பூர்வ - ஜென்மம் - Episode 4 & 5

Advertisement

தனஞ்செயன் ஒரு கட்சியில் இளைஞ்சரணி தலைவராக இருந்தான். இந்த பணி கூழை கும்பிடு போட்டு வாங்கியது அல்ல. எந்த ஒரு சமயத்திலும் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க விரும்பாதவன்.

வயதில் இளமையும் பேச்சில் முதிர்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது. கட்சி வேலைகளை எந்தவித தொய்வும் இன்றி நடத்தினான். மூத்த உறுப்பினர்களுக்கும் இவன்பால் ஒரு மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது.

தனஞ்செயனின் குடும்பம் மிகச்சிறியது. தந்தை 15 வருடங்களாக கட்டிட கான்ட்ராக்ட் தொழில் நடத்தி வருகிறார். தாய் இரண்டு வருடங்களுக்கு முன் தவறிவிட்டார். தங்கை கொடிமலர் B sc மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள்.படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று தந்தை அவளுக்கு ஏற்ற வரனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்.

Mr .ரகுராமன் புதிதாக வந்த கேஸ் பைலை புரட்டி கொண்டிருந்தார். அது ஒரு கிரிமினல் கேஸ். பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் இதில் பங்கு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து செய்தி வந்ததை அடுத்து இதை விசாரிக்க தொடங்கினர்.

கேஸ் பைலை படித்து பார்த்து சில சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார். அதன்படி அனைவருக்கும் அவரவர்கள் விசாரிக்க வேண்டிய இடம், முறை, மனிதர்கள், சேகரிக்க வேண்டிய விஷயங்களை பற்றி எடுத்துரைத்தார். ஓரிருவர் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டனர்.

ஒரு அரசியல் பிரமுகரின் வீட்டு வேலைக்கார பெண்மணியை விசாரிக்கும் பொறுப்பு ரித்திக்காவுக்கு வழங்கப்பட்டது. கோபிக்கு கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நபரை விசாரிக்க உத்தரவு.

ரித்திகா இரண்டு நாட்களாக அந்த பெண்மணியை தொடர்கிறாள். ஆனால் தனியாக பிடிக்கமுடியவில்லை. இன்று மூன்றாவது நாள், அந்த அரசியல் பிரமுகரின் வீட்டிற்கு வெளியே காத்துக்கிடக்கிறாள். அந்த நேரம் இரண்டு இன்னோவா வண்டிகள் வந்தது. சுமார் 15 பேர் இறங்கி வீட்டுக்குள் சென்றனர். அதில் தனஞ்செயனும் ஒருவன். அனைவரும் ஒரே நிற ஆடையில் இருந்ததால் அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை.அவன் பார்த்துவிட்டான். ஆனால் இருந்த சூழ்நிலை மௌனமாக உள்ளே சென்றுவிட்டான். அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளத்தில் அலைஅடித்தது. சந்தர்ப்பம் கிடைத்தவுடன் மாடியில் வந்து நின்று பார்த்தான்.

Thodarum...4

அந்த பெண்மணி தற்போது வீட்டில் வேலை செய்யும் மற்ற வேலைக்காரர்களை மேற்பார்வை செய்யும் பணியை செய்து கொண்டிருந்தாள். வந்த கூட்டத்தை பார்த்த ரித்திகா இன்றும் வேலையை தொடங்கமுடியாதே என்று எண்ணினாள். பிறகு சாயந்திர வேளை அவள் வீட்டுக்கே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவில் கிளம்ப தயாரானாள். அவள் வண்டி டயரில் காற்றை பிடிங்கி விட்டு நின்று கொண்டிருந்தாள். ஒரு அரசியல் பிரமுகரின் வீட்டுக்கு அருகே எந்த காரணமும் இல்லாமல் நிற்க முடியாது என்பதால் செய்த செயல். அங்கிருந்து கோபிக்கு போன் செய்தாள். அவன் வர 20 நிமிடங்கள் பிடித்தது. வரும்போது பக்கத்தில் எங்கே ஒர்க்கஷாப் இருக்கிறது என்று பார்த்து அதில் வேலை செய்யும் பையனையும் உடன் அழைத்து வந்தான். அவள் வண்டியை அந்த பையனிடம் எடுத்துவர சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் புறப்பட தயாராயினர்.

அந்த சமயம் தான் தனஞ்செயன் மாடியில் வந்துநின்று பார்த்தது. இருவரும் பைக்கில் ஒர்க்கஷாப் செல்வதற்கு கிளம்பினர். திறப்பு விழாவின் போது கோபியை பார்த்திருக்கிறான். ஆனால் இவர்கள் இருவருக்கும் என்ன விதமான பழக்கம் நட்பா இல்லை வேறு ஏதாவதா என்று உள்ளே ஒரு எலி ஓடியது.

தனஞ்செயனுக்கு அப்போது தான் புரிந்தது அவளை எவ்வளவு விரும்புகிறோம் என்று. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் எதையும் வெளிப்படுத்தமுடியாது. தங்கையின் திருமணம், தன்னுடைய அரசியல் கனவு இவற்றை தாண்டி ஒன்றும் செய்ய இயலாத நிலை.

தனஞ்செயனுக்கு யோசித்து யோசித்து தலைவலியே வந்துவிட்டது. அதுவும் இவன் இருப்பது ஒரு சிறிய கட்சி ஆனால் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் ஒன்று. ஆளுங்கட்சியிலுமே நல்ல மரியாதை இருந்தது. அதை வைத்து கொண்டு மக்களுக்கு தேவையான பல வேலைகளை சாதித்து கொண்டுள்ளான். இவனுடைய கனவு மெய்ப்பட குறைந்தது மூன்று வருடங்கள் தேவைப்படும்.

ரித்திக்காவின் பார்வையில் ஒரு ஈர்ப்பு தெரிந்தாலும் அவளாக தன்னை தேடி வருவாளென்றோ, எந்த வித வெளிப்படுத்தலும் இன்றி மூன்று வருடங்கள் காத்திருப்பாள் என்று நம்புவது முட்டாள்தனம். அவளை பற்றிய தேடலை ஆரம்பிக்க எண்ணினான். முக்கியமாக அவள் கூடவே சுற்றும் அவனை பற்றி.

ரித்திகா - பார்ப்பவரை இன்னொருமுறை திரும்பிப்பார் என்று சொல்லும் அழகு. எப்போதும் மிதமான ஒப்பனை, கண்ணை உறுத்தாத வண்ணத்தில் உள்ள ஆடைகள் அவளின் விருப்பம்.

கோபி - பார்த்தவுடன் மனதில் பதியும் முகவெட்டு. அளவான உயரம் அதற்கேற்ற உடல்வாகு. பேச்சில் எதிரில் இருக்கும் நபரை எந்தவிதத்திலும் துன்பப்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை. அன்புக்குரியவர்களுக்காக எதையும் இழக்க துணியும் மனதிடம். கோபிக்கு ரித்திகாவை தான் வேறு அவள் வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாத நெருக்கம் மனதில்.

தனஞ்செயன் - தீர்க்கமான பார்வை. நினைப்பதை பேச தயங்காதவன் ( ரித்திகா விஷயத்தை தவிர). கட்டுக்கோப்பான உடல். பார்த்தமாத்திரத்தில் ஒருவரின் நிறை குறைகளை எடைபோடும் தன்மை. ஆனால் சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று தூங்கும்போதும் நினைப்பவன்.

ரித்திகாவின் வண்டி இன்னும் தயாராகவில்லை. கோபி அங்கு வேலை செய்யும் பையனை கூப்பிட வரும்போதே ஒர்க்கஷாப் முதலாளி வெறும் காற்றுஅடிப்பதற்க்காக எல்லாம் பையனை அனுப்பமுடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் கோபி பிரேக் ஸிஸ்டெமும் மாற்றவேண்டியுள்ளது என்று கூறி அழைத்து வந்தான். வண்டி நாளைத்தான் கைக்கு கிடைக்கும்.

6 மணி சுமாருக்கு அந்த வேலைக்கார பெண்மணியை சென்று பார்க்கவேண்டும். கோபியை அழைக்கலாமா என்று யோசித்தாள். பிறகு ஆட்டோவில் பயணிக்க எண்ணி அம்மாவிடம் தெரிவித்து விட்டு கிளம்பினாள்.

ஆட்டோவிலிருந்து இறங்கினாள். அதிக நடமாட்டம் இல்லாத ஏரியா. ஒரு ஓட்டு வீட்டின் வேலி படலை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அந்த பெண்மணி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்தாள். ரித்திகா அந்த பெண்மணியிடம் தான் ஒரு ஆசிரமத்தில் இருந்து வருவதாகவும் இந்த வருடத்திற்கான பள்ளி சீருடை தைக்கும் காண்ட்ராக்ட் பற்றி அரசியல் பிரமுகரின் காரியதரிசியைடம் பேச வேண்டும் என்றும் கூறினாள். அந்த பெண்மணி கேள்வியாக பார்த்தாள். தான் நேரடியாக தலைவரின் வீட்டுக்குள் நுழைந்து பேச முடியாது எனவும் தாங்கள் மனது வைத்தால் இந்த ஒப்பந்தம் தங்களுக்கு கிடைக்கும் என கூறினாள். அது மட்டுமன்றி ஒப்பந்த தொகையில் ஒரு பகுதியை தருவதாக கூறிய பிறகு சிறிது மலர்ச்சி முகத்தில் தெரிந்தது. அப்போதும் சரி முயற்சி செய்து பார்க்கிறேன் என்றும் நாளை எப்போது வரவேண்டும் என்று நேரமும் கூறினாள்.

Thodarum...5
 

JRJR

Well-Known Member
அருமை. ஒவ்வொரு எபியையும் தனித்தனியாக கொடுத்தால் இன்னும் அழகு கூடும். Its my small suggestion.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top