும் கவலையுமாக கேட்டார் பார்வதி.


“விசாரிக்காமல் இருப்பேனா மா?எல்லாம் விசாரித்தேன்.ஆனந்தி சுந்தரத்தின் சித்தி பெண் போலத் தெரிகிறது.அவள் ஒரு புகைப்படம் வேறு வைத்திருந்தாள்.அதில் சுந்தரமும் ,அவனது குடும்பமும் ஆனந்தியின் திருமணத்தில் இருப்பது போல் இருந்தது.சுந்தரம் வீட்டில் சொந்தம் என்று யாரையும் வீட்டிற்கு அழைத்தது இல்லை.எங்கே,காதல் திருமணம் செய்த தன் மனைவி சாந்தியை யாரும்,எதுவும் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி அவன் அவ்வாறு செய்திருக்கிறான்.இன்று ஒரே உறவு என்பது போல் வந்த ஆனந்தியை,மித்ராவாலும் விலக்க முடியாமல் வீட்டில் இருக்க அனுமதித்தாள்.அதன் விளைவுதான் இவை எல்லாம்” என வருத்தத்தின் நடுவே இயம்பினார்.


“மித்ராவின் நிலை புரிகிறது ஜீவா.இதையெல்லாம் நினைத்து நீ வேதனைக் கொள்ளாதே.அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ நிம்மதியாக இரு.அவளுக்கு இந்த இடமாற்றம் மிகவும் அவசியம்.அதையும் அவளே கேட்டிருப்பது அவளின் மன வலிமையை உணர வைக்குது” என ஜீவானந்தத்தை தேற்றும் விதமாக அவரின் கைப்பற்றி கூறினார் பார்வதி.


“பாவம் அம்மா மித்ரா.ஆறு வருடங்கள் குழந்தையில்லாமல் பிறந்த ஒற்றைப் பெண்.அதனால் சுந்தரமும் ,சாந்தியும் அதிகமாகவே பாசம் வைத்துவிட்டனர்.அவர்கள் இனி இல்லை என்பதை அவள் நம்பவே அவளுக்கு எப்படியிருக்கும்!!”எனத் துக்கம் தொண்டையில் அடைக்கும்விதமாக பேசினார் ஜீவானந்தம்.


“நீ வருத்தப்படாத ஜீவா.நாங்க இங்க அவளை எந்த நினைவும் வரவிடாம பத்திரமா பார்த்துகிறோம்.சரியா? “ எனப் பாசமாக ஜீவானந்ததின் கையைப் பற்றினார் பார்வதி.


“தெரியும் மா.ஆனால் ரிஷியிடம் இப்போதிக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மித்ராவிடமும் காட்டிக் கொள்ள வேண்டாம்.அவளைப் பற்றி வீட்டில் இருக்கும் யாரும் கேட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜீவானந்தம்.


“சரி ஜீவா.அப்பறம் குரு எப்படி இருக்கான். ? நன்றாக நடக்க முடிவதாகச் சொன்னாயே?அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கு ஜீவா.ஒரு நாள் முடிந்தால் கூட்டிகிட்டு வா? “ என்று பேரன் மீது இருக்கும் பாசத்தில் ஆசையும் சந்தோஷமாக பேசினார் பார்வதி.


“ம்ம்...இப்போ ரொம்பவே குணமாகிடுச்சு மா.முன் போல நன்றாக நடக்கிறான்.ஆனால் கை மட்டும் சிறிது குணமாகனும்.அடுத்த முறை வரும் போது அழைத்து வருகிறேன்.அதுதான் பேரனும் பாட்டியும் மறக்காம தினமும் ஃபோனில் பேசறீங்களே. “ என்று சிரித்தார் ஜீவானந்தம்.


“என்னதான் இருந்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா?”என்றார் பார்வதி.


"அதுவும் சரிதான் அம்மா.அப்பறம் மாணிக்கம் எப்படி இருக்கிறார்.?”என்று மரகதத்தின் கணவரைப் பற்றி விசாரித்தார் ஜீவானந்தம்.


“ம்ம் நல்லாருக்கான் ஜீவா.மரகதமிருக்க அவனுக்குக் கவலையென்ன.போகும் போது பார்த்துவிட்டு போயேன்” என்றார் பார்வதி.


“சரிமா.இனியாவது மாணிக்கம் ஒழுங்காக இருந்தால் சரி” எனச் சளிப்பாக சொன்னார் ஜீவானந்தம்.


“எல்லம் இருப்பான் ஜீவா.என்ன வள்ளி அவனைத் திரும்பவும் பாசமாக அப்பா என அழைப்பதுதான் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கு.”என்றார் பார்வதி.


“காலம் எல்லாத்தையும் மாற்றும் மா.பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார் ஜீவானந்தம்.


பிறகு சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு மதிய உணவு முடிந்ததும் ஜீவானந்தம் அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்னை கிளம்பிவிட்டார்.


மூன்று நாட்கள் அமைதியுடன் கழிந்தது.மித்ராவும்,பார்வதி பாட்டியும் மிகவும் நெருக்கமாகினர்.அவளை மறந்து சிரிக்க தொடங்கிருந்தாள் மித்ரா.


தினமும் மாலையில் பாட்டியுடன் நடை.பல நாட்களுக்குப் பிறகு எதையும் எண்ணாமல் உறக்கம்.பாட்டியின் புராண கதைகள்.மரகதம் ஆன்டியின் அருமையான சமையல்.மாணிக்கம் அங்கிளின் அன்பான வார்த்தைகள்.மெதுவாக நடந்ததை மறக்கத் தொடங்கினாள்.


மித்ராவை அறிந்திருந்த பாட்டி அவளைத் தனியே இருக்க விடாமல் எப்போது எதாவது சொல்லிக் கொண்டே இருந்தார்.சிலக் கை வேலைப்பாடுகளையும் சொல்லிதர ஆரம்பித்தார் பாட்டி.புதிதாக கற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்ததால் அதையும் நன்றாக கற்றுக் கொண்டாள் மித்ரா.அதனால் நேரம் போவதே தெரியவில்லை.தூங்கும் நேரம் தவிர மாடிக்கு அவள் வந்ததே இல்லை.குன்னூரின் குளிர் மனதுக்கும் உடலுக்கும் இதமாகவே இருந்தது.


அன்று சனிக்கிழமை .இரவு அதிக நேரம் மரகதம் ஆன்டியிடம் சமையல் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் மித்ரா தூங்க நேரமானது.காலையில் தாமதமாக எழுந்த மித்ரா ,குளித்துவிட்டு,வழக்கம் போல் வாய்க்குள் பாட்டு பாடிக் கொண்டே மித்ரா மெதுவாக மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டே தன் நீண்ட கூந்தலை முன்புரம் இழுத்து சரிபார்த்தாள் மித்ரா.கால் கட்டு பிரிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சிறிது வலியிருந்ததால் மெதுவாகத்தான் நடக்க முடிந்தது.


அப்போது"பார்த்து...பொன்னான மேனிக்கு வலிக்க போகுது"என்று ஏளனமான ஆண் குரல் மாடியிலிருந்து வந்ததில் திடுக்கிட்டு திரும்பினாள் மித்ரா.

 

Joher

Well-Known Member
:love::love::love:

ரிஷி தானா????
ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை???
மித்ரா குரு ரெண்டு பேர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்குது போல......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top