ராதையின் கண்ணன் இவன்-9

Advertisement

E.Ruthra

Well-Known Member
வியாழன் கிழமை எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செல்ல, வெள்ளி கிழமை அட்டகாசமாக விடிந்தது. தான் வாங்கிய புடவையில் தயாராகி ராதிகா கிழே வர , அவளை முதன் முதலில் புடவையில் பார்த்ததில் தெய்வாவின் கண்கள் மலர்ந்தன, "என் பொண்ணு எவ்ளோ அழகா இருக்க, என் கண்ணே பட்டுடும் போலவே, இன்னும் இதற்கு ஏற்ற மாதிரி நகை போட்டா, அம்மன் சிலை தான்" என தாய் மனம் பூரிக்க, தன் எண்ணத்தை கூட வாய்விட்டு சொல்ல முடியாத தன் நிலையை எண்ணி வருந்த, இந்த மாதிரி எந்த தயக்கமும் இல்லாமல், உணவு மேசையில் உணவை எடுத்து வைத்து கொண்டு இருந்த கமலா ராதிகாவை பார்த்தவுடன்,

"அடடே, ராதிகாமா வா இது, எவ்ளோ அழகா இருக்கீங்கமா" என்றவாறே அவளுக்கு நெற்றி முறித்தார். ராதிகாவோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு புன்னகையுடன் "தேங்கஸ் கமலாமா" என்று உணவு மேசையில் அமரவும் அவளையே முடிந்த அளவு தன் கண்களில் நிரப்பி கொண்டே உணவு பரிமாறினார் தெய்வா.

இப்போது எல்லாம் இவள் கல்லூரிக்கு வரும் போது பொன்னிற மேனியன் இவளுக்காக மரத்தடியில் காத்திருப்பதும், இருவரும் பேசியபடியே வகுப்பிற்கு செல்வதும் வாடிக்கையானது. இளம்பச்சை நிற புடவையில், இடை தாண்டிய கார்கூந்தலை தளர பிண்ணி, அதில் சிறிய அளவில் பூச்சூடி, எப்போதும் அணியும் அதே சிறிய தொங்கட்டான்,அதே கண்ணுக்கு தெரியாத சங்கிலி என ஒப்பனை ஏதும் இன்றி கோவில் மூலவர் சிலையென அவனின் கார்மேகம். ஒரு நிமிடம் மூச்செடுக்க மறந்து, தன்னை சுற்றி இருக்கும் அனைத்தும் அசையாமல் நிற்க, அவனின் கார்மேகம் மட்டும் அவனை நோக்கி வர வார்த்தைகளால் விவரிக்க முடியாத மோகன நிலையில் பொன்னிற மேனியன்.

அதற்குள் இவனை நெருங்கிய ராதிகா "ஹே ராகி, சேம் பின்ச் சாக்லேட் வாங்கி தா", ஒரு நிமிடம் அவள் பேசுவது என்ன மொழி என்றே புரியாமல் முழிக்க, ராதிகா இவனை பிடித்து உலுக்கி "ராகி",

"ஹா என்ன"

"ஹ்ம்ம் விளக்கெண்ணெய்"

"பச் என்ன ராதா"

"உன்னோட மூஞ்சி அதை குடிச்ச மாதிரி தான் இருக்கு,பின்ன என்ன, எவ்ளோ நேரமா கூப்பிடுறேன், என்ன கனவு கண்டுகிட்டு இருக்க,அதும் கண்ண திறந்து வச்சிகிட்டே"

"ஒன்னும் இல்ல சொல்லு" (அப்படியே சொல்லிட்டாலும், உனக்கு புரிஞ்சிடும், ரொமான்டிக் அஹ பார்த்தா விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி பார்க்கிறேன்னு சொல்ற உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு)

"நீயும் நானும் ஒரே கலர் ட்ரெஸ் சோ சாக்லேட் வாங்கி தா" அப்போது தான் தன்னை கவனித்தான் ராகவ், வெள்ளை வேட்டி,பச்சை நிறத்தில் குர்தா அணிந்து, அவனின் சுருள் கேசம் நெற்றியில் புரள, எப்பவும் போல சிறு சந்தன கீற்றுடன் உற்சவர் சிலை என இவன்.

"சின்ன பசங்க மாதிரி இது எல்லாம் என்ன"

"இவ்ளோ கஞ்சமா இருக்க நீ, ஒரே ஒரு சாக்லேட்" என்று இன்னும் என்னமோ பேச போக,

"அம்மா, தெய்வமே, எதுமே சொல்லாம சாக்லேட் கேட்டாலும் நா வாங்கி தருவேன், நீ சேம் பின்ச் அது இதுன்னு சொல்லவும் தான் அப்படி கேட்டுட்டேன், வா உனக்கு சாக்லேட் வாங்கி தந்துட்டே நாம ஆடிட்டோரியம் போலாம்" என்று இவளை கேன்டீன் அழைத்து சென்றான்.

இவர்கள் ஆடிட்டோரியத்தை நோக்கி செல்ல எதிர் பட்டவர்களை பார்த்த ராதிகா குனிந்து தன்னை ஒரு தடவை பார்த்துக்கொண்டாள். சாதா நாட்களில் கல்லூரியில் பெண்கள் பொதுவாக ஜீன்ஸ், சீலீவ்லெஸ் டாப், டீ ஷர்ட் இப்படி அணிவது தான் வழக்கம். இவள் மட்டுமே சுடி அணிவதாலும், இவளின் நிறத்தாலும் இவளை ஏதோ கிராமத்து பைங்கிளி என்ற அளவுக்கு தான் பார்ப்பார்கள்.

இன்று எதனிக் வேர் அதைக்கூட இப்படி ஏடா கூட மாக கூட வேர் பண்ண முடியுமா ராதிகாவின் கண்கள் விரிந்தது. சீ த்ரு சேரிஸ்,சீலீவ்லெஸ் பிளவுஸ், ஜன்னல் இல்ல கதவே வைத்த பிளவுஸ், என எத்தனை ரகங்கள், எத்தனை விதங்கள், சில்க் காட்டன் சேரியில் இருந்த தான் அந்த இடத்தில் பொருந்தாதது போல ஒரு தோற்றம். எனினும் இவர்களுக்காக தன்னை மாற்றி கொள்ள இயலாது என்பதும் திண்ணம், இந்த மாதிரி உடைகள் தனக்கு பிடிக்காது என்பதை விட சவுகரியமாக இருப்பது முக்கியம் என்பது ராதிகாவின் எண்ணம்.

பொன்னிற மேனியனும், கார்மேகமும் அரங்கிற்கு சென்று பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தனர். ஒன்று உள்ளே வந்தவர்கள் நேரேடியாக வந்து பொன்னிற மேனியனிடன் பேசினர் இல்லை என்றால் பார்வையால் தீண்டி சென்றனர். இது எல்லாம் கார்மேகத்திற்கு பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. நேரம் இவ்வாறு செல்ல ஒரு வழியாக நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். காலை முழுதும் ஆசியர்கள், கல்லூரியின் முதல்வர் என அனைவரும் கல்லூரியின் சிறப்பை உரை என்ற பெயரில் ஆற்றோ ஆற்று என்று ஆற்றி ஒரு வழியாக மதியம் தான் முடித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே உணவுக்கு ஏற்பாடு செய்து இருக்க, அனைவரும் உணவு முடிந்து மறுபடியும் அரங்கத்தில் கூடினர்.

ஆசிரியர்கள் அனைவரும் சென்றுவிட வெறும் மாணவர்கள் மட்டுமே அந்த அரங்கில். சீனியர் மாணவன் ரஞ்சித் மைக் எடுத்துக்கொண்டு மேடை ஏறி பேச துவங்கினான்.

"வணக்கம் ஜூனியர்ஸ், இப்போ நாம எல்லாரும் சேர்ந்து விளையாட போறோம், எல்லா பஸ்ட் இயர் ஸ்டுடெண்ட் நேமும் இந்த பவுள்ல இருக்கு, அதே மாதிரி எல்லா சீனியர் நேமும் இந்த பவுள்ல இருக்கு, அப்புறம் தனியா இருக்க அந்த பவுள்ல நீங்க பண்ண வேண்டிய டாஸ்க் இருக்கு, நான் ஒரு ஜூனியர் நேமும், சீனியர் நேமும் எடுப்பேன், சீனியர் வந்து அந்த தேர்ட் பவுள்ல இருந்து ஒரு சீட்டை எடுத்து அதுல வர டாஸ்க் அஹ ஸ்பெசிபை பண்ணுவாங்க, லைக் இப்போ டாஸ்க் வடிவேல் வசனம் அப்படினா, உங்க சீனியர் எந்த டியாலோக் நீங்க பேசனும்னு சொல்லுவாங்க, எல்லாருக்கும் புரிஞ்சிதா"

"எஸ் சீனியர்"

"சரி ஓகே, அப்போ ஆரம்பிக்கலாம்" என்றவாறு முதல் சீட்டை எடுத்து விளையாட்டை துவக்கி வைத்தனர். அவர்கள் எழுதிய டாஸ்க்உம் யாரையும் துன்புறுத்தாத வகையில், எல்லாரும் ரசிக்கும் வகையிலே இருக்க, இடையில் ரஞ்சித்தின் நகைச்சுவையான கமென்றியும் சேர எல்லா மாணவர்களும் இறுக்கம் தளர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர்.

ராதிகாவின் பெயரை அழைக்க அவள் மேடை ஏறினாள், அவளுக்கு வந்த சீனியர் பெண்ணும் மேடை ஏறினாள். அவள் முகத்தில் அவ்வளவு அலட்சியம், இவளுக்கு எல்லாம் நான் டாஸ்க் சொல்ல வேண்டுமா என்ற எரிச்சல், அது மேடையில் நின்ற ரஞ்சித் முதல் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் அப்பட்டமாக தெரிய ராதிகா எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் நின்றாள், ரஞ்சித் அவளுக்கான டாஸ்க்கை எடுக்க சொல்லவும், அந்த பெண் வேண்டா வெறுப்பாகவே எடுத்து பார்த்துவிட்டு, "பாட சொல்லி வந்து இருக்கு" என மைக்கில் அறிவித்தால்,

ரஞ்சித் தொடர்ந்து "என்ன பாட்டு சொல்லுங்க சீனியர்" என ராகம் இழுத்து நிலைமையை ஓர் அளவுக்கு சமாளிக்க,

அந்த பெண்ணோ,"அரசமர இலையே, ஆல மர இலையே னு தான் பாட்டு சொல்லணும்" என மைகில் சொல்லிவிட்டு, ஆளையும், மூஞ்சியையும் பாரு என முனுமுனுவிட்டு அவளின் உடையையும் அவளையும் மகா கேவலமாக பார்க்க, இதை கேட்ட ரஞ்சன் அந்த பெண்ணை ஏதோ கூற வர ராதிகாவோ அவனுக்கு வாய்ப்பு அளிக்காமல் எந்த சலனமும் இன்றி மைக்கை வாங்கி,
"மாமனே உன்னை காங்கம
மத்தியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே" என பாட ஆரம்பித்தாள்.

அவளின் குரல் அனைவரையும் கவனிக்க வைக்க, பாடி முடித்ததும், தொடர்ந்த ராதிகா "இந்த பாடல், நம்ப சீனியர் சொன்னதுக்காக, நான் எனக்கு பிடிச்ச ஒரு பாட்டு பாடலாமா சீனியர்" என்றவாறு ரஞ்சனின் அனுமதிக்காக அவனை பார்க்க, அவனும் "வொய் நாட்" என சந்தோஷமாகவே தலை அசைக்க, அடுத்து அவள் பாடிய "ஐ சீ தி லைட்" என்ற ஆங்கில பாடலில் அந்த அரங்கமே மூச்செடுக்க மறந்து அவளை பார்த்தது. அதும் அவளின் அருகில் நின்ற அந்த பெண் முக பாவனையை விவரிக்க வார்த்தையே இல்லை, இந்த கிராமத்து குயிலிடம் இருந்து சத்தியமாக இப்படி ஒரு ஆங்கில பாடலை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவள் முகமே எடுத்துக்காட்ட, ராதிகாவின் முகமோ எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியின் மொத்த இருப்பிடமாய்.

ஆங்கிலம் பேசுவது என்பது வேறு, ஆங்கில பாடல் பாடுவது என்பது வேறு இல்லையா, சரளமாக பேச முடிந்தாலும், பாடல் என்று வரும் போது வார்த்தைகளின் உச்சரிப்பு ஆங்கிலேயர்கள் போல இருந்தால் மட்டுமே பாடல் இனிக்கும். கார்மேகம் பாடிய விதம், வார்த்தைகளின் உச்சரிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில கண்களின் அலட்சிய பாவம் மாறி, சிறு மதிப்போடு நோக்கியது. பாடி முடித்த ராதிகா அமைதியாக மேடை இறங்க, அனைவரும் தன் நிலைக்கு திரும்பவே சிறிது நேரம் எடுத்தது.

இங்கு பொன்னிற மேனியனோ பல உணர்ச்சிகளின் குவியலாக இருந்தான். முதலில் அந்த பெண்ணின் அலட்சியத்தில் கோவமாகவும், இதனால் தன் கார்மேகம் வருத்தம் கொள்ள கூடாதே என்ற வருத்தமும், தன் கார்மேகம் அந்த பெண்ணிற்கு "நீ சொல்லியதால் தான் நான் அந்த பாட்டை பாடினேன், இல்லை என்றால் ஆங்கில பாடலை தான் பாடி இருப்பேன்" என மறைமுக குட்டு வைத்தவிதத்தையும் பார்த்து பூரித்துபோய் இருந்தான். அதன் பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து முடிய ஒரு வழியாக அனைவரும் கிளம்பினார். அப்போது பலரும் ராதிகாவிடம் வந்து பாடலை பற்றி பாராட்ட அனைவருக்கும் ஒரு புன்னகையுடன் கூடிய தலை அசைப்பே பதிலாக கிடைத்தது. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட எல்லாரிடமும் ராதிகாவை பற்றிய அலட்சிய பாவத்தை மாற்றியது என்றால் மிகையில்லை.

பொன்னிற மேனியன் அவனின் கார்மேகத்திடம்,
"பாட்டு சூப்பர்"

"தேங்க்ஸ்"

"நீ இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்க" அவ்ளோ ரசிப்பு பாவம் பொன்னிற மேனியனின் நயனங்களில், ஆனால் அவனின் கார்மேகமா அமைதியாய் ஒரு புன்னகை பூக்க,

"என்ன ராதா, அமைதியா இருக்க"

"என்ன சொல்லணும் ராகி, பதிலுக்கு நீ அழகா இருக்கேன்னு சொல்லனுமா" விளையாட்டாகவே பதில் சொல்ல,

"நா அழகா இருக்கேன் சொல்ல வேண்டாம், ஏன்னா அது எனக்கே தெரியும், ஒரு தேங்க்ஸ் சொல்லலாமே"

"ஹம்ம்ம், "உருவம் கண்டு எல்லாமை வேண்டும்" ஒரு பழமொழி இருக்கு தெரியுமா"

"தெரியுமே, ஒருத்தவங்க உருவத்தை கொண்டு கிண்டல் பண்ண கூடாது, அதானே அதுக்கு அர்த்தம்"

"அப்படி ஏன் சொல்றாங்க தெரியுமா"

"ஏன்"

"ஏன்னா என்னை பொறுத்த வரைக்கும் எல்லாருக்கும் இந்த முகம், நிறம் எல்லாமே அவங்க அப்பா,அம்மா கிட்ட இருந்து தான் வருது, ஒருவருடைய உருவத்திற்கு அவர் பொறுப்பேற்க முடியாது, அதனால் அழகுனு பெருமை படவோ, இல்ல இப்படி அசிங்கமா இருக்கமேனு வருத்தப்பட எதுமே இல்லை, இப்படி இருக்கும் போது நீ என்ன அழகா இருக்கேனு சொல்லுறதுக்கு நா ஏன் தேங்க்ஸ் சொல்லணும், அப்படி சொன்ன நான் அதை ஏற்றுக்கொண்ட மாதிரி ஆகாதா?, இதுவே நீ நல்ல பாடுற, கோட் நல்ல பண்ற, ஆங்கிலம் நல்லா பேசுற சொன்ன நா தேங்கஸ் சொல்லலாம், ஏனா அது என்னோட திறமை, நானா வளர்த்துகிட்டது, அதே மாதிரி அழகு அப்படின்னா என்ன ராகி, இந்த உருவமா, நிச்சயமா இல்ல, இந்த உருவதுக்குள்ள இருக்க மனசு, எண்ணம், சிந்தனை இது எல்லாம் அழகா இருந்தா தான், நான் ஒருத்தவங்க அழகுன்னு சொல்வேன்" இவள் பேச பேச, பொன்னிற மேனியனின் மலைத்து போய் நின்றான். இது வரை வெளிகாட்டி கொள்ளாவிட்டாலும், தான் அழகு என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கு உண்டு, இன்றைய இவள் பேச்சில் அந்த எண்ணம் எல்லாம் தூள் தூள் ஆக அவனின் கார்மேகம் தொடர்ந்து பேசினாள்,

"இதுல இன்னொரு விசயமும் இருக்கு, அழகை பற்றி இப்படி சொல்லனும்னா கூட நா அழகா இருக்கணும், இல்லைனா மக்கள் உனக்கு நீ இப்படி அழகா இல்லயேனு பொறாமை அப்படினு தான் சொல்வாங்க" சொல்லிவிட்டு அவனின் கார்மேகம் சில மின்னல்களை சிதற விட, பொன்னிற மேனியன் நிதானமாக நிமிர்ந்து, "நா இப்பவும் சொல்றேன் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க" என அவளின் இந்த சிந்தனை தன்னம்பிக்கையை குறிப்பிட்டு சொல்ல முன்பு அழகா இருக்கேனு சொல்லும் போது இருந்த ரசிப்பு தன்மையோடு, இப்போது கண்களில் அவள் மீதான மதிப்பும், மரியாதையும் மிளிர்ந்தது, அவனை நிமிர்ந்து பார்த்த அவனின் கார்மேகமும் அவனின் மாறுதலை புரிந்துகொண்டு ஒரு சிரிப்புடன் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

இந்த கார்மேகம் பொன்னிற மேனியனுக்கு புதுசு, அவன் அறிந்தது எல்லாம், அவனை கிண்டல் செய்து கொண்டு, சிரிப்புடன் வலம் வரும் கார்மேகமே. எங்கேயும் இவள் வருத்தப்பட கூடாது, தனிமையை உணர கூடாது என பொன்னிற மேனியன் இவளுக்கு கல்லூரியில் ஓர் அரணாக தான் இருப்பதாக நினைக்க, உண்மையில் அவளின் தெளிவிற்கு அவளிற்கு யாரின் துணையும் தேவைப்படவில்லை என்பதே உண்மை. தன்னை காத்துக்கொள்ள அவளுக்கு தெரிந்தது இருக்கிறது, தன்னை மட்டம் தட்டுபவர்களையும் அழகாக கையாள்கிறாள், இவளை இப்படி வளர்த்த தில்லையையும், சிவாவையும் பார்க்க மனம் பரபரத்தது. வளர்ப்பு எல்லாம் தாண்டி, அவளின் விதியோ இல்லை அடுத்தவர் செய்த சதியோ, எதுவோ ஒன்று சின்ன வயதிலேயே பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் உலகத்தை எதிர்த்து போராட வலிக்க வலிக்க கற்றுக்கொடுத்தை அவன் அறிந்து இருக்க நியாயம் இல்லை தான்.
தன்னம்பிக்கை மிளிரும் இந்த பெண்ணுள், புறக்கணிக்கபட்டதால் ஏற்பற்ற ஆறாத ரணங்களோடும், வலிகளோடும் அழும் சிறு குழந்தை ஒன்று உண்டு என்றும், அந்த குழந்தை ஓர் நாள் ஆறுதலுக்காக இவன் தோள் சாயும் என்பதும் இவன் அறிய வாய்ப்பு இல்லை அல்லவா……


இவன் ராதையின் கண்ணன்……………..
 

banumathi jayaraman

Well-Known Member
"காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா"-ன்னு பாடி அந்த கிருஷ்ணணைக் கொண்டாடினாலும் கருப்பாக இருக்கும் பெண்களை
இன்றும் இளக்காரமாகத்தான் பார்க்கிறாங்க
எத்தனையெத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரு பெண் கறுப்பாக இருந்தால் அவை எடுபடுவதில்லை

எல்லோரும் கொண்டாடும் உலக அழகி கிளியோபாட்ராவே கறுப்புத்தான்
ஆனால் வெளிநாட்டில்தான் பாராட்டு கிடைக்கும் போல
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top