Advertisement

கரை காணா காதலே – 11

வேதாந்தின் அணைப்பில் இருந்து விலக முயற்சித்து கொண்டிருந்தாள் மஹதி… அவள் விலக விலக அவன் அணைப்பும் இன்னும் இறுகியது..

அவன் அணைப்பு அவளுக்கு தேவை இல்லை என்றாலும், அவனுக்கு அவன் சமாதனம் செய்து கொள்ள தேவைப்பட்டது..

தான் கேட்டதையும், பார்த்ததையும் வைத்து அவன் செய்த தவறு அது.. ஆனால் தண்டனை அனுபவிப்பவள் அவள் தானே..

வெறுப்பை உமிழும் பார்வைகள், அலட்சிய பேச்சுகள்,  எல்லாவற்றையும் எதிர்கொள்பவள் அவள் தானே…

அவன் நினைத்தாலும் அந்த தவறை சரி செய்ய முடியாது… அவளாலும் முடியாது… அதற்காக அவளால் எல்லோரிடமும் சென்று நான் தப்பு செய்ய வில்லை என்று சொல்லிக்கொண்டா இருக்க முடியும்.

கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் எதற்கு????

அவளின் இந்த துயரத்தை நினைத்து அவனும் மருகினான்.. அவள் எத்தனை வேதனை அடைகிறாளோ அதுபோலவே அவனும் அடைந்தான்.. நடந்ததை எல்லாம் மனதில் நினைத்துப் பார்த்தானோ என்னவோ.. ஒரு வேதனை பெருமூச்சு விட,  அதில் கிடைத்த இடைவெளியில், மஹதி அவன் நெஞ்சில் மேல் கை வைத்து தள்ளி விட்டாள்..

மெதுவாக தள்ளி விட்டதால் அதன் தடுமாறிய படியே சுதாரித்து நின்று விட்டான்..

“சாரி…மஹா…” என்று பேச வாய் எடுத்தவனை,

வலது கையை மட்டும் மேலே தூக்கி நிறுத்து என்பதை போல் காட்டினாள் மஹதி..

“உன் எக்ஸ்பிளனேஷன் எதுவும் எனக்கு தேவை இல்லை, இதுக்காக தானே அன்னிக்கு நான் அன்னிக்கு என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம நீ உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருந்த… இப்போ உனக்கு சந்தோசமா இருந்திருக்குமே… அவங்க பேசுனது  என்னை விட உனக்கு நல்லா கேட்டு இருக்குமே!!!!.” என்றாள் ஆங்காரமாய்…

ஆம், வேதாந்த் அங்க வந்ததுமே மஹதி பார்த்திருந்தாள்..

“இன்னும் என்ன, இனிமே ப்ரியா கல்யாணத்தை காட்டி என்னை எதுவும் பண்ண முடியாது…. ஏன்னா இனிமே அவ ரமேஷ் பொண்டாட்டி, அதுவும் உன் பெஸ்ட் பிரண்ட் ஓட  மனைவி..”

“இன்னும் என் கண் முன்னாடி நின்னுட்டு, என் துன்பத்தை அதிகபடுத்தாதே..” என்று கண்களில் கண்ணீர் வழியே சொல்லிக்கொண்டிருந்தாள்…

எதிரில் அவளை விட அதிகமாய் அவனும் கலங்கியே இருந்தான்….மீ ண்டும் அந்த எண்ணம் தலை தூக்கியது….

“தன்னால் தானோ…”

அவளையே பார்த்திருந்தான், சற்று முன் பார்த்தவளுக்கும், இப்போது பார்ப்பவளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!!!!

தலைமுடி சிறிதாய் கலைந்து, வற்றாமல் கண்ணீர் வழிந்ததால் செக்க சிவந்த கண்கள்… இன்னும் என்னவோ என்ற சிந்தனையில் நடுங்கி கொண்டிருந்தாள் மஹதி..

தான் முதற் சந்திப்பிலையே காதல் கொண்ட பெண்ணவள் இவள் இல்லை…

காதல் என்பது ஒரு உயர்ந்த உணர்வு.. ஒருவர் மீது தோன்றும் காதல் காலப்போக்கிலோ, பார்வையிலிருந்து விலகுவதலோ, தொடர்பு அற்று போவதாலோ நீற்று போகாது… மேன்மேலும் விருட்சமாய் வளரும்…

அவன் மனதில் விருட்சமாய், கிளைகளுடன் பசுமையாய் வளர்ந்திருந்தது அவள் மீதான காதல்..

விழிகளில் வலிகள் நிரம்ப அவளையே பார்த்திருந்தான் வேதாந்த்.. இன்னும் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்…

தன் உயிரானவள் அழுது கொண்டிருக்கிறாள், அதை துடைத்து விட கூட தோன்றாமல் நின்று கொண்டிருக்கும் அவனின் நிலையை அவன் அறவே வெறுத்தான்.

“என் நிலைமை எந்த ஆணுக்கும் வரக்கூடாது..” என்று தனக்குள் சொல்லி கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான் வேதாந்த்..

அவன் செல்லவும், தமிழ் அந்த அறைக்கு வரவும் சரியாக இருந்தது… வந்தவருக்கோ மேலும் அதிர்ச்சி மகளை பார்த்ததும்… ஆனால் வேதாந்த் வெளியே செல்லும் போது அவர் பார்த்திருந்ததால், பிறகு அவனிடம் கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

“மதிமா..”

தமிழின் குரலில் தான் நிமிர்ந்தாள், ஆனால் கண்கள் அவனை தேடியது…

“என்னாச்சு மதி, ஏன் இப்படி இருக்கே???…” அவரின் குரலிலேயே தெரிந்தது அந்த படபடப்பு..

எப்போதும் போல் கண்மூடி  யோசித்தவள், முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்…

“எப்பவும் போல தான்மா… வீட்ல போய் பேசிக்கலாம், வாங்க போகலாம்..” என்றவாறே அவரை அழைத்தாள்…

ஆனால் இதை காதில் வாங்கியும், வாங்கிக் கொள்ளாதபடி நின்றிருந்தார் தமிழ்..

“முகத்தை கழுவி, தலையை சரி பண்ணிட்டு வா மதி…”

அவர் சொல்லவும் தான், மதி தன்னையே கண்ணாடியில் பார்த்தாள்.. மனம் அப்படியே மிக சங்கடப்பட்டு விட்டது.. அம்மா என்ன நினைத்திருப்பார் என்றும் நினைக்கத் தோன்ற, வேறு எதையும் வெளியில் காட்டாது.. “ஒரு ரெண்டு நிமிஷம்மா..” என்று அனுமதி கேட்டு ரெப்ரெஷ் பண்ணி விட்டு வந்தவள் உடன் தமிழும் மேடையை நோக்கி சென்றனர்..

அங்கே எல்லா சடங்குகளும் முடிந்து, ரமேஷ் வீட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..

ப்ரியா தமிழிடமும், கமலாவதியிடமும் கண்ணீர் மல்க விடைபெற்றாள்… தன்னிடம் பாரா முகம் காட்டுவாள் என்றே நினைத்திருந்தாள் மஹதி…

ரமேஷுடன் கார் வரை சென்றவள் அவனிடம் எதோ சொல்லிவிட்டு, ஓடி வந்து மஹதியை கட்டி பிடித்து கொண்டாள்… அதில் இனிமையான அதிர்ச்சியையும், மகிழ்ச்சியும் மஹதியின் முகத்தில்..

இந்த ஐந்து வருடங்களாக தானே ப்ரியாவின் வெறுப்பு, குத்தல் பேச்சு எல்லாமே… அதற்கு முன் அவளது செல்ல அக்கா தானே… ப்ரியாவும் எதுவும் பேசவில்லை, அதே போல மஹதியும் பேசவில்லை… மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது..

மஹதி ப்ரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பினாள், மிகுந்த மகிழ்ச்சியில்…

அவர்களை வழியனுப்பி விட்டு, சொந்த பந்தங்களையும் அனுப்பிவிட்டு மண்டபம் அனைத்தையும் ஒதுக்கி விட்டு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

கல்யாணம் என்பது சிறிய விஷயமா??? என்ன… எவ்வளவு வேலைகள்.. ஆனால் அனைத்தையும் தமிழ், கமலாவதி, மஹதி மூன்று பெரும் மட்டுமே…. தமிழிற்கு இந்த நேரத்தில் குணசேகரன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது… ஆனாலும் அவர் இல்லை என்பதற்காக சாக்கு, போக்கு சொல்லி அவர் கல்யாண வேலைகளில் கவனம் செலுத்தாமல் இல்லை… கல்யாணத்தில் வந்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் படி செய்து அசத்தி விட்டார்..

கமலாவதி அன்றைய அலுப்பின் காரணமாக ஓய்வெடுக்க சென்று விட்டார்… தமிழ் நாளை மறுவீட்டிற்கான  சம்பிரதாயங்களை கவனிக்க சென்று விட்டார்… மஹதியும் அன்றைய அதிகபடியான வேதனையின் அவள் ரூமில் சென்று மெத்தையில் விழுந்தாள்…

விழுந்த மாத்திரத்தில் தலையணை முழுவதும் கண்ணீரால் நனைந்தது… ஒரு காலத்தில் அழுகையே என்னவென்று தெரியாமல் இருந்தவள் இந்த ஐந்து வருடத்தில் அழுகை மட்டுமே அவளுக்கு  ஆறுதலாய்…

அதே நேரத்தில் வேதாந்த் சென்னையில் ஒரு ரிஷார்டில் ஐந்தாவது தளத்தில், அவனது ரூமின் பால்கனியில் நின்று தூரமாக இருந்த கடல் அலைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்..

வானையும், கடல் அலைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்… தொடக்கத்தில் அவை இரண்டும் தனித்தனியே, வேறு வேறாக தெரிகிறது ஆனால் உள்ளே செல்ல செல்ல அவை இரண்டும் இரண்டறக் கலந்து எது வானம், எது கடல் என்று பிரித்தறிய முடியாதே!!!!

அதை பார்த்தவனது மனதும் அதையே எதிர் பார்த்தான்… வானாய் அவனும்… கடலாய் அவளும்….

அலையோடு கரைகொண்ட காதலுக்கு ஓய்வில்லை..
அங்கு ஏமாற்றம் நிகழ வாய்ப்பில்லை...

அந்த நீலக்கடலை பார்த்து கொண்டிருந்தவனின் மனது அவனது கடந்த காலத்திற்கு அவனை கேட்காமலேயே இழுத்து சென்றது…

ஸ்ரீ கிருஷ்ணா எஞ்சினியரிங் காலேஜ்…

அந்த அகடாமிக்  இயர்க்கான அட்மிஷன் முடிந்து, அன்று தான் முதலாமாண்டு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.. அந்த கல்லூரியில் தான் மஹதியும் சேர்ந்திருந்தாள்…

காலை அவள் கிளம்பும் போதே ஒரு படபடப்பு.. முதல் நாள் கல்லூரி அல்லவே!!! இதுவரை தங்கையுடன் பள்ளிக்கு சென்று வந்தவள், இனிமேல் தனியாக செல்ல வேண்டுமே…

அவளது இந்த பயத்தை கண்டு மூவருமே சிரித்து கொண்டிருந்தனர் வீட்டில்…

காலை நேர உணவிற்கு பின், கல்லூரி செல்வதற்கு முன் வீட்டில்  கடவுளை வணங்குவது வழக்கம்.. அதே போல் அன்றும் வணங்கி கொண்டிருந்தாள்.. அவள் வணங்கி முடித்ததும் தாயிடமும், பாட்டியிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள்..

அவளது படபடப்பை உணர்ந்த கமலாவதி “மதிமா ஏன் உனக்கு இவ்வளவு பதட்டம்… காலங்கள் மாறும் பொழுது நாமும் மாறிடனும் மதிமா, பாரு நான் முதல் நாள் ஸ்கூல்ல உன்னை விடும் போதும் நீ இப்படி தான் இருந்த.. என்ன கூடவே இன்னும் கொஞ்சம் அழுகையோட.. ஆனா இப்போ வெற்றிகரமா ஸ்கூல் லைப் முடிச்சுட்ட இல்லையா.. அதே மாதிரி தான் மதி காலேஜ் உன் லைப்க்கான அடுத்த படிடா… அதனால எந்த தயக்கமும் இல்லாம, சந்தோசமா போய்ட்டு வாடா மதி..” என்று அவளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார் கமலாவதி…

அதை பார்த்திருந்த தமிழுக்கு எப்போதும் போல், பிள்ளைகளின் முகத்தை வைத்தே என்ன ஏது என்று கண்டறிந்து, அதை சரி செய்து விடும் கமலாவதி மீது ஆச்சர்யமே!!!!

அதி அவளது முகம் சிறிது தெளிந்திருந்தது..

“அக்கா, காலேஜ்ல பர்ஸ்ட் டே.. ராகிங் எல்லாம் இருக்கும் என்ன நடந்துச்சுன்னு எனக்கு சொல்லணும் ஓகே வா…” என்று ப்ரியா சிரித்தபடியே சொல்லி சென்றாள்…

“நான் என்ன பாடுபட போறேன்னு தெரிஞ்சிக்கிறதுல என்ன ஒரு ஆர்வம் உனக்கு… ஈவ்னிங் வாடி உனக்கு இருக்கு…” என்று அவளை அடிக்க துரத்தியவள், ப்ரியா அவள் சைக்கிளில் சிட்டாய் பறந்து விடவும்.. இவளும் உள்ளே வந்தவள், நேராய் தன் அம்மாவிடம் சென்றாள்…

“அம்மா…” என்று தயக்கமாய் அழைத்தாள்..

“என்ன மதி சொல்லுமா”..

“அம்மா நான் இப்போ பெரிய பொண்ணு தானே…”

“ஆமா பெரிய பொண்ணு ஆகிட்ட, அதான் காலேஜ் ல கிளம்பிட்டியே. அப்பறம் என்னமா…”

“இல்லமா.., அது வந்து..”

“என்னனு இப்போ முழுங்காம சொல்ல போறியா இல்லையா…”

“இல்ல நான் காலேஜ் பஸ்ல எல்லாம் போகலை மா…எனக்கு அப்பா யூஸ் பண்ணின ஸ்கூட்டரை சரி பண்ணி தாங்க மா .ப்ளீஸ்..” என்று ஒரு வழியாய் கேட்டு முடித்து விட்டாள்..

அதை கேட்டவரின் முகத்தில் சிறிது லேசான புன்னகை…

“சரி வா…”  என்று அவளை வாயிலுக்கு அழைத்து செல்ல,  அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியை பார்த்ததும், அகமும், முகமும் மலர்ந்தவள், தாவி சென்று அன்னையை அணைத்துக் கொண்டாள்..

எவ்வளவு நாள் கனவு இது அவளை பொறுத்த வரை… அவளது அப்பா இருந்த வரை அந்த ஸ்கூட்டியாய் அவரே சொல்லி கொடுத்தார்… அவரின் மறைவுக்கு பின் யாரும் அதை தொடுவதே இல்லை… இது தமிழின் உத்தரவு.. ஆனாலும் அவருக்கு தெரியாமல் மஹதியும், ப்ரியாவும் அதை எடுத்து ஊரு சுற்றத்தான்  செய்வர்…

அதை அவர் கண்டும் காணதது போல இருந்தாலும் ஒரு வருடத்திற்கு முன் ஒரு காரில் மோதி இருவருக்கும் காயம் ஏற்பட்டு விட்டது.. அதிலிருந்து ஸ்கூட்டியை தொட அவர் அனுமதித்தது இல்லை… இப்போது அந்த ஸ்கூட்டியை அவளுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்கள் செய்து இருந்தார் தமிழ்… அதை பார்த்ததால் தான் மஹதிக்கு அவ்வளவு சந்தோஷம்…

அந்த சந்தோசத்துடனே அவள் கல்லூரிக்கு கிளம்பினாள்.. முதல் நாள் என்பதால் தமிழ் அவளை அழைத்து விட்டு போய் இருந்தார்…  மாலையில்  பிக் அப் செய்ய வருவதாக கூறி இருந்தார்..

முதல் நாள் என்பதால் அவளுக்கு அவளுடைய கிளாஸ் ரூம் தெரியவில்லை…அ ங்கே நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கேட்கலாம் என்று அவளை அழைத்தாள்..

“ஹாய்.. இங்க பி.இ பர்ஸ்ட் இயர் கிளாஸ் ரூம் எங்க இருக்கு…கேன் யூ டேல் மீ ப்ளீஸ்…”

அதை கேட்ட அந்த பொண்ணோ, அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதை கூர்மையாய் கவனித்தவள், அவள் இதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்…

அவள் சிரிப்பதை கண்ட மஹதியோ “நாம தப்பா எதுவும் கேட்டுடோமோ??? இப்போ எதுக்கு இந்த பொண்ணு எப்படி சிரிக்குது..” என்று மனதுக்குள் பேசியவள் குழம்பி  போய் நின்றிருந்தாள்..

ஒரு வழியாய் அவள் சிரித்து முடித்ததும்.. “ஹாய்… ஐயாம் நிமிஷா… நானும் பர்ஸ்ட் இயர் தான்… சேம் டிபார்ட்மெண்ட் தான்… நானே கிளாஸ் தெரியாம தான் முழிச்சுட்டு இருந்தேன்.. நீங்களும் வந்து என்கிட்டே வழி கேட்டிங்களா..அதான் சிரிப்பு வந்துடுச்சு சாரி…” என்று இயல்பாய் பேசினாள்..

அவள் சட்டென்று இயல்பாய் பேசியது மஹதிக்கு பிடித்து போனது…

கல்லூரியில் கிடைத்த முதல் நட்பு… இருவரும் கை கொடுத்து கொண்டார்கள்…

“வா ரெண்டு பெரும் ஜாயின்ட் அடிச்சு தேடுவோம்.. ” என்றால் நிமி..

“நிமி நல்ல காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமா??? கொஞ்சம் இருக்கும்ன்னு என் அம்மா ப்ரண்டு பொண்ணு சொன்னங்க… கொஞ்சம் பயமா தான் இருக்கு நிமி..” என்றாள் சிறிது பயத்துடன்..

“ஹே யாருக்கிட்டே நம்மகிட்டேயேவா… நாங்க எல்லாம் சுனாமிலையே ஸும்மிங்கை போடுறவங்க நம்மகிட்டேயேவா …” என்று வீர வசனம் பேசினாள் நிமிஷா…

“ஒஹ் நீ தைரியசாலி தான்… பரவால்ல நீ என்கூட இருக்க இல்ல..” என்று சிரித்தபடியே அவளை வாரினாள்…

அவளது கிண்டலில் அவளை முறைக்க முயன்றவள் அதில் தோற்று ஆவலுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தாள்… அவர்கள் இருவரும் பேசியபடியே அவர்களுடையே பிளாக்கிற்கு வந்து சேர்ந்தனர்.. ஆனால் இன்னும் கிளாஸ் ரூம் கண்டு பிடிக்க முடியவில்லை…

அவர்கள் இருவரும் எங்கே இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, கும்பலாய் இருந்த சீனியர் கூட்டம் இவர்களை அழைத்தது…

அவர்கள் அழைத்ததில் இருவருமே, சிறிது பயத்துடன் அவர்களை நோக்கி சென்றனர்…

சிறகை விரித்து பறக்கலாம் என்று  கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவள்… அவள் சிறகை உடைத்து கூண்டிற்குள் அவளை இருக்க செய்ய போகிறது என்று அவள் அறிவாளா?????

 

Advertisement