ராதையின் கண்ணன் இவன்-12

Advertisement

E.Ruthra

Well-Known Member
மடிகணிணியின் வழியே இரண்டு கூரிய கண்கள் ராகவனை ஊடுருவ அவனும் அந்த பார்வையை சளைக்காமல் எதிர் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க ராதிகா, முறைப்படி இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

"வெல், ராகவ் கிருஷ்ணா" என கிறிஸ் பேச ஆரம்பிக்க, பொன்னிற மேனியனின் கண்கள் முழுவதும் அவன் மீதே, எண்ணமோ "என்ன இவன் இப்படி மாமிச மலை மாதிரி இருக்கான்" என்று தான், அவனுக்கு தெரியாதே சிவா கிறிஸ்ன் சிறு வயதில் கூறியதை கொண்டு, டாலியை தொட நினைத்தாலே தன்னை நினைத்து மற்றவருக்கு பயம் வர வேண்டும் என உடற்பயிற்சி செய்து வளர்த்த உடல் அது என.

"எஸ், யூ கேன் கால் மீ ஆர்.கே" , என பொன்னிற மேனியன் பேச, இவனின் அலட்டல் இல்லாத உடல் மொழி, கம்பீரமான தோற்றம், ஆளுமையான குரல் என முதல் சந்திப்பிலே பொன்னிற மேனியனினை பார்த்து அசந்து தான் போனான் கிறிஸ். ஆனால் அது மட்டுமே போதாதே.

அதன் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் மூவரும் தொழில் சம்பந்தமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அந்த இரண்டு மணி நேரமும் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடக்க, ஒரு பக்கம் கிறிஸ் பொன்னிற மேனியனை, அவனின் உடல் மொழியை, கூர்ந்து கவனிக்க, அதை மற்றவன் கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பேச்சு வார்த்தையின் மூலம் பொன்னிற மேனியன் நேரடியாக அவனின் கம்பெனியில் செய்ய ஏதும் இல்லை என்ற போதும், அவன் அந்த கம்பனியில் வேலையில் இருப்பதால், அவர்களின் அந்த டூல் பற்றிய அறிவு, அதை அவர்கள் பயன்படுத்தும் முறை, கிறிஸ் கொடுக்கும் வேலையை அவர்களால் சரியான நேரத்திற்கு செய்து கொடுக்க முடியுமா, அதற்கான ஆள் பலம் அவர்களுக்கு உள்ளதா என்ற ரீதியில் நடந்த பேச்சு வார்த்தைகளே அவை.

கார்மேகம் தன்னையும்,கிறிஸ்யும் பற்றி பொன்னிற மேனியனிடம் சொல்ல ஆரம்பிக்கும் போதே கமலாமா டீ, ஸ்னாக்ஸ், தண்ணி என அனைத்தும் கொண்டுவந்து கொடுத்திருக்க, இருவரும் பேசியபடியே கொஞ்சம் கொரித்தனர். அடுத்து கிறிஸ் உடன் பேசும் போது அடிக்கடி பொன்னிற மேனியனின் கண்கள் அவனின் கார்மேகத்தை பேச்சுவாக்கில் மிக இயல்பாய் தீண்டியதையும், ஏதேனும் குடிக்க, கொரிக்க என அவளின் தேவையை பார்த்து பார்த்து அவளின் வயிற்றை நிரப்புவதையும் கிறிஸ் கவனிக்க தவறவில்லை. அந்த பார்வையில் இருந்த ஆர்வமும்,ஈடுபாடும், அக்கறையும் அவனுக்கு புரியாமல் இல்லை. ஒரு ஆண் என்ற முறையில் பொன்னிற மேனியனின் பார்வைக்கான அர்த்தம், தெளிவுரை, விளக்கவுரை இல்லாமலே புரிய, அவனின் நிலைப்பாட்டின் தீவிரத்தையும் அறிவது மிக முக்கியம் அல்லவா. இந்த ஆர்.கே ஆக பட்டவன் குடும்பத்தை பற்றி ராதிக்கவுக்கே ஏதும் தெரியவில்லை, பெருமையாக சொல்ல முடியாத குடும்ப பின்னனியா அல்லது குடும்ப பெயரை சொல்லி பெருமைப்பட்டு கொள்ளதா தன்னடக்கமா. அதே சமயம் அவனின் டாலி, தில்லையையும், அவனையும் தவிர்த்து புதிதாக ஒருவரிடம் மிக இயல்பாய் ஒரு நெருக்கம் காண்பிப்பதும் அவனுக்கு புரிந்தது. இந்த ஆர்.கேவை மிக கவனமாக கையாள்வதின் அவசியத்தை அந்த கணத்தில் கிறிஸ் உணர்ந்தான். கிறிஸ்யை பொறுத்தவரை அவனுடைய டாலி எங்கேயும், எதற்கும் வருத்த பட கூடாது என்பது திண்ணம்.

நீ என்னை கவனித்ததை போல நானும் உன்னை கவனிக்கிறேன் என கிறிஸ் அறியும் வகையில், அவன் தன்னிடம் தனிமையில் பேச விழைவதை அவனின் உடல் மொழியில் சரியாக புரிந்துகொண்ட பொன்னிற மேனியன் அவனின் கார்மேகத்திடம்,

"ராதா, தலை வலியா இருக்கு, ஒரு டீ கிடைக்குமா" என கேட்க, அவளும்

"சரி, ராகி நீ கிறிஸ் கிட்ட பேசிக்கிட்டு இரு நான் போய் எடுத்துட்டு வரேன்" என சமையல் அறைநோக்கி சென்றாள். அவளுக்கும் புரிந்தது கிறிஸ், ராகவிடம் தனிமையில் பேச விழைவது, ஆனால் அப்படி தன்னை தவிர்த்து பேச என்ன இருக்கும் என்பது தான் யோசனையாய். கிறிஸ் கோவகாரன் என்பது அவள் அறிந்ததே, அதும் அவள் விசயத்தில் சொல்லவே வேண்டாம், பொன்னிற மேனியனின் கோவத்தை தான் முதல் நாளே பார்த்தாலே, "ஆண்டவா ஏதும் ரசபாசம் ஆகாமல் பார்த்துக்கோ" என ஒரு அவசர வேண்டுதலை கடவுளுக்கு பார்சல் பண்ணிவிட்டு கமலாமாவிடம் சென்றாள். அவள் கீழே செல்லும் வரை பொறுத்து இருந்த ராகவ், அவள் சென்றவுடன் கிறிஸ் இடம் திரும்பி, இப்போது சொல் என்பதாய் ஒரு பார்வை பார்க்க, பார்வை எல்லாம் பலமா இருக்கு என கிறிஸ் நினைத்தாலும் தான் பேச நினைத்ததை பேச ஆரம்பித்தான்.

"டாலியை நா படிக்கவே இங்க தான் வர சொன்னேன், அவளை அங்க தனியே விட எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, அதும் அந்த வீட்டுல, எல்லாம் தில்லையால்" என பல்லை கடிக்க, இவ்ளோ நேரம் தொழில் சம்பந்த பட்ட பேச்சு வார்த்தை என்பதால் அது இயல்பாய் ஆங்கிலத்தில் நடைபெற, இவனின் சுத்தமான தமிழ் உச்சரிப்பில் பொன்னிற மேனியன் வியந்தாலும், அவன் இத்தனை வருடம் கார்மேகத்துடனே வளர்ந்திருக்க, இந்த அளவுக்கு கூட தமிழ் பேச வில்லை என்றால் தான் ஆச்சர்யம். ஆனால் இத்தனை வருட இந்திய வாசமும், அவனின் தோற்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை, கொஞ்சம் கூட இந்திய சாயல் இல்லாமல் முழு வெள்ளைகாரன் தோற்றம். அதே நேரம் இந்த வீட்டில் அவனின் கார்மேகம் தங்குவதில் இவனுக்கும் விருப்பம் இல்லை என்பதையும், ராதிகாவை போல் அவனும் தில்லை என அழைப்பதில் இருந்து இவனும் அந்த வீட்டில் ராதிகாவை போல ஒரு பேரனாகவே வளர்ந்து இருக்கான் என்பதையும் குறித்துக்கொண்டான், அவனை ஒரு பக்கம் எடைபோட்டாலும், அவன் சொல்லிய சேதியில் இதை எதுக்கு இப்போ சொல்றான், எனும் யோசனையோடு அவனை பார்க்க அவன் தொடர்ந்தான்.

"நா அங்க இருந்து இருந்தா யாரா இருந்தாலும் என்னை தாண்டி டாலியை நெருங்கி இருக்கவே முடியாது" என அந்த "யாரா இருந்தாலும்" வில் அவன் கொடுத்த அழுத்தம், இவன் இப்போ என்ன சொல்ல வரான், "நான் அங்கு இருந்து இருந்தால், உன்னால் ராதிகாவை நெருங்கி இருக்க முடியாதுன்னு சொல்றானா", அந்த கூற்றில் பொன்னிற மேனியனுக்கு கோவம் ஏகத்துக்கும் எகிறியது. "தான் வேண்டும் என நினைத்து விட்டால் எந்த அணைகொண்டு, எந்த கொம்பனால் தன்னை தடுக்க இயலும்", என நினைத்த பொன்னிற மேனியன் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து, மகா திமிருடன் தான் நினைத்ததையே தன் பார்வையில் வெளிப்படுத்த, அதை கிறிஸ் சரியாக புரிந்து கொண்டதை அவனின் கோபத்தில் சிவந்த முகம் தெளிவாக காட்டியது.

கலாய்த்தாலும் சிரிப்புடன் கடப்பது, இலகுவாக பேசுவது எல்லாம் அவனின் கார்மேகத்தோடு சரி, கிறிஸ்யை பற்றி அவனின் கார்மேகம் சொல்லி இருந்தததாலும், கிறிஸ் அவனின் கார்மேகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அவனுக்கே தெரியும் என்பதாலும், ராதிகா எங்கேயும் வருத்த படக்கூடாது என்ற கிறிஸ்ன் உணர்வுகளை இவனால் புரிந்துகொள்ள முடிந்ததால் தான் இந்த அளவேணும் அமைதியாய் இருக்கிறான் பொன்னிற மேனியன்.

"அவளுக்கு யாராவது தொல்லை கொடுத்தா ஏன் கொடுக்கணும்னு நினைச்சா கூட, அவங்களுக்கு நான் தான் எமன்" அவன் பேச பேச, பொன்னிற மேனியனின் மனசாட்சி வேற நேரம் காலம் தெரியாமல் "இவன் இப்படி பேசறது, ஹாலிவுட் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்க்கும் பீல் கொடுக்கிறது இல்ல" என கிறிஸ்யை கலாய்க்க, அதை தலையில் தட்டி அடக்கிவிட்டு, இது அவன் தனக்கு தரும் மறைமுக எச்சரிக்கை என்பதோடு, ராதிகாவின் மீதான பாசத்தின் வெளிப்பாடு என்பதாலும், தன் நிலைப்பாட்டை அவனுக்கு புரிய வைக்கும் கடமை தனக்கு இருப்பதால்,

"இப்போ உங்களுக்கு மட்டும் இல்லை, ராதாவை தப்பு பண்றவங்க எனக்கும் சேர்ந்து பதில் சொல்லணும்,உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எனக்கும் ராதா முக்கியம்" என்ற பதிலில் கிறிஸ் இன்னும் கூர்மையாக இவனை பார்த்தான். "இத்தனை வருடம் கூட வளர்ந்த என் அளவுக்கு, பார்த்து ஒரு வாரமே ஆன உனக்கும் முக்கியமா" என கிறிஸ் பார்வையிலே கேள்வியை வீச, பொன்னிற மேனியனோ "இனிமே என் கூட தானே இருக்க போற அப்போ எனக்கும் முக்கியம் தானே" எனும் விதமாய் பார்த்துவைக்க, இவனின் பார்வையில் கிறிஸ் தான் ஏகத்துக்கும் கடுப்பானான்.

"டாலிக்கு நான் இங்க நல்ல தமிழ் குடும்பத்து பையனா பார்த்துகிட்டு இருக்கேன், அவ என்னோட கண்ணு முன்னாடியே இருக்கனும், அப்போ தான் அந்த பையனுக்கும், டாலிக்காக நான் இருக்கேனு பயம் இருக்கும், நல்லா பார்த்துப்பான், படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ற மாதிரி தான் பார்க்கணும்" என்றவாறே பொன்னிற மேனியனின் முக மாறுதல்களை கவனமாக அளவெடுக்க முயற்சி செய்தான், ஆமாம் வெறும் முயற்சி தான், இவனின் முகமோ துடைத்து வைக்க பட்ட கரும்பலகை என எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவே இல்லை. இருவருமே இலைமறை காய்மறையாகவே பேச அவனை நேரடியாக பேச வைக்க கிறிஸ் தன் திட்டம் என்று தான் யோசித்துவைத்ததை சொல்ல, அவனோ எந்த பதட்டமும் இல்லாமல் மாறாக மிக அமைதியாக,

"நீங்க இருக்கீங்கனு பயந்து ஏன் பார்த்துகனும், அவள் மேல உண்மையான பாசம், காதல் இருக்குறவானா பாருங்க, அப்போ அவன் அவளுக்காகவே அவளை பார்த்துப்பான்" என இவன் சொல்ல, கிறிஸ் நிச்சயம் அசந்து தான் போய் விட்டான். "அவளுக்காகவே அவளை பார்த்துக்கொள்வானாம், என்ன திமிரா என் கிட்டையே சொல்றான்", அந்த நிமிடத்தில் கிறிஸ்கு பொன்னிற மேனியனை அவ்வளவு பிடித்தது. இருந்தும் "கல்யாணம் என்று பேசவே இன்னும் இரண்டு வருடம் இருக்கு, எங்கையாவது எப்போதாவது டாலியை வருத்தப்பட வைக்கட்டும், அப்போ இவனுக்கு நான் யாருனு காட்டுறேன்" என தனக்கு தானே சூளுரைத்து கொண்ட அதே நேரம் அப்படி ஒரு சூழ்நிலை வராமலே போகட்டும் இறைவா என வேண்டிக்கொள்ளவும் மறக்கவில்லை.

கிறிஸ்யை பொறுத்தவரை அவனின் டாலி ஒரு தேவதை பெண், அவனின் தனிமைக்கு மருந்தானவள், பெற்றோர் தான் அவளை ஆராதிக்க தவறிவிட்டனர், அவளுக்கு வாழ்க்கை துணையாய் வருபவன் அவளின் அருமை புரிந்தவனாக இருக்க வேண்டும் என்பதே அவனின் எண்ணம். இந்த சந்திப்பு ஆரம்பிக்கும் வரை கூட அவன் டாலி அவளாக தேர்ந்தெடுத்து, அவளுடன் இரண்டு ஆண்டுகள் கூட இருக்க போகும் தோழனை சந்திக்க போகும் எண்ணம் மட்டும் தான். ஆனால் இந்த ஆர்.கேவின் பார்வைகள் வேற கதை சொல்ல, அடுத்த நிமிடம் அவன் ஆராய்ந்தது அவனின் டாலியை தான். அவளிடம் இயல்பை மீறி ஒரு துள்ளல் அவ்வளவே, இன்னும் அவளுக்கு இவனின் காதல் அறிமுகமாகவில்லை என்பது புரிந்தது. பணம் கிறிஸ்கு முக்கியமாக பட வில்லை, இவன் அடுத்தவரிடம் வேலை செய்கிறான் என்பது எல்லாம் ஒரு விசயமே இல்லை, அவனே அவன் தங்கைக்கு நிறைய செய்வான், அதை கட்டிகாக்க தெரிந்தால் போதும். இந்த ஆர்.கேவும் சமானியனாக தெரியவில்லை. அதுபோக இது அவசரப்பட கூடிய விஷயமும் இல்லை, பொருத்திருப்போம் என அவன் முடிவு செய்து, நிமிர்ந்து பொன்னிற மேனியனை பார்த்தான்.

"வெல், நீங்க சொன்னதும் சரி தான், டாலியை விரும்புற பையனையே பார்ப்போம், உங்களை மீட் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோஷம், உங்க நம்பர் கொடுங்க" என ஒரு சிரிப்புடன் பொன்னிற மேனியனிடம் கேட்டு, அவனின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தன்னுடையதையும் அவனுக்கு கொடுத்தான். தன் கார்மேகத்தை போல இவனிடம் இயல்பாய் எடுத்தவுடன் பேச முடியவில்லை என்றாலும், அவனின் கார்மேகேத்திற்காக இவனுடன் நல்ல முறையில் பேச வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டான். ஆக இருவருமே அவன் டாலிக்காக, இவன் கார்மேகத்திற்காக என அவளை மையமாக கொண்டே நட்புடன் பழக நினைத்தனர்.

இவர்கள் இருவரும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்க்கவும் கார்மேகம், பொன்னிற மேனியனுக்கு டீ கொண்டு வரவும் சரியாக இருந்தது. அவள் அவசரமாக இருவரையும் ஆராய இருவரும் வெறும் சிரிப்பையே பதிலாக்கினர். அவளிடம் இருந்து ஒரு ஆசுவாச பெருமூச்சு வெளிப்பட இருவருக்குமே அவளின் எண்ணம் புரிந்தது போல் இருவரின் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டன. அதற்கு பிறகு கொஞ்ச நேரம் பொதுவாக பேசிவிட்டு கிறிஸ் இவர்களிடம் விடை பெற்றான். ராதிகா, ராகவின் முகத்தையே பார்க்க, கிறிஸ் இடம் பேசியதை இவளிடம் எப்படி என்னவென்று கூற முடியும்,அதனால் அவளின் பார்வையை தவிர்த்த ராகவ்,

"நான் கிளம்பட்டுமா" என அவளின் பார்வையை உணராதது போலவே கேட்க, இதற்கு மேல் இவனிடம் இருந்து எதையும் வாங்க முடியாது என்று உணர்ந்து, சாப்பாடு நேரமும் ஆகி இருக்க, அவனை வெறும் வயிரோடு அனுப்பும் பெரும் வருத்தம் அவளிடம். அதேநேரம் இங்க உணவு உண்ண அழைக்கவும் முடியாதே, தன் நிலை கண்டு தனிறக்கம் கொண்டு தயக்கத்தோடு,

"சாரி ராகி, ஹ்ம்ம் எப்படி போவ", அவளின் சாரியில், அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளின் எண்ணத்தை படித்தவன் போல, அவளின் கையை மெதுவாக அழுத்திவிட்டு,

"கார் புக் பண்ணனும் ராதா" என அவளின் கேள்விக்கு மட்டுமே பதில் பகர்ந்தான். ஏன் சாரி என கேட்டு, அவளை சங்கட படுத்த அவன் விரும்பவில்லை.

"அது எதுக்கு தேவை இல்லாம, முத்து அண்ணாவை விட சொல்றேன், வா" என அவன் மறுத்துபேச வந்ததை பேசவதற்கு வாய்ப்பே வழங்காமல் அவனை கீழே அழைத்து வந்தாள்.

வாசலில் முத்து இல்லாமல் இருக்க, ராதிகாவின் கை பேசியும் மேலே இருக்க, அவர் எப்படியும் பின்புறம் தான் இருப்பார் என்பதால், ராகவை காத்திருக்க சொல்லிவிட்டு சென்றாள், முத்துவை அழைக்க. ராதிகா செல்வதற்காகவே காத்திருந்ததை போல சண்முகம் சரியாக வந்தார் பொன்னிற மேனியனிடன் பேசுவதற்கு.

இவன் ராதையின் கண்ணன்…….
 

banumathi jayaraman

Well-Known Member
கிறிஸ்டோபர் ஸ்மித் ராகவ் கிருஷ்ணா இரண்டு பேருமே ராதிகாவின் நலம் விரும்பிகள்தான்
ஆனாலும் இரண்டு பேருமே ஓவர்
பாசக்கார பய புள்ளைகளா இருக்குதுங்களே
ஹா ஹா ஹா

ஏண்டாப்பா ராகவ் அம்பி
வடிவேல் மாதிரி நானும் பணக்காரன்தான் நானும் பணக்காரன்தான்னு உன்னோட வேல்யூவை அந்த கிறிஸ்க்கு கொஞ்சம் காட்டிடேன்
அப்போ உன்னோட கார்மேகத்துக்கு நீ ஓகேன்னு நீ பொருத்தம்தான்னு
அவன் சொல்லிடுவானில்லே

இந்த சண்முகம் ஆர் கே விடம்
என்ன பேசப் போறான்?
ராகவ்வின் வசதி தெரியாமல்
ராதிகாவை நீ கட் பண்ணு
என்னோட பொண்ணு
ஸ்வேதாவுக்கு நான் நிறைய
சீதனம் செய்வேன்ம்பானா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ராகவ் & கிறிஸ் சம்பாஷணை சூப்பர்

ராகவ் கிறிஸ் ரெண்டு பேரும்
டாலியோட நலம் விரும்பிகள்

இந்த சண்முகம் என்ன சொல்ல போறாரோ... ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top