ராதையின் கண்ணன் இவன்-19

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஏழையோ, பணக்காரனோ, பட்டதாரியோ, பாமரனோ அடுத்தவர் அதும் பிரபலத்தின் விசயத்தை அறிவதில் ஏனோ ஒரு வித அலாதி இன்பம் தான் நம் மக்களுக்கு. பொன்னிற மேனியன் அந்த கல்லூரியில் பெரும்பாலனோர் கருத்தையும், கவனத்தையும் கவர்ந்தவன் என்பதாலோ என்னவோ அவனின் செயல்கள் எப்போதும் கூர்ந்து கவனிக்கப்படும், ஏற்கனவே எங்கும் அவனின் கார்மேகம் இல்லாமல் அவனை தனியே பார்க்க முடியவில்லை என்பதால், அவர்களுக்கு இடையில் காதலா? இல்லை நட்பா? என பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு சொல்லுவது தான் குறையாக பொன்னிற மேனியன், கார்மேகம் காதல் விவாத பொருளான நிலையில் அவனே அந்த பெண்ணிடம் தான் ராதிகாவை காதலிப்பதாக சொன்னது, காட்டு தீ போல பரவி அந்த வாரம் முழுதும் அவனின் காதல் கதையே கல்லூரியில் அனைவருக்கும் ஆவலான அவலானது. குறிப்பிட்ட அந்த பெண்ணோ தான் ராதிகாவை தன் காதலுக்கு தூது அனுப்பின சோக கதையை சொல்லாமல் ஏதோ பொன்னிற மேனியனும், கார்மேகமும் அவளின் உற்ற தோழர்கள் போலவும், தன்னிடம் தான் முதலில் தங்கள் காதல் கதையை பகிர்ந்து கொண்டதாகவும் பெருமைப்பட்டு கொண்டது தனி கதை.

அன்று ஸ்வேதா கல்லூரிக்கு வந்தவுடனே, தன் வகுப்பில் எல்லாரும் தன்னை வித்தியாசமாய் பார்ப்பதாய் தோன்ற, உண்மையா இல்லை தன் கற்பனையா என குழம்ப, தனக்கு மிக அருகில் இவளின் வகுப்பு மாணவிகள் இருவர் சத்தமாக இவளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே பேசுவதை போல பேச ஆரம்பித்தனர்.

"ஏண்டி இந்த மூனு வருஷத்துல என்னா பில்டப், அவங்க தான் என்னமோ உலக அழகி மாதிரி, காலேஜ் அஹ அவங்க பின்னாடி தான் சுத்துற மாதிரி எவ்ளோ திமிரா திரிஞ்சாங்க ஆனா இப்போ என்ன ஆச்சு பாரு"

"ஆமாண்டி நீ சொல்றதும் கரெக்ட் தான், கொஞ்சமா, நஞ்சமா அப்பப்பா, இதுல ஆர்.கேவை மடக்கி காட்டுறனு பெட் வேற" இவ்வளவு நேரம் யாரை பற்றி பேசுகிறார்கள் என புரியாமல் கேட்ட ஸ்வேதாக்கு ஆர்.கேவை பற்றி சொல்லவும் தான் அவர்கள் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என புரிந்தது.

"இலவு காத்த கிளி கதை கேள்வி பட்டு இருக்கியா நீ, அந்த மாதிரி இவளும் மூனு வருஷமா கெஞ்சி, கொஞ்சி, குட்டிகரணம் போட்டும் அசைக்க முடியாத ஆர்.கேவை அந்த பொண்ணு கரெக்ட் பண்ணிட்டா பாரேன்" என ஏகத்துக்கும் அங்கலாய்க்க, இன்னொருவளோ,

"தரையில கால் படமா ஆகாயத்துல நடந்தா இப்படி தான் அதல பாதாளத்துல விழனும், இன்னும் ஒரு விசயம் தெரியுமா, உள்ளூர்ல அப்பா பிசினஸ் பண்றதுக்கே அந்த அலட்டு அலட்டுறாங்க, இதுக்கே இங்க படிக்கிற முக்கவாசி பசங்க பேரண்ட்ஸ் பிசினஸ் பீப்பல்ஸ் தான், ஆனா அந்த பொண்ணு பார்க்க எவ்ளோ சிம்பிளா இருக்கு, அவளும் அமெரிக்கால இருக்க அந்த பெரிய கம்பனில ஒரு பார்ட்னராம்" என மேடை ரகசியமாக பேசி ஸ்வேதாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டனர்.

அழகு என கர்வம் கொண்டு எல்லாரையும் அலட்சிய படுத்தியதின் விளைவு, இவளை மட்டம் தட்ட ஒரு வாய்ப்பு கிடைச்சதும் வகையாய் பயன்படுத்தி கொண்டனர்.இதில் கொடுமை என்னவென்றால் "என்னை பற்றி எப்படி பேசலாம்" என நேரடியாக போய் கேட்க முடியாது, அவர்கள் கவனமாக இவளின் பேரை தவிர்த்து பேசும் போது, இவளாக போய் என்னை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என கேட்பது அவர்கள் திட்டியதை எல்லாம் இவளே ஒப்பு கொண்டது போல ஆகிவிடும். தன்னை பற்றி தன் காதுபடவே பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரம், இயலாமை எல்லாம் இப்படி பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திகொடுத்த அந்த இருவர் மீதும் திரும்பியது. ஏனோ எல்லாரும் தன்னை கிண்டலாக, கேவலமாக, இலக்காரமாக பார்ப்பதாக தோன்ற அவமானத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்க பிடிக்காமல் தனிமை நாடி தனியே வெளியே சென்றாள்.

அந்த அமெரிக்க நிறுவனம், ராதிகாவிடம் ஆர்.கேவை தோற்றது என எல்லாம் சேர்ந்து கட்டுப்படுத்த முடியாத கோவத்தை தர என்ன செய்வது என தெரியாமல், கோபத்தில் மூளை சிந்திக்கும் திறனை இழக்க, தோற்றது மட்டுமே திரும்ப திரும்ப மண்டைக்குள் ஓட குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தாள்.அப்போது அவளை தேடி இந்த கல்லூரியில் ஸ்வேதாவின் தோழி என அழகிலும், குணத்திலும் ஸ்வேதாவின் சகல அம்சங்களும் நிறைந்த அபிநயா வந்தாள்.

"இங்க என்ன பண்ற ஸ்வே" ரொம்ப சாதாரணமாக கேட்க,

"காலேஜ்ல என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாதா அபி" யாரிடம் கொட்ட என தெரியாமல் தேக்கிய கோவம், ஆதங்கம் எல்லாம் ஒரு ஆள் கிடைத்த திருப்பதியில் இவளை மைய புள்ளியாய் கொண்டு தெறிக்க, அப்படி ஒரு ஆவேசம் அவளின் குரலில்,

"தெரியும், ஆனா நீ இப்படி எதுக்கு கோவப்படுறன்னு தான் எனக்கு புரில"

"போயும், போயும் அந்த ராதிகா கிட்ட நான் தோத்துடுட்டேனு நினைக்கும் போது எனக்கு அப்படியே எரியுது, அவளும் அவ கலரும், மூஞ்சியும்" ராதிகா எல்லாம் எனக்கு சமமா எனும் அகந்தையிலே பேச,

"ஆனா என்ன பண்ண, அந்த ஆர்.கேக்கு அவளை தானே பிடிச்சி இருக்கு" அபி சொல்லவும், தன் "கோவ அக்னியில் அவளை பொசுக்கினால் தான் என்ன" எனும் விதமாக ஸ்வேதா பாசபார்வை பார்த்துவைக்க, அதில் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத அபி,

"நான் ஒரு விசயம் கேட்குறேன், கோவப்படமா, அமைதியா யோசிச்சி பதில் சொல்லு" என, ஸ்வேதா கோபத்தில் தாம்,தூம் என குதிக்கும் ரகம் என்றால், அபியோ எத்தனை கோவத்திலும் நிதானம் இழக்காமல் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும் என யோசிக்கும் ரகம், அபியின் கேள்வியில்,இவ்வளவு நேரம் கோவத்தில் செயல் இழந்து இருந்த தன் மூளையை உயிர்பிக்கும் விதமாக கொஞ்சம் தன்னை நிதானத்திற்கு கொண்டுவந்த ஸ்வேதா,

"என்ன அபி, கேளு"

"ஆர்.கேவின் மீதான உன் காதல் என்ன அமர காதலா" என ஸ்வேதா "இல்லை" என தலை அசைக்க, அபியே தொடர்ந்து,

"பஸ்ட் அது காதலே இல்லை, இது உனக்கும் நல்லா தெரியும், அந்த ஆர்.கே காலேஜ்ல பேமஸ், அவன் உன்னை திரும்பியே பார்க்கல, சோ நீ உன்னோட ஈகோவை சமாதானப்படுத்த அவனை உன் கிட்ட காதல் சொல்லி, உன் பின்னாடி அலைய வைக்கணும்னு நினைச்ச, இப்போ அவன் வேற ஒரு பொண்ண லவ் பண்றான்னு தெரிஞ்சிடுச்சி,
நீ இப்படி ரியாக்ட் பண்ணி நீயே தான் உன்னோட தோல்வியை எல்லாருக்கும் காட்டுற, அவனை நீயே தான் வேண்டாம் சொன்ன மாதிரி பேசு, உன் டேஸ்ட்கு அவன் இல்லைனு சொல்லு, உன் அழகுல மயங்கி இருக்க கும்பலும் அதை நம்பும், எனக்கு தெரிஞ்சி இதுல உனக்கு பெருசா நட்டம் எதும் இல்லை, அந்த ஆர்.கே பேமிலி பேக்கிரௌண்ட் கூட யாருக்கும் தெரியாது, நமக்கு தெரிஞ்ச வரைக்கும் ஏதோ ஒரு கம்பனில பார்ட் டைம் வேலை தான் பார்க்கிறான், அவங்க ரெண்டு பேருக்கும் பதிலடி, அதோட உன்னோட ஈகோவை சமாதானப்படுத்த நீ என்ன பண்ணனும் தெரியுமா, அவனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் அஹ அழகு, பணம், இருக்குற ஒருத்தனை உன்னோட லவ்வரா எல்லாருக்கும் அறிமுகப்படுத்து, எவ்ளோ பசங்க உன் பின்னாடி சுத்துறாங்க அதுல பெஸ்ட் அஹ ஒருத்தனை செலக்ட் பண்ணு, எனக்கு தெரிஞ்சி அந்த சஞ்சீவ் குட் சேலெக்ஷன், பெரிய பாரம்பரியமான குடும்பம், பார்க்கவும் நல்லாவே இருப்பான், உன் பின்னாடி தான் அலையுறான், என்ன சொல்ற" என கேட்க, ஸ்வேதாவிற்கும் அதுவே சரியென பட இவ்வளவு நேரம் இருந்த கோவம் எல்லாம் அர்த்தமற்றதாக தோன்ற மனதிற்குள் "உன்கிட்ட நான் எப்பவுமே தோற்க மாட்டேன் ராதிகா" ஒரு வன்மான புன்னகையுடன் அபியுடன் கிளம்பினாள் தன் வகுப்பை நோக்கி.

இது அவளின் வாழ்க்கை என்பது ஏனோ அந்த நிமிடம் அவளுக்கு உரைக்கவே இல்லை. இந்த முடிவு என்ன மாதிரியான விளைவுகளுக்கு வழிவகுக்க போகுது என அறியாமல் புன்னகையுடன் செல்லும் அவளை பார்த்து விதியும் சிரித்து வைத்தது.

கல்லூரியில் தங்களை மையமாக வைத்து நடக்கும் பட்டிமன்றமோ, இல்லை தங்களை தோற்கடிக்க என ஒருத்தி முனைப்பாய் இருப்பதோ அறியாமல், எதை பற்றியும் கவலை கொள்ளாமல் எப்போதும் போல மற்றவருடைய அருகாமையே போதும் என்பது போல இருவரும் சுற்றி வந்தனர். இக்கால களவு(காதல்) வாழ்க்கையின் தாத்பரியமான, இரவின் மடியில் நீளும் கைபேசி அழைப்புகள், ஒட்டு புல் போல ஒட்டிக்கொண்டே திரிவது, விடுமுறைகளில் ஜோடியாக வெளியில் செல்வது என எதையுமே செய்யவில்லை. தாங்கள் யாரு என அறிந்து, தங்களின் பொறுப்பு உணர்ந்து, தங்கள் காதலை மற்றவருக்கு காட்சி பொருள் ஆக்காமல், செயலில் மட்டுமே அதுவும் தன் இணைக்கு மட்டுமே தங்கள் காதலை உணர்த்தி என தங்கள் நிலையில் இருந்து மாறுபடவே இல்லை இருவரும்.

நாட்களும் அதன் போக்கில் உருண்டோட, நாளை பொன்னிற மேனியனின், கார்மேகத்திற்கு பிறந்த நாள், அவளின் பிறந்த நாளிற்காக பொன்னிற மேனியன் ஆசிரமத்தில் மூன்று வேளை உணவளிக்க முடிவு செய்து அதற்குரிய பணம் செலுத்தி தக்க ஏற்பாடுகளை செய்து இருந்தான். இரவு பன்னிரெண்டு மணிக்கு அவனின் கார்மேகத்திற்கு வாழ்த்துசொல்ல அழைக்க, இவன் ஹெலோ சொல்லும் முன்னரே, அவள் பயந்து போய்,

"ராகி, நீ நல்ல இருக்க தானே, அம்மா, அம்மா நல்லா இருக்காங்க இல்ல" என கொள்ளை பதட்டம் அவளின் குரலில்,

"யாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாரும் நல்லா தான் இருக்காங்க",

"இல்ல இந்த நேரத்தில் கால் பண்ணவும், யாருக்கும் என்னவோனு பயந்துட்டேன், சொல்லு ராகி" அப்பட்டமாய் ஒரு ஆசுவாசம் அவள் குரலில்,

"கண்ணனான என் தேசத்தில் இடைவிடாது காதல் மழை பொழியும் என் கார்மேகத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என உள்ளத்து அன்பு எல்லாம் குழைத்து வாழ்த்து சொல்ல அந்த பக்கம் பேரமைதி, பின் இத்தனை நாளில் அவன் கேட்டே இராத கரகரப்பான குரலில்,

"தே.. தேங்ஸ் ராகி, குட் நயிட்" என்று இவனின் பதிலுக்காக காத்திராமல் அழைப்பு துண்டிக்கப்பட சிந்தனையின் வசம் பொன்னிற மேனியன். இப்போதே சென்று அவளை காண உள்ளம் பரபரக்க, இன்னொருவர் வீட்டில் அவள் தங்கி இருக்கையில், அகால நேரத்தில் சென்று அவளுக்கு அவப்பெயர் வாங்கித்தர மனம் இல்லாமல் இரவை நெட்டி தள்ள, ஏனோ அந்த இரவு இருவருக்குமே தூங்கா இரவாக. காலை சீக்கிரம் கல்லூரி சென்று அவளை பார்க்கவென இவன் கிளம்ப கை பேசி ஒலித்தது, அழைப்பது அவனின் கார்மேகம், ஏனோ ஒரு சோகம் சொல்லாமல் கொள்ளாமல் மனதில் அமர்ந்து கொள்ள அழைப்பை ஏற்றான், அதே கரகரப்பான குரலில்,

"என்ன பண்ற ராகி"

"காலேஜ் கிளம்பிக்கிட்டு இருக்கேன் ராதா"

"திருவான்மியூர் பீச் வரியா" கொஞ்சமாய் தயக்கம் எட்டிபார்த்ததோ குரலில்,

"நீ எங்க இருக்க"

"பீச்ல தான்"

"45 மினிட்ஸ்ல வரேன்" என,கடவுளே இவ்வளவு காலையில் அங்க போய் இருக்கா, அவளின் குரலே இவனை என்னவோ செய்ய, மனம் பாரமாவதை தவிர்க்க முடியாமல், கிளம்பி அவளை காண சென்றான்.

கடற்கரையில் இவன் நினைத்தது போலவே, உலகத்து சோகம் எல்லாம் மொத்தமாய் தன்னிடம் கொண்டவள் போல, சோக சித்திரம் என கடலை வெறித்த வண்ணமே இவனை வரவேற்றாள் அவனின் கார்மேகம். எதும் பேசாமல் இவன் அமைதியாய் சென்று அவள் அருகில் அமர இவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பார்வை கடலிடமே தஞ்சம்.

புத்துணர்வு தரும் அந்த காலைநேர கடற்கரை காற்று இவனின் இறுக்கத்தை குறைக்க முடியாமல் தோல்வியை தழுவ, அவனின் கார்மேகத்தின் அமைதி இன்னும் சூழ்நிலையின் இறுக்கத்தை கூட்ட, அதை பொறுக்க முடியாமல், மென்மையாக, "என்னடா" என்ற பாசத்துடன் பாரிவான அந்த ஒரு வார்த்தை, அவளின் வாய்ப்பூட்டை அகற்ற போதுமானதாக இருந்தது.

"இந்த நாள் வராமலே போய் இருக்கலாம் இல்ல, ஏன் ராகி, பிறந்த உடனே அவங்க இயலாமைக்கும், ஈகோக்கும் வடிகாலாகி எல்லாரும் இருந்தும் இல்லாமல் ஒரு வாழ்க்கை ஏன், ஏதும் புரியாத வயசுல தெய்வா வீட்டுக்கு வரும் போது எல்லாம், அவங்க தான் எனக்கும் அம்மான்னு தெரியாம ஸ்வேதா அவங்க கிட்ட செல்லம் கொஞ்சுறத பார்த்து எனக்கும் மட்டும் ஏன் அம்மா கொடுக்கலைனு கடவுள் கிட்ட சண்டை போட்டு இருக்கேன் தெரியுமா, அம்மா மடில படுத்து கதை கேட்கணும், அப்பா கையை பிடிச்சிக்கிட்டு கடைக்கு போகணும்னு அவ்ளோ ஆசை இருக்கும், ஸ்கூல்ல எல்லாருக்கும் அப்பா, அம்மா இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இல்லன்னு எவ்ளோ அழுது இருக்கேன் தெரியுமா, ஒரு தடவ இதை சிவா கிட்ட கேட்டு அவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சு, எங்க அவங்களையும் நான் இழந்துடுவேனோன்னு நான் பயந்த பயம், இதுக்கு நடவுல கருப்பா இருக்கேன்னு கூட படிக்கிறவங்க, அக்கம் பக்கத்துல இருக்கவங்க கேலி, கிண்டல்,கிறிஸ் மட்டும் இல்லனா அதை எல்லாம் தாண்டி இருப்பனானு கூட தெரில, அந்த நாள் எல்லாம் நரகம் ராகி" என அந்த நாட்களை மீண்டும் வாழ்பவள் போல அழுகையில் தொண்டை அடைக்க அவனின் தோல் சாய்ந்து கதற உறைந்து போனான் பொன்னிற மேனியன்.

அவன் அறிந்த தன்னம்பிக்கையும், அழுத்தமுமாக மிளிர்ந்த ராதிகா இல்லை இது, தன் வாழ்நாளின் அந்த கருப்பு நாட்களில் யாரிடமும் சொல்லாமல் தன் ஆழ்மனதில் புதைத்த எண்ணங்களை எல்லாம் அந்நாளிற்கே சென்று அவனிடம் பகிர்ந்து கொள்ள விழையும் சிறுமியாக அவன் முன் உடைந்து கதற, அவளை என்னவிதமாக, என்ன சொல்லி தேற்ற என தெரியாமல் இவன் திணற, அவளோ தன்போக்கில் தான் பிறந்த கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

இவன் ராதையின் கண்ணன்…………..

பி.கு:
திங்கள் அன்று மீண்டும் பொன்னிற மேனியனும், கார்மேகமும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த அபிநயா அருவாமனை பேச்சைக் கேட்டு இந்த கூமுட்டை ஸ்வேதா என்ன கதியாகப் போறாளோ?
ஹ்ம்ம்........அது அவள் தலையெழுத்து
ஸ்வேதா எப்படியோ போகட்டும்
நம்ம கார்மேகம் ராதிகாவின் பழைய கதையை நீங்க சீக்கிரமா வந்து சொல்லுங்க, ருத்ரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top